<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

திண்டுக்கல் மாதாந்திர பூச நாள் விழாக் கூட்டம்

Ramanujam
posted 25 months ago
08 Jul 2008 21:05:21 GMT 9:05:21 PM

970 views


அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்

 

மாதாந்திரக் கூட்ட நடவடிக்கைகள்

 

ஸ்ர்வதாரி ஆண்டு ஆனி மாதம் பூச விழா.

 


நாள் – 6.7..2008   ஞாயிற்றுக் கிழமை.

 


        திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் என்ற பல உரை நடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.

 

            அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம்   என்ற   இடத்தில்,   “சுவாமி   சரவணானந்தா   அருட்பெருஞ்ஜோதி   தயவு   இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 



          மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

            அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 6.7..2008ந் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

 


 

 

காலை 10.30 மணி – கொடி வணக்கம்.

 

காலை 10.40 மணி – திருவடிப்புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல், அட்டகம் மற்றும் சுவாமி சரவணானந்தரின் சற்குரு வணக்கப் பாடல்கள்.

 

நண்பகல் 12.30 மணி அகில உலக மக்களின் நல்வாழ்வுக்காக தியானம் நடைபெற்றது.

 

நண்பகல் 12.40 மணி – திண்டுக்கல் மலையடிவாரம் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க 78-வது மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவுக்கு வந்திருந்த பட்டுக்கோட்டை வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை தயவு திருமதி கீதா நிதி ஜெய பாலன் அவர்கள், சன்மார்க்கச் சொற்பொழிவு ஆற்றினார். அவர் தனது உரையில், “இங்கு எல்லா சன்மார்க்க அன்பர்களும் அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதினீர்கள். இந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுவதனால் நமக்குள்ளே பேராற்றல் பெருகுகின்றது.

 

            பலர் யோகா கற்றுத் தருகின்றனர். உண்மையிலேய அகவலை ஒரு வரி விடாமல் உணர்ந்து ஓதும்பொழுது, நம்கை அறியாமலேயே,   அந்த யோக நிலைக்கு நாம் சென்று விடுகின்றோம். முதலில் உடல் சீர்படுகின்றது. சரியாக அமர்ந்து கொள்கிறோம். பின், மனம் ஒருமைப்படுகின்றது. உயிர் மிக ஆழ்ந்த நிலைக்குச் சென்று,  ஒடுங்கி நிற்கின்றது. ஆன்மா ஆனந்த நிலை அடைகின்றது. வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றி அருட்பெருஞ்ஜோதி அகவலில் எவ்வாறெல்லாம் விரித்து விளக்குகின்றார். பொருள் உணர்ந்து ஓதிவரும் போது, நமக்குள் அருட்பேராற்றல் பெருகி பொங்கித் ததும்பி, வெகு இலகுவாக, விளங்க ஆரம்பித்து விடுகின்றது. தினமும்ம்,  நம்மால் இயன்ற அளவு 20 வரிகள், 50 வரிகள் என்று அவ் வரிகளின் உண்மைப் பொருளினை உணர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவலை படித்து வர வேண்டும்.

 

            இங்கே எல்லாம் அதிக அளவில்  சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு இருக்கின்றீர்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு மகப்பேறு காலத்தில், உனக்கு சுகப்பிரசவம் ஆகாது. ஆப்பரேஷன்தான் செய்ய வேண்டும் என்றார்கள். நான் வள்ளல் பெருமானை, மனதில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உள்ளம் உருகத் தொழுதேன். எந்த விதமான பிரச்னைக்கும் இடமின்றி, எனக்கு சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்று அவரது பாதார விந்தங்களில் கோரிக்கையினை வைத்தேன். குழந்தை உண்டாகியிருந்த அந்த நிலையிலும், எனது கவனத்தைப் பூராவும், திருவருட்பாவினைப் படிப்பதிலும் வேலை நேரம் போக எஞ்சிய நேரம் பூராவும், சுத்த சன்மார்க்கப் பணிகளிலும், என் கவனத்தைச் செலுத்தினேன். எனது சிறுமையினை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சந்நிதியிலே ஒப்புவித்து, வேண்டி நின்றேன். வள்ளல் பெருமானின் ஆசிப்படி, எவ்வித கஷ்டமின்றி, எனக்கு சுகப் பிரசவம் ஆகியது. அகவலின் பேராற்றல் அப்படிப்பட்டது. என் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறு நிகழ்ச்சியை நான் ஒரு சிறிதுதான் கோடிட்டுக் காட்டினேன். இன்னும் பலப் பல அதிசயங்களை அவர் எனது வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

 

            இதனைப் போன்று உங்கள் வாழ்விலும் பல அதிசயங்கள் நடக்கக காத்திருக்கின்றன. தொடர்ந்து, அருட்பெருஞ்ஜோதி அகவலையும் திரு அருட்பாவினனயும், ஒவ்வொருவரும் தவறாமல் படித்து இன்புறுங்கள். யான் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைய வேண்டும்.

 

            இந்த திண்டுக்கல் மக்கள், சன்மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல் படுகின்றீர்கள். சன்மார்க்க அன்பர்கள் கூட்டமும், நாளுக்கு நாள் பெருகி, வருகிறது.

 

            முன்பு ஒரு முறை, மலையடி வார சன்மர்க்க சொற்பொழிவிற்கு, வந்திருக்கின்றேன். மீண்டும் எனக்கு திண்டுக்கல் வர வாய்ப்பு கிடைக்குமா எனப் பலமுறை எண்ணியதுண்டு. அந்த வாய்ப்பு, வள்ளல் பெருமானின் ஆசியாலும், தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் அருள் ஆசியாலும், இன்று கிடைத்தது. இன்னும் சொல்லப் போனால் இந்தப் பொன்னகரத்திற்கு வந்து உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கின்றேன். இந்த சுவாமிகள் மகா சன்னிதியில் பேச வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் உண்மையிலேயே,  பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். சுவாமிகளின் நூல்களை நான் படித்திருக்கின்றேன். அவற்றை உண்மை உணர்ந்து படிக்கப் படிக்க,  என்னை ஆழ்ந்த நிலையில் புருவ நடுவிற்கே கொண்டு வந்து நிறுத்தும்.

 

            அன்றைக்கு யாருமே எதிர்பாராத வகையில், சுனாமி இயற்கைச் சீற்றம் வந்தது. நாங்கள் மட்டும்தான் வள்ளல் பெருமானின் திருவருளால் காப்பாற்றப்பட்டோம். சன்மார்க்கப் பெரு நெறியினை, வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்ததால் நாங்கள் காப்பற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தோம். உடன் அங்கே விரைந்து சென்று, கடலில் கோரப் பிடியில் சிக்கித் தவித்த,  பல மக்களை காப்பாற்றினோம். மேலும் அடுத்து, 2010லும், 2012ம் ஆண்டிலும் சுனாமி வரலாம்  என்கிறார்கள். நாம் வள்ளலாரை நம்பி இருக்கும்போது நமக்கு  எந்த விதமான ஆபத்தும் வராது. உள்ளும் புறமும் வள்ளல் இருக்கையில், நாம் எதற்கு பயப்பட வேண்டும் என்று அவரது திருவடிகளில், எங்களது சிந்தனை, சொல், செயல்களை செய்து வருகின்றோம். எது நடந்தாலும், அது திருவுளச் சம்மதம் என்றே எங்கள் பகுதியில் உள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றோம்.

 

 

       இயற்கையை நாம் ரசிக்க வேண்டும். மரங்கள், செடி கொடிகள், இவைகள்,  அதன் அசைவுகள், கடல் அலைகள், காற்று,. வானம் ஒரு குடையாக கவிழ்ந்து காட்சி தரும் இன்பம். வள்ளலாரை நம்பியவர்களுக்கு இயற்கை நமக்கு நன்மையே செய்யும். நமக்கு வாழ்க்கை பூராவும் வெற்றிதான்.

 

            வள்ளலார்தான் நமக்குரிய சொந்தம், பந்தம் உறவு எல்லாமும். சாதி மதங்களைப் பற்றி வள்ளலார் சாடுகின்றார். நாம் கலப்பு திருமணங்களை நம் வீட்டிலேயே அனுமதிக்க வேண்டும். நமது உறவினர்கள் எல்லோரும் ஒரு கால கட்டத்தில்,  நம்மை விட்டு விட்டுப்  போய் விடுவார்கள் என்று கவலைப் படாதீர்கள். நம்ம உறவுக்காரர், வள்ளலார் பெருமான்தான். வள்ளலாரின் குடும்பங்கள் தான் நமது உறவினர்கள். அதிலே அனைவரும் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும்.

 

            வள்ளலாரைப் பாருங்கள். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி வாழ எவ்வளவு எளிமையாகச் சொல்லி இருக்கிறார்.

 

 இந்திரிய ஒழுக்கம்., கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம். இதில் முதல் இரண்டு ஒழுக்கங்களை நாம் வாழ்க்கையில் தவறாமல், கடைப்பிடித்தாலே மற்ற இரண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினால், தானாக வந்து விடும். மனதை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அருட்பா திரு பாடல்களை தினந்தோறும் படிக்க வேண்டும். அதில் சொல்லப்பட்ட கருத்துக்களைப் பற்றிய சிந்தனையில் இருக்க வேண்டும். நல்ல விஷயங்களையே கேட்க வேண்டும். இப்படி தொடர்ந்து வாழ்க்கையைக் நடைமுறைப்படுத்தி வாழ்ந்தால் போதும். கருணை, தயவு, இரக்கம், இந்த மூன்றும் கண்டிப்பாக நமது வாழ்வில் கடைப்பிடிக்க  வேண்டும்.  எதிலும் பொது நோக்கல் கொண்டு செயல்பட வேண்டும்.

 

            வள்ளலார் தமது 6,000 பாடல்களில் பல முறை, சத்தியம், சத்தியம் என்று சத்தியம் செய்து சொல்கின்றார். நாம் ஒரு தடவை சத்தியம் என்று சொல்வதற்குக் கூட மிகவும் யோசிக்கின்றோம்.

 

            மேலும் தமிழ் மொழியில் உள்ள, அஃகு என்ற எழுத்து மிகவும் முக்கியமானதாகும்.  கீழே உள்ள 2 புள்ளிகள் நமது கண்கள். மேலே உள்ள புள்ளி புருவ நடு இடம். அக்னி – சூரியன் – சந்திரன் என்பவைதான் அந்த முப்பாற் புள்ளியின் அடையாளம். என தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

 


 

 

மதியம் 1.00 மணி –

 

            திண்டுக்கல் சன்மார்க்கத் தொண்டர் பொன்.சங்கரலிங்கம் அவர்கள், வள்ளற்  பெருமான் அருளிய பேருபதேசப் பகுதியிலிருந்து விரிவான விளக்கம் அளித்தார். மேலும் அவர் கூறும்போது, வள்ளலார் பேருபதேசத்தில் நாம், நமது வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டியவை பற்றி முழுமையாக சொல்லி இருக்கின்றார்

 

. அதனை மிகவும் தெளிவாகவும் சுருக்கியும், தயாநிதி சுவாமிகள், “பேருபதேசப் பிழிவு” என்ற சிறு மலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தார்.

 

மதியம் 1.25 மணி.

 

            பட்டுக் கோட்டை திருமதி கீதாநிதி ஜெயபாலன், பி.ஏ. அவர்களுக்கு திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளை மற்றும் இத் தயவு இல்லத்தை நிர்வகித்து வரும் அன்பர் திரு S.R. ராமலிங்கம் அவர்கள், தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய கீழ்க்காணும் புத்தகங்களை வழங்கினார்.

 

1)     சுத்த சன்மார்ர்கப் பதி வருகை

2)     இராமலிங்கர் வாழ்க்கை உண்மை

3)     அருளறிவியல்.

4)     மனிதன் யார் ?

 

மேலும் அவர் வள்ளல் பெருமானின் கருத்துக்களையும், தயாநிதி சுவாமிகளின் கருத்துக்களையும், மிகவும் எளிமைப் படுத்தி, எல்லா மக்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் கொள்கைகளையும், தத்துவங்களையும் பரப்புமாறு கேட்டுக் கொண்டார்.

 

மதியம் 1.30 மணி.

 

            அடுத்து திண்டுக்கல் சுவாமிகளின் அணுக்கத் தொண்டர் திரு விசுவநாதன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். அவர் தனது உரையில், கீழ்க்கண்ட விளக்கத்தை அளித்தார்.

 

            ‘உலகெலாம் பரவ என் உள்ளத்திருந்து அலகிலா ஒளி செய் அருட்பெருஞ்ஜோதி’ என்ற வள்ளல் பெருமானின் வாக்கின்படி, இன்று உலகெலாம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கப் பெரு நெறி மிகுந்த பேராற்றலோடு வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

 

            ‘வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும் அளி உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி’ என்று வள்ளல் பெருமான் மொழிந்தது போல்,  தற்போது www.vallalarspace.com இணைய தளம், வள்ளல் பெருமானின் வெளியாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.

 

            Space என்றால் இடம், வெற்றிடம், வெளி, வெட்ட வெளி, அனுபவத்தைச் சுட்டுகின்றது. இது (www.vallalarspace.com ) நமது ஒவ்வொருவரின் அக ஆன்ம வெளியில் வள்ளலார் வெளியாக, அருள் வெளியாக, தயவு வெளியாகவே சதா இயங்கிக் கொண்டிருப்பது,  உண்மையாகும்.

 

            எப்படியெனில். (1) Mini Universal என்றால் நமது தேகமே ஒரு சிற்பிரபஞ்சமாக உள்ளது. இதில் ஒவ்வொருவரின் சிர நடு இடம் (space) தான் சிதாகாச வெளி, ஞானாகாச வெளியாக இருக்கின்றது.

 

            (2) Universal என்றால் மாபிரபஞ்சம் முழுவதும் நிரம்பிய தகராகாசப் பெருவெளியாக இருக்கின்றது.

 

            (3) இந்த இரண்டிற்கும் நடுவே, இப்போது எல்லாமாக www.vallalarspace.com “திருநிலைத் தனிவெளி, சிவவெளி, எனும் ஓர் அருள் வெளிப் பதிவளர் அருட்பெருஞ்ஜோதி” என்பது போல் வள்ளலாரின் வெளி, அருள் வெளி, தயவு வெளியாக  சதா செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

 

            உலகிலே எங்கெங்கு சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடக்கின்றனவோ, அவைகளை எல்லாம் வெளிக் கொணரும் – அதாவது அம்பலப் படுத்தும் ஒரு சிறந்த உயர்ந்த நிலையமாக, அமைப்பாக இந்த வள்ளலார் ஸ்பேஸ் இருந்து வருகின்றது என்பது வெள்ளிடை மலையாகும்.

 


 

 

            மேலும் அவர் தனது நன்றியுரையில், இன்றைய இந் நிகழ்ச்சிக்கு, பல்வேறு வெளியூர்களிலிருந்தும், தயவு அன்பர்கள், இங்கு வருகை புரிந்துள்ளீர்கள். சன்மார்க்கச் சொற்பொழிவு ஆற்றிய பட்டுக்கோட்டை தயவுத் திருமதி கீதா நிதி ஜெயபலன் அவர்கள், அன்னதான உபய தாரர் பாளையங் கோட்டை டாக்டர் லெஷ்மையா குடும்பத்தினர், தயவுத் திரு நாராயணன் குடும்பத்தினர் மற்றும் குமர குருபரன் அன்பர்கள், மதுரை ரெங்கனாதன் அய்யா, கரூர் முத்துக்குமாரசாமி மற்றும் தேனி அன்பர் ராம்குமார், தாய்மார்கள், திண்டுக்கல் தயவுத் திரு சீதாராம் அய்யா அவர்கள், மனைவி, மக்கள், மருமக்கள், பேரர்கள் சகிதம் சின்னாளப்பட்டி Dr. V.B. ஷண்முகம் தம்பதிகள் Dr. மகாலெஷ்மி குடும்பம், திண்டுக்கல் வே. அருணகிரி, ஷண்முகவேல் பொன். சங்கரலிங்கம், ஆர். கோபால், கே. ஆர். கார்த்திக், தயவுத்திரு எம். ராமலிங்கம் அய்யா, திரு சமயபுரத்தான், எம். சுப்ரமணி, சண்முகம்., நாகல்நகர் மற்றும் திண்டுக்கல் தயவு அன்பர்கள், தாய்மார்கள், மாணவ, மாணவியர், குழந்தைகள் ஆக,  திரளான மக்கள், இவ்விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு தனது, நன்றியைத் தெரிவித்தார்.

 

            பின்னர் தயவுப் பிரார்த்தனையைத் தொடர்ந்து, ஜோதி வழிபாடு நடை பெற்றது.

 

            தயவுத்திரு வே. அருணகிரி அவர்களால் விண்ணப்பம் படிக்கப்பெற்று விழா நிறைவுற்றது.

 

            அன்னதான நிகழ்ச்சியை  அடுத்து,  மதியம் 2.15 மணி அளவில் சின்னாளப்பட்டி Dr. B.V. ஷண்முகம், தயவு விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் சத் சங்கம் 3.15 மணி வரை நடைபெற்றது. அன்பர்கள், இச் சத் சங்கத்திலும் திரளாகக் கலந்து கொண்டும் Dr.B.V.ஷண்முகம் மற்றும் தயவு விசுவநாதனிடம், திரு அருட்பாப் பாடல்கள் மற்றும் தயவுப் பெரு நெறியில் உள்ள, பல நுட்பமான கருத்துக்களை அவர்கள் அளித்த விளக்கத்தின் மூலம் தெரிந்து, தெளிவு பெற்றனர்.

 

            இறுதியில் அனைவருக்கும் நன்றி கூற, நிகழ்ச்சி, இனிதே நிறைவடைந்தது. இந் நிகழ்ச்சியில், சுமார் 250 அன்பர்கள் பங்கேற்றுச் சிறப்புவித்தனர்.

 

           

 

 

           

 
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Events & Meetings

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace