Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
சாகாத்தலை, வேகாக் கால், போகாப் புனல். (விளக்கம்) சுவாமி சரவணானந்தா.
சாகாக் கலை, வேகாக் கால், போகாப்புனல்.

சுவாமி சரவணானந்தா.

     ஆன்மாவுக்குத் திரிதேக சித்தி வாழ்வு வழங்கவே, அருள் ஆண்டவர் மகா பிரபஞ்ச காரியத்தை ஆதி முதல் நடத்தி வருகின்றார்.

     உண்மையில் கடவுளே தன் இயல் உண்மை நிலையை ஒவ்வொரு ஆன்ம அணுவிலும் அக அருள் ஞானானுபவம் உண்டாக, அதற்குள்ளிருந்து உயிர்ச் சக்தியை வெளிப்படுத்தி, அது விளங்கத் தேகாதி பிரபஞ்ச வடிவை வளர்த்து வருகின்றார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொரு பிறவியாகிய தேகச் சூழலிலும் புலன் உணர்வு, மன அறிவு, ஆன்ம ஞானம் முறையாக வளர்ந்து வருகிறது. ஆன்மாவின் அகத்தில் நித்திய நிறைவாகியுள்ள அருட்பெருஞ் ஜோதியினின்றே ஒவ்வொரு பிறவியிலும், உடல் உயிர், ஞானம் வெளிப்பட்டு வளர்வதும், உட்சுருங்கிக் கிடப்பதும், மேல் அடுத்து வரும் பிறவியில் தொடர்வதுமாய் இருக்கிறது. இவ்வுண்மை விளக்குவனவே, சாகாத்தலை, வேகாக் கால், போகாப் புனல் ஆம்.

1. சாகாத் தலை – தலை என்பது ஞானம். இது பிறவி தோறும் தொடர்ந்து விளைவு கொள்ளலின் சாகாத் தலையாகக் கூறப்படுவது. இதுபோல்

2. வேகாக் கால் – என்பது அழியாத ஜீவனாகிய உயிர்க் காற்றாம். இதுவும் ஆன்மாவிலிருந்து விரிந்து (ஜீவிய காலத்தில்) விளங்குவதும் மரணத்தினால் சுருங்கி மறைவதுமாய் உள்ளதாம்.

3. போகாப் புனல் – அமுத நன்னீராக அகத்திலே இருந்து, உயிர் விளங்க, உயிர் உடல் வளரப் புற பூத உடம்புக்குக் காரணமாய் உள்ளதாம்.

      நிறை விளைவில் இவை மூன்றும் அழியாத ஞான பிரணவ சுத்த உடம்பாகி ஆனந்த வாழ்வில் நிலவும்.
 
      மனிதப் பிறவியில்தான் பக்குவத்தே இம்மூன்றும் வெளியாம். மற்றபடி எப்பொருளிலும், எவ்வுயிரிலும்
இவை மறைமுகமாகவே விளைந்து வருவனவாம்.

 

20140713_221310.jpg

20140713_221310.jpg

Download:

2 Comments
Damodaran Raman
திண்டுக்கல் ஐயா அவர்கள் தம் வழியில் வேகாத காலாதிகளை விளக்கி யுள்ளார். வள்ளலார் தெளிவாக நடராசபதி மாலை 28-ஆம் பாடலில் வேகாத காலாதி கண்டு கொண்டு விளைய விளைவித்த தொழிலே மெய்த்தொழில் என்று அருளி யுள்ளார். உரைப்பகுதியும் இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கும்(தெய்வ நிலைய வெளியீடு பக்கம் 438-440)என்றும் மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய யோகக் காட்சியில் உண்டாகும் யோக அனுபவங்களின் உண்மைப்பொருள் என்றும் பக்கம் 441-இல் ஆகையால் இவைகள் யோக அனுபவங்களே யென்று அறிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சாகாத்தலை, வேகாக்கால்,போகாப்புனல் என்னும் இம்மூன்றும் யோக அனுபவங்களின் உண்மைப் பொருள் என்பதை யோக வெற்றியின் மூலந்தான் ஒருவர் உணர முடியும். யோக அனுபவம் இன்றிக் கூறப்படுவன உண்மை யாகா.இம்மூன்றும் வள்ளலார் பெற்ற சுத்த சன்மார்க்க மரபுகளுள் ஒன்று என்று மேற்படி பாடல் தெளிவு படுத்திய பின்னரும் வள்ளலார் அன்பர்கள் சாகா நிலை அடைவதற்கு யோக அனுபவங்களைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடு படல் வேண்டும். வள்ளலார் பெற்ற சாகா நிலையைப் பெறாமல் சன்மார்க்கிகள் மரணம் அடைந்ததற்கும் அடைவதற்கும் அடையப் போவதற்கும் முதன்மையான காரணம் அவர்கள் யோகத்தைப் புறக்கணித்ததே ஆகும். யோகம் செய்பவர்கள் மரணமடைவதற்குக் காரணம் வேகாத காலாதிகளின் உண்மையை உணராமையும் யோக வெற்றியால் கிடைக்கும் போகாப்புனல் அமுதத்தை உண்ணாமையும் ஆம். போனது போகட்டும். இனியாவது அன்பர்கள் வேகாத காலாதி கண்டு கொண்டு விளைய விளைவிக்கும் மெய்த்தொழிலைச் செய்து சாகா நிலையைப் பெற ஆவன செய்வார்களாக. நன்றி. வணக்கம். வாழ்க.
Saturday, November 5, 2016 at 23:33 pm by Damodaran Raman
Daeiou  Daeiou.
அன்பரின் கருத்துக்கு நன்றி.
Sunday, November 6, 2016 at 04:56 am by Daeiou Daeiou.