அருட்பெருஞ்ஜோதி அட்டகம்
சுவாமி சரவணானந்தா
1980
முகவுரை.
சன்மார்க்க அன்பர்கள் அருட்பெருஞ் ஜோதி அகவலை ஒதும்போது, அதனுடன் அருட்பெருஞ் ஜோதி அட்டகத்தையும் சேர்த்து ஓதுவது ஒரு வழக்கமாயிருக்கிறது.
அட்டகம் என்றால் சூக்கும உடம்பு. அதாவது உள் உடம்பு என்று பொருள். இது, நமது உடம்பின் இரண்டாவது பகுதியைக் குறிக்கும்.
நமது உடம்பு மூன்று பகுதிகளை உடையது.
|
1.
|
2.
|
3.
|
|
1) நம் கண்ணால் பார்க்கும் உடம்பும், அதில் இயங்கிக் கொண்டிருக்கும் மூச்சும் சேர்ந்தது.
|
தூல உடம்பு
|
முதல் பகுதி
|
|
2) நமது உணர்வும் அறிவும் சேர்ந்தது.
|
சூக்கும உடம்பு
|
இரண்டாவது பகுதி
|
|
3) இந்த இரண்டு உடற் பகுதிகளுக்கும் காரணமாக இருப்பது.
|
காரண உடம்பு
|
மூன்றாவது பகுதி
|
இந்த மூன்று உடல் பகுதிகளிலும் ஐம்பூதங்களின், முதல் பூதமான, ஆகாச பூதம் நிரம்பியிருக்கிறது. ஆகாசமோ ‘அகர’ எழுத்தால் குறிக்கப்படுகிறது.
நம் தேகத்தின் மூன்று பாகத்திலும் இந்த ஆகாசம் பரவி இருக்கிறது. அது அந்தந்த பாகத்திலும் தூலமாகவும், சூக்குமமாகவும், காரணமாகவும், மறைந்தும் மறையாமலும் விளங்கிக் கொண்டு இருக்கிறது.
தூல வாழ்வின் மூலம்தான் நமக்கு அனுபவங்களும் வருகின்றன. ஆகையால், இந்தத் தூல உடம்பில் காணும் ஆகாசத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கூறப்பட்டிருக்கிறது.
ஆகாசத்தின் நிலை, கணிதத்திற்குள் வைத்து அளவிட முடியாத பெரிய நிலை. ஆகாயத்தின் ஒரு பகுதிதான் மனித உடல். இந்த மனித உடலை, ‘சிற்பிரபஞ்சம்’ அதாவது, ‘அறிவு உலகம்’ என்று சொல்வார்கள். மனித உடல் ஓங்கார வடிவத்தின் முழுத்தன்மையையும் பெற்றது. இதன் தூல வடிவம் எண்சாண் அளவுடன் திகழ்வது.
தமிழில் எட்டு, என்ற எண்ணை. ‘அ’ என்ற எழுத்தால் எழுதுவார்கள்.
‘அ’ என்ற எழுத்து எட்டு என்ற எண்ணைக் குறிப்பது போல, ‘ஆகாயம்’ என்ற பொருளையும் குறிக்கும்.
‘எறும்பும் தன் கையால் எண் சாண்’ என்பது பழமொழி. எறும்பாக இருந்தாலும் சரி, மற்ற எந்த உயிராக இருந்தாலும் சரி. அதன் கையால் எண் சாண் அளவே அதன் உடல் இருக்கும். எறும்பும் தன் கையால் எண் சாண் என்ற பழமொழியில் வரும் ‘கை’ என்பதற்கு அனுபவம் என்றும் பொருள் உண்டு.
எந்த உயிரின் உடலும், எட்டின் அகமாக விளங்கும் ஆகாயத்தின் வடிவமே ஆகும் என்பது அனுபவம். இங்கு ஆகாயம் என்பது அருள் ஒளியைக் குறிக்கும்.
‘அ’ என்ற எழுத்து மற்ற எழுத்துக்களிலும் கலந்து இருக்கிறது. இதுபோல ஆகாயம் என்ற பூதமும் மற்ற பூதங்களில் கலந்து இருக்கிறது.
‘அட்ட’ என்பது ‘அஷ்ட’ என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம். ‘அட்ட’, ‘அஷ்ட’, என்பதற்கு வடமொழியில், எட்டு என்று பொருள், அட்ட – அகம் - அட்டகம்.
நமது உடல் அட்டமூர்த்தங்களால் ஆனது. பஞ்ச பூதங்களுடன் சூரியன், சந்திரன், ஆன்மா, அதாவது, இறைவனைத் தன் உள்பெற்ற உயிர் ஆகிய இந்த எட்டின் அகமாக விளங்குகிற ஆகாயம் அட்டகம்.
நம் சூக்கும தேக அனுபவ நிலையை உணர்த்த வந்தது அருட்பெருஞ்ஜோதி அட்டகம். இது எட்டு செய்யுள்களை உடையது. இதில் முதல் நான்கு பாடல்களும், சத்விசாரத்தால் பெறப்படும் உண்மையை விளக்குவன.
அடுத்த நான்கு பாடல்களும், பரோபகாரச் செயல். அனுபவத்தால் அடையப்
பெறும் நிலையை விளக்கி விவரிப்பன.
அருட்பெருஞ்ஜோதி அட்டகப் பாடல்களில் வரும் கருத்துக்களைப் பார்ப்போம்.
1. முதல் பாடலில், “அருட்பெரும்” என்ற சொற்றொடர் பன்னிரண்டு முறை வருகிறது. இவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மையைப் பன்னிரண்டு வகையாக விரித்து விளக்குகின்றன.
2. அருட்பெருஞ் ஜோதியின் அருள் அரசு கோடிக்கணக்கான உயிர்களிலும் உலகங்கலிலும் அவற்றில் இருக்கும் பொருள்களிலும் அகமும் புறமும் நிறைந்து ஆட்சி புரிகிறது,
இவ்வாறு அருட்பெருஞ்ஜோதி, அருள் அரசு நடைபெறுவதின்
நோக்கம், எல்லாவற்றிலும் சச்சிதானந்த மெய்யறிவின்ப அனுபவம்
விளைவு கொள்வதுதான்.
3. மக்கள், கண் முதலிய பொறி புலன்களாலும், மனம் முதலிய
கரணங்களாலும் இறைவனைக் காண முடியவில்லையே என்று
எண்ணி ஏங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு மிக நெருங்கியிருக்கும்
ஒரே பொருள், கடவுள்தான் என்று வள்ளல் பெருமான் தெரிவிக்கிறார்.
அப்படி நெருங்கியிருக்கும் இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன். நித்தியமான மிக நுட்பமான வடிவத்தை உடையவன். இந்த இறைவன் தன் அருளால் தன்னைச் சிறிது சிறிதாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். தன் நுட்பமான நிலையைச் சுற்றி வளர்கின்ற அருள் உணர்வு அருட்பெருஞ் ஜோதியாய் நின்று அனைத்தையும் ஆள்கிறது.
4. அறிவினாலே இறைவனை அடைந்து அனுபவித்து விடலாம் என்று எண்ணி முயன்றவர்கள் எல்லாரும் அவ்வாறு அடைய முடியாமல் மவுனிகளாகி விட்டனர். அறிவுடையவர்களை மவுனிகளாக்கிய இறைவன், இப்போது அருட்பெருஞ்ஜோதியாகி நம்மை ஆண்டு வருகிறார்.
5. இறைவன் ஆறு அந்தங்களுக்கும் முழுமையாக விளங்காதவன். அவைகளைக் கடந்து நிற்பவன். அவ்வாறு இருக்கும் இறைவனை அவன் அருள் கொண்டு நோக்கும்போது, அவன் சமரசப் பொருளாக. புத்தமுத ஜோதியாக, பரிபூரணமாக விளங்குகிறான்.
6. ஒன்றாகவும், பலவாகவும் காணுகின்ற இருவிதத் தோற்றம் கொண்டவன் இறைவன். இப்படிப்பட்ட இறைவனுடன் கூடியும் கூடாமலும் இருந்த ஞானிகளால் அவர் அவர் தரத்துக்கு ஏற்பப் போற்றப்பட்டு ஓங்கி நிற்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
7. ஞானிகள் பலவகை சாதனைப் பயிற்சிகளில் படிப்படியாக மேலேறுகின்றனர். அவர்கள் சிவானுபவம் பெறுகின்றபோது, சிவஜோதிக் காட்சியும், அதனைக் காணும் அவர்கள் உணர்வும் ஒன்றில் ஒன்று இணைந்து கலக்கின்றன. கலந்து கரைகின்றன.
இதனால் சிவஜோதிக் காட்சியும், அதனைக் காணும் உணர்வும் தன் தனித்தன்மை இழந்து விடுகின்றன. இதை உணர்ந்த ஞானிகளுக்கு அவரவர் நிலையில் இருந்து போற்றும்படி இருப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
8. அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே ! எங்கும் ஜோதி மயமாய் விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தில் என்னை ஈடுபடுத்தினீர்கள். எனக்குப் புதிய அமுதத்தை ஊட்டி அருளினீர்கள். அமுதத்தைத் தந்து அதை அனுபவிக்கும் நிலையையும் எனக்கு அளித்தீர்கள். உள்ளங்கையில் நெல்லிக்கனி பளீர் என்று விளங்குவதுபோல் என் உள்ளேயும் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறார் வள்ளலார்.
அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தில் உள்ள எட்டுப் பாடல்களின் கருத்துக்களை ஓரளவு உணர்ந்து கொண்டோம். அட்டகத்தின் பொருளை உணர்ந்து ஓத வேண்டும். அவ்வாறு ஓதி வந்தால் அருட்பெருஞ்ஜோதியை உணர்ந்து கொள்ளலாம். அந்த உணர்வுடன் வாழ்ந்து இன்பத்துடன் விளங்கலாம்.
வடலூர் சத்திய ஞான சபையின் உண்மையையும், அருட்பெருஞ்ஜோதியின் முழு விளக்கத்தையும் உலகம் தெரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இதனால் உலக மக்கள், வடலூர் சத்திய ஞான சபைக்குத் தொடர்ந்து வருவார்கள். அருட்பெருஞ் ஜோதியைத் தரிசிப்பார்கள். தங்கள் அகத்தில் அருள் விளக்கம் பெறுவார்கள். உண்மையான இன்பத்தை அடைவார்கள், தங்கள் நித்திய வாழ்விலும் சுத்த சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்து ஒழுகி ஓங்குவார்கள்.
வடலூர்ப் பெருவெளிக்கு வரும் உலக மக்களுக்கு நாமும் நல்ல வழிகாட்டியாக இருந்து உதவ வேண்டும்.
இதன் மூலம் உலக மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு ஏற்படுவது நிச்சயம். இந்தப் புதிய வாழ்வு பழைய சமய மதச் சார்பு உடையதாக இருக்காது. இன்றைய பொது உடைமைச் சமுதாயத்தின் நாத்திக வாழ்வாகவும் இருக்காது. புலன் இச்சைக்காக வாழும் வாழ்க்கைதான் வாழ்வு என்று எண்ணிக்கொண்டு அதற்காக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் புதுமைப் போலி வாழ்வாகவும் இருக்காது.
அருட்பெருஞ் ஜோதி உணர்வுடன் வாழும் புனித வாழ்வு உள்ளத்தில் தயா உணர்வையும், உண்மையான ஞான விளக்கத்தையும் உண்டுபண்ணும். தினசரி வாழ்வில் எல்லா மக்களும் அன்புடன் ஒத்து வாழ்வார்கள். இன்பத்தில் தழைத்து ஓங்குவார்கள். இதுதான் வள்ளலார் வழங்கி இருக்கும் சுத்த சன்மார்க்க வாழ்க்கை முறை.
சுத்த சன்மார்க்க வாழ்வை மேற்கொண்டு நாம் எல்லோரும் எந்தவிதமான வெறுப்புணர்ச்சியும், வேற்றுமை எண்ணமும் இல்லாமல் வாழ வேண்டும். இதற்கு நம் அகத்திலும் புறத்திலும் இருந்து அருட்பெருஞ் ஜோதியும் துணை புரியும். இதனால் உலகம் முழுவதிலும் அருள் வாழ்வு தழைத்து ஓங்கும். மக்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.
சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் உண்மை அருட்பெருஞ் ஜோதியாக விளங்குகிறது. அது அறிந்தும் கண்டும் அனுபவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
அருட்பெருஞ்ஜோதியின் தனிப் பெருங்கருணையால் இவ்வாறு அனுபவித்து வருபவர் திருவருட்பிரகாச வள்ளலார்.
அவர் தாம் பெற்ற மெய்யறிவு இன்பப் பேற்றினை எல்லாரும் பெற்றுப் பெரும் பயன் அடைய வேண்டும். என்ற பெரு நோக்கோடு தயா உணர்வோடு திருஅருட்பாவை அருளியிருக்கிறார்.
திரு அருட்பாவை திருஅருட்பிரகாச வள்ளலார் திருவருளால் பாடினார் என்று சொல்வது மட்டும் போதாது.
திருவருள் இன்னது என்று உணர்ந்து கொள்ளவும் திரு அருட்பா உதவுகிறது. திருவருளால் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு கொள்ளவும் திரு அருட்பா உதவுகிறது. அருட்பெருஞ் ஜோதியைப் பார்த்து அதை உள்ளத்தில் பதித்துப் பெருவாழ்வு பெறுவதற்கும் திரு அருட்பா உதவுகிறது.
அருட்பெருஞ்ஜோதி அகவல் அருட்பெருஞ்ஜோதி கடவுளின் திருமுடியாக விளங்குகிறது. சன்மார்க்க அன்பர்களை வசீகரித்து ஆட்கொள்கிறது. அருட்பெருஞ்ஜோதி அகவலிடம் பற்று வைத்து அதைப் பலகாலும் ஓதிப் பக்குவம் அடைகின்றனர் அன்பர்கள்.
“திருவடிப் புகழ்ச்சி” ஆண்டவர் திருவடியை நம் உள்ளத்தில் அழுத்தமாகப் பற்றிக் கொள்ளச் செய்கிறது. இதன் மூலமாக ஆண்டவரின் முழு உண்மையையும் மிகத் தெளிவாக உணர முடிகிறது.
“அருட்பெருஞ்ஜோதி அட்டகம்” நாம் திருவடி நிலையில் நிற்க வேண்டிய முறையையும் அந்த நிலையில் இருந்து உலகத்தில் வாழ வேண்டிய வகையையும், இதன் மூலம் பெருவாழ்வு பெறும் விதத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
(முகவுரை முற்றும்) .. .. அடுத்து .. .. அட்டகம் செய்யுள் விளக்கம் தொடரும்.
Write a comment