Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.2 உரை)

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.2 உரை)
சுவாமி சரவணானந்தா
1980.
குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
கோடிகோ டிகளுமாங் காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும்மேல் இடத்தும்
மெய்யறிவு ஆனந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும்
அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே. (திரு அருட்பா – அட்டகம். 2)
எங்கும் நிறைந்து விளங்கும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருள் அரசைப் போற்றிப் பரவுகிறார்.
எல்லா அண்டங்களிலும் அதாவது எல்லா உலகங்களிலும், அங்கு இங்கும் பிண்டங்களிலும் – அதாவது உயிர் உடம்புகளிலும், அருட்பெருஞ் ஜோதியின் அருள் அரசு, சிறிதும் முறை தவறாமல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
அந்த எல்லா உலகங்களிலும் நாம் காணுகின்ற இந்த உலகம் மிக மிகச் சிறு பகுதியே ஆகும்.
இந்த உலகத்தைப் போலவே வானவெளியில் இன்னும் பல கோடிக்கணக்கான அண்டங்களும் நில உலகங்களும் இருக்கின்றன.
அவற்றில் பிண்டங்களாகிய உயிர் உடம்புகளும் கோடிக்கணக்கில் இருக்கின்றன. இன்னும் பல பொருள்களும் இருக்கின்றன.
அந்த உயிர் உடம்புகளிலும், பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்து அந்தந்தப் பொருள்களாகவே, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இருக்கின்றார். அவைகளுக்கு அருள் விளக்கம் தருகிறார்.
இதை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செய்து வருவதன் நோக்கம், உயிர்க்குலத்துக்கு மெய் அறிவு இன்பம், அதாவது சச்சிதானந்த அனுபவம் வெளிப்பட்டு விளங்குவதற்குத்தான்.
உயிர்க் குலத்துக்கு இந்த அனுபவம் வெளிப்பட்டு விளங்குவதற்காகத்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லா உலகங்களிலும் அருள் மயமாய் இருக்கிறார் என்பதை வள்ளலார் அனுபவ மாலையிலும் தெளிவாகச் சொல்கிறார்.
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
மெய்ப்பொருளாம் சிவமொன்றே என்றறிந்தேன் உனக்கும்
விளம்புகின்றேன் மடவாய்நீ கிளத்துகின்றாய் மீட்டும்
இப்பொருளப் பொருளென்றே இசைப்பதென்னே பொதுவில்
இறைவர்செய்யும் நிரதிசய இன்பநடம் தனைநீ
பப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே. (திருவருட்பா)
எல்லாப் பொருள்களிலும், எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமும் இயற்கை உண்மையின் விளக்கமாக மெய் அறிவு இன்ப வடிவமாக நடம் புரிகிறார் அருட்ஜோதி ஆண்டவர்.
இவர்தான் உண்மையான கடவுள். இதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீ, கடவுள் ஒருவர்தான் என்பதை உணர்ந்து கொள்ளாமல், இதுவோ அதுவோ ஒன்றோ பலவோ என்று தடுமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறாய்.
எல்லாப் பொருள்களிலும் ஒரே கடவுளான இறைவனே இருந்து இயங்குகிறார்.
அவைகளை இயக்கிக் கொண்டும் இருக்கிறார்.
இந்த உண்மையை நீ அறிந்து அனுபவிக்கும்போதுதான் நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை பட்டப்பகல் போல். ஐயம் திரிபறப் புரிந்து கொள்வாய். இது மேலே கண்ட அனுபவ மாலைப் பாடலின் பொருளாகும்.
(தொடரும்)