சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை
சுவாமி சரவணானந்தா.
1968.
முன்னுரை
5. அருட்பெருஞ் ஜோதியை வழங்கும் சமரச சுத்த சன்மார்க்கம்.
தனித்தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், நம் சத்திய ஞானத்தில் அல்லது மெய்யறிவில் வெளிப்பட்டு, பெருங்கருணையோடு திகழ்வதால், அவரை அறிய ஒருமையோடு கூடிய ஆன்ம விசாரத்தால் புருவ மத்தியினின்று அக நோக்க வேண்டும். இந்த ஒருமை உண்டாவதற்கும், ஆன்ம அறிவு பெறுவதற்கும், ஜீவதயை, அன்பு, பரோபகாரம் நம்மில் ஓங்க வேண்டும். ஆகவே, தயவும், ஒருமையும் கொண்டுதான் நம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை அறியக்கூடும். அறிந்து, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங்கருணையைப் பெற்று, அவர் மயமாகி சுக பூரணப் பெருவாழ்வடையலாம்.
மேற்குறித்த தயவும், ஒருமையும் கொண்டு எல்லாம் வல்ல கடவுளுடைய திருவருளைப் பூரணமாகப் பெற்று, மரணம், பிணி, மூப்பு முதலியவைகளை நீக்கிக் கொண்டு, எக் காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்வதே நம் சமரச சுத்த சன்மார்க்க லட்சியமாகும்.
இதுவரை, தோன்றிய சமய மதங்களில் உண்மைக் கடவுளைப் பற்றியும், அவரை அடையும் மார்க்கத்தைப் பற்றியும், ஒருவரும் சொல்லவில்லை. பல்வேறு கற்பனைகளால் பல்வேறு கடவுட் கற்பனா கதைகளும், ஆலயங்களும், வழிபாட்டுக் கொள்கைகளும் முன்னிருந்தோர் வழங்குவித்தனரால், அவைகளைப் பின்பற்றிய மக்கள், தம் தம், சமய மதக் கொள்கைகளைக் கைக்கொண்டு பிறரைப் புறக்கணித்தனர். உண்மை அறிந்து கொள்ளாததினால் அப்படிச் செய்தார்கள். எல்லா மனிதர்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சக்திகளையும், எல்லாச் செயல்களையும் வழங்கி நித்தியமாக விளங்குங் கடவுள் ஒருவரே என்றும், அவர் தனிப் பெருங்கருணையரென்றும், அவரை அடைவதற்கு அவருடைய பூரணத் திருவருளைப் பெறவேண்டுமென்றும், அத் திருவருள் நமக்கு, எல்லா மனிதர்களிடத்தும் மற்றெல்லா ஜீவர்களிடத்தும் காட்டும் தயவால் கிடைக்குமென்றும் அறிந்து கொண்டால், தத்துவ சித்திக் கற்பனா சமய மதக் கொள்கைகளெல்லாம் மறையும், அப்போது எல்லாரும் அக உரிமை கொண்டு எல்லாரையும் நம்மவர்களாகப் பாவித்து சர்வஜீவ தயாவொழுக்கம் பற்றி, திருவருளைப் பூரணமாய்ப் பெற்று, சுத்த வாழ்க்கை நடத்துவார்கள். ஆகையால், சமரச சுத்த சன்மார்க்கம், எல்லாச் சமய மதங்களுக்கும் அதீதமாக நின்று, கற்பனை யெல்லாங் கடந்த மெய்ப் பொருளை அடைவிப்பதாயுள்ளது.
Write a comment