Vallalar Universal Mission Trust   ramnad......
பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும் எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.

 கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.