Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி மெய் - (5) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.

தயவு
அருட்பெருஞ்ஜோதி தயவு மலர்.
அருட்பெருஞ்ஜோதி மெய்
5. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
நள குரு மகா தைப்பூச வெளியீடு
3.2.1977.
எங்கும் நிறை மெய்ப் பொருளை, அருட்பெருஞ் ஜோதியாகக் கொண்டு குறிக்கும்போது அது நம் அக ஆன்ம அணுவாய் இருப்பதும் அந்த மெய்ப் பொருளின் அனுபவம் தரச் சூழ்ந்த மெய்யுடம்பு தனிப்பெருங்கருணை மயமாகி உள்ளதுமாம். ஆகவே அக அனக இறையத்தான் நம்மில் அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணையாகக் காணவுள்ளோம்.
நித்திய நிறைவாய் உள்ள அருட்பெருஞ்ஜோதிக்குத் தனிப்பெருங்கருணையே மனித உருவாக விளங்க வந்த போது தான் கடவுள் வெளிப்பட்டு, அருட்ஜோதி இறை மனிதனாய் வாழத் தொடங்குகின்றதாம். இதுவே இம் மனிதப் பிறப்பின் அழிவில்லா ஆனந்த வாழ்வு நிலையாகும்.
அருட்ஜோதி இறைமனிதன். அகதே ஆன்ம நிலையில் அருட்பெருஞ் ஜோதியாகவும், நித்திய தேகத்தோடு கூடிய சுத்த மெய்ந்நிலையும் கொண்டு திகழும்போது, அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணையாகவும் விளங்குகின்றான். ஏக பரஞ்ஜோதியாம் அருட்பெருஞ்ஜோதிக் கட்கவுள் அக நிலையில் ஆறியல், ஆறு அசை (அ-1, ருட்-2, பெரு-3, ருஞ்-4, ஜோ-5, தி-6) கொண்டு விளங்க புறத்தே சூழ் உடம்புடன் வரும் அனுபவம். ஏழ்நிலை ஏழ் அசை (த-1, னிப்-2, பெ-3, ருங்-4, க-5, ரு-6, ணை-7) உடன்கொண்டு திகழ்வதாம். ஆகவே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையே இறை மனிதனின் நிறை இன்ப நித்திய வாழ்வு நிலையாக இருக்கின்றதாம்.