Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
நிறை மனிதன் (7. மனிதனின் உயர்வு)

நிறை மனிதன்
(The man of Divine Perfection)
7. மனிதனின் உயர்வு
சுவாமி சரவணானந்தா.
1974.
அருள் ஞானம் ஏற்பட்டு பெரும் பயன் அடையப் பெறுவது இம் மனிதப் பிறப்பில்தான். பிற கீழின உயிர்களில் புலனறிவு மட்டும் கொண்டு அதற்கதற்குரிய சில இயற்கைச் சுபாவத்தோடு வாழ்கின்றதாம் - ஒவ்வொரு உயிரும். புலனறிவுக்கு மேலான மன அறிவைப் பெற்றவன் மனிதன். இவ் வறிவுதான் மனித இனத்தை உயர் நிலைக்கு ஏற்றி வைப்பதாகும். இம்மன அறிவால் யாவையும் பகுத்தறிகின்றான் மனிதன். அகத்தும் புறத்தும் மறைந்து கிடக்கும் உண்மைகளை எல்லாம் கண்டு கண்டு வெளிப்படுத்துகின்றான். புலனுக்கு எட்டாத எல்லைகளில் எல்லாம் துருவிச் சென்று உண்மை காண விரும்புகின்றது இம் மனம். சிந்தனா சக்தியால், ஞாபகத் திறனால், அனுமான நுணுக்கத்தால் மக்களின் வாழ்க்கை முறையில் சதா சீர்திருத்த மாற்றங்களைச் செய்து கொண்டேயிருக்கின்றது. மற்ற உயிரினங்களின் வாழ்வு முறையில் மாற்றம் காண்பது அபூர்வமாயிருக்கின்றது. இதனால் மனம் படைத்த மனித குலம், உயிர்த் தோற்றத்தின் மேனிலையில் இருக்கின்றதாகக் கூறுகின்றனர் சிலர். அதுவும் உண்மையே எனினும், இவ் வுயர் நிலையுற்ற மனிதன் தன் மனோ சிந்தனையைப் புலனின்ப வேட்கை வழியில் தாறுமாறாய் அலையவிட்டுத் தீச் செயல்களில் ஈடுபடுகின்றபோது தன் உயர் நிலையிலிருந்து நழுவி, மற்ற உயிரினங்களை விட மிகத் தாழ்ந்த படுபாதாளத்தில் விழுந்து கிடக்கின்றான். அவ்வுயிரினங்களோ தம் நிலையினின்று ஒருபோதும் கீழே போய்விடுவதில்லை. மேலும் மனிதன் தான் பிறரை ஏமாற்றல், சுரண்டல், மோசம் செய்தல், வஞ்சித்தல், உண்மையை மறைத்தல் முதலான செயல்களில் இறங்கி விடுகின்றான். இவை எல்லாம் மனத்தினால் வந்த வினைதானே. இன்றைய உலகில் எழுந்துள்ள அடக்க முடியாத பிரச்சினைகளாய்த் தோன்றுவன வெல்லாம் இந்த மனக் குகையிலிருந்து வெளிப்பட்டுள்ள பெரும் பூதங்கள்தாமே. இவைகளைப் பார்க்கும்போது மனிதன் தன்னை உயர்வுடையவனாகக் கூறிக்கொள்ளுவது சிறிதும் பொருந்த வில்லையன்றோ? இதில் தவறு எங்கே ஏற்பட்டுள்ளது எனின் மன அறிவினாலல்ல. மனம் தீ போன்றது, அதன் துணையால், ஆக்க முறையால் நற்பயன் உண்டு பண்ணிக் கொள்வதும், அழிவு முறையால் தீங்கை விளைவித்துக் கொள்வதும் இயற்கையேயன்றோ ? அதுபோலத்தான் மனோ சக்தியை நல்லின்ப வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளுதலே அறிவுடைமையாம்.
மனிதனை உயர்த்த வந்த மனதினை அருட் சிந்தனையால், சத் விசாரத்தில் தோய்ந்திடச் செய்து, இறையருள் உண்மையைக் கண்டு கொள்ளச் செய்திடல் வேண்டும். அத்தோடு அருள் ஒழுக்கம் மேற்கொண்டு வாழப்பழகுதல் வேண்டு. இப்படிச் செய்வதால்தான் மனிதன் தன் உயர்வை நிலைபெறுத்திக் கொள்ளுவான். பின்னர் மேன்மையும் அடைவான். இந்த மனோ அறிவு என்னும் உணர்வு, புலனுணர்வுகளைக் கடந்த மேனிலையிலிருந்து, கடவுளின் அருளுண்மையையே முடிவில் கண்டு கொண்டிருக்கின்றது இன்று. கடவுள் அருளேதான் இம் மனத்தின் உண்மைச் சொரூபமாக வுள்ளதெனத் தெளியப் படுகின்றது. ஆதலின், மனத்தில் எந்த அளவுக்கு மாசு நீங்கி அருள் ஒளி நிரம்புகின்றதோ அந்த அளவுக்கு உயர்சித்தி நலன் உண்டாகின்றதாம். அருள் அம்சமானது இந்த மனமாக உருப்பட்டிருக்கின்றதால், அருளின் நிறை நிலையே அகப் பெருங் கடவுள் நிலையாக அறியலாகும். இதனால், அருட்பெருஞ் ஜோதியே கடவுட் பூரண நிலை என விளங்குகின்றதாம். சுத்த உணர்வானது தேக நிலையிலிருந்து நோக்கப்படும் போது மனமயமாகவும், அச்சுத்த உணர்வே ஆன்ம நிலை நின்று காணும்போது அருள் என்னும் உணர்வு மயமாயும் திகழ்கின்றதாம். முடிவில் இம் மனத் துணையால் அருளும், அருளின்பக் கடவுள் வாழ்வும் பெற வல்லவனாகின்றான் மனிதன். இதனால் மனிதனின் நிலை மிக உயர்வுடையதாய் கடவுள் கலப்பு கொண்டு விளங்க வல்லதாய் உள்ளது என்பது தெளிவாம்.
சுத்த மனம் அருள் வண்ணமாய்க் கடவுள் தத்துவ அம்சமாய் இருக்கின்றதால், இதுகொண்ட மனிதன் முடிவில் கடவுணிலையே அடைந்து என்றென்றும் அருளின்ப வாழ்வில் வாழ்ந்து வரவும் ஆணை பெற்றுள்ளான். இருந்தும் அறியாமையாலும், அருள் நாட்டம் கொள்ளப் படாமையாலும் மனிதன் தாழ்வுற்று தட்டழிந்து தடுமாறுகின்றான். தன் உயர்நிலை யுணர்ந்தபோது அருள் நன் முயற்சியால் சிறப்புற வாழ முற்படுகின்றான். மனிதன் எவ்வளவு உயர்வு பெறலாம் என்பது அவனுக்கே முதலில் தெரியாமலிருக்கின்றது. தவ முயற்சியாலும், யோக ஞான சாதனைகளாலும், விஞ்ஞானப் பரிசோதனைகளாலும் எத்தனை எத்தனையோ அனுபவங்களைப் பெற்றுச் சித்திகள் எய்திப் பெருமை விளங்கும் தெய்வப் பதவிகள் வரையும் ஏறி விடுகின்றான். ஆனால் அத் தெய்வ நிலையும் கூட முடிவானதல்ல எனத் திருவருளால் உணர்த்தப்படுகின்றான். ஏனெனில் அந்த உயர் தெய்வப் பதவி நிலையில் இருப்பவர்களும், எல்லாம் வல்ல நித்திய பரம்பொருளின் ஒரு சிறு கூறேயாக இருத்தலின் அவர்கள் எவ்விதத்தும், எக்காலத்தும் அந்தத் தனித் தலைமைக் கடவுளுக்கு ஒப்பாகார்கள். அத் தேவர்கள் தம் பதவியில், தாம் என்ற போத உணர்வோடிருந்து வருவதால், பூரண அருள் மயமாக ஆகக்கூடாது தடைபட்டு நிற்கின்றனர். அப்படி அத்தடை நீங்கி அரூள் வண்ண நிறைவு பெற வேண்டுமானால் அத் தேவபோகப் பதவியைவிட்டு, இந்த அருள் உண்மை விளங்கும் மனித நிலைக்கு வந்துதான் ஆகவேண்டியுள்ளதாம். இம் மனிதன் தான் சத்விசாரத்தால் அருட்பெருங் கடவுள் உண்மையை உள்ளவாறு அறிந்து, மெய்யுணர்வால் உட்கலந்து நின்று, அருள் அனுபவம் பெருகப் பெருகத் தற்போதம் ஒழிந்து பூர்ணக் கடவுள் மய வாழ்வில் தழைக்கின்றான். இதனால் தான் இம் மனிதப் பிறப்புதான் மற்ற எல்லாப் பிறவிகளிலும் உயர் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்ளப் படுவதாம். இவ்வுயர்வாகிய அருட் பெரு நிலையை அறிந்து கொள்ளாதவரை மனிதப் பிறப்பின் - புனித மாண்பு விளங்குவதில்லை. அந் நிலையில் மனிதன் தனது அறிவாற்றல், செயல் திறன்களை மிக மதித்துப் பிறவுயிரினங்களில் எல்லாம் தானே உயர்வுற்று விளங்குவதாகத் தற்பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றான். உண்மை உயர்வு அருள் விளக்கச் செயலால்தான் அனுபவப்படும். இந்த அருட் செய்முறை வாழ்வால் மக்கள் சமூகமே உண்மையாக மேன்மையுற்றிலங்கும் என்பது திண்ணம்.