(தயவுக் குறள் நூலில்) தயவு ஆசி
சுவாமி சரவணானந்தா
17.1.96
அணு அகம் இருந்தருள் ஆண்டவர் தயவு, என்றும் யாவுமாய்ப் பொங்குதே. இந்த உண்மைதான் மனிதனில் வெளிப்பட்டு, அதுவே இவனாய் என்றும் திகழச் செய்வது, திருவுள்ளம். அருள் அறிவால் அறிந்த மனிதன் அகம் சேர்ந்து அவ் இன்பில் ஆழ்ந்து மறைய நேர்ந்தது இதுவரை ! ஆனால் அத்தோடு முடிந்து விடவில்லை, மனிதப் பிறப்பின் குறிக்கோள் !! அக அனுபவத்துடன் தயவு வாழ்வு ஏற்று, மன்னி நிதமும் நிறை மனிதனாய் விளங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது கடவுட் சித்தம் ! அந் நிறை இன்ப வாழ்வே நம் இலட்சியமாக வழங்கப் பெற்றுள்ளது இன்று.
அன்பும், அறிவும், அருளும் பொருள் பெற்றுள்ள மனிதன் சுத்த தயவு வாழ்வினால், நித்தியானந்தமான சிறப்பு எய்துவதே தயா ஆசியாகும். மற்றபடி, புறவுலகு போற்ற, புகழ் எய்தி மறையுறுவது சிறப்பன்று. முன்னர் கண்ட நெறிமுறை எல்லாம் மனிதனை நிறை இன்பில் வாழ வைக்கவில்லை. உண்மை மனிதனை தெய்வ சொரூபியாய் உணர்ந்துதான், தெய்வீக வாழ்வு ஏற்கக் கற்பனை பெயர்கள் சூட்டினர். எனினும், உண்மைத் தயவு நெறி மேற்கொள்ளாத காரணத்தால் நிறை இன்ப வாழ்வு எய்தவில்லை.
இப்போது சுத்த தயா சன்மர்க்கம் வெளியாகி வாழ்விக்க வந்துள்ளது. தயவே மாபிரபஞ்சத்து யாவுமாய்த் தோற்றியுள்ளதோடு மனிதனைப் புனிதனாக்கி இனிது வாழ வைப்பதாய் விளங்குகின்றதாம். இவ்வுண்மை நம் தமிழிலே “தயவுக் குறள்” வடிவமாய் வெளிப்பட்டுள்ளதை உரிமை அன்பர்கள் உணர்ந்து உலகுக்கு வழங்க விழைந்தனர். அவ்விழைவுற்றவரில் ஒருவர் திரு S.N. முத்தையர் ஆவர். அவரே இக்குறள் நூலின் சிறப்பு அறிந்து, தயவோடு உலகிற்கு வெளியிட்டுப் பரப்ப உளம் கொண்டார். திருவருளும் கூட்டி வைத்ததால் மிகச் சிறப்பான முறையில் அழகாக அச்சிட்டு வழங்கச் செய்துள்ளார். இது பலர் உள்ளத்தில் தெளிவும் நித்திய வாழ்வில் பெரும்பயனும் தோற்றுவிக்க உலகெங்கும் பரவத் தயா பெரும் பதியே உதவுவாராக.
பிற சமய மத நூல்களையோ, விளையாட்டுப் பொழுது போக்கு வெளியீடுகளையோ, விஞ்ஞான சாதனா பயன்தரு புத்தகங்களையோ போன்றதல்ல இத் தயவு வாழ்வு அருளும் புதுநூல். பொது நூல் !! இதனால் இத் தயவு ஆசி ஆன்ம நேய அன்பர்கட்கெல்லாம் நல்லின்ப வாழ்வு தந்து உதவுவதாக.
தயவு சத்திய ஞான கோட்டம், திண்டுக்கல்.
திண்டுக்கல் சரவணானந்தா சுவாமிகளின் தயவு குறளை இன்று பல மக்களுக்கும் தெரிய,அறிய வைத்து கொண்டு இருப்பது எல்லா வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் என்பதை உணர்ந்து வருகிறோம்.அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இதன் மூலம் வெளிபடுத்துவது சுத்த சன்மார்க்க அருட்படைப்புகள் வள்ளலார் மூலம் வெளிபடுவது போல நல்ல சன்மார்க்க தயவு அன்பர்கள் மூலமும் வெளிப்படும் என உணர்த்தி உள்ளார்.சுத்த சன்மார்க்க அன்பர்களை தயவு அன்பர்கள் என சொல்லுவது பொருந்தும்.பலரும் தயவு அன்பர்கள் என புதிதாக ஒன்றை சொல்லுகிறார்கள் என பலரும் எண்ணுகிறார்கள்.வள்ளலார் உபதேச குறிப்புகளில் சுத்த சன்மார்க்க அனுபவத்தை தயவு அனுபவம் என சொல்லலாம் என சொல்லி உள்ளார்.ஆகையால் சுத்த சன்மார்க்க அன்பர்களை தயவு அன்பர்கள் என சொல்லலாம்.சுத்த சன்மார்கத்தை வெளிபடுத்தும் நபர் மரணமிலா பெருவாழ்வுபெற்று விட்டாரா?,பெற வில்லை?,பெறுவாரா? நமக்கு எந்த கருத்து இருப்பினும்அது முக்கியம் இல்லை .நாம் தயவு சன்மார்க்க வாழ்வுக்கு தகுதி பெற்று விட்டோமா? என எண்ணி நல்ல தயவு சிந்தனையை வளர்த்து செயல் படுவோம்.சுத்த சன்மார்க்கம் என்பதே செயல்பாடு தான்.சுவாமிகளின் தயவு குறளை வெளி படுத்த இறைவனுக்கு கருவியாக இருந்த தயவு அன்பர்களுக்கு நன்றி.
Saturday, February 19, 2011 at 04:09 am
by P Sujatha
Write a comment