இலங்கை சாவகச்சேரிக்கு அருகே உள்ள வேம்பிராய்க்குக் கொண்டு செல்லப்படவுள்ள திருநிலைக் கண்ணாடி.
இலங்கை சாவகச்சேரிக்கு அருகே அமைந்துள்ள வேம்பிராய் கிராமத்தில் சத்திய தருமச் சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் ஆகியவை கட்டப்பட்டு, அவை வரும் 2010 செப்டம்பர் மாதம் திறப்பு விழா காண உள்ளன.
அதற்கான முயற்சிகளை, சுவிட்சர்லாந்தில் இருக்கும் திரு கேத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவியார் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் முனைப்புடன் செய்து வருகின்றனர்.
கடந்த 2006ஆம் ஆண்டில், அங்கு கொண்டு செல்லப்பட உள்ள திருநிலைக் கண்ணாடி, வடலூரில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் வைத்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) பூஜை செய்யப்பட்டன. மூத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் திரண்டு வந்திருந்து 48 நாட்கள் திரு அருட்பா முற்றோதல் நடத்தினார்கள். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில போட்டோக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் சாது திரு முத்தையா அவர்கள் தலைமையில் திருநிலைக்கண்ணாடி வழிபாடு நடைபெறுகின்றது. (2006ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம்)

வடலூருக்கு வந்திருந்த பரமக்குடி அருகே உள்ள ஆசிரியப் பயிற்சிப் பள்ளி மாணவ, மாணவியரிடையே திரு ஜோதிமுருகன் அய்யா அவர்கள் வள்ளற்
பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை போதிக்கின்றார். அருகே பயிற்சிப் பள்ளியின் முதல்வர் அமர்ந்துள்ளார். இடது ஓரத்தில் திருநிலைக்
கண்ணாடி உள்ளது. (2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்)
2006ஆம் ஆண்டில், வடலூரில் வைத்து திருநிலைக் கண்ணாடி வழிபாடு முடிவடைந்து விட்டதால், வள்ளற் பெருமான் சித்தி அடைந்த
மேட்டுக்குப்பத்தில், திருவானைக் கோவில் சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்களுக்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த ஆண்டு
29.6.2010 செவ்வாய்க் கிழமையிலிருந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) மேற்படி திருநிலைக் கண்ணாடி வழிபாடு, திரு அருட்பா
முற்றோதல் ஆகியவை நடைபெற உள்ளன. 2010 மார்ச் பூச நாளில், திருநிலைக் கண்ணாடி, இதுகாறும் இருந்து வந்த ராமநாதபுரம்
சன்மார்க்க சங்கக் கட்டிடத்திலிருந்து, மேட்டுக் குப்பத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. வரும் 29.6.2010 அன்று முதல் 48 நாட்கள்-
ஒரு மண்டலம் ஆராதனை, வழிபாடுகள் அங்கு மேற்கொள்ளப்படவுள்ளன. அன்பர்கள் அனைவரும், 29.6.2010 துவங்கும் திரு நிலைக்
கண்ணாடி வழிபாட்டில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வழிபாடு 15.8.2010 (ஞாயிறு) அன்று முடிவடைந்த
பின்னர், 16.8.2010 அன்று, வடலூர், சத்திய ஞான சபை, சத்திய தர்மச்சாலை, கருங்குழி, தீஞ்சுவை நீரோடை மருதூர் முதலான
இடங்களுக்கு அந்தத் திருநிலைக் கண்ணாடி எடுத்துச் செல்லப்பட்டு, 17.8.2010 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம்
கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இலங்கையில் அந்த திருநிலைக்கண்ணாடியுடன் திரிகோணமலை,
திருக்கோணேஸ்வரம், திருக்கேத்தீஸ்வரம் ஆகிய முக்கியமான ஸ்தலங்களுக்கு எடுத்துச் சென்று அத்திருநிலைக்
கண்ணாடி வழிபாடு செய்யப்பட உள்ளது. இந்த ஸ்தலங்கள் எல்லாம் சமயக் குறவர் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலங்கள்.
வள்ளற் பெருமானும் இந்த ஸ்தலங்கள் குறித்து, திரு அருட்பாவில் பாடியுள்ளார். எனவே, இந்த ஸ்தலங்களைக் காண்பதும்
கிடைத்தற்கரிய ஒரு சந்தர்ப்பம்.இது குறித்த (தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தி) ஏற்கனவே இந்த இணைய தளத்தில் பிரசுரம்
செய்யப்பட்டுள்ளது. வள்ளற் பெருமான் அவதரித்த தமிழ்த் திருநாட்டிலிருந்தும், ஏனைய பிற நாடுகளிலிருந்தும்
சன்மார்க்க அன்பர்கள், தமது குடும்பத்துடன் வந்து இலங்கையில் வேம்பிராயில் நடைபெற உள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு
மிக்க வைபவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே விழாக் குழுவினரின் பேரவாவாக உள்ளது.