சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை
சுவாமி சரவணானந்தா.
1968.
முன்னுரை
6. அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சித்தி உபாயம்.
நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், நம் புருவ மத்திக்கு நேர் உட்பாகத்தில், உச்சிக்குக் கீழே உள் நாவுக்கு மேலே, தனிப்பெருங்கருணையோடு திகழ்வதால், நாம் சுத்த கரணத்தோடு புருவ மத்தியினின்று ஒருமையும், தயவும் உண்டாக்கிக் கொண்டு, பரோபகார சிந்தனையோடு தயை விளங்கும் செயல் புரிந்து கொண்டிருத்தல் வேண்டும். இப்படி புருவ மத்திய நாட்டத்தைப் பெற்றுக் கொள்ளுவதே, நெற்றிக் கண்ணைத் திறந்து கொள்ளல் என்றும், உப நயனம் செய்யப் பெறல் என்றும். ஞானஸ்தானம் கொடுக்கப்படல் என்றும் உண்மையாக அறிய வேண்டும். அப்படி நெற்றிக் கண்ணைத் திறந்து கொண்டவர்கள், உபநயனத்தைப் பெற்றுக் கொண்டவர்கள், ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டவர்கள், உண்மை கடவுள் நிலை அடையும் மட்டும், சுத்த சன்மார்க்கத்தில், பிரம்மசரியத்தில், உண்மை மார்க்கத்தில் பயில வேண்டும். எப்படி எனில், அளவாக சுத்த சத்துவ ஆகாரத்தை ஏற்று, சதா நம் அருட்பெரும் சக்தியை சிந்தித்து நின்று நேர்ந்த மட்டில் அருட்பணியாற்றிக் கொண்டிருத்தல் வேண்டும். இப்படியிருந்து நம்மில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுபவம் ஓங்க,ஓங்க, ஊணுறக்கம் குறைந்து கொண்டே வந்து, முடிவில் திருவருட் பூரணத்தால், அருட்பெருஞ் ஜோதி சக்தி நம் தேகத்திலும், ஜீவனிலும் நிறைந்து, என்றும் அழியாத சுக நிலை வழங்கும்.
Write a comment