Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
நிறை மனிதன் - ஒளி உலகு

நிறை மனிதன் (ஒளி உலகு.)

சுவாமி சரவணானந்தா

1974

அணுவைப் பிளந்து, பேராற்றலையும், பெருவொளியையும் காண்கின்றான் விஞ்ஞானி. இந்தக் காட்சியால் வான்வெளியொளிர் ஞாயிற்றுச் சுடரின் கண்ணின்று தோற்றிய பேரொளிப் பிழம்பினால் நம் உலகும் கோள்களும் உருப்பட்டுச் சுழன்று கொண்டுள்ளனவாகவும் அறியப் படுகின்றனவாம்.மேலும், நமது ஞாயிறே கூட, பேரொளிப் பால்வெளி (Milky way - Nebula) நின்று தோற்றியுள்ளதாயும் தெளியப்படுகின்றதாம். ஆகவே, ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு அணுவுக்கும், ஒவ்வொரு உயிருக்கும் உள்ளிருந்து விளங்குகின்றதும், விளங்கச் செய்கின்றதும் பேரொளியேயாம்.

முன்னம் ஆன்ம ஞானி, ஐம்புலன் அடக்கி, மன அசைவின்றி, உண்ணிலை நின்று நிறையொளியை எங்கும் சூழக்கண்டான். இது தனது ஆன்மப் பேரொளியின் நிறை நிலையாக உணர்ந்தான். அந்நிலையில் மனம் ஒன்றியபோது சொல்லரிய இன்ப உணர்ச்சி பெற்று அதிலே அமிழ்ந்து கரைந்து போகவே மனங்கொண்டு, அப்படியே அகியும் விட்டான். அந்த ஆன்ம ஞானிக்கு உலகமெல்லாம், ஆன்ம ஒளியை அகம் கொண்ட மாயா தோற்றப் பொருளின் நிறைவிடமாக விளங்கியது. அவன் அகநிலையில் மூழ்கி புற உலகத் தொடர்பை நீக்கிக் கொள்ள விழைவு கொண்டதால், தேகமும், உலக வாழ்வும் வெறுக்கப்பட்டு, உள்ளொடுங்கி அணுத்துவமாய் அருகிப்போய் வாழ்வும் முடிந்ததாம். உண்மமயில் அது ஆன்மாவின் முடிவாகிய ஆனந்த நிலை அல்ல. ஆகையால் மறுபடியும் அக இன்பம் விளங்க வாழ்வு நிலைக்கு வரவேண்டியதாகி விடுகின்றதாம்.

உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலல மெய்யின்பம் உறுகின்ற வெளிநிலை - இந்த இரண்டும் சேர்ந்துதான் மனிதனுக்கு நித்தியானந்த வாழ்வை நிலைக்கப் பண்ணுவதாம். உலகம் ஒளி நிலையில் உருவாகியுள்ளது. அந்த ஒளி வெற்றொளி அல்ல. செயலொடு என்றென்றும் விளங்குகின்ற ஒன்றாம். அந்தச் செயல், அன்பும் அறிவும் செறிந்த தயவுச் செயலாம் அகமிரூந்து விரிந்து அனக நிறைவுற்று உலகமெல்லாமாய்ச் சூழ்கின்றதெனக் காண்பது சுத்த சன்மார்க்க முறை. இப்படிக் காட்சி பெற்றுக் க்ண்மூடிக் களித்துப் போவதல்ல சன்மார்க்கியின் குறிக்கோள். அதற்கு மாறாகத் தயாவொளியை உளங்கொண்டு தயவோடு உலக வாழ்வில் விளங்குவது தான் இவனுடை குறிக்கோளாகும். உருவ உலகுக்கு உள்ளிருக்கும் ஒளியில், உயிர் ஆற்றலும், அறிவு விளக்கவும், தயா இன்ப உணர்வும் விளளவு பெற்றுப் பயன்தர உள்ளனவாம்.