பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கடிபுனையமுயன்றிலேன் அறிவில்மூடனேன்என்செய்வேன்எந்தாய்.
உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
Write a comment