தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
குறிப்புரை விளக்கம்
சிறப்பொழுக்கம்
எட்டாம் அதிகாரம்
(பஞ்சேந்திரியங்களில்)
1. கண்ணிந்திரிய வொழுக்கம்.
|
1.
|
கண்ணிற் கொழுக்கம் கருணை யுடைமையால்
மண்ணிற் களிக்குநல் வாழ்வு.
|
71.
|
கு.வி – சிறந்த ஒழுக்கத்தால் நல்வாழ்வு பெறுவதற்கு முதலில் கண்ணிந்திரியத்தால் உலகியலில் எப்படி ஒழுகுதல் வேண்டும் என்பதப் பற்றி விளக்கப்படுகின்றது, இவ்வதிகாரத்தில்.
நம் தயாபெருஞ்ஜோதி பதியைக் காண்பதற்கு தயவாம் அருள் உணர்வே
கண்ணாக உள்ளது.
உண்மைத் தயவாய் அகத்தே விளங்கும் பதியின் தன்மை, ஓரளவு புறக்கண்ணில்,. சீவ இரக்கத் தோற்றமாக வெளிப்படுகின்றது. ஆதலின் கண்ணின் தன்மை, கண்ணீர்மை அல்லது கண்மை என்ற சொற்களுக்கு இரக்கம் தயவு என்றே பொருள் கூறுவர்.
எனவே கருணை ஒழுக்கமே கண்ணுக்குரிய சிறப்பொழுக்கம் ஆகவும், இதனாலே மெய்ப் பொருளைக் கண்டடைந்து வாழவும் அனுகூலமாய் உள்ளதாம்.
|
2.
|
எண்மை யிலாஅ தெவரையுந் தேற்றிடக்
கண்மையாற் சேர்க கனிந்து
|
72.
|
கு.வி – உளங்கனிந்த தயவோடு எவரையும் நெருங்கி இன்புறச் செய்தல் வேண்டும். பிறரைக் கீழானவர்களாக, தாழ்ந்தவர்களாக, எளியவர்களாகக் கருதி, அலட்சியம் செய்யாது தயா உணர்வுடன் சார்ந்து, அவர்கள் துன்பம் துடைத்து இன்பளித்தல் நம் கடமை.
எண்மை = (எள்+மை) எள்ளுதலாவது, இகழ்தல், நிந்தித்தல்.
|
3.
|
கலையுலகிற் காணுங் கவினெல்லாம் மாந்தர்க்(கு)
அலைவறுத்துண் ணாட்டுமோ அன்பு.
|
73.
|
கு.வி – புறத்தே கண்ட அழகில் மயங்கி, மெய் மறந்து நிற்போர் புலனின்பமே பேரின்பமாகப் பிரமை கொள்ளுகின்றனர். இப்புற அழகுக்கு அப்பாற்பட்ட, அழகுக்கெல்லாம் தாயகமாகிய ஆண்டவர் அருள் ஒளியை அகத்திற் கண்டு, அதில் ஒன்றி, அருள் மயமாகிய பொறி புலனாற் கலை உலகை நோக்கினால், நிரதிசயானந்தமாக நிலைப்போம்.
|
4.
|
எண்ணு முணர்வில் இறையொளி யொன்றிய
கண்ணே பெறும்அருட் காண்பு.
|
74.
|
கு.வி – கடவுள் ஒளியாகிய தயவு உள்ளுணர்வில் மலர்ந்து விளங்கும்போது புறத்தே தோன்றுகின்ற காட்சியெல்லாம் தெய்வ அருட் காட்சியாகவே தோன்றும் (காண்பு = காட்சி).
இங்கு – எண்ணும் உணர்வு என்றது பொறி புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பகுத்தறியும் பக்குவ மனோ உணர்வாம். இதில் தயவு உண்டானால்தான் காண்பனவெல்லாம் தெய்வக் காட்சியாகத் தோன்றும். தயவில்லாத வெற்றுப் பகுத்தறிவால் உண்மை புலனாகாது.
|
5.
|
காமக் களிதரு காட்சி யுறாவகை
ஏம வொழுக்கோ டிசை.
|
75.
|
கு.வி – ஏம ஒழுக்கு என்பது, பாதுகாப்பாகிய உயர் ஒழுக்கமாம். கட்டுக் காவல் கடந்து புறப் புலனின்பம் திளைக்கச் செல்வது தீது. தயவோடு உலகை நோக்கி, காமக் காட்சியைப் பற்றாது, உள் மயங்காது தயவுப் பணி மேற்கொள்வதே நலம்.
ஏமம் என்ற சொல், இன்பம் என்றும், பொன் என்றும் பொருள் படலால், நம் சுத்த தயா ஒழுக்கமே, காப்புடையதாகவும், நல்லின்பம் வழங்குவதாகவும், பொன்னின் வண்ண சுத்தமும் உயர்வும் உடையதாகவும் விளங்கும்.
|
6.
|
துன்புறு மாருயிர்க்குச் சூழ்ந்தின்பு செய்யாத
வன்கணுக் கில்லை மணி.
|
76.
|
கு.வி – பிறவுயிர் துன்பப் படுவதைக் கண்டுணர்ந்து, தயவோடு நோக்கி, இன்பு செய்கின்றவர்களே கண்ணுடையவர்கள்.
அப்படிச் செய்யாதவர்கள், பிறர் துன்பத்தைக் கண்டும் காணாதவர்கள் போல், தயா உணர்வற்று இருப்பவர்கள், கண்ணிருந்தும் காணுந்தன்மையுடைய ஒளி மணி இல்லாதவர்களே ஆவர்.
வன்கண் என்பது கொடுமை, கொடுமையான பார்வையைக் குறிப்பதுமன்றி அன்பற்ற கண்னென்பதுமாம்.
|
7.
|
உள்ளத் தளியி னொருவாத் தயாளருக்(கு)
எள்ளத் தனையில் விடர்.
|
77.
|
கு.வி – உள்ளத்தளி = உள்ளமாகிய ஆலயம். இதில் இரிந்து கொண்டு தயை புரிகின்றவர்களுக்குச் சிறிதும் துன்பம் நேரிடுவதில்லை. தயா பெருங்கடவுள், உள்ளத்திருந்து கொண்டு என்றென்றும் ஆள்வதால், அப்பதியில் ஒன்றி நின்று வாழ்வோர்க்கு, அக்கடவுள் தயவே என்றும் சூழ்ந்து இன்பம் அருளுகின்றதாம்.
எள்ளத்தனை = எள்ளளவு, மிகச் சிறிது.
|
8.
|
கண்ணுறங்கா யோகிருந்துங் காணாக் கடவுளொளி
கண்மையினாற் கொண்டிடலாங் கண்டு.
|
78.
|
கு.வி – இரவு பகலறியாது, கண் விழித்து, யோக நிலையில் தவமிருந்தும் கூட கண்டு கொள்ளற்கரிய அருட்ஜோதி ஆண்டவர் காட்சியைச் சுத்த தயவினாலே காணலாகும்.
காண்பது மட்டுமன்றி, கண்டு, அனுபவத்திற் கொண்டு அதுவாகிப் பேரின்பில் வாழ்ந்திடலாம் என்பதும் உண்மை.
கண்மை = தயவு.
|
9.
|
விண்மணிசேர் வான்கவிகை மெய்யலவவ் வுண்மையினைக்
கண்மணிசேர் மெய்யறிவாற் காண்.
|
79.
|
கு.வி – புறக் கண்ணாற் காண்கின்ற, வானக் கவிகையும் அது பூமியைத் தொடுகின்ற தோற்றமும், அவ்வானக் கவிகையின் கீழ் வயங்கி, இயங்கிக் கொண்டுள்ள சோம, சூரிய, உடுக்களின் இயக்கங்களும் விசார ஞானக் கண்ணாலே உள்ளவாறு கண்டு கொள்ளற்கே திகழ்கின்றனவாம். புறக்கண்ணுக்குப் புலனாகின்ற தெல்லாம் பொய்த் தோற்றமேயாம்.
|
10.
|
ஓமுரைசெய் யிவ்வுலகில் உண்மைகண்டோர்க் கின்பருளும்தா
தாமரைக் கண்ணனிரு தாள்.
|
80.
|
கு.வி – அகண்ட வெளியிலே ஓங்கார ஒலி சக்தி என்றும் நிறைந்து நின்று எல்லா உலகத் தெல்லாப் பொருள்களையும் உருவக்கி, இயக்கிப் பெருக்கி, சிதைத்து ஒழித்துக் கொண்டே உள்ளதாம். இவ்வுண்மையைக் கண்டு கொண்டவர்கள் அருளின்பப் பெருவாழ்வு பெறுவார்கள்.
கடவுளைத் தாமரைக் கண்ணன் என்பது உண்மைக் கற்பனை. அதாவது,
தாமரை – அருள் ஒளி, அரவிந்தம் (Love + Theos) Lotus, அன்பு ஒளி, சிவஜோதி.
தாமம் = ஒளி, மரை = மலர்.
இவ்விளக்கங்களுக்கு எல்லாம் இடமாகிய மெய்யன்பறிவு தானே தாமரையாகக் கொள்ளப்படும். இதனால், அரி, அயன், அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் இத் தாமரையை கண்ணாகவும், இருக்கையாகவும், திருவடியாகவும் கூறியுள்ளனர். மூவருமே தாமரைக் கண்ணர் என்பதும், பொருந்துவதாம்.
எவ்வாறெனில், அரி-தாமரையே கண்ணாக உள்ள கமலக் கண்ணன் ஆவான். அயன் – தாமரையின் கண்ணே அமர்ந்துள்ளதால் தாமரைக் கண்ணனே. அரன் – பாதி பாகத்தை உமையம்மைக்குக் கொடுத்து விட்டுத் தாம் வலமாகிய அரைப்பாகத்தில் இருப்பதனால் (தாம் அரைக்கண்ணர்) தமரைக்கண்ணரே.
ஆகவே, மெய்ப்பொருளாம் கடவுளுக்கு, மெய்யன்பு, மெய்யறிவு, என்னும் திருவடிகள் உண்டென்பதும், அவைகளே சன்மார்க்க வாழ்வுடையார்க்குப் பேரின்பம் அருளுவனவாகவும் தெளிந்து கொள்ளலாம்.
Write a comment