DAEIOU - தயவு
27.9.2008 மதுரையில் அருள் ட்ரஸ்ட் நூல் வெளியீட்டு விழாக் கூட்டம்

மதுரையில் அருள் ட்ரஸ்ட் நூல் வெளியீட்டு விழாக் கூட்டம் நாள் 27.9.2008
அருள் ட்ரஸ்ட்டின் நூல் வெளியீட்டு விழாக் கூட்டம், மதுரை பாரதியார் உயர் நிலைப் பள்ளி அருகே அமைந்துள்ள, மதுரை ஹோட்டல் ட்யூக்-கில் 27.9.2008 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணி அளவில் நடைபெற்றது.
6.00 மணி முதல் 6.30 மணி வரை திரு அருட்பா பாடல்களை மதுரையைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் திருமதி புவனேஸ்வரி, செல்வி சித்ரா மற்றும் திருமதி மீனாம்பாள் ஆகியோரும், அரியலூர் திரு செங்கான் அவர்களும் மனமுருகப் பாடினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் திரு அருட்பா பாடல்களைக் கேட்டு, ஏனைய அருளாளர்களின் பாடல்களுக்கும் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் பாடல்களுக்கும் உள்ள வேற்றுமையை நன்கு தெரிந்து, அதன் மேன்மையை வெகுவாக உணர்ந்தனர்.
திரு சுப்புராஜ் அவர்கள், வழக்கறிஞர், உயர்நீதி மன்றக் கிளை, மதுரை அவர்கள் இந் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
அதன் பின்னர், சன்மார்க்க அறிஞர் பெருமக்களும், ஏனைய மூத்த அன்பர்களும், தமது உரையினைத் தொடர்ந்தனர்.
திரு செங்கான், சன்மார்க்க அன்பர், அரியலூர்.
இவர் தமது உரையில் கீழ்க்கண்ட விபரங்களைத் தெரிவித்தார்.
வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற உண்மை நெறியினை இன்னும் யாரும் புரிந்து கொள்ளவில்லையே. அதனைத் தெரிவிப்பதற்கு ஏற்ற தருணம் இதுவே. எவ்வாறு திருவள்ளுவர், அடியில் திருக்குறளை இயற்றி, உலகுக்கு அருள் நெறித் தத்துவங்களைக் கூறிச் சென்றாரோ, அதேபோல், இன்று வெளியிடப்படும் “வள்ளலாரின் தனிநெறி சாதனம் எது?” எனும் நூலில், வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, 32 பக்கங்களில் இதனின் ஆசிரியர், சன்மார்க்க உலகிற்கு அளித்துள்ளார். இந்த நூலின் பிரதிகளை எல்லா அன்பர்களும் பெற்று, தமது நண்பர்களுக்கும், சன்மார்க்க அன்பர்களுக்கும் அளிக்க வேண்டும். இதில் உள்ள சிறப்புக்களை அவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை அவர்களுக்குக்கொடுக்க வேண்டும்.
வள்ளல் பெருமான் முதலில் வாழ்ந்த நிலையிலிருந்து, அருள் அனுபவம் அடைந்து வாழ்ந்த கடைசி 2 ½ வருடங்கள், ஞான நிலையில் வாழ்ந்துள்ளார். இந்நூல் வெளியிடுவதற்கு, மதுரை ஞான தீபம் ஆசிரியர் திரு முரளிதரன் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளார். சமயம், மதம், மாச்சரியம் ஆகியவை எல்லாம் ஒரு தடைக்கற்கள் ஆகும் இவற்றிலிருந்து மாறுபட்டு வாழ்வது தான் சன்மார்க்க வாழ்வு ஆகும். அதற்கு சாதனம் கருணை தயவு அருள் ஆகும். வள்ளற் பெருமான் தான் வாழ்ந்த காலத்தில் 4 திருமுறைகள் மட்டுமே வெளியிட்டார்.
ஆறாந் திருமுறை அவரது காலத்தில் வெளியிடப்படவில்லை. ஞான நிலை வந்த பின் வெளியிடப்பட்டதுதான் ஆறாந் திருமுறை ஆகும். இவ்விதம் ஒரு அருமையான நிகழ்ச்சியினை அமைத்து, வள்ளற் பெருமான் அடைந்த நிலைகளை ஒரு சிறு புத்தக வடிவில் வடித்தெடுத்துக் கொடுத்த வழக்கறிஞர் திரு இளங்கோ என்ற அன்பருக்கு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு ராமன் அவர்கள், சன்மார்க்க சங்க ஆராய்ச்சி நிலைய நிறுவனர், மதுரை.
கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பாக ஆராய்ச்சி நிலையத்தினை நிறுவி கடவுளின் உண்மைத்தன்மை, பிறப்பு, இறப்பு ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். நான் தெரிந்து கொண்ட உண்மையை அனைவருக்கும் உணர்த்தி வருகின்றேன். கடந்த 15 ஆண்டுகளாக சன்மார்க்கம் குறித்த ஆராய்ச்சியினையும் மேற்கொண்டுள்ளேன். சன்மார்க்கம் என்பதை பதம் பிரித்தால் சத் பரம்பொருள், மார்க்கம் பிரபஞ்சம் என்பதுவே ஆகும். வள்ளற் பெருமான் ஒருமை நிலை அடைய வேண்டுமென்றார். அதற்குப் பெயர் ஏகம் சத். தத் என்பதற்குப் பொருள் கால தேச வர்த்தமானம் கடந்தது என்பது பொருள்.
இகநிலைப் பொருளாய் என்றும், தானொரு தானாய் ,,, ,, என்றும் வள்ளற் பெருமான் அருட்பெருஞ்ஜோதி அகவலில் உணர்த்தினார். இறை பரம்பொருளைத் தவிர வேறு ஏதுமே இல்லை. There is nothing other than that என்பதுவே இதன் பொருள் ஆகும். கோடி மக்களைக் கொன்றது இதுவரை தோன்றிய சமயங்கள் ஆகும். வள்ளற் பெருமானோ தமது இளம் வயதிலேயே சுத்த சன்மார்க்கத் தத்துவங்களை அனைவரும் அறியும் வண்ணம் தெரிவித்துச் சென்றுள்ளார். அவருக்கு எனது நன்றி.
திரு சரவணக்குமார், அருள் ட்ரஸ்டின் சன்மார்க்க சட்ட ஆலோசகர்,
கடந்த காலம் போல இல்லாமல், வள்ளற் பெருமான் வகுத்த வழியில், தற்போதுதான் வழிபாட்டுமுறைகள் மாறி வருகின்றன. எனக்கு திரு அருட்பாவினை கொடுத்து, இதில் வாழ்க்கைத் தத்துவம் அடங்கியுள்ளது. அதன் பின்னர், வடலூரில் வசிக்கும் தொண்டர்குல பெருமாள் அய்யா அவர்கள் வந்தார், வடலூர் பிரச்னை குறித்து தெரிவித்தார். தெய்வ நிலையத்தில் வந்தனை வழிபாடுகள் எல்லாம் தவறான முறையில் நடக்கின்றது என்றார். நீங்கள் தைப்பூச நாளின்போது வடலூர் வாருங்கள் என்றார்.
அவரது கோரிக்கையின்படி, வடலூர் சென்றபோது, சத்திய ஞான சபையில் நுழையும் போதே ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது. புலால் உண்போர் உள்ளே புகுதல் கூடாது என்பதுவே அந்த அறிவிப்பு. அதனைப் படித்ததுமே எனக்கு ஒரு புத்துணர்வு பிறந்தது.
அங்கே வகுத்து வைத்திருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவ விளக்கமாகும். மதுரையில் வசிக்கும் உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு இளங்கோ மற்றும் வடலூர் தொண்டர்குல பெருமாள் அய்யா ஆகிய இருவரும்தான், வடலூர் சத்திய ஞான சபையில் கடந்த காலத்தில் இருந்த வழக்கங்களை மாற்றுவதற்கு முக்கியமான காரணமானவர்கள் ஆகும்.
திரு இளங்கோ அவர்கள், இன்று வெளியிடப்படும் நூலை வெளியிடுமுன், பைபிள், குர்ரான், பகவத் கீதை முதலானவற்றைப் படிக்க வேண்டும் எனக் கூறி, என்னிடம் அந்த நூல்களை வாங்கி வரச் சொன்னார். அவற்றையெல்லாம் படித்து முடித்து விட்டு, இந் நூல்களில் எல்லாம், எந்த இடத்திலும், புலால் உண்ண வேண்டும் எனச் சொல்லவில்லையே என்றார். வள்ளற்பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினை வாழ்வில் கடைப்பிடித்தால், இறவா நிலையினை அடையலாம். வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியே அனைத்திலும் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார்.
மத மாச்சரியங்களுக்கு அப்பாற் சென்ற வள்ளலாரின் திரு உருவப்படத்தை, மத்திய அரசின் தபால் தந்தித் துறை தபால் தலை வெளியிட்ட போது, அவரது திருவுருவத்தில், நெற்றியில், திரு நீறு அணிவித்திருந்தது. ஏன் இதுபோன்ற தவறான படத்தை வெளியிட்டுள்ளீர்கள் என்று முறையீடு செய்ததும். அஞலகத் துறை அப் படம் தவறு என்றால் முறையான படத்தினை வெளியிடுகின்றோம் என உறுதி கூறியுள்ளது. வள்ளற் பெருமான் வாழ்ந்த காலத்தில், அவரது திருவுருவத்தை, புகைப்படம் எடுக்க முயன்ற போது, அவரது உருவம் புகைப்படக் கருவியில் பதிவாகவில்லை.
இன்று திரு இளங்கோ அவர்களால் எழுதி வெளியிடப்படும் இச் சிறு நூலில் 32 பக்கங்களில், வாழ்வின் தத்துவங்கள் அனைத்தும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. இதனை அனைவரும் படியுங்கள். படித்துவிட்டு, உங்களது கருத்துக்களைச் சொல்லுங்கள்.
அதன் பின்னர், வழக்கறிஞர் திரு இளங்கோ அவர்கள் எழுதிய, “வள்ளலாரின் தனி நெறி சாதனம் எது ?” என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இச் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் இந்த புத்தகம் வழங்கப்பட்டது.
திரு சுப்பிரமணியம் அவர்கள், குறிஞ்சிப்பாடி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும், அவை அனைத்தும் மரணமில்லாப் பெருவாழ்வினை அடையவும், வள்ளற் பெருமான் வழி வகுத்துச் சென்றுள்ளார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், எல்லா உயிர்களிலும், கலந்திருக்கின்றார். வன்புடையார், ஆண்டவரின் அருளினைப் பெற இயலாது. கருணை உடையவர்களால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். வள்லலார் சொல்லும் கருணை என்பதுதான் என்னா ? கிறிஸ்துவ மதத்தினரும், கருணை எனும் கொள்கையினைப் பரப்பி வருகின்றனர். ஆனால் வள்ளற் பெருமான் சொல்வது, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துக என்றார். அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே என்றார். அவரது சொரூபத் திருமேனியினைக் காண வேண்டும். அப்போதுதான் இறைவனின் கருணை, நம்மை ஆட்கொள்ளும். சிறிய வெளிச்சத்தைக் கொண்டு, பெரிய வெளிச்சத்தை பெற முடியும். இதற்கு கருணை நன்முயற்சி வேண்டும். பெருமானார் வகுத்த ஒழுக்கங்களைத் தவறாமல் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.` 1 ஜாம நேரம் மனத்தில் இக விசாரமன்னியில், பரவிசாரிப்பும் அத்துடன் மன நெகிழ்ச்சியுடன் வேண்டிக் கொண்டால், ஆண்டவர் நமக்குத் தெரிவிப்பதைத் தெரிவிப்பார் என வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற வழியில் நாமும் நடந்து, அந் நந் நிலையினை அடைய வேண்டும்.
திரு தொண்டர்குல பெருமாள், வடலூர்.
அருள் அசைவினாலேதான் இன்றைய இச் செயல் நடைபெறுகின்றது. இறைவானார், எத்தனையோ திருவிளையாடல்களை, மதுரை நிகழ்த்தியுள்ளார். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை நகரில், சுத்த சன்மார்க்க சத்திய நெறியினை, இந்த அருள் அறக்கட்டளை, துவக்கியுள்ளது, மிகுந்த சிறப்பு வாய்ந்தது ஆகும். வள்ளற் பெருமானின் அருளைப் பெற வேண்டுமாயின், திருவருளை, கருணை நன் முயற்சியினால் பெறவேண்டும். அருள் ஏக தேசத்தினால், அணுத்துவத் துணையால் இதனை வள்ளற் பெருமான் நடை முறைப் படுத்துகிறார்.
இச் சன்மார்க்க நெறியில் வள்ளற் பெருமமான சொல்லிச் சென்ற இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம் முதலியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். நமக்கும் மனத்தூய்மை, அறிவினில் ஒரு தெளிவு எப்போது வேண்டும். பொழிவதற்கு, ஆண்டவரின் பெருங்கருணை, எப்போதும் தயாராக உள்ளது. தலைவனுடைய தயவினைப் பெற வேண்டும். மண் மயக்கம், பொன்மயக்கம், பெண் மயக்கம் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நான், பல வருடங்களுக்கு முன்னர், மதுரையில், 6 முறை தொடர்ந்து உலகுயிர்கள் மாநாடு நடத்தினேன். புறா, மீன், ஒட்டகம், பசு, முதல் ஆறறிவினங்களும் மாசி வீதிகளிலே அப்போது வலம் வரச் செய்தேன்.
கிராமத்தில் வசித்த நான். சுத்த சன்மார்க்க நெறி பயின்ற பின்னர், 12 ஆண்டுகள் கிராமங்கள் தோறும் பட்டி தொட்டிகள் எங்கும் சென்று, சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பினேன். பெருமானை உள்ளே தேடினேன். அவரின் அருளினைச் சிந்தித்தேன். அதற்கு ராமநாதபுரத்தினைச் சேர்ந்த திரு ஜோதிமுருகன் அய்யா உடன் இருந்தார். அவரது அண்ணன் திரு அய்யாத்துரையையும் நான் அறிவேன். அடியேன் கருவியானேன்.
உலகமெலாம் உதிக்கின்ற .. என்ற திரு அருட்பா பாடலில் வள்ளற் பெருமானார் சொன்னபடி, தன்னையறியாதவரை, ஆண்டவரை யாரும் காண இயலாது. பகுத்தறிவால், காள இயலாது. வள்ளலார் தந்தது, ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகும். இதுவரை எந்த அருளாளர்களும், இது போன்று சொன்னது கிடையாது. ஆண்டவரின் அருளை வேண்டி, விசாரத்தில் இருக்க வேண்டும்.
வள்ளற் பெருமான், குழந்தையாக 5 மாதங்கள் நிறைவடைந்தபோதே, சிதம்பரத்தில் அப்பைய தீட்சிதர், ஜோதி காண்பிக்கும்போது, அனைத்தையும் அறிந்து, சிரிக்கின்றார். சென்னை முத்தியாலுப் பேட்டையில் “உலகெலாம்”: என்பதற்கு மெய்ம் மொழிப் பொருள் விளக்கம் தந்தார். வள்ளற் பெருமான், தனது 11வது வயதிலேயே வாழ்வின் சிறந்த தத்துவங்களை உணர்த்தினார். மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று சிறந்த நெறியினை வகுத்தார். சென்னையில் வசித்து வந்த அவர், 35 ஆண்டுகளுக்குப் பின் தென் திசை நோக்கி வந்தார்.
49 வயதில், சத்திய ஞான சபையினைக் கட்டி, திரை விளக்கம் தந்தார். 1867ல் சாலை சகாப்தம் கண்டார். 2 ½ ஆண்டுகளில் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை விளக்கம் செய்தார். அவர் ஆறாந் திருமுறையினை வெளியிட வேண்டாம் என்று கூறினார்.
தன்னைப் பார்த்தால் என்னைப்பார்க்கலாம் எனச் சொல்லிச் சென்றுள்ளார். நானும் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று கன்னியாகுமரி வரையிலும் சென்று வந்துள்ளேன். வள்ளற் பெருமானின் உண்மை நெறியினை, இன்றளவும் யாரும் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. அதனை விடுத்து, அனைவரும் சுத்த சன்மார்க்க நெறி நின்று அதனை வாழ்க்கையில் பயின்று, வள்ளற் பெருமானின் திருவடியினைப் பற்றி நின்று அருளினைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு, அவர், வள்ளற் பெருமானாரின் கருத்துக்களை தெளிவாக விளக்கினார்.
வள்ளற் பெருமானின் கொள்கைகளில் தீவிர நாட்டம் கொண்ட இவரிடம், பல சன்மார்க்க அன்பர்கள், தமது ஐயப்பாடுகளைக் கேட்டுத் தெளிவு கொண்டனர்.
திரு வெள்ளைச்சாமி, மூத்த வழக்கறிஞர் அவர்கள், மதுரை.
சிந்தனை ஓசை எழுத்து, வார்த்தை வாக்கியம் கருத்து அனைத்தையும் செலுத்தி, திரு இளங்கோ அவர்கள் புதிய நூலினை வடித்துள்ளார் Secular State இந்தியாவின் பிரஜை என வள்ளலாரை நினைத்து இதனை வடிவமைத்துள்ளார். . தமிழ்நாடு ஒரு Secular State என்றால், வள்ளற் பெருமான், Secular Saint of a secular State என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந் நூலின் ஆசிரியர், திரு இளங்கோ இதனை அமைத்துள்ளார். வள்ளற் பெருமானாரின் உண்மையான வாரிசு என்று சொல்ல வேண்டுமானால், பெரியார் ஈ.வே.ரா அவர்களைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இருவரின் கருத்துக்களும் ஒத்து இருக்கின்றன.
வள்ளற் பெருமான், சமய மத, நெறிகளையெல்லாம் சாடினார் “கோபமும் தாபமும்” என்ற வள்ளற் பெருமானின் திரு அருட்பா நினைவு கூறத்தக்கது. “தான் தானே சென்றன” “தத்துவம் எல்லாம் என்வசம் நின்றன” என்று அவர் முடிக்கின்றார். பூரணமாக லயித்துப் போய்விட்டேன் என்கின்றார். அதனால் ஏற்பட்ட நிலை பொய்படாக் காதல் ஆகும். அதன் உண்மைப் பொருள் என்னவெனில், ஜீவ காருண்யம்.
பகவான் ராமகிருஷ்ன பரமஹம்சர் விவேகானந்தரைக் கண்ட பின்னர், அமமதியாகச் சொல்கிறார். நான் எல்லாத்தையும் இழந்து விட்ட பக்கியாக இருக்கின்றேன். முழுமையாக விவேகானந்தரிடம் கரைத்து விட்டார். எதுவுமில்லாத நிலையில், பரம்பொருளில் லயித்து விட்டேன்.
அவர், மரணப் படுக்கையில் இருக்கும்போது, அவரது சீடர்கள், சாப்பிட அழைத்தனர். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், நான் காளியிடம் அனுமதி கேட்டேன். இத்தனை நாட்கள் வாயினால் சாப்பிட்டது போதாதா ? என காளி கேட்டாள். அதன் பின்னர், அவரது நிலை, சீடர்களுக்குப் புரிந்தது.
குர்ரானில், முகமது நபி அவர்கள், சம்பாதிக்கின்ற ஒவ்வொரு பைசாவும், உனக்கு மட்டும் சொந்தமல்ல. உன்னைச் சார்ந்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்டது ஆகும். இதில், அவருடைய “ஒருமை” நிலை விளங்கும். அனைத்தையும் விட்டுவிட்டால் மனிதன் மகான் ஆகின்றான். விவிலியத்தில் ஒரு வசனம் உண்டு. பரலோக சாம்ராஜ்யத்தில் இருக்கும் பிதாவே பிதாவே.. என் தந்தையின் சித்தத்தை யார் நிறைவேற்றுகின்றானோ அவனே என்னை அடையக் கடவன். அது என்ன வெனில்,. தாகத்திற்கு தண்ணீராயினும், பசிகொண்டோருக்கு உணவாகிலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, தங்க இடம் கொடுத்தவன் யாரோ அவனே உண்மையான தகுதியை அடைந்தவன் என உணர்த்தப்பட்டுள்ளது.
சீவக சிந்தாமணியிலும் கூட தாகத்தைத் தீர்ப்பதுவும் இது போன்று பசிப் பிணியைப் போக்குவதும், புண்ணிய காரியங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எல்லா மதங்களிலும், அடிப்படையாக இந்த ஜீவ காருண்யமே வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு மதத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றுதான்.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஜீவகாருண்யச் செயல் உருவாக வேண்டும். தாயினுடைய செயல் ஒவ்வொன்றிலிருந்தும் இது பரவி, குடும்பத்தாருக்கெல்லாம் பரவ வேண்டும்.
திரு எஸ். ஆண்டியப்பன், Professor and Head of Ramalinga Philosophy, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை.
வள்ளற் பெருமானை இன்னும் உலகம் முழுமையாக அறியவில்லை. அவரது நெறிகளை, இன்றைய வாழ்க்கை முறையை வைத்து மதிப்பிட முடியாது. அவர்ந்த வாழ்ந்தது 19ஆம் நூற்றாண்டாகும். அவர் இருள் கழிய எழுந்த ஞாயிறு ஆவார். அவர் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலினை வெளியிட்டுள்ளார். “அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்” என்ற திரு அருட்பா பாடல் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இறைவன், தனிப் பெருங்கருணையராக உள்ளார் என்றார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் என்றார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என ஓரறிவுத் தாவரத்திடம் கூட கருணையை வள்ளற் பெருமானார் செலுத்தினார்.
தமது வழக்கறிஞர் தொழிலுடன், சிறப்பு கவனம் செலுத்தி, திரு இளங்கோ அவர்கள், “வள்லலாரின் தனி நெறி சாதனம் எது” என்ற நூலினை வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி. கருணை ஒன்றுதான் மனிதகுலம் எல்லாம் மேலேறும் வழியாகும். வள்ளலார் அஹிம்சைப் புரசியினைச் செய்தவர். அவர் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்க நெறி, தயவு, ஜீவ காருண்ய ஒழுக்கம் எல்லா மதத்தினராலும் எற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
இந் நூலினை வெளியிட்ட வ்ழக்கறிஞர் திரு இளங்கோ அவ்ர்களுக்கும் அதற்கு உதவிய "ஞான தீபம்" பத்திரிக்கை ஆசிரியர் திரு முரளிதரனுக்கும் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் தமது நன்றியினைத் தெரிவித்தனர். அவ்விருவரும் கெளரவிக்கப்பட்டனர்.
பின்னர் - விண்னப்பம் சொல்லிய பின்னர், ஜோதி வழிபாடு நடைபெற்றது.
அதன் பின்னர், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் திரு டி.ஆர். பாப்பா அவர்கள் இசை அமைத்து, திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் பாடிய 25 திரு அருட்பாப் பாடல்கள் கொண்ட இசைப் பேழை (audio C.D) வெளியீடு செய்யப் பட்டது. அதன் மேன்மையினை, நாராயணபுரம் தயவு அன்பர் வந்திருந்தோர் அனைவருக்கும் தெரிவித்தார்.
அதன் பின்னர், நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.
இந் நிகழ்ச்சியில் சுமார் 65 நபர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலானவர்கள், தத்தமது குடும்பத்தினர் அனைவருடனும் கலந்து கொண்டது, ஒரு சிறப்பம்சமாகும்.
வந்திருந்த 65 நபர்களுக்கும்,. நிகழ்ச்சிமுடிவுற்ற பின்னர்,. அன்ன வினியோகம் நடைபெற்றது.