5.10.2008-சோழவந்தானில் வள்ளற் பெருமானின் 186வது அவதார தின விழா மற்றும் திரு T.R.பாப்பா அவர்கள் இசை அமைத்த திரு அருட்பா இசைப்பேழை (audio CD) வெளியீட்டு விழா.
சோழவந்தானில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், அந்த ஊரில் டோர் நிர்.12-6, 54, பெருமாள் கோயில் சன்னதி தெருவில் ஒரு சிறிய அறையினில் இயங்கி வருகிறது.
ஒரு சிறிய அறை மட்டுமே சத்திய ஞான சபை நடத்துவதற்குக் கிடைத்த நிலையிலும் அந்த கிராமத்தில் சன்மார்க்க சங்கம் நடத்தி வரும் அன்பர்கள், அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் வளாகத்தில் உள்ள பொது மண்டபத்தில் சன்மார்க்க சங்கக் கூட்டங்களையும், சத் சங்கங்களையும் நடத்துவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.
இங்கு தினசரி காலை வேளைகளில் உள்ளூர் பொது மக்களின் பேராதரவுடன், ஏழை எளிய மக்களுக்கு கஞ்சி வார்க்கும் பணி தினசரி நடைபெறுகிறது. பிரதி திங்கட்கிழமை தோறும் மாலை 5.00 மணி அளவில் சத்திய ஞான சபையில் அகவல் பாராயணம் நடைபெற்று வருகிறது.
5.10.2008 அன்று இந்த ஊரில் வள்ளற் பெருமானின் 186வது அவதார தின விழா கொண்டாடப்பட்டது.
அதிகாலை 6.00 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி தீபத்தை சன்மார்க்க அன்பர்கள் ஏற்றினர்.
காலை 6.30 மணி அளவில், அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் அந்தப் பகுதி முழுவதும் ஒலிக்க சன்மார்க்கக் கொடியினை ஏற்றினர்.
அதன் பின்னர், காலை சுமார் 8.00 மணி அளவில், ஏழை எளிய மக்களுக்குக் கஞ்சி வார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
காலை 9.50 மணி அளவில் வந்திருந்த அன்பர்கள் அனைவரும், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தனர். அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் தாக்கம், பல திசைகளிலும் பரவியது.
அதன் பயனாக, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு இடங்களிலும் இருந்து அன்பர்கள், திரளாக, அங்கு வருகை தந்தனர்.
காலை 10.30 மணி அளவில், சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்குவதாக இருந்தது.
இந் நிகழ்ச்சிக்கு, இச் சன்மார்க்க சங்கத்தின் தலைவரான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு கே.எஸ். மாரியப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.
http://www.vallalarfiles.com/image/QZqq176ZtMkMwJDMNbegww,$,3d,$,3d/sz-tn650/051020081019440000.jpg
அவர் தனது உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும், மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கண்டுபிடித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில், இங்கர்சால் போன்ற அறிஞர் பெருமக்கள் உதித்தனர். அவர் போன்று உதித்த ஒரு சிலரைத் தவிர அங்கே ஆன்மீகத் துறையில், யாரும் முன்னோடிகளாக இருக்கவில்லை.
நமது பாரத நாடு, பழம் பெரும் நாடு. அறிஞர்கள், ஞானிகள், சித்தர்கள் உதித்த மிக உன்னதமான நாடாகும் இது. இங்கு உதித்த ஞானிகள் அக நிலையில் கண்டவற்றை எல்லாம் சொல்லி, மனிதனை நல்வழிப்படுத்தும் வகையில் நல்ல பல அறிவுரைகளை பாடல்களாகக் கூறிச் சென்றனர்.
கம்பன் சொன்னான் – இரணியன் கேட்கும்பொழுது, பிரகலாதனிடம் “இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் அணுவைச் சத கூறிட்டதிலும் உள்ளான்” எனச் சொன்னான். அணுவை சத கூறிடுவது என்பது அக்கால ஞானியர் வாக்கில் வந்துள்ளது.
இதெல்லாம் எவ்வாறு சாத்தியம் ? அன்றைய கால கட்டத்திலேயே, ஞானிகள், தமது அக நிலையிலே உணர்ந்து, இது போன்றவற்றையெல்லாம் கண்டு, சொல்லி வைத்தனர்.
இதுவரை வந்த மகான்கள் வரிசையில், சுத்த சன்மார்க்கத்தைப் போதித்துச் சென்ற திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்த நெறி மிக்க உயர்வானதாகும். அவர் வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட மரபினில் ஒருவர். ஆத்மாவையும், பேராத்மாவையும் கண்டுபிடித்துச் சொல்லிச் சென்றார்.
ஆண்டவரின் வடிவம், அருட்பெருஞ்ஜோதியாக உள்ளது என்றார். சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார். கொலை புலை தவிர்க்கும்படி சொன்னார்.
அதனை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அதன் பின்னர் மதுரை நாராயணபுரம் திரு ராமானுஜம் என்ற அன்பர், உண்மைக் குரு என்பது குறித்து கொடுக்கப்பட்ட தலைப்பிற்கான தமது உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
“உலகமெலாம் உதிக்கின்ற ஒளி நிலை” என்றது போல், முதலில் ஒளி நிலையிலிருந்து, நீர், நிலம், காற்று, வான்வெளி, நெருப்பு என்ற பஞ்ச பூதங்கள் உருவெடுத்து, பின்னர் அதிலிருந்து சூரியனும், அதிலிருந்து, இந்த நில உலகமும் தோன்றியுள்ளன.
http://www.vallalarfiles.com/image/K9NOK010qDR,$,2fBQQbF8DOlQ,$,3d,$,3d/sz-tn650/051020081019460000.jpg
பூமியில், ஆண்டவரின் கருணையால், ஒரு ஆன்மா, ஓரறிவுத் தாவரமாகவும், பின்னர், மண் புழு, சிப்பி போன்ற ஈரறிவு ஊர்வனவாகவும். அதன் பிறகு, ஈ, எறும்பு, பூச்சி போன்ற 3வது அறிவு படைத்தவையாகவும். அதன் பின் 4 அறிவு படைக்கப்பட்ட ஊர்வன, மற்றும் பறப்பன போன்ற பிறவிகளும் வழங்கப் பெறுகின்றன. இந்த நிலைகளுக்கு அடுத்தபடியாக, ஐந்தாவது அறிவு படைத்த விலங்கினப்பிறவி வழங்கப்பெறுகிறது. இப் பிறவிகளில் எல்லாம் அந்தந்தப் பிறவிக்கென்று ஏற்பட்ட சுபாவ குணம் (Instinct knowledge) மட்டுமே விளங்கப் பெறுகிறது.
இவற்றையெல்லாம் கடந்து தன்னை மேலேற்றிக் கொண்ட இந்த ஆன்மாவுக்கு, ஆண்டவரின் கருணையால், ஆறாவது அறிவு விளங்கும் மானிடப் பிறவி வழங்கப் படுகிறது.
இந்த ஆறறிவு மனித பிறப்பில் - ஆண்டவர் விளங்கும் இடம், உச்சிக்குக் கீழே உள் நாவுக்கு மேலே – ஒரு வச்ச விளக்காக – நிராதார நிலையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக, சிற்சபையில் திரு நடனம் புரிந்து கொண்டுள்ளார். இந்த உடம்பும், புறப் பிரபஞ்சப் பொருள்கள் பொற்சபையாக உள்ளன. அவை அனுபவத்தின் பொருட்டே படைக்கப்பட்டு உள்ளன.
ஆடும் கருணைத் திருநடத்தீர் ஆடுமிடந்தான் யாதென்றேன்
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடமென்றார்
நாடும் படிநன்கருளு மென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
ஈடுந்திய பல் நடுவுளதால் என்றார் தோழி இவர் வாழி” - திரு அருட்பா
ஓரறிவுப் பிறவி முதல் ஐந்தாவது பிறவி வரையில் உள்ளவற்றில், ஓர் ஒரு அறிவு ஜீவிகளிடம், சுபாவ குணந் தாண்டிய அறிவும் வழங்கப்படுகிறது. உதாரணமாக, கருடனில் கட்புலன் சிறப்பாக அமைந்துள்ளது. அதே போல் நாய் போன்றவற்றில் மோப்ப சக்தி, மிக அதிகமாக விளங்குகின்றது.
இதனைப்போல. மனிதப் பிறவிக்கென இறைவனால் சிறப்பாகக் கொடுக்கப்பட்ட கருவி, “மனம்” ஆகும். இந்த மனத்தைப் பக்குவப்படுத்தி, தன் வசப்படுத்தி, இறைவனைப் பற்றி அறியும் அறிவினை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனிதன் என்றால் மன் + இதன் ஆவான். சதாகாலமும் இறை சிந்தனையிலேயே மன்னி, நித்தியமும் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன் தான் இந்த மனிதன்.
மனிதன் சுத்த சத்துவ ஆகாரத்தை உட்கொண்டு பரோபகாரச் செயல்கள் புரிந்து வருதல் வேண்டும். வள்ளற் பெருமான் சொல்லியபடி, நால்வகை ஒழுக்கங்களையும், சத் விசாரம், பரோபகாரம் முதலானவற்றையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால் இன்றைய மனித குலம், இறைவனிடம் எதை வேண்டிப் பெற வேண்டுமோ அதனை வேண்டிப் பெறாமல், மனம் போன போக்கில் கோரிக்கை வைத்து, எதற்காக இந்த மனிதப் பிறவி கிடைக்கப் பெற்றதோ அதனை பயன் படுத்திக் கொள்ளத் தவறி விடுகின்றது.
தாம் குழவியாக இருக்கும்போதே சிதம்பரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப் பெற்றபோது, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான், உண்மையான நிலையினை அறிந்து கலகலவெனச் சிரித்துள்ளார்.
அவர், தமது இளமைக் காலத்தில், எல்லா சமய மத சிறு தெய்வங்களையும் வந்தனை வழிபாடு செய்து வந்துள்ளார். சென்னையில் 25 ஆண்டுக்கும் மேலாக அவர் வசித்த வீடு, தங்கச் சாலைக்கு அருகே உள்ள எழு கிணறு வீராச்சாமி தெருவில் உள்ளது. திருவொற்றியூர் படம்பக்க நாதரிடமும், வடிவுடை மாணிக்க வல்லித் தாயாரிடமும், வள்ளற் பெருமான் பல காலம் வேண்டியுள்ளார்.
பட்டினத்தார் சமாதிக்குச் சென்று வணங்கியுள்ளார். அவரது தலைமை மாணாக்கரான திரு வேலாயுத முதலியாரின் சமாதி, திருவொற்றியூர்ப் பகுதியில் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் உள்ளது.
அவருக்கு முன் உதித்த மற்றைய ஞானியரைப் போலவே, வள்ளற் பெருமானும், எல்லா தெய்வங்களிடமும் ஆரம்ப காலங்களில்,. பற்றுக் கொண்டு பக்தி வழிபாடியற்றி வந்து, பின்னர், அருட்பெருஞ்ஜோதியாக ஆண்டவர் விளங்குவதைக் கண்டு அறிந்ததும், எல்லோருக்கும் பொதுவான ஒரு இறைமையுடன் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வந்தனை வழிபாடு செய்து, திரு முறைகள் இயற்றியுள்ளார்.
தம்மை மேலேற்றி விட்டது, தயவே என உபதேசப் பகுதியில் குறிப்பிட்டு, அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும். ஒருமை வந்தால்தான் தயவு வரும் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே அன்பர்கள், இதனை நன்கு புரிந்து கொண்டு, தயவுடன் பிறருக்கு முடிந்த உதவிகளையும், கருணையுடன் செய்து வரல் வேண்டும்.
இதனையே, தன்னை அடுத்த அன்பர்கள் மத்தியிலும் அவர் வலியுறுத்தி வந்துள்ளார். ஆண்டவரின் உண்மையை அறியாததால் அல்லவோ தம்மை இவர்கள் எல்லாம் சுற்றி வருகின்றனர். தம்மிடமே உள்ள ஆண்டவரை இவர்கள் எழுப்பிக் கொள்ளவில்லையே என மிகவும் விசனப் பட்டுள்ளார்.
http://www.vallalarfiles.com/image/4cmy6gIuviig7KdyCyH5CQ,$,3d,$,3d/sz-tn650/051020081019480000.jpg
அருளே நம் வடிவு அருளே நம் துணை என்றெல்லாம் இருந்தும், அந்த அருளினை ஆண்டவரிடம் வேண்டிப் பெற்றுக் கொள்ளாமல் இந்த மனித சமுதாயம் வீண்போகின்றதே என மிகவும் கவலை அடைந்துள்ளார்.
மனித குலம் உய்வடைவதற்காக, அவர் இயற்றிய பாடல்கள் திரு அருட்பா எனவும், ஆறு திருமுறைகளாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. அருட்பெருஞ்ஜோதி அகவல் அதனில் மிகச் சிறப்பு வாய்ந்தது.
அகவலில் அருளே நம் உரு என்று நமது உண்மைச் சொரூபத்தை அனைவரும் இலகுவாக அறியும்படிச் சொல்லிச் சென்றார். அரு + உள் = அருள். உள்ளே இருக்கக் கூடிய அருளாக நாம் இருக்கிறோம். எனவே அருள் வல்லபம் காரியப்படுவதற்கான காரியங்களையும் நன் முயற்சிகளையும் அகத்திலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உளங்கொண்டு உலகியல் நடத்திவரவேண்டும். அவ்வாறு நடத்தி வந்தால், அவரவர்களின் பரி பக்குவ நிலைக்குத் தக்கபடி, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஆட்கொண்டு, இறவா வரமளிப்பார்.
இதுவரை மனிதன். தான் வேறு இறைவன் வேறு என எண்ணியதை, வள்ளற் பெருமானார் மாற்றி, நம்முடன் பிரிவற இறைவன் உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ளச் சொன்னார். அக மெய்ப் பொருளுடன் கூட இருந்து எப்போதும் நாம் உலகியலை நடத்தி வரவேண்டும்.
சுத்தம் என்றாலே அக வடிவமுற்று இலங்குதல் தான். அதனை விடுத்து புறக் காரியப்பாடுகளிலே மனத்தை லயிக்க விடக்கூடாது. வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற நெறி முறைகள், சமீப காலத்தில், பல்வேறு நபர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, புறத்தே வீண் போய்க் கொண்டிருக்கும் நிலை உண்டாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. புற குருவாக உள்ளவர்களிடம், இறைவனின் உண்மையையும், பல்வேறு அறிவுரைகளையும் பெறலாம். ஆனால், அவர்கள் எல்லாம், அருள் ஆண்டவர் நமக்கு வழங்கவிருக்கும் அருளைக் காட்டிலும், பல்வேறு நிலைகளிலும் தாழ்ந்தவர்கள். எனவே புற குருக்களை, ஒரு முன்னோடியாக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.
உண்மையில் அகம் விளங்கும் அக குருவான - உண்மைக் குருவான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை நாம் தெரிந்து தெளிந்து, வாழ்வில் அவரருளை வேண்டிப் பெற வேண்டும். அவரே உண்மையான குருவாக அனைவருக்கும் உள்ளார்.
நாம் இதுவரை கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தோம். ஆனால் நமக்குள்ளே உள்ள இறைவன் தான் - நமக்கு வெகு அருகாமையில் உள்ளார். அவரை நாம் அறியாமலேயே, புறத்தே காரியப்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றோம். நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்குப் பெயர் வாழ்க்கை அல்ல. இதற்குப் பெயர் பிழைப்பு. ஆம். நாம் எல்லோரும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதனை விடுத்து, உண்மையான அருளியல் வாழ்க்கை நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
இல்வாழ்க்கை என்றாலே, அகமிருந்து வாழும் வாழ்க்கைதான். அதனை விடுத்து, உலகியல் நெறிமுறைகளின்படி வாழும் வாழ்க்கை இல் வாழ்க்கை ஆகாது.
பிற கோவில்களில் இல்லாத ஒரு அற்புதத் திருக்கோவிலாக வடலூரில் சத்திய ஞான சபையினைக் கட்டி வைத்து, அன்பர்களுக்கு, அருள் ஆண்டவரின் உண்மையான நிலையினை ஜோதி சொரூபமாகக் காண்பித்து, 7 திரைகளை அமைத்து, திரை விளக்கம் கொடுத்துள்ளார்.
அவற்றை நீக்கிக் கொண்டால், உண்மைக் கடவுளை தரிசிக்கலாம் என்று சொல்லி வைத்தார்.
அதன் பின்னர், திரு அருட்பா பாடல்களை, திருபுவனம் ஆத்மநாதன் பாட, அப் பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்த பழம்பெரும் இசை இயக்குனர் திரு T.R. பாப்பா அவர்கள் மூலம் உருவான ஒரு ஆடியோ சி.டி இன்றைய விழாவினில், வெளியிடப்பட்டது. இந்த ஆடியோ சி.டி.யை தயாரித்த இசை இயக்குனர் T.R. பாப்பா அவர்கள் திடீரென மறைந்து விட்ட காரணத்தினால், அவர்களது ஆத்மா சாந்தி அடைவதற்காக, இவ் விழாவில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களும், மெளன அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்ன்ர், புதிதாக தயாரிக்கப்பட்ட திரு அருட்பா பாடல்கள் கொண்ட அந்த ஆடியோ சி.டி.யினை, இவ் விழாவில் மு. பன்னீர் செல்வம், தலைமையாசிரியர், விவேகாநந்தர் மேனிலைப் பள்ளி அவர்கள் வெளியிட, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை Ph.D. செய்து வரும் மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்த செல்வி. மலர் என்பவர் பெற்றுக் கொண்டார்.
அங்கு வந்திருந்த அன்பர்களுக்கு, திரு அருட்பா ஆடியோ சி.டி வேண்டுமாயின், மதுரை நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க். பெளன்டேஷன் மூலம் பெற்றுக் கொள்ளும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சோழவந்தானுக்குப் பல சிறப்புக்கள் உள்ளன. இங்கு ஜெனகை மாரியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் இது மிகவும் பிரபலமாக விளங்குகின்றது. அடுத்து, ஜெனகை நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. ஜனகாபுரியை ஆண்டுவந்த தசரதச் சக்ரவர்த்தி, குழந்தை வரம் வேண்டி முன்னொரு காலத்தில், இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கிச் சென்றதாக, சொல்கின்றனர்.
மகவு பிறந்த பின்னர், தசரதச் சக்ரவர்த்தி, ராமநாதபுரத்தில் உள்ள திருப்புல்லாணி என்ற க்ஷேத்திரத்திற்கும் பின்னர், ராம பிரான், திருவாடானை வட்டத்தில் உள்ள உப்பூர் என்ற க்ஷேத்திரத்திற்கும் வந்து சென்றதாக ஐதீகம் உள்ளது.
உப்பூரில் வெயிலுகந்த விநாயகப் பெருமான் ஆலயம் உள்ளது. “ராமர் வந்து தரிசித்துச் சென்ற வெயிலுகந்த விநாயகப் பெருமான்” ஆலயம் அங்கு மிகவும் பிரசித்தமாக, இன்றளவும். விளங்குகின்றது.
அடுத்த படியாக, சோழவந்தான் கிராமத்திற்கு, சோழன் உகந்தான் என்ற பெயரும் சொல்லப்படுகின்றது. பாண்டிய மன்னர்கள் ஆண்டுவந்த சிறப்பு மிக்க இந்தப் பகுதியில், சோழ நாட்டு அரசனும் உவந்து இங்கு வந்து சென்றதால், சோழன் உகந்தான் எனச் சொல்லப்படுகின்றது.
இந்த ஊருக்கு வெகு அருகாமையில் சுமார் 4 கி.மீ தூரத்தில் திருவேடகம் என்ற ஊர் அமைந்துள்ளது. திருநாவுக்கரசருக்கும் சமண மத துறவிகளுக்கும் ஏற்பட்ட சமய மதப் போரில் திருநாவுக்கரசரால் இயற்றப்பட்ட பாக்கள் அடங்கிய ஏடுகள் வைகை ஆற்றில் விடப்பட்டு, இறைவனின் பெருங்கருணையால், ஆற்றினையே எதிர்கொண்டு வந்து, சமண மதத் துறவிகளைத் தோல்வி அடையச் செய்தது இங்குதான்.
எனவே அந்த வகையால், இந்த திரு + ஏடு + அகம் என்னும் திருவேடகம் பண்டைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஒரு ஊராகும். இங்கு திருவேடக நாதர் ஆலயம் உள்ளது. அவ்வாலயமும் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.
அதனை அடுத்து இந்த ஊரில் விவேகானந்தர் கல்லூரி உள்ளது.
இறைமொழியான தமிழுக்கும் இந்த சோழவந்தான் கிராமத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
இங்கே அவதரித்த “அரசன் சண்முகனார்” என்ற புலவர் தமிழிலே மிகுந்த பாண்டியத்தியம் கொண்டவராக விளங்கியுள்ளார். மதுரையில் உள்ள பாரதியார் உயர்நிலைப் பள்ளியில் அவர், தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
ஒருமுறை அப் பள்ளியில், ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவமும் தமிழுக்கு சற்றே குறைத்தும் நேரம் ஒதுக்கியதை ஆட்சேபித்து, ஏன் இந்த பார பட்சம் என்று இவர் கேட்க, “தமிழ்தானே” என்ற பதில் வரப்பெற்றதால், இது, தமிழுக்கு ஏற்பட்ட களங்கம் என்ற வகையில், தாம் வகித்து வந்த தமிழாசிரியர் பணியையே உடனே, இவர் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் கிடைத்தன.
அவரை அடுத்து, அவர் பார்த்த பணியினை, மகாகவி பாரதியார் பார்த்ததாகவும், அரசன் சண்முகனார் பணியாற்றிய இடமாயிற்றே என்று மகாகவி பாரதியார், முதலில் அங்கு பணியிற் சேர, மனக் கிலேசமுற்றதாகவும் சொல்லப்படுகின்றது. அவரும், வந்து அரசன் சண்முகனார் வாழ்ந்த சோழவந்தான் கிராமத்திற்கு அவரது இல்லத்திற்கே வந்து சென்றதாகச் சொல்லப்படுகின்றது.
அரசன் சண்முகனார் – (1) மாலை மாற்றும் மாலை, (2) ஏக பாத நூற்றந்தாதி (3) செடில் கும்மி, (4) சிதம்பர விநாயகர் மணிமாலை போன்ற பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.
திருக்குறள் முதற்குறள் விருத்தியுரை வரைந்த பெருமை அரசன் சண்முகனாருக்கு உண்டு. தனித்தமிழ் இயக்கத்தினை இவர் துவக்கி வைத்துள்ளார்.
பாண்டித் துரைத்தேவர் 4ஆம் தமிழ்ச் சங்கத்தில் தலைமைச் சங்கத்து நக்கீரன் என்ற பட்டம் வழங்கப்பட்டவராக இவர் விளங்கியுள்ளார்.
இவ்வளவு ஏன் ? தொல்காப்பியப் பாயிரத்தில் பிழை கண்டுபிடித்து, அவர், பாயிர விருத்தி இயற்றியதாகச் சொல்லப்படுகின்றது.
இவரது சிலை, சோழவந்தான் நகரில், தெற்குத் தெருவில் உள்ளது. இதன் பரிபாலகர்களாக, வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் முக்கிய அங்கத்தினர்கள் உள்ளனர்.
இந்த ஊருக்கு அருகாமையில் அமைந்துள்ள கிண்ணிமடத்தில், சுவாமி சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
அதேபோல் 5 கி.மீ தூரத்தில் உள்ள சித்தாலங்குடி என்ற கிராமத்தில், குழந்தையானந்த சுவாமிகளின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது.
இத்தகைய பலவகையிலும் பெருமை பெற்றதாக சோழவந்தான் ஊர் அமைந்துள்ளது.
இங்கு, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினை, கீழ்க்கண்ட நபர்கள், திறம்பட நடத்தி, இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் சுத்த சன்மார்க்கத்தின் சிறப்பை எடுத்தியம்பி வருகின்றனர்.
திரு கே.எஸ். மாரியப்பன். தலைவர்.
திரு செல்லப்பா, உபதலைவர்.
திரு ராஜமாணிக்கம், செயலாளர், அரசு கள்ளர் மேனிலைப்பள்ளி, ஐயப்ப நாயக்கன் பட்டி.
திரு எம். கிருஷ்ணமூர்த்தி, (முன்னாள் வி.ஏ.ஓ), பொருளாளர்.
திரு மு. பன்னீர் செல்வம், தலைமையாசிரியர், விவேகாநந்தர் மேனிலைப்பள்ளி, திருவேடகம்.
திரு எம். ராமலிங்கம், தினசரி தருமச்சாலையைத் திறம்பட நிர்வகித்து வருபவர். கஞ்சியினைக் காய்ச்சி, இயலாதோர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று, பசியாற்றும் பணியினை, இவர் செய்து வருகிறார்.
திரு ஜெயகுமார்,
திரு கிருஷ்ணகுமார்.
திரு மகா முனி.
திரு ஜெயராமன் அய்யா.
திரு சச்சிதானந்தம், ஞான சபை பொறுப்பாளர்.
நிகழ்ச்சிகள் எல்லாம் முடிவடைந்த பின்னர், ஜோதி வழிபாடு நடை பெற்றது. திரு மு. பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர், விவேகாநந்தர் மேல் நிலைப் பள்ளி,. திருவேடகம் அவர்கள் நன்றி கூறியபின்னர், கூட்டம் மதியம் 12.30 மணி அளவில் நிறைவடைந்தது.
அதன் பின்னர், ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றும் பணி நடை பெற்றது. இந்த அவதார விழாவில் சுமார் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.
Write a comment