DAEIOU - தயவு
கோயம்புத்தூர் விளாங்குறிச்சியில் ஜோதி ஞான சபை-புணருத்தாரண பணிகள் நிறைவு.

கோயம்புத்தூர் விளாங்குறிச்சியில் ஜோதி ஞான சபை-புணருத்தாரண பணிகள் நிறைவு.

கோயம்புத்தூரில் இருந்து வடகிழக்கில் சுமார் 15 கி.மீ தூரத்தில் சிவானந்தா மில் ரோடில், விளாங்குறிச்சி என்ற கிராமம் உள்ளது. அங்கு வாழ்ந்த ஸ்ரீமத் விஸ்வ பிரம்ம ஞானி வேங்கட ரமண மஹரிஷியவர்கள், திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின் சம காலத்தில் வாழ்ந்தவர், 1911-ஆம் ஆண்டில் மாசி மாதம் 6-ந் தேதி தியான குகையில் மறைத்துக் கொண்டுள்ளார். இவர் வாழ்ந்த காலத்தில் அஷ்ட கோண சுற்று சுவர்கள் எழுப்பி, ஜோதி சபை கட்டப்பட்டு விளங்கி வந்துள்ளது.
அவரது காலத்துக்குப் பின், அது பராமரிப்பின்றி அவர்களது உறவினர்களால் சரிவரப் பராமரிக்கப் படாமல் சிதிலமாக உள்ளது. இக்கோவிலை ஆசாரியார் கோவில் என மக்கள் அழைக்கின்றனர். அருட்பெருஞ்ஜோதி நடராஜர் ஆலயமாக இது தற்போது விளங்கி வருகிறது.
ஆனால் அவர் மறைந்து, ஜீவ சமாதி ஆன இடம் கோவிலுக்குள்ளேயே இருக்கின்றது.
இந்த ஆலயம் குறித்து, ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
சமீபத்தில் இந்த ஜோதி சபையின் (சத்திய ஞான சபை அமைப்பு உள்ளது) சிதிலம் அடைந்த நிலையினைப் பார்த்த ஒருவர், தாமே இக் கட்டிடத்தை, வேலை பார்த்து, ஞான சபை போன்ற அமைப்பினை உருவாக்கித் தருவதாக உறுதி அளித்து, அதற்கான பணியினையும் செய்து வருகிறார். தற்போது இந்த இடத்தில் மேல் தளம் அமைத்து, வடலூரில் உள்ளது போலவே ஜோதி தரிசனம் காண்பிக்கும் விதத்தில், அமைப்பாக இந்த கோவில் உருவாகி வருகின்றது என செய்திகள் வரப்பெற்றுள்ளன.
இங்கு புனருத்தாருணம் செய்யப்பட்டுள்ள எண்கோண ஞான சபை 2008ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் வாரம் வாக்கில் கும்பாபிஷேகம் காண இருக்கின்றது என்பது சன்மார்க்க உலகத்திற்கு ஒரு நற்செய்தியாகும். சரியான தேதி முதலான விவரங்கள் வரப்பெற்றபின் இது குறித்து செய்திகள் மீண்டும் வெளியிடப்படும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வெளிப்பாடு, தனது கதிர்களைப் பரப்பி, இக் காரியத்தை இவ்வளவு விரைவில் கூட்டி வைத்திருக்கிறதென்றால் அது மிகையாகாது.