நிறை மனிதன்
(The Man of Divine Perfection)
6. அருள் உண்மை.
சுவாமி சரவணானந்தா
1974.
அருள் என்ற சொல் அன்போடு ஈதலை, தயவோடு வழங்கலைக் குறிப்பதாம். நிறைவுடைய பெரியோர், குறைவுடைய சிறியோர்க்கு ஒன்றையுவந்து அளித்தலை அருளல் என்று கூறுவர். எல்லாம் வல்ல கடவுளைப் பேரருளாளன், வள்ளல் என்றெல்லாம் சொல்லுவர். அந்தக் கடவுள் சிற்றுயிர்களின்பால் அருள் செய்தல் இயற்கையாம். அவ்வருள் எப்படி எல்லா உயிர்களிலும் செயல்படுத்தப் படுகின்றது என்பதை சற்று விசாரித்தறிவோம்; உயிர்கள் எண்ணில் அடங்காதவையாயுள்ளன. அத்தனைக்கும் ஒரு நொடியும் இடையறாது, வேண்டும் எல்லாவிதமான போகப் பொருள்களையும், தேகங்களையும், உயிர் ஆற்றல்களையும் வழங்கி வாழ்வளித்து மேல்நிலைக்கு ஏற்றுகின்றதாம் அக்கடவுட் பேரருள். இப் பெருஞ் செயலைக் கடவுளின் அருட்பெருஞ்சக்தி ஆற்றலாக மொழிவர். இவ்வருட் செயலை ஐவண்ணமாக பகுத்துணர்த்துவர் பண்பறி பெரியோர். அவ் வைஞ்செயல்களாவன. ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பர். இவற்றில் ஈற்றில் குறிக்கப்படும் அருளல் காரணமாகத்தான் மற்றெல்லாச் செயல்களும் விளங்குவன. எனவே, அருளலின் உட்பிரிவும் காரண காரியமும்தான் ஏனைய செயல்கள் என்பது கருத்தாம். கடவுட் செயல்கள் எல்லாம் அருளின் காரணமாகவே நிகழ்கின்றன. அது அவரது இயற்கை, சுபாவம், தன்மை, சக்தி எனவும் அவர் தம் திருவடி எனவும் கூறப்படும்.
அகண்ட உலகில் அணு முதல் எல்லா பொருள்களையும், சிற்றசைவுமுதல் பேரியக்கங்களையும், எவ்விடத்தும், எக்காலத்தும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பது தான் கடவுள் அருளின் பேரியல்பாகும். இந்த அருட்பெருங்கடவுள் இல்லாத இடம் ஒன்றும் இல்லை எனப்படும். இக் கடவுளியலை அறியாத பொருளியல் வாதிகள், யாவும் இயற்கையியல் நிகழ்ச்சியாகக் கூறுவர். அந்த இயற்கை இயக்கத்தின் காரணம் என்ன ? நோக்கம் என்ன ? முடிவு என்ன ? என்று கேட்பின் சரியான விடை கூற முடியாதவர் களாயிருக்கின்றனர். அவ்வியற்கை வாதிகள். மேலும் அவர்கள் அளவு கடந்த பெரும் பிரபஞ்ச முடிவிலா இயக்கத்திற்குக் காரணம் ஒன்றும் தேவையில்லை. ஏனெனில் அதுவே (சதா இயங்கிக் கொண்டிருப்பதுவே) அதன் இயற்கை இயல்பு என்று கூறிவிடுவர். புறத்துள்ள பொருண்மையுலகப் பொருளாம் ஒன்றை அகத்திருப்பதாகக் கொள்ளுவது வெற்றுக் கற்பனைக் கருத்தே என நினைக்கின்றார்கள். அவ்வகப் பொருளைக் கற்பனை செய்து கொண்டுதான் கடவுட் கொள்கைகளை யுருவாக்கி சமய நெறிகளால் ஜன சமுதாயத்தைக் குழப்பி விட்டனர் முன்னோர் என்பது இவர்களின் தீர்மானமாகும். அருளியல் உண்மையைப் புரிந்து கொண்டால்தான் இந்தக் கடவுள் தத்துவமும், காரண காரிய செயற்பாடுகளும், முடிந்த குறிக்கோள் நிலையும் தெரிந்து கொள்ள முடியும்.
இயற்கை உண்மைச் சத்தாகியும், இயற்கை விளக்கச் சித்துச் செயலோடும், இயற்கை இன்ப நிறைவாழ்வோடும் உள்ள ஒரு மெய்ப்பொருள்தான் பேரருளின் தத்துவமாக எல்லையற்ற அகண்ட பிரபஞ்சத்து எவ்விடத்து, எப்பொருட்கும் அகமறைந்து நின்று எல்லாத் தோற்றங்கட்கும் இயக்கங்கட்கும் காரணமாயுள்ளதாகும். அப்படிப்பட்ட ஒரு அருட்பரம் பொருள் இல்லையாயின், பேருலக முடிவற்ற இயக்கத்திற்கு ஆதாரமற்றதாகும்; ஒரு குறிப்பிட்ட நெடுங்காலத்திற்குப்பின் குறைந்துகொண்டே வந்து நின்று ஒழிந்து போகும். அன்றியும், அந்த அக அருள் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டியே உயிர்த் தோற்றங்களின் அகத்தும் புறத்தும் அறிவு வளர்ச்சியும், பொருள் இயக்கங்களும் முறையே மேன்மை நிலை அடைந்து கொண்டே யுள்ளனவாம். முடிவாக அவ்வருள் உண்மைதான் மனித உள்ளத்தில் வெளிப்பட்டு, அம் மனிதனையே, தன் வண்ணமாய் விளங்கச் செய்து, அருட்செயலோடு ஆனந்த சமுதாயத்தை ஆக்கிக் கொண்டு என்றும் வாழச் செய்வதாம். ஆகவே, இவ்வருளின் மாண்பு கடவுள் உண்மையையும், உலகியல் வாழ்வின் நிறைவையும் கொண்டு வருவதா யுள்ளதென அறிய வேண்டும். அருளறியாச் சிறு நெறிகளால் முடிந்த நற்பயன் என்றும் விளைந்ததில்லை. விளையவும் முடியாதென்பது திண்ணம்.
அருளினால் தான் எல்லாம் பெற முடியும். ஆம், அகத்தே, உயிரும், அறிவும், ஆற்றலும் பெறப்படுவதோடு, அருள் நன் முயற்சிச் செயலால் வேண்டத்தக்க எல்லாப் பொருள்களும், வாழ்வும் பெறலாம் என்பது உண்மை. அருள் இல்லையாயின் ஒன்றும் பெறமுடியாது. ஏன், கடவுள் அருளே யாவுமாய்த் தோற்றியிருத்தலின் அந்த அருள் இல்லாமற்போனால் ஒன்றுமே இல்லையாகும். சர்வ சூனியாய் இருக்கும். பொதுவாகக் கடவுள் அருள் எங்கும், என்றும், உண்ணின்று உறுத்தலினால் யாவும் நியதிப்படித் தோன்றி இயங்கிக் கொண்டுள்ளன. இவ் வுண்மையை மனிதன் காண்கின்றான். அப்படிக் கண்டதினால் மட்டும் பெரும்பயன் அடைந்துவிட விடவில்லை அவன். அகமுணர்ந்து, அருள் ஒழுக்கம் பூண்டு, அனக முயற்சி செய்தால், வாழ்வில் விசேட அருள் பெற்றுப் பெறலரும் பெரும்பயன் அடைவான். இவன்தான் அருளுடையவன் எனப்படுவான். இவனே விசேட அருள் பெற்றவன் என்பதும், ஏனையோர் ஏகதேச அருள் உடையவர்கள் என்பதும்தான் உண்மை. அருளில்லாதவர்கள் என்று எவரையும் சொல்லமுடியாது.
அருள் அடைவதற்குரிய நன்முயற்சி செய்ய மனிதனுக்கே முடியும். அதுவும், உயிர் இரக்கத்தால், ஜீவ தயவால், பிறர்க்கு உயிர் விளக்கத்தொண்டும், அறிவு விளக்கச் செயலும் புரிந்து இன்புறச் செய்தும், அது தன் செயலல்ல அகமிருந்து கூட்டி வைக்கின்ற அரூளாளனின் செயலே எனத் தற்போத மொழிந்து, நிரதிசயானந்தமாய் இருக்கும்போதுதான் அரூளின்பானுபவம் உண்டாகின்றதாம். இப்படி உண்டாகின்ற இன்பமே மெய்யின்பம், கடவுளின்பமாம். மற்ற மற்ற வழியால் செயல்முறைகளால் ஏற்படும் இன்பமெல்லாம் உண்மை இன்பம் ஆகாது. அருள் நாட்டமில்லாது ஆற்றப்படுகின்ற எவ்வளவு பெரிய செயலானாலும், முடிவில் கிடைக்கப்பெறும் பயன் மிக அற்பமாய்ப் போம். இதனால்தான் ஆரவார விழா வைபவங்களாலும், ஆகம தந்திரக் கிரியைகளாலும், மந்திர உபாசனா முறைகளாலும், கடுந்தவச் செயல்களாலும் மேலான பயன் உண்டாகாது போய் விடுகின்றனவாம். இவற்றால் ஏற்படும் ஓரளவுப் பயனே பெரிதெனக் கொண்டு களித்து இறுமாந்து விடுகின்றனர், அருல் உண்மை அறியாத மக்கள் பலரும். இவர்களுடைய அந்த அற்பப் பயனும் மாசுடைய மனத்தின் இச்சையால் தூண்டப் பெற்று பலாத்கார வழியால் கிடைக்கப் பெற்றதாயின், அவ்வற்பப் பயனும் பின்னால் தீமைக்குத்தான் இடமளித்து விடுகின்றதாம். ஆகையால், அருளுண்மை அறிந்து முயற்சிச் செயலில் இறங்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
உன்னுடைய அருளல் செயலினால் தான் இந்த உலகத்தில் எல்லா செயல்களும் நடந்து கொண்டு இருக்கின்றன.மானிட பிறவிகளாகிய எங்களுக்கு அருளல் பண்பை உணருகின்ற நல்ல அருள்,தயவு வாழ்வை கொடுத்திருந்தும் அதனை உணராமல் காலத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம்.உன்னுடைய அருளல் பண்பினால் தான் பிறருக்கு உதவி செய்ய முடியும் என்பதை அறியாமல் "நான் அதை செய்கிறேன்,இதை செய்கிறேன்" என்கிறோம்.புகழுக்காகவும்,பெருமைக்காகவும் செய்யப்படும் உதவிகள் ஜீவகாருணியம் ஆகி விடாது என்பதை நாம் அதிகமாக தகுதிக்கு மீறி சமூகத்தில் புகழ் பெற தீவினையால் வந்த பொருளால் உதவி செய்வது ஆடம்பரம்.ஜீவகாருணியம் இது அல்ல என்பதை வள்ளலாரின் உயர்ந்த வாழ்வினால் எங்களுக்கு உணர செய்தும் இன்னும் புரியாமல் இருக்கிறோம்.உன் அருள் பண்பை உணர செய்வாய் ஆண்டவரே.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி சுஜாதா.