சிறுதெய்வ வழிபாடு கூடாது
இராமலிங்க அடிகளால் கண்டிக்கப்பட்டவற்றுள் சிறு தெய்வவழிபாடும் ஒன்று. எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய இறைவன் ஒருவனே கடவுள், அவனே வழிபடத் தக்கவன், அவன் அருட்பெருஞ்ஜோதியாக விளங்குகின்றான். அவனைத்தவிர வேறே கடவுள் இல்லை, பிரம விஷ்ணு, ருத்திரர்களெல்லாம், பதத் தலைவர்கள், கடவுளல்லர் இறைவனது பேரருளை நோக்க, இப்பதத் தலைவர்கள் சிறுபிள்ளைக்கூட்டமேயாவர் என்பது இராமலிங்க அடிகளது கொள்கை.
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந் திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம்
வான்முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
தேன்முகந்துண் டவர் எனவே விளையாடா நின்ற
சிறுபிள்ளைக் கூட்டம் என அருட்பெருஞ்ஜோதி யினால்
தான் மிகக் கண்ட றிகஎனச் சாற்றியசற் குருவே
சபையினடத்தரசே என் சாற்றும் அணிந்தருளே.
அருள்விளக்கமாலை
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருமையைக் கருதும்போது சமயத் தெய்வங் களெல்லாம் துரும்பினும் கீழ் நிலையிலுள்ளவர்கள் என்பர்.
சமயத் தெய்வம் பலவுஞ் சிறிய
துரும்ப தென்னவே
சாற்றப் புகினுஞ் சாலா ரருளின்
பெருமை யுன்னவே
கீர்த்தனை எனக்கும் உனக்கும்
கருப்பு, காட்டேரி, பிடாரி முதலியவைகளையே நாம் சிறு தெய்வங்களாக எண்ணுகின்றோம். பிரமவிஷ்ணுக்களைக் கடவுளர்களாகக் கருதுகிறோம். பிரம விஷ்ணுக்களும் சிறு தெய்வங்களே என்பதை அடிகள் பாட்டாலும் உரையாலும் தெளிவாக விளக்குகின்றார்கள், அடிகளின் உபதேசக் குறிப்பொன்றைக் காண்க:
சர்வ சித்தியையுடைய தனித் தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தவம்செய்து சிருட்டிக்கும் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் பிரமன், சிருட்டி திதி ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு. சிருட்டி திதி சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் ருத்திரன்., இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக்கின்றவர்கள் இவர்களை அந்தந்த சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்துவந்தார்கள். இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வ சித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள். அதில் ஏசுதேசம் கூட அல்ல. ஆகையால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால் சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து, அந்த சமயத் தெய்வங்கள் பெற்றுக் கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேற வேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு நிற்றல் போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை.
உபதேசம்,
இராமலிங்க அடிகள் வரலாறு
ஆசிரியர்
சன்மார்க்க தேசிகன்
என்னும் ஊரன் அடிகள்.
உள்ளார்கள்.
When the local people remove those dieties. God alone knows.