DAEIOU - தயவு
5.10.2008 மானாமதுரை அருகே மூங்கில் ஊரணியில் சத்திய ஞான சபை அடிக்கல் நாட்டு விழா.

5.10.2008 அன்று மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணியில் சத்திய ஞான சபை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
ஆங்கில நாட்குறிப்பின்படி, பிரதி வருடமும் அக்டோபர் மாதம் 5-ந் தேதியினை வள்ளற் பெருமான் வருவிக்க உற்ற நாளாகக் கருதப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த வருடம், இன்று 5.10.2008 (ஞாயிற்றுக் கிழமை) வள்ளற் பெருமான் இவ்வுலகில் அவதரிக்க உற்ற நாள் ஆகும்.
வடலூரிலும், மேட்டுக் குப்பத்திலும் மற்றும் ஏனைய பல இடங்களிலும், இந் நாளினை சன்மார்க்க சங்கத்தவர்களும், ஏனையோரும் ஒரு சிறப்பான விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
இன்று (5.10.2008) காலை 8.00 மணி அளவில், மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணி என்ற கிராமத்தில், மானாமதுரை நகரில் வசித்துவரும் திரு ஜெயராம் என்பவரின் மனைவியான திருமதி வள்ளி என்பவர் வள்ளல் பெருமான் திரு அருளால், சத்திய ஞான சபை கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில், பூமி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அதிகாலையிலேயே மேற்படி கிராமத்தில் அண்டை அயலில் உள்ள பொதுமக்களை அழைத்து, தாமும் மற்ற எல்லோருமாக, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தார்.
சன்மார்க்கக் கொடியினை ஏற்றினார். பின்னர் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை ஒலிக்கச் செய்தார். திருஅருட்பிரகாச வள்ளற் பெருமானையும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிக்கருணையையும் நினைத்தும், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளின் அருள் ஆசியினை வேண்டியும் சத்திய ஞான சபைக்கு அடிக்கல் நாட்டினார்.

மேற்படி மூங்கில் ஊரணி என்ற கிராமம் ஒரு மிகச் சிரிய கிராமம் ஆகும். இருப்பினும், திருமதி வள்ளி இங்கு சத்திய ஞான சபை கட்ட வேண்டும் என்ற தனது உறுதியான நிலையிலிருந்து சற்றும் பிறழாமல், இந்தக் காரியத்தினைச் செய்து முடித்துள்ளார்.
அவர் எடுத்த முயற்சி வெற்றி பெறுவதற்கு அனைவரும் வாழ்த்திச் சென்றனர். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் இந்த சத்திய ஞான சபை கட்டி முடிப்பதற்கு வேண்டிக் கொண்டு, அனைத்து சன்மார்க்க அன்பர்களும் பிரிந்து சென்றனர்.
(இது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்தியில், கிராமத்தின் பெயர் மூங்கில் ஊரணி என்பதற்குப் பதிலாக தவறுதலாக, மயில் ஊரணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அன்பர்கள் பொறுத்தருள வேண்டப்படுகிறது.)