Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
நிறை மனிதன் (4. அறிவு வளர்ச்சி)

நிறை மனிதன்
(The man of Divine Perfection)
4. அறிவு வளர்ச்சி.
Swami Saravanaananda.
1974.
இங்கு குறிக்கப்படுகின்ற அறிவு,. புலன் உணர்ச்சி விளக்கமல்ல. அது கீழின உயிரகத்தே அரும்பி மலர்ந்ததாம். ஆனால் இம் மக்களினத்தே சிறப்புற்று விளங்குவது, தெளிவுதரு சுத்த மன உணர்வாகும். உலகம் உண்டானபின் உயிரினம் தோன்றி நெடுங்காலத்திற்கு பின்னர்தான் மனித வர்க்கம் பரிணமித்துள்ளதாகும். இவ்வடிவில், மன அறிவுத் தோற்றம், ஆதிமுதலே கட்டவிழ்ந்து மலரத் தொடங்கிவிட்டதாகும். இவ் விசேட மன அறிவு பிற எப்பிறப்பு வடிவினும் வெளிப்பட்டதில்லையாம். மன அறிவு விரியத் தொடங்கும் தருணம், விலங்கின ஐயறிவு நிரம்பி விட்ட தருணம். சூழ வளர்ந்த தேகம் மனிதக் குரங்கு வடிவமாகும் என்று பரிணாம விஞ்ஞானம் கண்டுள்ளது. அந்த மனவறிவு விளைவுற – சூழுரு, மனித வடிவமாகிவிட்டதாம். இதில், நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனித இனம், மனம் என்னும் ஓர் உயர் அறிவுத் தத்துவத்தை ஆதிமுதல் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதேயாகும். எவ்வுயிரினும், அக அறிவினைக் கொண்டு இனம் பிரித்துக் காண்பதுதான் முறையாகும். புற உருவை மட்டும் வைத்து இனம் பிரித்தறிவது முறையன்றாம். இதனால்தான் மனிதன் குரங்கினத்தின் பிற்சந்ததி எனக் கருத இடமேற்பட்டதாம். அப்படிக் கருதிக் கொள்ளல் கூடாது. அக வடிவம் அறிவுச் சொரூபமே;, அது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றேதான் விளங்க, விசேட காரணத்தால், பல்வேறு உயிரின வடிவினின்று பிரகாசிக்கின்றதாம். மனிதனில் இவ்வக வடிவம், அவனது ஆன்ம சொரூபமாகக் கண்டு கொள்ளப்படுகின்றது. இவ்வான்மாவையே மனிதன் தன் உண்மையுருவாக அறிகின்றதால் அது (இவ்வான்மா) பிரபஞ்சத் தோற்றத் தொடக்க முதல் இருந்து வருகின்றதாகவும், அக விளக்கம் சிறிது சிறிதாக வெளிப்பட வெளிப்பட அறிவிலும், உருவிலும் பரிணாமவிருத்தி ஏற்பட்டுள்ளனவாம். ஆகவே மனிதன் உண்மையில் அக ஆன்ம வடிவினனாகத்தான் என்றும் இருந்து கொண்டு அறிவு விளக்கம் அடைந்து வருகிறான் என்பது திண்ணம். மனிதனைக் குரங்கின் பிற் சந்ததி என்று சொல்லுவது அறிவறியாமையாகும்.
மனிதன் ஆன்ம சொரூபி என்பதை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளல் வேண்டும். இவ் வான்மாவுக்குத்தான் அக அறிவு விளக்கமும், புற வடிவச் சேர்ப்பும் சதா உண்டாகிக் கொண்டிருக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று நேர்விகிதத்தில், பரிணாம விருத்தி ஏற்று வருகின்றனவாம். இவ்வுண்மையைத் தெரிந்து கொள்ளுவதால் ஓர் ஆன்மாவுக்குப் பலவாகிய பிறவித் தொடர் ஏற்பட்டுள்ளதின் இரகசியம் தெள்ளத் தெளிவாய் விளங்கும். திருவாசகத்தில்,
‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன்பொன் அடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா ! விமலா ! … … …”
என மாணிக்கவாசகரால் ஓதப்படுகின்றது. மணிவாசகராய் விளங்கிய ஓரான்மாவுக்கு உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யன், விமலனாகிய கடவுள், தனது அகப் புற உண்மையாகிய பொன்னார் உபயத் திருவடிகளைக் காட்டிக் கொடுத்து, வீட்டுநிலைபெறச் செய்துவிட்டாராம் ! இத்திருவடிக் காட்சிக் கண்டுய்யும் பேறு இலேசிலேயா கிடைத்து விட்டது ? புல்முதல் எல்லாப் பிறப்பும் பிறந்து பிறந்து அக விளக்கமாகிய அறிவு வளர்ச்சி கொள்ளப்பட வேண்டியிருந்ததாம். ஆகவே எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்து விட்டதாம் அந்த ஆன்மா ! ஆம். அறியாமை என்னும் தடிப்பு தேய்ந்தது. ஆணவமாம் போதம் சுருங்கியது. பாசத் தளைகள் கட்டு விட்டன. ஆன்மா புடமிட்ட தங்கம் போல் மாசெல்லாம் நீங்கித் தேசொளி கொண்டு விளங்கவல்லதாகி விட்டது என்பது குறிப்பு.
அறிவு வளர்ச்சியின் தத்துவத்தை அறியாத, பொருளாயத உலக மக்கள், அழிவற்ற ஆன்மாவின் உண்மையை அறியார்கள். அவர்கள் ஓர் ஆன்மாவுக்கு, (மனிதனுக்கு) முன்பிறப்பு, பின் பிறப்பு உண்டென்பதை அறியாமையால் மறுத்து கூறுகின்றனர். கருத்தியல்வாதிகளின் (Idealists) மதக் கோட்பாடுகளால், உண்மை ஒளியைக் காணக்கூசி மறுக்கின்றனர் பலர். எல்லோரும் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஆதிமுதல் தொடர்ந்து நடந்து வருகின்ற புறப்பொருண்மை உலக இயக்கம், இடையறாத அக அறிவு வளர்ச்சியின் பொருட்டே என்பது தெளிவாகும். அவ்வக அறிவு விளக்கங் கொண்டோங்கி வருகின்ற ஒன்றுதான் ஆன்மாவாகக் கண்டுரைக்கப் பட்டுள்ளதாகும். இதனைப் பற்றி ஓரளவு விளக்கம், ஈண்டு விரிக்க வேண்டியுள்ளது.
(தொடரும்)