நிறை மனிதன்
(The man of Divine Perfection)
Swami Saravanaananda.
1974.
1. உலகத் தோற்றம்.
இன்றைய மனிதன். அறிவியல் துறையில் ஒரு ஒரு புரட்சிகரமான வழியில் முன்னேறிக் கொண்டிருக்கின்றான். இவனது அறிவு, புறப் பொருளியல் விஞ்ஞானத்தையே அதிகம் அடிப்படையாகக் கொண்டு விரிவடைகின்றது. இயற்கைப் பொருண்மை உலகே, சதா இயக்க இயல்போடு விளக்கிக் கொண்டு அக வளர்ச்சி அடைந்து கொண்டே இருப்பதாக அறிந்து கொள்ளப்படுகின்றது. இயற்கை நியதிமுறை எப்பொழுதும் ஓய்வு ஒழிவின்றி செயல்பட்டுக் கொண்டேயிருப்பதாகும். இவ்வியற்கைச் செயலொடு விளங்கிக் கொண்டுள்ள உலகத் தோற்ற உண்மையைப் பற்றி விஞ்ஞானம் எவ்வளவோ வெளியிட்டுள்ளது. பேருலகமாகிய மகா பிரபஞ்ச வெளியில் இயங்கிக் கொண்டு ஒளிருகின்ற எண்ணற்ற உலகங்களைப் பற்றி வியந்து சிந்திக்காதவர்கள் யாரே !
அளவிடற்கரிய ஆற்றல் கொண்டு அளவில்லா நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் அகண்ட வெளியுலகையும், அதிற்றோன்றி, நம் வாழிடமாகத் திகழுகின்ற இந் நிலவுலகையும் பற்றி ஆராய்வதால் ஒரு பேருண்மை அறிந்து கொள்ளப் படுவதாயிருக்கின்றது. அந்த உண்மையைப் பொருளாயுத உலக இயற்கைத் தன்மை என இன்றைய விஞ்ஞான உலகம் உரைக்கின்றது. இந்த அடிப்படையில்தான் மக்கள் சமுதாயம் முழுமையும் நல்வளர்ச்சி பெற்று, இன்ப வாழ்வில் ஓங்க வேண்டுமென சமூக விஞ்ஞானம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இதற்குத் தடையான பழமையான முறைகள் எல்லாம் ஒதுக்கப்பட்டு வருகின்றன “சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இந்த உலகுக்கெல்லாம் காரணமாக இருக்கின்றார். அவருடைய படைப்புகளே இவ்வெல்லா உலகங்களும் நாமுமாயுள்ளோம். அந்தக் கடவுளைப் போற்றிப் பணிந்து அடைவதே மனிதனுடைய கடமை” என்று செய்யப்பட்டு வரும் மத போதனைகள், உலகப் பொது மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்யவில்லை. ஆகையால் பொருளாயுத சமுதாயம் அந்தப் பழைய கடவுட் கொள்கையில், பற்றும் நம்பிக்கையும் இழந்து விட்டுள்ளது. ஆனால் இவர்களின் புரட்சிகரமான இயக்க முறை, உயிரக்கமும் உண்மை அன்பும் இல்லாக் காரணத்தால், அழிவுப் பாதையில் சென்று கொண்டுள்ளதாகும். ஆகவே தயவு அடிப்படையில் புற உலகையும், அக உண்மையையும் ஒன்றுபடுத்த்திப் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் நாம்.
புலனறி உலகை உள்ளது உள்ளபடி காண வேண்டும். அதனைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் நலம் காண வேண்டும். அக அறிவு வளர்ச்சிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும் நமக்கு இவ்வுலகும், உயிர் உடம்பும் தேவை. ஒன்றன் வளர்ச்சியின் பயன் என்ன ? அகவுண்மை வெளியாக்கப்படுவதே புறவளர்ச்சியின் பயனாம். ஒரு விதையை நட்டால், பூத உலகத் துணையால் முளைத்து விளைவு நிறைவு பெற்று, பயனை பழமாக, வித்தாகத் தருகின்றதாம். அந்த வித்து மறுபடியும் நட்டால் முன்போல் விளைந்து பயன்தரும். இவ்விளைவின் பயனை ஏற்றுத் துய்ப்பதுதான் வாழ்க்கை அனுபவமாம். இந்தப் புறவாழ்வின் பயனாக ஏற்படுகின்ற அகவிளக்கம் அறிவு மயமாகவும் அன்பினால் வரும் இன்ப மயமாகவும் இருக்கின்றதாகும். இந்த அன்பறிவின்ப அகநிலையை நமது அக வண்ணமாகக் கொண்டுதான், புறவாழ்வில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது சமயம் இவ்வகவுண்மையை அறிகின்றதோடு சூழுலக இயற்கை உண்மையை உள்ளவாறறிந்து பயன்படுத்திக்கொண்டு அகமும் புறமும் நிரம்பிய தயா இன்ப சமுதாய வாழ்வை உலகில் நிலவச் செய்ய வேண்டியவர்களாயுள்ளோம்.
இன்றுள்ள பக்குவ அறிவுக்கு, அகவுண்மை, அன்பறிவின்பப் பெருக்கு நிலையாகவும், புற உண்மை, அவ்வகப் பயன் வெளிப்பட்டுச் சதா விளங்கியோங்கும், புற இயக்க நிலையாகவும் அறியப்படுகின்றன. அகண்ட பிரபஞ்சத்தின் அளவு எப்படி கணக்கிட்டுச் சொல்ல முடியாததோ அதுபோல், அகநிலைப் பேரின்ப வாழ்வுக்கும் முடிவென்பது இல்லாததாய் என்றும் விளங்க வல்லதாகும். இந்த அகநிலையும், புற நிலையும் நமக்கு இவ்வுடம்பிற்குக் காரண காரியமாகிய ஒரு சிற்றணுவினின்று பெற்றுக் கொண்டுள்ளோம். இந்த அற்புத அணு நம் சிர நடுவிடத்தே அமைந்து, உயிர், உணர்வு, உடல் வாழ்வு, உலக அனுபவம் யாவற்றுக்கும் காரணமாயுள்ளதாகும். இச் சிற்றணுவே ஆன்மா என்று மெய்ஞ்ஞானிகளால் குறிக்கப்படுகின்றதாம். இவ்வான்ம அகத்தில் அன்பறிவின்பமாக உள்ள இயற்கைப் பயனை வெளிப்படுத்த வேண்டிதான், இந்தப் பக்குவ மனிதப் பிறப்பு ஒவ்வொரு ஆன்மச் சிற்றணுவுக்கும் வருவிக்கப் பட்டுள்ளதாகும். ஓர் ஆன்மா இந்தப் பிறவி நிலை எய்துமுன், அனங்கஹ (inorganic) நிலையும், பின்னர் அங்கஹ (organic) நிலையும் கடந்து, ஓரறிவுயிருடம்பு முதல், ஐயறிவுயிர் வடிவங்கள் வரை ஒவ்வொன்றாய்க் கடந்து இம் மனித வடிவேற்று மனோபகுத்தறிவின் முடிவில் தன்ஞானம் பெற்று, அகப்புற உண்மை கண்டுந் திகழ்கின்றதாகும். இந் நிலையிலிருந்து தான் புற உலக உண்மைத் தோற்றத்தை யுள்ளவாறு காணலாகும்.
(தொடரும்)
Write a comment