<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

மதுரை மாவட்டம் சோழவந்தானில் 31.8.2008 அன்று நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சித் தொகுப்பு

Ramanujam
posted 24 months ago
01 Sep 2008 02:34:00 GMT 2:34:00 AM

652 views


(1) மதுரைமாவட்டம்சோழவந்தான்சமரசசுத்தசன்மார்க்கசத்தியசங்கம்

 

4ஆம்ஆண்டுவிழா

 

(2) வள்ளலார்சத்தியஞானசபைமுதலாம்ஆண்டுவிழா

 

(3) சன்மார்க்கசங்கத்தின் 50-வதுபொன்விழாக்கூட்டம்.

 

(4) சொற்பொழிவுமற்றும்  அன்னதானவிழா

 

(5) சன்மார்க்கசத்தியதருமச்சாலைத்தொடக்கவிழா.

 

ஆகியஐம்பெரும்விழா.


 


 

சோழவந்தான் கிராமம், மதுரை மாநகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு ஜெனகை அருள்மிகு மாரியம்மன் என்ற கோவில், மிகவும் விசேஷமான அருள் சக்தி வழங்கும் கோவிலாக விளங்கி வருகின்றது.

 

சுமார் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஜெனகை என்ற ஒரு பகுதி இங்கு இருந்துள்ளது. ஆனால் அந்தப் பகுதி தற்போது இல்லை. ஆனாலும், அன்றைய காலத்தில் விளங்கிய அந்த “ஜெனகை” என்ற பெயரை அடை மொழியாகக் கொண்டு, இந்த ஜெனகை அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகின்றது, பக்தர்கள், இக் கோவிலுக்கு, பெருமளவில் வந்து அம்மனை வழிபட்டு, வேண்டுதல்கள் செய்தும், வேண்டுதல்கள் நிறைவேற்றப் பட்டும் செல்வதாக, இங்கு உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

இதனை அடுத்துள்ள திருவேடகம் என்ற ஊர் மிகப் பிரசித்தி பெற்ற ஊராகும். இங்கு ஒரு பிரசித்தி பெற்ற ஆலயமும் உள்ளது. பண்டைய காலத்தில், சமணர்களுடனான சமய மதப் போர் நடை பெற்றபோது, இங்கு உள்ள ஆற்றில், ஏடுகள் விடப்பட்டு, தமிழ் மொழியில் இயற்றப்பட்ட ஏடுகள், ஆற்றை எதிர்கொண்டு வந்ததால், இந்தத் திருத்தலம், திருவேடகம் (திரு + ஏடு + அகம்) எனப் பெயர் பெற்றதாம். மதுரை பெரியார் பஸ் ஸ்டான்டிலிருந்து டெளன் பஸ்கள் இந்த ஊருக்கு இயக்கப்படுகின்றன.

 

சோழவந்தான் கிராமத்தில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நெடுங்காலமாக இயங்கி வருகிறது, இதன் தலைவராக திரு மாரியப்பன் B.A. B.T.,(Headmaster, Retired) அவர்கள் செயல்பட்டு வருகின்றார்.

 

31.8.2008ந் தேதி, மதுரைமாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மேலே குறிப்பிடப்பட்ட  ஐம் பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

காலையில் சுமார் 5.45 மணியளவில்,  திருமதி பாக்யலட்சுமி நாராயணன் அவர்கள் இறைவணக்கப் பாடலைப்பாடி நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார்.

 

அருட்பெருஞ்ஜோதி விளக்கு, மதுரை திருமதி கே.ராஜேஸ்வரி கல்யாண சுந்தரம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது,

 

திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க உதவிச் செயலாளர் திரு செளந்தரராஜன் அவர்கள், சன்மார்க்கக் கொடியினை ஏற்றி வைத்தார். விண்ணை முட்ட அச் சன்மார்க்கக் கொடி பறந்தது.  அன்பர்கள் அனைவரும் கொடி வணக்கப் பாடலினைப் பாடி துதி செய்தனர்.

 

காலை சுமார் 7.45 மணி அளவில், திண்டுக்கல் சன்மார்க்க சீலர் திரு எம்.ராமலிங்கம் அவர்கள் துவங்கி வைக்க, மதுரை திரு இராமநாதன் செட்டியார் அவர்கள் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கி, சன்மார்க்கச் சான்றோர்கள்,  அன்பர்கள், பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் ஆகியோர், திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின் படத்தையும், சன்மார்க்கக் கொடியினையும், கைகளில் ஏந்தி, ஊர்வலமாக நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்து, சுத்த சன்மார்க்க விழிப்புணர்ச்சியினை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.

 

      காலை சுமார் 9.30 மணியளவில், திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தின் உதவிச் செயலாளர் திரு செளந்தரராஜன், சோழவந்தான் திரு ஆ.பாலசுப்பிரமணியன் அவர்கள், அவரது மகள் திருமதி ஏ.பி. வசந்தா, எம்,ஏ., ஆகியோர் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தனர். கூடியிருந்த அனைவரும் அதனைப் பின்பற்றி, அகவல் பாராயணம் பாடினார்கள்.

 

      இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, இந்தச் சிறு கிராமத்தில் எவ்வாறு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதை சங்கத்தின் தலைவர் மதுரையிலிருந்து சென்றிருந்த அன்பர்களிடம் விளக்கிக் கூறினார்.

 

      அதாவது, ஒவ்வொரு மாதப் பூசத்திற்கும் விழா நடைபெறுவதற்கு, ஒவ்வொரு தனி நபரோ அல்லது தொழில் நிறுவனமோ பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளதால், தமக்கு, இச் சங்கத்தின் மூலம், ஜீவகாருண்யப் பணிகள் செய்வதில், எந்த சிரமும் இல்லை என்பதை அவர் விளக்கினார்.

 

இவ் விபரத்தினை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலின் அருகில் தம்மால், அன்பர்களின் பேராதவுடன் ஒத்திக்கு வாங்கப்பட்ட ஒரு சிறு அறையினைக் காண்பித்து, அதில், எழுதப்பட்டுள்ள வாசகங்களின் மூலம் அவர் விளக்கினார். மாதாமாதம் நிகழ்ச்சிகளுக்குப் பொருளாதார உதவிகள் செய்யும் அன்பர் / நிறுவனம் முதலானவற்றின் பெயர்கள், சுவற்றில், மாத வாரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

     பின்னர் சுமார் 10.45 மணி அளவில், விழாவிற்கு, திரு கே.எஸ்.மாரியப்பன். எம்.ஏ.பி.டி அவர்கள், சோழவந்தான் சங்கத் தலைவர்,  தலைமை ஏற்று நிகழ்ச்சியைத் துவக்கினார்.

 

      அனைவரையும், திரு எஸ்.ராசமாணிக்கம் எம்.ஏ.பி.எட், முள்ளிப்பள்ளம் ஆசிரியர், மற்றும், சங்கச் செயலாளர் வரவேற்றுப் பேசினார்.

 

      ஆண்டறிக்கையினை, சங்கத்தின் உதவிச் செயலாளர், முள்ளிப் பள்ளத்தைச் சேர்ந்த திரு வி.பி.மகாமுனி அவர்கள் வாசித்தார்.

 

      தர்மசாலை நிர்வாகியும், சங்கப் பொருளாளருமான, திரு எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வரவு, செலவு அறிக்கையை வாசித்தார்.

 

திரு கல்யாணசுந்தரம் அவர்கள், சுமார் 15 ஊனமுற்றவர்கள் மற்றும் முதிய - ஏழை எளியவர்களுக்கு, இலவசமாக ஆடையினை வழங்கினார்.

 

      மதுரை செல்லூரில்,  திருக்குறள் பேரவை சன்மார்க்க சங்கத்தை நடத்தி வரும் திரு செ.செல்வம் அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

 

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் இங்கு வந்து நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் பெற்றுச் சென்றனர். சுமார் 100 குழந்தைகள் இந்த உதவியினைப் பெற்றனர்.

 

      அதற்கடுத்த நிகழ்ச்சிக்குத் துவக்கமாக, மேற்படி சங்கத்தின் திரு அருட்பா பாடகி - திருமதி பாக்கிய லக்ஷ்மி நாராயணன், திரு அருட்பா பாடலை மிகவும் உருக்கமாகப் பாடினார்.

 

      அதன்பின்னர், அவரது மகள், செல்வி கோமதி (6வது பயிலும் மாணவி) திருவருட்பாவில் (தெண்டனிட்டேன் என்று சொல்லடி -  மற்றும் -  வருவார் அழைத்து வாடி ஆகிய) இரண்டு திரு அருட்பாப் பாடல்களுக்கு மிகவும் அற்புதமாக நடனமாடினார். இதனை, அங்கு கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் மிகவும் பாராட்டினர்.

 

அருமையாக வள்ளற் பெருமானின் திரு அருட்பாவிற்கு நடனமாடிய அக் குழந்தை, வருங்காலத்தில், நாட்டிய சிரோன்மணி திருமதி பத்மா சுப்ரமணியமாக உருவாவார் என தலைவர் தமது உரையில் தெரிவித்தார். மேலும், அக் குழந்தைக்கு, பரிசுத் தொகையினையும், அவர் வழங்கினார்.

 

      அதன் பின்னர், மதுரை ஐயர் பங்களாவைச் சேர்ந்த மூத்த  சன்மார்க்கி திருமதி சிவகாமி, திரு அருட்பா பாடல்களை, மிகவும் உருக்கமாகப் பாடினார்.

 

      பின்னர், பள்ளிகளில் திருவருட்பிரகாச வள்ளலார் மற்றும் திரு அருட்பா போன்றவற்றில் போட்டிவைத்து அதில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு செக்கானூரணி திரு பி. ராமச்சந்திரன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

 

ஒரு சிறப்பாக இந்த நிகழ்ச்சியில் உணரப்பட்ட விஷயம் என்னவெனில், சோழவந்தானிலும், அதனைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் வசிக்கும் பெரும்பாலான குடும்பத்தைச் சேர்ந்த அன்பர்களின் உதவிகளைப் பெற்றும் அங்கு தொழில் வைத்து நடத்தி வரும் பலரது பொருள் உதவி, நிதி உதவி முதலியவற்றைப் பெற்றும், இந் நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குதலும், ஏழை எளிய மக்களுக்கு, ஆடை வழங்கும் நிகழ்ச்சியும் அன்னதானமும் நடத்தப்பட்டது.

 

 ஏதாவது ஒரு வகையில், சுத்த சன்மார்க்க சங்கத்தின் மூலம் நடத்தப்படும் புண்ணிய காரியத்தில், அந்தப் பொது மக்களுக்குப் பங்கு செல்லட்டும் என்பதற்கு, இது வாய்ப்பாக அமைந்ததை எடுத்துக் காட்டுவதாக இந் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

 

      அரங்க மேடையில், திரு ராஜூ என்ற அன்பர், சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3,000/-ஐ அன்பளிப்பாகக் கொடுத்தார். அவர், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் எழுதும் தொழில் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

      சிறப்புப் பேச்சாளர் பழனியைச் சேர்ந்த திரு மா. சமயபுரத்தான் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) பகல் 12.30 மணிக்கு, தனது சொற்பொழிவினைத் துவக்கினார். அவர், திண்டுக்கல்லில் மலை அடிவாரத்தில் இயங்கி வரும் சன்மார்க்க சங்கத்தில் பொறுப்பில் உள்ளார்.

 

“வாக்குச் சித்தர் வள்ளலார்”

 

      இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், சித்தாந்தம், வேதாந்தாம் முதலான நெறிகளில், மக்கள் மயக்குண்டு கிடந்த கால கட்டத்தில், 1823ஆம் ஆண்டு, மருதூரில் வள்ளற் பெருமான் அவதரித்தார்.

 

அவர் அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்திருந்த சகத்தீர் அனைவரையும் திருத்துவதற்காக அவதரித்தவர்.

 

      சித்தர்களில் சாமு சித்தர் என்று ஒரு வகையினரைக் குறிப்பிடும் வழக்கம் உண்டு. சாமு சித்தர் என்றால், ஒரு பிறவியில் பெற்ற சித்து, அடுத்த பிறவியிலும் தொடரும் வண்ணம் உள்ளவர்களையே குறிப்பிடுவது ஆகும்.

 

     அத்தகைய பிறப்பெய்திய திருஞான சம்பந்தப் பெருமான், 3 வயதில், ஞானப்பால் பருகி அனேக பாடல்களை இயற்றினார்.

 

      அதேபோல், வள்ளல் பெருமான், தாம் 6 மாதக் குழந்தையாக இருக்கும் போதே சிதம்பரத்தில், திரை தூக்க தரிசனம் பெற்று அதன் மூலம் இறை விளக்கம் பெற்று, இள வயதிலே திரு அருட்பா பாடல்களை இயற்றும் வல்லமை பெற்றார். தமது ஒன்பதாவது அகவையில் உள் முகமாக இறைவனை தரிசிக்கும் பாக்கியத்தினை வள்ளற் பெருமான் பெற்றார்.

 

      உலகாயத மக்களில், பொதுவாக தமது பெயருக்கு முன்னர் தனது தந்தையாரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை (initial) ஆகப் போடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், வள்ளற் பெருமான், தாம் கையெழுத்துப் போடும்போது, “சிதம்பரம் ராமலிங்கம்” என்றே குறிப்பிட்டுக் கையெழுத்திட்டுள்ளார். இதிலிருந்து அவருக்கு சித் அம்பரத்திலிருந்த இறைவன் தமக்குத் தந்தையார் ஸ்தானத்தில் இருந்திருப்பதை அவர் உணர்த்தியுள்ளார். தவிரவும், தத்துவ வெற்றி என்ற தலைப்பில் அவர் பாடிய பாடல்களும், இதனை உணர்த்துவனவாக அமைந்துள்ளன. (மனமெனும் ஓர் பேய்க் குரங்கு. எனும் பாடல்கள்) மேலும், அவர் எழுதியுள்ளதாக பிரசுரிக்கப்பட்டுள்ள லிகிதங்களில், சாலை சம்பந்திகளுக்கு என எழுதியுள்ள லிகிதத்தில், என் தந்தையராகிய அருட்பெருஞ்ஜோதியர் எனக் குறிப்பிடுகின்றார். இதன்மூலமும் இதனை அறியலாம்.

 

      சென்னையிலே நெடுங்காலம் இருந்துவிட்டு, பின்னர் கருங்குழியில் வாழ்ந்து, அதன் பின்னர், வடலூரில், தருமச் சாலை கட்டினார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் மூலம், பசிப் பிணியின் கொடுமை எந்தெந்த விதத்திலெல்லாம் ஜீவர்களை வாட்டுகின்றது என எடுத்துரைத்தார். எனவே, அவர், தாமே இதற்கு ஒரு முன் உதாரணமாக,  தமது வாழ்வில், பிரதானமாக ஏழைகளின் பசிப் பிணியினைப் போக்கும் தொண்டு புரிந்தார்.

 

      அதேபோல் ஜீவர்கள் அனைவரும், கருணையுடனும் தயவு உள்ளத்தோடும் வாழப் பழக வேண்டும்.

 

      நெடுங்காலத்துக்கு முன்னர், அரசூழியர் சங்கக் கூட்டமைப்பு பழனியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந் நிகழ்ச்சிக்கு, வந்திருந்த அனைவருக்கும் உணவு அளிக்கும் பணிப் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டது. 3 நாட்கள் அந் நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது.

 

அந் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பள்ளி ஆசிரியைகள் கல்வித் துறை மூலம், தமக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு (promotion)  கிடைக்கவில்லையே என என்னிடம் ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், அந்த மூவருக்கு உணவும் தனக்கு வைத்திருந்த உணவும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

 

    அப்போது, பசி என்று ஒருவர் கேட்ட குரல், சற்றுத் தூரம் தள்ளி இருந்த தமக்குக் கேட்டது.  பசி என்று வந்த அந்த அன்பருக்கு அந்த உணவினை வழங்கினோம். அந்த நபர் எங்கள் அனைவருக்கும் வைத்திருந்த எல்லாம், போதும் என்று சொல்லாமலேயே அருந்திய பின் சென்று விட்டார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. தாம் அனைவரின் உணவினையும், வந்த ஒரு நபர் மட்டிலுமே உண்டு விட்டுச் சென்றுள்ளாரே என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அவ்வளவு பசி அவருக்கு போலும் என்றும் நாங்கள் கருதினோம்.

 

      ஒரு மாதத்திற்குப் பின் அந்த ஆசிரியைகளிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அவர்கள், தமக்கு பணி உயர்வு (promotion) கிடைத்து விட்டது என்று அளவில்லா ஆனந்தத்துடன் எழுதியிருந்தனர். அன்று ஒரு தேதியில் தாம் பசியாற்றுவித்த ஒரு நிகழ்ச்சியால்தான் இது நடைபெற்றுள்ளது என அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதிலிருந்து ஜீவகாருண்யத்தின் மகிமையினை அவர்கள் தெரிந்து கொண்டனர்.

 

      சுத்த சன்மார்க்கத்திற்கு வந்தவர்கள் எல்லாம் கேட்கும் முதல் கேள்வி, வள்ளல் பெருமானைப் போல் திரிதேக சித்தி பெற்றவர் யார் என்பதேயாகும்.

 

      வள்ளற் பெருமான் சொன்ன ஒழுக்க விதிமுறைகளை வாழ்க்கையில் யாருமே கடைப்பிடிக்காத போது, எவ்வாறு அவர் அடைந்த நிலை அடைய முடியும் ?

 

      அதற்கும் அவரது அருள் வேண்டும். இறைவனிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே இது சாத்தியம். தன் முனைப்புடன் இதனை செயல்படுத்த வேண்டும்.

 

      வள்ளற் பெருமான், சங்கம், சாலை, சபை என அனைத்தும் மனித குல மேம்பட்டிற்காக நிறுவிச் சென்றுள்ளார். அதற்கும் மேலாக, திரு அருட்பா 6,000 பாடல்களை வடிவமைத்துச் சென்றுள்ளார். யாரும், தமது காலத்தில், தாம் சொன்ன கருத்துக்களைப் புரிந்து கொள்ளாமலும், ஒழுக்க விதிகளைக் கடைப் பிடிக்காமலும் இருந்ததால், தீப முன்னிலையில் ஆண்டவர் விளங்குவதாகப் பாவித்து, ஞான சரியையில் துவங்கும் “நினைந்து நினைந்து” எனத் துவங்கும் 28 பாடல்களையும் பாடும்படிக் கூறிவிட்டு, ஒரு அறைக்குள் சென்று பின்னர், திரிதேக சித்தி பெற்று, இறை நிலையினை அடைந்தார்.

 

      எனவே, அவர் சொன்ன கருத்துக்களை நன்கு உணர்ந்து, நால்வகை ஒழுக்க விதிகளை வாழ்க்கையில் அனைவரும் கடைப்பிடித்து, உள் முகமாக இறைவனைப் பிரார்த்தித்து வந்தால், கண்டிப்பாக இறவாமை வரம் பெறலாம் (deathlessness)  என்று கூறி, தமது உரையினை அவர் நிறைவு செய்தார்.

 

மதுரை ஞானதீபம் பத்திரிகை ஆசிரியர் திரு முரளீதரன், தனது அன்பர் ஒருவரை அனுப்பி, மேற்காணும் பத்திரிக்கை மற்றும் ஜோதிக் கூண்டு தயவு நூல்கள் முதலானவற்றை விற்பனை செய்வதற்கன ஸ்டால் போட்டிருந்தார்.

 

      இறுதியில், திரு அய்யப்பன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். குறிப்பாக, இந் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு, இடம் ஒதுக்கித் தந்த காமாரஜர் நடுநிலைப் பள்ளியின் பொறுப்பாளர்களை அவர் பாராட்டினார்.

 

       பின்னர், மதியம் சுமார் 1.30 மணி அளவில்,  அன்னம் பாலிப்புப் பணி நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், ஏழை எளியவர்களும், இந் நிகழ்ச்சிக்கு உதவியவர்களுமாக, சுமார் 600 நபர்கள், உணவருந்தினர்.

 

      இந்த சிறு கிராமத்தில், சன்மார்க்க சங்கத்தினர் நடத்திய இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியின் மூலம், இங்கு வசிக்கும் பொது மக்கள் சுத்த சன்மார்க்கம் குறித்தும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் கூறிச் சென்றுள்ள ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும், அவர்கள் தமது வாழ்வில் சீரும் சிறப்புடன் கடைப்பிடிப்பதற்கு ஒரு வாய்ப்பினையும் ஒரு எழுச்சியினனயும்  ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

      .

       

 

 

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Events & Meetings

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace