Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
கந்தழி - சிவம் - அருட்பெருஞ்ஜோதி....ஆகியவற்றின் இலக்கணம் யாது ? சுவாமி சரவணானந்தா.
அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மை நித்தியமானது. அது எங்கும் பரிபூரணமாக, உலைவற இருந்து கொண்டு, புற உலகில் ஆக்கலாதி ஐந்தொழிலைப் புரிந்து கொண்டே விளங்குகின்றது. இவ்வருள் ஐந்தொழில் செயலால் அவருடைய உண்மை சிறிது சிறிதாக வெளியாகி, பக்குவ மனிதப் பிறப்பில் ஓரளவு முதலில் கண்டு கொள்ளப்பட்டது. கண்ட உண்மையை வெளிப்படுத்த திருவருளே வழங்கினது தமிழ்மொழி.  இவ்வருண் மொழி உண்மையே சிவபரம் பொருட் கற்பனையாகப் போந்தது. இச்சிவ கற்பனைக்கு முன் அவ்விறை ஒளிக்குக் கந்தழி என்ற கற்பனைச் சொல், அடிமுடி காணா அகண்ட பேரொளி என்ற கருத்தின் பேரில் வழங்கப்பட்டது. அந்த ஒளிக்குத் தான் சிவம் என்ற பெயரும், பின் பலவாகிய தெய்வத் தத்துவக் கற்பனாப் பெயர்கள் வழங்கப்பட்டன. முடிவில் அந்த இறை பரஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதியாக வள்ளலார் அனுபவ மூலம் கண்டடைந்து வெளியாக்கியுள்ளார். அதாவது முன்னோர் எல்லாம் அவ்வொளியின் ஏகதேச அருளைப் பெற்று. சிலகாலம் சித்திச் செயலோடு விளங்கி, முடிவில் மறைந்து விட்டனர். ஆனால் அருட்பெருஞ்ஜோதியே முழுமையாக, வள்ளல் உள்ளத்திலிருந்து அனகமாக விரிந்து நிறைந்து, அருட்பிரகாசத் திருவுருவாய், நித்தியமாய் விளங்கலாகி விட்டுள்ளதாம்.

     இதுவரை சிவ முதலான தெய்வக் கற்பனையினால் அடையற்கில்லாத இறவாப் பேரின்ப வாழ்வு, நம் அனக நெறியால் கிடைக்க கூடியதாய் இருப்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டு விட்டால், பழைய நெறி முறைகளில் சிறிதும் பற்று உண்டாகாது. சிவப் பஞ்சாட்சரம் சிறந்த மந்திரம்தான்.  ஆனால் மனிதனை அச்சிவனோடு ஐக்கியமாய் மறைந்து போகத்தான் செய்கிறது. ஆகவே அம்மந்திரங்களை இடையறாது ஓதினாலும், அதன் உட்பொருளை உணர்ந்து உட்கலந்து ஒடுங்கினாலும் நித்தியானந்த அனுபவத்தோடு வாழ முடியாது.

     சாத்திரத்திற் சிறந்த திருமந்திரத்தாலும், தோத்திரத்திற் சிறந்த திருவாசகத்தாலும் நம் சிரநடுத் திகழ் சிவஜோதி உண்மை உணர்ந்து கொள்ளுதல் சாத்தியம். இது சுத்த சன்மார்க்கத்திற்கு அடிப்படையாகும். இதற்கு மேல் அகநிலை நின்றே அனக அன்புச் செயலோடு வாழ்தல் அருட்பெருஞ்ஜோதி வாழ்வாம் சுத்த சிவானுபவ நிலையாகும். ஆகையால், அவ்விருநூல்களை ஆழ்ந்து பார்க்கச் சொன்னார் அருள் வள்ளலார். இவ்வுண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு வாழ்வில் கடைப்பிடிக்கவும், வேறு எந்த மந்திர, தந்திர, உபதேசமும் தேவையில்லை. பெறுக அருட்பெருஞ்ஜோதி தயவு.
20150119_184208.jpg

20150119_184208.jpg

Download: