Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
56-60 பாடல்கள் உரையுடன்

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 56-60 உரையுடன்
சித்தெலாம் வல்ல சித்தனென் றுன்னைச்
சேர்ந்தனன் சேர்ந்தவென் றனக்குக்
கத்தெலா முடைய காரிருண் மாயை
கவலுறக் கலக்குதல் தகுமோ
அத்தெலாங் கொண்ட நின்னருள் அன்பை
அணிமல ராக்கியே யளிக்க
பித்தெலா முடையேன் பிணைத்தன னிதனை
பிணையலாய்ப் பேணியேற் றருளே. பாடல்.56.
உரை.
எல்லாம் வல்லசித்தன் நீ என்று உணர்ந்து, உன்னிடம் வந்து சேர்ந்துள்ளேன் நான். இனியும், இவ்வுலக மாயா காரிருள் காரியப்பாடுகள் அடியேனைக் குழப்புதல் நியாயமா? உன் அருளை வழங்கப் பெற்று, மகிழ்வுற வேண்டியே, ஒளி மிக்க நின் அருள் அன்பையே அணிமலராக ஆக்கிக் கொடுக்கின்றாய். பித்துடையேன் அம்மலர்களை பிணையலாக (மாலையாக)ப் பிணைத்து உனக்கே கொடுக்கின்றேன். இதனை உவந்தேற்று அருள்வாயாக.
பேணுதற் குரிய பெரும்பொரு ளுனது
பெருந்தய வொன்றதே யென்று
வாணுதற் சிறிய மங்கைய ரோடு
மைந்தரு மகிழ்ந்துகொண் டாட
காணுதற் கரிய கருணைசே ரொளியைக்
களித்தருள் கலியொழிந் திடவே
நாணுதற் குரிய நவையெலாந் தவிர்த்திந்
நன்மலர் மாலையேற் பாயே. பாடல்.57.
உரை.
அன்பு அறிவு உடைய இருபாலாரையே, வாள்நுதல் மங்கையும், மைந்தனுமாக குறிக்கப் பெற்றது. இவர்கள் தயாபெரும் பொருளையே விரும்பிக் கொண்டிட வேண்டும். ஆதலின் இவர்கட்குக் கருணை சேர் ஒளியை உளத்திலே வெளிப்படுத்துவாய். அறியாமையை அறிகின்ற போது வெட்கப்பட நேருகின்றது. இது ஒரு குற்றம்தானே? அதனையும் குற்றமெனக் கொள்ளாது குணமாய்க் கொண்டு இந்த மாலையும் ஏற்றுத் தயை புரிதல் வேண்டும் நீ.
நன்மலர் மாலை நான்தொடுக் கின்றேன்
நாதனே நாட்டவ ரெல்லாம்
புன்மலர் மாலை போற்றி யேற்கின்றார்
பொய்பட வாழ்ந்துவீழ் வாராய்
பொன்மலர் மாலை பொன்னொளிர் நினது
புகழடிக் குவந்தது என்று
சொன்மலர் மாலை சொல்லிநான் செய்தேன்
சுகந்தரச் சூடிடு வாயே. பாடல்.58.
உரை.
நான் தொடுத்திடும் மாலை, நீ தரும் தயாநன் மலரால் ஆனது. புறப்புலன் நாட்டமுடையவர்கள் எல்லாம், அழிபடும் அற்ப மலர் மாலைகளைப் போற்றி ஏற்று, அழிபட்டு பொய்த்தும் போய்க் கொண்டுள்ளனர். உலகறியாத பொன்மலர் மாலைதான் அருளாளன் திருவடிக்கு உகந்தது என்று சொல்லி, இச் சொற்களாலேயே ஓர் மாலை செய்து அளிக்கின்றேன். ஏற்று சுகந்தருவாய் ஆக.
சூடிய ஜோதி மணிமலர் மாலை
சொல்லுதற் கரியதா மென்று
பாடிய பனுவல் வல்லுநர் பண்பில்
பகையறக் கலந்துநின் றாயே
ஆடிய நினது அருட்பத மலரே
அடியனுக் கருள்கிறா யதனை
ஓடிய எனது மனக்கர முனக்கோர்
ஒண்மலர் மாலைசெய் கிறதே. பாடல்.59.
உரை.
கடவுள் தரித்துள்ள ஜோதிமணிமாலை, தயா ஒளியாக அவரைச் சூழ்ந்துள்ளது. இதனைச் சொல்லால் வருணிக்கலாகாதே ! என்று, நூலோர் நுவலுகின்றார்கள். அவ்வல்லுநர் உளத்தில் இணைந்து கலந்து நிற்கும் திருவடி மலரே அடியேனுக்கு அருளுகின்றாய். அவ்வடி மலர்களையே, எனது நிலையற்று ஓடும் மனக் கரத்தால் எடுத்து ஓர் மாலையாகச் செய்கின்றேன். இது நின் திருவுள்ளம் போலும்.
மாலைசெய் வாழ்வில் மருண்மயக் குற்று
மலங்கிடு மனிதரை யெல்லாம்
வேலைசெய் யுலகில் வேலைசெய் தலுத்து
வீணிலே மெய்யைவிட் டிறவா
காலைசெய் கருணை ஜோதிகண் டிங்கே
கழிவிலா தென்றுமோங் கிடற்கு
சோலைசெய் தளிக்கா சுடர்மலர் கொண்டு
தொடுக்குமிம் மாலைதோட் கொள்ளே. பாடல்.60.
உரை.
அறியாமையாம் மருள் மயக்கில் கலங்கி வீழ்வுறுகின்றனர் மக்கள். இவர்களின் வாழ்வுதான் மாலை செய். அதாவது ஆசையினால் விளையும் பிழைப்பு. இந்த வேலை செய்யுலகில் (கடலால் சூழப்பட்ட நிலவுலகில்) வேலை செய்து அலுத்து, பல பணி புரிந்து சோர்வுற்று, வீணிலே உடலைவிட்டு இறந்து படாமல் வாழ, காலை செய் கருணை, காருண்யத் திருவடியாம் ஜோதி கண்டு பலரும் உய்யவே, சோலையில் கிடைக்கப் பெறாத தயா சுடர் மலர்களால் வனையும் இம்மாலையை, நின் வலிய தோளில் அழிந்து கொண்டு வாழ்வு அளிக்க வேண்டுகின்றேன்.
Content Ref: Dhayaa vilakka maalai