Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல் 6 உரை)

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.6 உரை)
சுவாமி சரவணானந்தா.
1980.
ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
ஆகமோ டுரைத்து வழுத்தநின்று ஓங்கும்
அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே.
கடவுளைப் பற்றிய முழு உண்மையை யாரும் உணரவில்லை. உணர்ந்து கொள்ளவும் முடிவதில்லை.
சில ஞானியர்கள் கடவுளைப் பற்றி ஓரளவு உணர்ந்திருந்தார்கள். தாங்கள் உணர்ந்த அந்த ஓரளவு கடவுள் உண்மையைக் கொண்டு அவரை மனதாரத் துதித்துப் போற்றி வந்தார்கள்.
அவர்கள் போற்றி வழிபட்டு வந்த கடவுளைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து பார்ப்போம்.
“கடவுள் ஏகமோ, அனேகமோ” ஒன்றோ பலவோ என்பது, வள்ளலார் இந்தப் பாடலில் கேட்கும் முதல் கேள்வி.
ஏகம் என்றால் ஒன்று என்று பொருள். கடவுள் ஒருவரே என்பது உண்மை.
ஆனால் அந்த ஒரே கடவுள் இந்த உலகத்தில் பல பொருள்களாகத் தோன்றி விளங்கிக் கொண்டிருக்கிறார்.
இதனால் கடவுள் ஒருவர்தான் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
கடவுள் ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு பொருளிலும், உள்ளும் புறமும் இருக்கிறார். உள்ளே இருக்கும்போது ஏகமாக ஒளியாக இருக்கிறார். வெளியில் பல பொருள்களில் பல தோற்றங்களுடன் அனேகமாகவும் விளங்குகிறார்.
இவ்வாறு பலவாய் அனேகமாய் வெளியில் விளங்கிக் கொண்டிருப்பவர் ஒளிமயமான அந்த ஒரே கடவுள்தான். கடவுள் ஒவ்வொரூ உயிரிலும் தம் இயல் ஆகிய அருளுடன் ஒன்றியே இருக்கிறார்.
வெளியில் பலவாய் அனேகமாய்த் தோன்றும்போது கடவுள் தம் அருளின் விரிவாக விளங்கிக் கொண்டிருக்கிறார். கடவுளுடைய அருளின் விரிவே நமது உடலும் பிற பொருள்களும் ஆகும்.
எனவே கடவுளும் நாமும் கூடாமல் கூடி ஒன்றாகவே இருக்கிறோம் என்பதையும், கடவுள் ஒருவரே என்பதையும் அவர் திரு அருளாலே உணர்கிறோம்.
“கடவுள் இயற்கையோ ? செயற்கையோ ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்கிறார் வள்ளலார்.
முதலும் முடிவும் இல்லாமல் இருப்பதே இயற்கை. இப்படி இருப்பவர்தான் கடவுள். முதலும் முடிவும் உடைய வேறு பொருள்களை ஆண்டவனுடன் சேர்த்தால் அது செயற்கையாகும்.
கடவுள் மட்டும் தான் இயற்கையாக இருக்கிறது. மற்ற உயிர்களும், உயிர் அற்ற பொருள்களும் தோற்றத்தில் செயற்கையாகவே இருக்கின்றன.
உண்மையில் இயற்கையாக இருக்கும் கடவுளின் அருளே பல உயிர்களையும், பொருள்களையும் தோற்றுவித்துச் செயற்கையாகவும் காட்சி தருகின்றன.
“எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்ந்து இரண்டெனக் கண்டறிநீ
திகைப்படையேல் என்றெனக்குச் செப்பிய சற்குருவே”.
என அருள் விளக்க மாலையிலும் திரு அருட்பிரகாச வள்ளலார் தெளிவாகச் சொல்கிறார்.

எந்த இடத்திலும் எந்த உயிரிலும் இருக்கும் கடவுள் ஒருவரே. இதுதான் உண்மை.
இறைவனின் அருளே உலகத்தில் உள்ள உயிர்களின் தோற்றங்களாகவும், மற்ற பொருள்களின் தோற்றங்களாகவும் விளங்குகின்றன.
எனவே இறைவன் ஒன்று. அவன் அருள் ஒன்று. ஆக இந்த இரண்டையும் தவிர, உலகில் வேறு ஒன்றுமில்லை.
கடவுள் ஒன்றோ, பலவோ என்று திகைக்காதே என்று எனக்குச் சொன்ன குருநாதரே !” என்று ஆண்டவரைப் போற்றுகிறார் வள்ளலார்.
இது மேலே கண்ட அருள்விளக்க மாலைப் பாடலின் பொருளாகும்.
கடவுள் ஒன்றுதான். அவருடைய அருள்தான் உல உயிர்களின், பொருள்களின் தோற்றங்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளாமல், கடவுளை இயற்கை என்றும், மற்ற உயிர்களையும், பொருள்களையும் செயற்கை என்றும் ஞானிகள் எண்ணினார்கள்.
இதனால் தமது உடலையும் மற்ற உலகப் பொருள்களையும் துறந்தால் அன்றி இறைவனை அடைய முடியாது என்று நம்பினார்கள். கடும் தவம் இயற்றினார்கள். தங்கள் உடலையும் உலகப் பொருள்களையும் துறந்து மடிந்து போனார்கள்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க வாழ்க்கையின் மூலமாக, நமது உடலும் உலகப் பொருள்களும் இறைவன் திரு அருளின் விளைவு என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இவைகளைத் துறக்காமலே இறை இன்பத்தை அனுபவிப்பதுதான் உண்மையான வாழ்க்கை என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
“சித்தோ, தேகமோ” என்று மேலும் ஒரு கேள்வி கேட்கிறார் வள்ளலார்.
சித் என்பது உயிரையும் தேகம் என்பது உடலையும் குறிக்கும்.
உயிருக்குள் உயிராக இருந்து உயிரையும், உடலையும் இயக்கி வருபவர் கடவுள். உயிரும், உடலும் தனித்தனியாக இருந்தாலும் இரண்டும் சேர்ந்துதான் இயங்க முடியும். எனவே, உடலையும், உயிரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. பார்க்கக் கூடாது.
ஞானிகளோ, ஆன்மா, அனான்மா, சித்து, அசித்து, பரம், அபரம் யாவும் இருபொருள்கள் என்று பிரித்தனர்.
வள்ளலாரின் வாழ்க்கை அனுபவமோ, உயிருக்கும் உயிராக இருக்கும் கடவுள், தன் இயலாகிய கருணையை உயிர்கள் அடைய வேண்டும் என்பதற்காக உயிரின் உடலாகவும் மற்ற உலகப் பொருளாகவும் விளங்கச் செய்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்த்துகிறது.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, அகத்தில் இருக்கும் அருட்பெருஞ் ஜோதியுடன் ஒன்றி நின்று, அதன் அருள் ஒளியை அனகமாக்கிப் பெருக்கிக் கொண்டு வாழ்வதே சுத்த சன்மார்க்க வாழ்வாகும்.
“பொதுவோ, சிறப்பதோ” என்று இன்னொரு கேள்வியைப் போடுகிறார் அருட்பிரகாச வள்ளலார்.
கடவுள் எல்லாவற்றிலும் இருப்பதால், எந்த வடிவமும் கடவுளுக்குப் பொது வடிவமாகும். கடவுள் எங்கும் எதிலும் நித்தியமாய் நிறைந்து நிற்பவர். அதனால் ஆண்டவர்க்கு எல்லாம் பொதுவேயாகும்.
இந்த உண்மையை நாம் தெரிந்து கொண்டாலும், அவரைப்போல் நித்தியமாக நம்மால் வாழ முடியவில்லை.
கோயில்களில் இருக்கும் தெய்வத் திரூ உருவங்களைச் சிறப்பாக எடுத்துக் கொண்டு வழிபட்டு வந்தாலும், அவற்றால் நித்திய சுகானந்த வாழ்வு, இறை அனுபவத்துடன் கூடிய வாழ்வு நமக்குக் கிடைக்கவில்லை.
ஆகவே, இப்பொதுவும், சிறப்பும் நமக்குப் பயன் அளிக்கவில்லை.
பொதுவாக எங்கும் நிறைந்து விளங்கும் பழம்பொருள், சிறப்பாக நம் சிர நடுவில் இருக்கும் சிற்சபையில் எழுந்தருளி இருக்கிறார்.
நாம் அவருடைய திரு அருளாலேயே அவரை கலந்து அவர் அருளாக நிற்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு நாம் தொடர்ந்து அருள் வாழ்வு வாழும்போது நம் உள்ளே விளங்குகிற கடவுளின் நிலைத்த சிறப்பு உருவம் அனகமாய் விரிகிறது.
நம் உயிரைச் சூழ்ந்து இருக்கும் உடம்பையும், அது தன் மயமாக ஆக்கிக் கொண்டு வாழ ஆரம்பித்து விடுகிறது.
இதனால் நம் மனித உடம்பே அழிவற்ற கடவுளின் புனித வடிவமாக மாறி என்றென்றும் நிலைத்து விளங்கக் கூடியதாய் ஆகிவிடுகிறது.
எனவே சுத்த சுகானந்தம் பெற்ற நமது உடம்பே கடவுளுக்குப் பொதுவும் சிறப்பும் கொண்ட உருவமாகித் திகழ்கிறது. இது வள்ளலார் வாழ்க்கை அனுபவம்.
“பெண்ணோ, ஆணோ அல்லது இவை இரண்டும் அல்லாத பொருளோ” என்ற ஐயத்தை எழுப்புகிறார் வள்ளலார்.
மெய்கண்டார் போன்ற ஞானிகள் இறைவனை அவன் என்றும், அவள் என்றும், இந்த இரண்டும் அல்லாத பொருளான அது என்றும் மூன்றாகக் குறிப்பிடுகின்றனர். உலகப் பொருள்கள் எல்லாவற்றையும் இந்த மூன்று பிரிவுக்குள் அடக்கி விடுகின்றனர்.
ஆனால் திரு அருட்பிரகாச வள்ளலாரோ இறைவன் ஒருவரே என்கிறார். அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று அழுத்தமாகக் கூறுகிறார்.
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே, உயிர்கள் அருள் இன்ப நித்திய வாழ்வு பெறுவதற்காக, நம்மில் பெண்ணியல் உடம்பாகவும், ஆணியல் உயிராகவும் இவ்விரண்டையும் கடந்த ஆண் பெண் அல்லாத உள் ஒளியாகவும் விளங்குகிறார்.
உள் ஒளியின் அருள் அனுபவ விளைவு ஒருவருக்கு ஏற்படுமானால், அவருடைய உடல் மூப்பு அடையாமல் என்றும் இளமையுடன் முத்தேக சித்தியைப் பெற்றுத் திகழும்.
“யோகமோ பிரிவோ?” என்று தொடர்ந்து கேட்கிறார் வள்ளலார்.
“யோகம்” என்றால் இரண்டாய் இருந்து இணைதல் அல்லது ஒன்றுபடுதல் என்று சொல்லுகிறார்கள் ஞானிகள்.
அவர்களே “கடவுள் வேறு நாம் வேறு. பரமான்மா வேறு ஜீவான்மா வேறு. இரண்டையும் முடிவில் ஒன்றுபடுத்துவது யோகம் ஆகும்” என்கிறார்கள்.
“நாம் நித்தியமான இறைவன் தொடர்பில்லாமல் அநித்தியமான மாயையின் தொடர்புடையவர்களாக இறைவனிடமிருந்து பிரிந்து இருக்கிறோம். இதனால் நாம் இறந்தும், பிறந்தும் வருகிறோம். இந்தப் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு பிறவி எடுக்காமல் இருப்பது முக்தி” என்று கருதினர் ஞானிகள்.
கடவுளை விட்டுப் பிரிந்து நிற்கும் இந்த நிலையைப் பிரிவு நிலையாகக் கொள்ளலாம். உண்மையான வாழ்க்கையோ, யோகத்தாலும், பிரிவாலும் கிடைப்பதில்லை.
சுத்த சன்மார்க்கத்தில் யோகம் என்பது கடவுளை விட்டு நாம் பிரிந்திருக்கவில்லை. ஒன்றாகவே இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அவருடைய அருளைப் பெற்று அவருடன் கூடாமல் கூடி வாழும் முறைதான் சுத்த சன்மார்க்கம்.
சுத்த சன்மார்க்கத்தில் பிரிவு என்பது நம் சிரநடுவில் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் ஒன்றி நின்று, அவர் அருளால் அவரைப் பிரியாது பிரிந்து நின்று, உயிர்களுக்குப் பரோபகாரப் பணி புரிவதுதான்.
“ஒளியதோ வெளியோ” என்று முடிவாக ஒரு கேள்வியைக் கேட்கிறார் திரு அருட்பிரகாச வள்ளலார்.
கடவுள் உண்மையை ஒளியாகவும், வெளியாகவும் காண்பது சித்த மார்க்கம்.
“கடவுள் தங்களுக்கு வெளியே பரவி இருக்கின்ற ஒளியாகவும் பெருஞ் ஜோதியாகவும் விளங்குகிறார்” என்றனர் நம் நாட்டுச் சித்தர்கள்.
அவர்கள் கடவுள் அனுபவம் பெறுவதற்கு உள்ளொளியாகிய அமுத சக்தியை யோகாசனத்தால் பெருக்கினார்கள். அற்புத சித்திகள் பல பெற்றார்கள். பல காலம் உலகில் சித்தாடி மகிழ்ந்திருந்தார்கள்.
முடிவில் தம் உடலை மண்ணுக்கு இரையாக்காமல் தங்கள் உள்ளே பெருகிய ஜோதியே தம்மை முழுவதுமாய்க் கிரகித்துக் கொள்ளச் செய்தார்கள். ஒளியோடு ஒளியாக மறைந்து போனார்கள்.
இவ்வாறு மறைந்து போவதைத்தான் சித்தர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் பேறாகவும் கொண்டிருந்தார்கள்.
சித்தர்கள் தங்களுக்கு வெளியே ஒளியாய் இருக்கும் நிலையே கடவுளின் இயற்கை என்று நம்பினார்கள். அதனால் வெளியில் இருக்கும் கடவுள் ஒளியுடன் ஒளியாகக் கலந்து போவதே தங்கள் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு அதனுடன் கலந்து, கரைந்து, மறைந்து போனார்கள்.
வள்ளலார் நம் சிரநடுவில் இருக்கும் அருட்பெரும் ஒளியே எங்கும் நிறைந்திருக்கும் ஒளிகளின் அடிப்படை என்பதைக் கண்டார்.
தம் உள் இருக்கும் சத்திய ஞான சபையில் எழுந்தருளும் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு அதனுடன் ஒன்றி அதுவாக வாழ்வதே மரணமிலாப் பெருவாழ்வு என்ற உண்மையை உணர்ந்து இருக்கிறார்.
இந்தக் கடவுள் உண்மையை உணராதவர்கள், தாங்கள் உணர்ந்த, ஓரளவு கடவுள் உண்மையை, பலவாறு போற்றிக் கொண்டாடுகிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் எட்டாமல் இருப்பவரே அருட்பெருஞ்ஜோதி அரசர் என்கிறார் வள்ளலார்.
(தொடரும்)
.
.