Vallalar Universal Mission Trust   ramnad......
106.சாதியும் மதமும் சமயமும் பொய்

106.சாதியும் மதமும் சமயமும் பொய்


211. சாதியும்மதமுஞ் சமயமும் பொய்யென

212. ஆதியு லுணர் த்திய அருட்பெருஞ்ஜோதி


( உரைவிளக்கம்) ஒன்றான மக்கள் சமுதாயம் ஆன்மநேய ஒருமைப்பாட்டால் ஒத்து வாழவேண்டியதன் திருவருளாணையாம், சுத்த ஆன்ம உண்மை மனிதனின் பொறிபுலன் உணர்வுக்கும், மனோகரண அறிவுக்கும், உயிர் விளக்கத் தன்மைக்கும், வெளியாகாதிருபதால் உண்மைகொண்டு வாழ முனையாது, புறத்தோற்றம், குணம், செயல், இடம் முதலியன கொண்டும், இயல்பாய் இல்லாது கற்பித்துக்கொள்ளப்பட்ட சாதி, மதம், சமயம் முதலியன கொண்டும் மக்கள் பிணக்குறுகின்றனர். சாதியும், மதமும், சமயமும் மக்களினத்தை வேற்றுமைப்படுத்தியும், பிரித்துவைத்தும், முக்கியமாக வாழ்வில் சமநோக்கோடு பழகமுடியாது செய்து விடுவதால் இவையெல்லாம் வெறுக்கப்படு கின்றன மெய்யறிவுடையோர்களால், பரந்த மெய்யறிவும் , விரிந்த அன்புள்ளமும் கொண்டு மக்கள் சமுதாயம் முழுமையைம் ஒருமையிற் கண்டு யாவரும் நல்லின்பம் பெற உதவவேண்டியதே ஒவ்வொருவரின் கடமையாக உள்ளதாம், இப் பொய்யான சேர்க்கை வேற்றுமைகளைக் களைந்துவிட்டால் , பின்னர் தட்பவெட்ப சூழ்நிலையாலும், உண்டி உடை பழக்க வழக்க இயல்புகளாலும், தோற்றியுள்ள வேற்றுமைகளை எளிதில் உளத்திருந்து களைந்துவிட முடியும், எதற்கும் உள்ளத்தில் அன்பு ஒளி உண்டாக்கிவிட்டால், அக உரிமையோடு எல்லோரும் ஒத்து வாழமுடியும் .


நம் அடிகளாரின் உள்ளத்தில் அதிகம் இடம் கொண்டது தயவு அதனால் ஏற்பட்டது பொதுமக்கள் சமுதாயத்தின்மீது பரந்து அன்புள்ளம். ஆதியிலே இந்தப் பேரன்பு உள்ளத்தில் குடிகொண்டிருந்தால், மக்களினத்தைப் பிரிக்கும் எல்லாத் தடைகளையும் அடியோடு சாடுகின்றார், பொய்யான சாதி, சமய, மதக் கொள்கை கோட்பாடுகளையும், பொய்க் கற்பனா சாத்தியங்களையும் மூடப் பழக்கவழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குகின்றார். அருட்பெருஞ்ஜோதிதான் உண்ணின்று உண்மையை யுணர்த்திப் பொய்யானவற்றில் சிறிதும் பற்றுண்டாகாது செய்துவிட்டதாகும்,. அவருடைய உள்ளத்தில் ஆதியில் உணர்த்தப்பெற்றிருந்தது, ஒன்றே கடவுள் , ஒன்றே மக்களினம், தயவு ஒன்றே நெறி என்பனவாம். அந்த ஒன்று முதலில் சிவ விளக்கமாக இருந்ததால் அவரது பக்திப் பாடல்களும், காட்சி அனுபவங்களும் சிவ பரமாக வெளியாயினவாம். நாளடைவில் அச் சிவானுபவம் , சமய மதாதீத அருட்பெருஞ்ஜோதியாக ஆகிவிட்டதாம். உண்மையில் ஆதியில் இவர்க்கு உள்ளொளியாயிருந்து உணர்த்தியது அருட்பெருஞ்ஜோதியேதான். ஆனால் அப்போது அது அருட்பெருஞ்ஜோதியாக விளங்காமல் தணிகை முருகனாக விளங்கிக்தோற்றியது பக்குவக்குறைவேயன்றி வேறல்லவாம். பின்னர் எத்தேவரையும், சமயக் குரவர்களையும் அருட்பெருஞ்ஜோதியிற் கண்டுதான் போற்றுகின்றார்.


“ அன்றே என்னை அடியனாக்கி

ஆண்ட ஜோதியே

அதன்பின் பிள்ளையாக்கி அருளிங்

களித்த ஜோதியே

நன்றே மீட்டு நேயனாக்கி

நயந்த ஜோதியே

நானும் நீயு மொன்றென்றுரைத்து

நல்கு ஜோதியே”

இதிற் கண்டாங்கு அருட்பெருஞ்ஜோதியைத்தான் இவர் நால்வராகக் கண்டு போற்றுகின்றார் என்பது உண்மை. ஈதறியாச் சைவ நெறியாளர், சமயக் குரவர்கள், வள்ளலார் பணிந்து போற்றும் பெருந்தகையாளர் என்று உளங்கொண்டு, அவர்கள் பெரிதும் மயங்கி நிற்கின்றனர். இவர்கல் எல்லாம் தம் சிவபரஞ்ஜோதியை எவரும் போற்றும் அருட்பெருஞ்ஜோதியாகக் கண்டுகொள்ள வேண்டும். அந்த ஒன்றான அருட்பெரும் பதியே தன் அருள் ஏகதேசத்தை விரித்து எவருமாய்த் திகழ் வதை அருள் அறிவால் உணரவேண்டும் . மற்றபடி மருள் உணர்வால் புறத்தோற்ற நிலைகளைக் கண்டு மயங்குதல் பொய்மைக் காட்சியாம். சமய மதங்களைப் பொய் எனத் தவிர்க்கும்போது அவற்றில் மிகு பற்று உடையவர்கல் அதிகம் எதிர்க்கின்றனர். சமயமின்றேல், மக்களினம், மாக்களினம் ( விலங்கினம்) ஆகிவிடும் என்று அச்சுறுத்துகின்றனர். அது தவறு, ஏனென்றால், நம் அருட்ஜோதி சமய மதக் கவசத்தைப் போக்கி விட்டு சுத்த தயவு கொண்டு ஒத்து வாழ வகை செய்வதாய் இருத்தலின் மக்கள் மாக்களாகாது அருட்ஜோதி கொண்டு ஆன்மாக்களாவது சத்தியமாம், உண்மையை அறியாது , ஜீவ தயாவொழுக்ககில்லாது புலனெறவாழ்வில் பொங்கி வழிகின்றவர்கள் சமய மதங்களைக் காத்தாலும், அழித்தாலும், தீமையே வளரும் என்பது நிச்சயம், ஆகவே, பொய்மையிலா அருட்பெருஞ்ஜோதி கொண்டு வாழ்வதாக மக்கள் சமுதாயம் முழுவதும்.


அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா