VallalarSpace Discussion Forum
சன்மார்க்கம் என்றால் என்ன?
அன்புடையீர்,

இந்த சிறியவனின் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்ல, இங்கு செப்புகின்றேன்.
சன்மார்க்கம் என்றால் என்ன? வள்ளலாரின் கொள்கை படி சன்மார்க்கம் என்பதன் பொருள் என்ன?

யாம் அறிந்த படி :-
சன்மார்க்கம் என்பது இறைவனையும் தன்னையும் ஒன்றாக கருதுவது. மாற்ற மார்கங்களாவன - சத் புத்திர மார்க்கம், தச மார்க்கம், சக மார்க்கம்... பிழை ஏதேனும் இருப்பின் மனிகவவும்.

வள்ளலாரின் உரைநடை பகுதியின் படி ஜீவ காருன்யமே சன்மார்க்கம்..

இங்ஙனம்
செல்வகுமார் ராமலிங்கம்
2 Comments
Ramanujam jam
அருட்பெருஞ்ஜோதி தயவு அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
================================================================================
சன்மார்க்கம் என்பதன் விளக்கம்
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளியது
வள்ளல் பெருமானின் கொள்கையின் அடிப்படையில் வரையப்பட்டது.
பழமையான நெறிகள் பலவாகக் குறிக்கப்பட்டன. அது புறநிலை நின்று காணப்பட்டதால் அப்படி அமைந்தன. அம்மார்க்கம் முற்றும் யோக நெறிகள் பாற்படும். யோகம் என்றாலே சேருதல், கூடுதல் என்றே பொருளாம்.
அன்று காணப்பட்ட அந்த யோக நெறி முக்கியமாக - 4 பிரிவோடு விளங்கியது. அவையாவன - (1) ஞான யோகம் (2) பக்தி யோகம் (3) கர்ம யோகம் (4) ராஜ யோகம் என்னும் மகா யோகம் ஆம். இவை எந்த ஒன்றாலும் கூடக் கடவுளைக் கலந்து கொள்ளலாம் என்பது ஆன்றோர் கருத்து. இவர்களுடைய முடிவான கடவுட் கலப்புதான் முன்பே உடலை விட்டு நீங்கி மறைந்து போவதுதான் என்று அறிந்திருக்கின்றோம்.
அந்த முடிவால் கடவுள் அனுபவ வாழ்வில், அக்கடவுளைப் போன்ற நிலைத்திருத்தற்கு வழியில்லாக் குறை அன்று தோன்றவில்லை. ஆனால் இப்பொழுது தோன்றிவிட்டதால், அக்குறை தவிர்க்கும் ஒரு பரிகாரம் காண வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டு விட்டதாம்.

இதனை நிறைவேற்றுவதற்கு என்றே நம் ராமலிங்க அடிகளார் தோற்றுவிக்கப்பட்டார்.
அனக சுத்த சிவநெறி
அவர் புற நெறிகளை எல்லாம் மறுத்து, அகத்திலிருந்து உதிக்கும் அனக நெறியைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார். அந்த அனக நெறியும் சைவ தெய்வக் கற்பனையின் மீது அமைக்கப்பட நேர்ந்ததால், சுத்த சிவ நெறியாகப் போற்றிக் கொள்ளப்பட்டது.
சுத்த சிவம் என்பது உண்மையில் உள்வளர் அருட்பெருஞ்ஜோதியே ஆம். மற்றபடி சகள, நிஷ்கள (உருவ, அருவ) தோற்றங்களையோ, சகுண நிர்க்குண தத்துவங்களையோ கொண்ட சிவசம்பந்தங் குறிக்கும் நெறி அல்ல இந்தச் சுத்த சிவ சன்மார்க்கம் என்பது.
சச்சிதானந்த பரம் பொருளின் எல்லாம் வல்ல அருள் அல்லது தயவுதான் அந்த மெய்ப்பை உடன் கொண்டு வாழும் உத்தம நெறியாய்க் கற்பிக்கின்றார். இதனை -
ஒன்றே சிவமதை யொன்றுஞ்சன் மார்க்கமும்
ஒன்றே யென்றீரிங்கு வாரீர்
நன்றே நின்றீரிங்கு வாரீர் (திருவருட்பா)
என்ற பாவால் குறிப்பிடுகின்றார். அருட்பெருஞ்ஜோதிபதியை ஒன்றுவதற்கு அவர்தம் அருளே வழியாகும்.
அன்பறிவோ டின்பாம் அவனை அடைதற்கு
வன்பற்ற அன்பே வழி (தயவுக் குறள்)
என்ற தயவுக் குறளாலும் அன்புருவக் கடவுளை அடைவதற்கு அன்பே மார்க்கம் எனத் தெளிவுறலாகின்றதாம்.
வேறு வேறாகிய புற நெறிகள் எல்லாம் மனிதனை மறைத்துவிடுகின்றன. அருளொடு உண்ணின்று உதிக்கும் இந்த அருள் அனக நெறி ஒன்றே மனிதனை அவ்வருள் வடிவாக மாற்றி அழிவின்றி வாழச் செய்வதாம். இம்மாதிரியான இன்ப வாழ்வு முந்தின உலக நெறிகளுக்கு அதீதமானது.
எல்லாம் ஒரு வழி ?
எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக் கொண்டும். எதிற் சென்றாலும் இறுதியில் அடையும் முடிவு ஒன்றே என்றும் கூறுகின்ற சமரச ஞானிகள் அடைகின்ற முடிவு யாவரும் அறிந்ததே ! அம்முடிவு சூனியமான ஏமாற்றமே ஆகும். இவர்கள் ஒன்றான உண்மைக் கடவுளை அறிந்தவர்கள் அல்லர். பலவான பேதத் தோற்றமும், குண சக்திச் செயல்களும் கொண்ட கற்பனா தெய்வங்களையே, தெய்வச் சின்னங்களையே கருத்திற் கொண்டு வழிபட்டு அடைகின்ற முடிவு நிலைகள், எல்லாம் இறப்பைத் தவிர வேறு எந்த ஒன்றாக இருக்க முடியும் !
மேலும் இவர்கள் வழிபடும் பலவாகிய நாம ரூபங்களைக் கொண்ட தெய்வங்களும் ஒன்றையே குறிக்கும் என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா ? அது எங்ஙனம் பொருந்தும் ? அவர்களில் எல்லா விதமான வந்தனை வழிபாடுகளையும் ஏற்றுப் பலன் அளிக்கின்ற ஒன்றான கடவுளை அவர்கள் எங்கே அறிகின்றார்கள் ?
உண்மைச் சத்விசாரமாகிய கண்ணைத் திறந்து அருள் ஒளியில் இருந்து கண்டால்தான் அந்த ஒன்றான கடவுளைக் காண்பார்கள். முதலில், கண்டு புறநிலை வழிபாட்டால் ஓரளவு பயனடைந்து, மேல் முழுப் பயன்பெற்று வாழவேண்டி, அந்தக் கடவுள் நிலையிற் பொருந்தி, அருள் வாழ்வு மேற்கொண்டு வாழ வேண்டியவர்களாகின்றார்கள்.

ஆகையால், எல்லோருக்கும் உரிமையான - ஒன்றான அருட்ஜோதி ஆண்டவரை அறிந்து - அகத்திற் கலந்து நின்று - அருளாகிய பெருநெறி பற்றி ஒழுகுதலே - சிறந்த முறையாகும்.
இந்த அருட்பெருநெறியே எவர்க்கும் பொருந்தும் சுத்த சன்மார்க்கமாம்.
Friday, May 16, 2008 at 12:38 pm by Ramanujam jam
karthikeyan.jayapal
அன்பு.செல்வகுமார் ராமலிங்கம்,
சன்மார்க்கம் - நன்மார்க்கம்
- Vallalar Statement in Urainadai Section
அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், [b]
ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும்
, அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும். சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும். ஆகலின் புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே என்றும், பாவ மென்பது சீவகாருணிய மில்லாமையொன்றே என்றும் அறியப்படும்.
Ref : http://www.vallalarspace.com/Urainadai/Articles/79
Endrum Anbudan,
Karthikeyan
Saturday, May 17, 2008 at 01:11 am by karthikeyan.jayapal