<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

திண்டுக்கல் கவியரங்கத்தில் வாசித்த கவிதை-வள்ளலார் சமூகப் புரட்சியாளர்

Ramanujam
posted 24 months ago
09 Aug 2008 02:21:42 GMT 2:21:42 AM

806 views


29.6.2008 அன்று திண்டுக்கல்லில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய வள்ளலார்ம் ஒரு சமூகப் புரட்சியாளர் விழாவில் வாசித்தளிக்கப்பட்ட கவிதை-

 

தனக்குத்தான் சொல்லியவை.

 

முனைவர் நா. காந்திமதி, தேர்வு நிலைத் தமிழ் விரிவுரையாளர்,

 

M.V.M. அரசினர் கலைக்கல்லூரி, திண்டுக்கல்

 

வள்ளலாரெனும் வெள்ளை ஒளிப் பிழம்பு

தனக்குத் தான் சொல்லியதை

எனக்குள் நான் சொல்லி

உங்களுக்குச் சொல்லப் போவதை

செவிமடுக்கக் குவிந்திருக்கும்

பேரவைக்குப் பெருவணக்கம்.

 

தமிழுக்கே பெரிய   சாமி    இவர்

ஆசாமிகளுக்கல்ல ;

அருள் வழங்கப் பொருள் கேட்கும்

போலிச் சாமிகளுக்கல்ல ;

தமிழுக்கே . . . . பெரிய   சாமி இவர்

அரங்கத்தின் தலைச் சாமியாய்

அருகிருப்பது

அடியேன் பாக்கியம் ; நடுங்காதென் வாக்கியம்

 

தொடர் யாகத்தில் தோற்றுப் போகாத

“நலிந்தோர்க்காய் வாழ்தல்” என்னும்

தொண்டர் விச்சலனுக்குத் தோழமை வணக்கம்;

 

 

இருள் அப்பிய வாழ்வை ஒளியால் நிரப்பி

மடைமாற்றம் செய்ய வந்த வள்ளலாரை

அருந்தமிழில் பெருநிலத்தை ஒளி   விளை மண்ணாக்க வந்த

வள்ளல் பெருமகனைக்


கவிதையில் வழங்கிட

உதடு மணக்கிறது; உள்ளம் இனிக்கிறது;

உடைந்து சிதறுது மெளனப் பூட்டு

 

வாழ்வை வாசித்து வரையறை வடித்தவன்

தன்னுள் பயனித்துத் தரணியையே

தலையாட்ட வைத்தவன்

 

இலக்குகளற்று

ஓடிக்கொண்டிருந்தோரை ஒடித்துத் திருப்பாமல்

உரைத்துத் திருப்பியவன் கவிமொழியால்

உரைமொழியால் உணர்த்தித் திருப்பியவன்;

 

ஒளிந்த பக்கங்களில் ஒளி பாய்ச்சி

கறுத்த வாழ்க்கையை ஒளிரச் செய்தவன்

 

தன்னைத் தெளித்துக் களித்தவன்

முன்னோடியாகி

நம்மைப் பின்னோட வைத்தவன்

 

பேருக்குப் பேசாத பெரும்புலவன்

ஊருக்காகத் தன்னைக் கரைத்து உரைத்தவன்

 

மதப்பேயைப் பொட்டில் அடித்து

அகப்படுத்தக் காத்திருக்கும்

கண்ணிகளாய் விழுதிறக்கிய

சமயச் சிடுக்குகளைச்

சற்றே அவிழ்த்தவன்

சாக்கடை மரபுகளைக் கொட்டிக் கவிழ்த்தவன்.

 

இனத்தின் மேனியெங்கும்

பற்றிப் படர்ந்த

சாதிப் படைகளை

பக்தி நெருப்பில் பொசுக்கியவன்

 

நீரையும் மண்ணையும்

திருநீறையும் திருமண்ணையும்

இணைத்துப் பிணைத்தவன்

 

சற்றே தள்ளியிரும் பிள்ளாய் என்றே

சமயப் பிணக்குகளை எட்டி நிறுத்தியவன்

 

உயிர் நேசமே இறை நேசம் என்று

கலகக் குரலையும்

கனிவுக் குரலாய் உரத்து ஒலித்தவன்

 

மேகலையும் பாரதியும்

இலக்கியம் ஆக்கிய

 

யானைப் பெருந்தீயை பசியெனும்

ஆனைப் பெருந்தீயை

அணைப்பதற்காய் அடுப்பை ஏற்றியவன்

 

தீமைக்குத் தீயினும் அஞ்சியவன்

 

கண்ணிகள் இவன் கனவிலும் கருவருக்கும்

வலைக்கு விலை போகும் வீணர்களை விசாரித்தவன்

தூண்டில்கள் துண்டாடும் எதார்த்தம் எடுத்துரைத்தவன்

உயிர்க்கொலை கண்டு உருக்குலைந்தவன்

 

நல்லார் மனதை நடுங்க வைத்ததாய்

தனக்குத் தான் சொல்லி

நமக்குள் நம்மை எழுப்பி விட்டவன்

 

ஊன் பெருக்க ஊன் உண்ணும்

உளுத்துப் போன உள்ளங்களை உலுக்கிப் பார்த்தவன்

வார்த்தைகளால் மட்டுமல்ல

வாழ்ந்த முறையாலும் உலுக்கிப் பார்த்தவன்

 

மரணக் கனவும் நினைவும்

கணந்தோறும் இவனை உடைத்துப் போட்டது

 

தவறு கண்ட தடங்களில் தயங்கினான்

தன்னுள் மயங்கினான்

 

சின்னத்தனம் இவனைச் சீண்டிச்

சீற்றப் படுத்தவில்லை

உயிர் இரக்கத்தால் தன்னுள்ளே கீரிக்கொண்டான்

உதிரம் வழிந்தது

உள்ளம் கரைந்தது.

 

நோயும் மரணமும் புத்தனை புரிய வைத்தது

இந்தச் சித்தனை எரிய வைத்தது

 

மானுட இழப்புகளால் இவன் இற்றுப் போனான்

உயிரிரக்கம் இவன் இதயத்துள் ஈரம் தடவியது

 

பணத்தைக் கணமும் கவனிக்காத இவன்

வர்க்கப் பிரிவுக்காக துக்கத்தில் மிதந்தான்

 

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக என்றான்

வெள்ளைக்கு எதிராக அழுத்தக் குரல்

எழுப்பிய

இலக்கிய முன்னோடி இவனாய்த்தான் இருக்குமோ

 

பூகம்பம் திரட்டிப்புதையச் செய்து

புவனம் புரட்டிப் போடும்

பெண்ணாசையைப் பேசாமலே புறம் கண்டான்

தன் கற்பைக் கறைபடாமல் கட்டிக் காத்தான்

அதனால்

திருமண உறவையும் தீண்டத் தயங்கினான்

 

மனிதர்களிடையே ‘மாமனித’ராய்

விஸ்வரூபமெடுத்த இந்த விருட்சம்

சமத்துவம் கருதி

தன்னடக்கம் கொள்வதில் தலை நிமிர்ந்தது.

 

சிந்தனைத் தெளிவால் பக்குவம் வளர்த்து

எளிமையில் இழைந்து ஏற்றம் பெற்றது

 

இரக்கம் அடைதல் உயிர் இயற்கை என்பதால்

உலகியலோடு ஒன்றி நின்றார் இந்த ஞானி

 

வறண்ட வாழ்வில் ரசனையாய்

பாலைச் சூட்டில் பொங்கும் நீரூற்றாய்

இறைவன் ஒற்றை ஒளியில் ஓங்கி நிற்பான்

 

அறிவை வளர்ப்பான்

கருணை மடை திறப்பான்

 

சித்தி நிலை செலுத்தி

முக்தி தந்து முழுமையாக்குவான்

 

மரணமில்லாப் பெருவாழ்வில்

மகத்துவங்கள் சமைக்கலாம் என்றார்

இந்தச் சாதனைச் சிற்பி

 

அலைமோதும் வாழ்வில் அமுதம் அளித்தவன்

தனக்காகப் பேசித் தரணியையே வளைத்தவன்

 

வரந்தந்த வள்ளல் வழியில்

விருத்த நடை பயின்று

விழியில் ஒளி கூட்டி

நம்மைப் பிழியும் அழிவுகளை அழிப்போம்

அன்றாடம் களிப்போம்

 

தனக்குத்தான் சொல்லியவை எல்லாம்

தனக்குத்தான் சொல்லியவையா .. .. ?

 

எனக்குள் இரங்கிப் பார்த்தேன்

எட்ட நின்ற சிரித்தது ஒரு பொறி

 

நமக்கும் சொல்லியவைதானே… .. ..

 
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment
#1
வள்ளல் பெருமானை, கவிஞர் பெருமக்கள் எப்படி எப்படி எல்லாம் தமது கற்பனைத் திறத்தால்

உருக் கொடுக்கிறார்கள் ? சமூகப் புரட்சியாளராம் அவர் . . .

திண்டுக்கல்லில் வெடித்த இக் கவிதை சற்றே தாமதமாகக் கிடைக்கப் பெற்றது.

அன்பர்கள், படித்து இன்புறுவார்களாக .. .. .. ..
Ramanujam

09 Aug 2008 02:24:11 GMT 2:24:11 AM
24 months ago

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace