DAEIOU - தயவு
மதுரை அருள் ட்ரஸ்ட் 13.9.2008 கூட்ட நடவடிக்கை விபரம்

மதுரை அருள் ட்ரஸ்ட் மாதாந்திரக் கூட்டம் நாள் 13.9.2008 (சனிக்கிழமை.)
மதுரை அருள் ட்ரஸ்டின் மாதாந்திரக் கூட்டம் 13.9.2008 (சனிக்கிழமை) அன்று, மதுரை சின்னக் கடைத் தெருவில் உள்ள மாரி ஆசாரி தெருவில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.
வரவிருக்கும் நாட்களில், பல இடங்களிலும், நடைபெறவிருக்கும் சன்மார்க்க கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து, வந்திருந்த அன்பர்களுக்கு, ட்ரஸ்டின் தலைவர் திரு முரளீதரன் தெரிவித்தார். அவையாவன -
5.10.2008 அன்று சோழவந்தானில் வள்ளலார் பிறந்த நாள் விழா.
12.10.2008 அன்று நாகர்கோவிலில் வள்ளலாரின் 7வது ஞான எழுச்சி மாநாடு.
1.10.2008 முதல் 5.10.2008 மலேசியா நாட்டில் கெமாயான் என்ற இடத்தில் உள்ள வள்ளலார் சங்கத்தில் 5 நாட்கள் வள்ளலார் வருவிக்க உற்ற திருவிழா நடைபெறுகிறது.
விருப்பமுள்ள அன்பர்கள் மேற்காணும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
திரு முரளீதரன் ஆற்றிய சொற்பொழிவு -
ஏனைய அருளாளர்கள் அடைந்த நிலைக்கும், வள்ளற் பெருமான் அடைந்த நிலைக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. வள்ளற் பெருமான் அடைந்தது மிகச் சிறப்பான நிலையாகும். பிற அருளாளர்கள் ஆன்மீகக் கருத்துக்களைச் சொல்லித்தான் சென்றார்கள்.
ஆனால், வள்ளலாரோ, தாமே சங்கம், சாலை, சபை என ஏற்படுத்தினார். அவற்றின் செயல்பாடுகளை, இந்த மனித குலம் நன்கு அறிய வேண்டும் என்ற விதத்தில், இவற்றை ஏற்படுத்தினார். சமரசத்தினைப் போதித்தார். முதலில் எல்லா தெய்வங்களையும் வள்ளற் பெருமானும் ஆரம்ப காலத்தில் வழிபாடு செய்து வந்தார்.
இறுதியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் துதி செய்து, சுத்த சன்மார்க்க நெறியினைப் போதித்து, ஆறாந்திருமுறைப் பாடல்கள் எல்லாவற்றிலுமே, அவரைப் பற்றியே பாடினார்.
உபதேசப்பகுதியில், மனித குலத்தின்மீது உள்ள கருணையினால், இனியும் தாழ்ந்திருத்திருக்காதீர்கள். இந்த மனிதப் பிறவி போய்விட்டால், அடுத்ததாக மனிதப் பிறவி கிடைக்கும் என்பது உறுதியில்லை என்று சொல்லி, எல்லா அருளாளர்களுக்கெல்லாம் மேலான உயர்ந்த கருத்துக்களை மனித குலம் மேம்பாடடைய வேண்டும் என்ற தமது உளப் பாங்கினால் சொல்லிச் சென்றுள்ளார்.
சுத்த சன்மார்க்க நெறியின் மாண்பினை, மக்கள் மத்தியில் பரப்புங்கள். சத் விசாரம் செய்து இறை உண்மையினை கால முள்ளபோதே அறிந்து, பரோபகாரச் செயலினை அனைவரும், தமது வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும். அப்படியே இருந்து வந்தால், முதலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், கண்டமாக தெரிவிப்பார். பின்னர், அகண்டமாக தெரிவிப்பார்.
கரிக்கட்டை ஞாயம் (விறகு), கற்பூர ஞாயம், வாழைத்தண்டு ஞாயம் என்றெல்லாம் விளக்கி, சன்மார்க்க சாதகர்கள் அடைய வேண்டிய நிலையினைத் தெரிவித்துச் சென்றுள்ளார்.
இறைவனின் அருள் எப்போதும் வழங்கப்பட்டுக் கொண்டே உள்ளது. அவர் சொல்லிச் சென்ற நெறிக்குத் திரும்புவதற்கு, நாம்தான் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
தொலைக் காட்சிப் பெட்டியை எடுத்துக் கொண்டால், எல்லா டி.வி. ஒளி பரப்பு அலை வரிசைகளும், நாம் வாழும் இடம் எங்கும் நிறைந்திருந்தாலும்,, அதற்கான கனெக்ஷனை நாம் பெற்றுள்ள இடத்தில் மட்டும் ஒளிபரப்பு தெரிகிறது.
சுத்த சன்மார்க்க நெறி ஒழுகுவோர், முதற் கட்டமாக, கொலை, புலை தவிர்க்க வேண்டும். வள்ளலார் அடைந்த நிலையினை அடைவதற்கு, தியானம், பக்தி, பாடுதல், யோகம் மட்டும் போதாது. அதேபோல பரோபகாரச் செயல் ஒன்று மட்டுமே செய்து கொண்டிருத்தலும் கூடாது.
வள்ளல் பெருமான் காலத்தில், இந்தியா முழுவதும், வேதாந்தக் கருத்துக்கள் மட்டுமே நன்கு பரவியிருந்தன. இன்றும் பார்த்தோமானால், அதே நிலைதான் நிலவி வருகிறது. வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க கருத்துக்கள் அனைவருக்கும் தெரியாது.
இராமாயணம், மகாபாரதம், இதேபோன்று, பண்டைய காவியங்கள், நெறிகள் எல்லாம் இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் தெரிந்துள்ளது. அதைக் காட்டிலும் உன்னதமான கருத்துக்கள் சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே உள்ளன. அதனைக் கடைப்பிடிப்பதற்கு, அதில் நாம் அனுபவ பூர்வமாகப் பழகி வரல் வேண்டும் (with full involvement).
பயிற்சி, அனுபவம் முதலானவையின் மூலம்தான் நாம் அருளைப் பெற வேண்டும். அருள் அறக் கட்டளை அதற்கெனவே தான் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஏனைய சங்கங்களைப் போல் இல்லாமல், அருளினைப் பெறுவதற்கு மட்டுமே, உண்டான பயிற்சிகளை அனைவருக்கும் கற்பிப்பதற்கு, இந்த அருள் ட்ரஸ்ட் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. பல இடங்களில், உள்ள, சுத்த சன்மார்க்க சங்கங்கள் - குறித்த இலக்கை நோக்கிச் செல்வதை விடுத்து, விழா எடுப்பது, போன்ற பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.
வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள குட்லாடம்பட்டியில், மூலிகைப் பண்ணை ஏற்படுத்தப் பட்டுள்ளது. கிணறு வெட்டும் பணி தற்போது நடைபெறுகிறது. அந்த இடத்தில். பயிற்சி முகாம் செய்வதற்கு வாய்ப்பாக - உரிய விதத்தில், அதனை மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த மையம் முழுவதுமாக இயங்கத் தக்க வகையில் அன்பர்கள், பொருளாகவும், நிதியாகவும் கொடுத்து, இந்த அருட் பணியில் தம்மை ஆட்படுத்திக் கொள்ளலாம். குட்லாடம்பட்டி மையம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர், யார் வேண்டுமானாலும், அங்கு வந்து பயிற்சியில் ஈடுபடலாம்.
இந்த நெறிக்கு வருபவர்கள் முதலில் சைவ உணவினை உட்கொள்ளும் பழக்கத்திற்கு வரவேண்டும். அருட்பெருஞ்ஜோதி அகவலினை நாள் தோறும் தவறாமல் பாராயணம் செய்ய வேண்டும்.
வள்ளற் பெருமானின் வழி நின்று,. திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள், கடுமையான முயற்சி செய்து, வள்ளல் பெருமான் வகுத்த நெறி தவறாமல் தமது வாழ்க்கையினை நடத்தினார். நாம் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கை, அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள், ஒரு பாடமாக அமைந்துள்ளன.
தகுந்த ஆசாரியாரின் உதவியுடன், புருவ மத்தியில் உள்ள நெற்றிக் கண்ணை திறப்பித்துக் கொள்ளும்படி, வள்ளற் பெருமான் அருளிச் சென்றுள்ளார். அதனைக் கருணை நன்முயற்சியோடிருந்து, அனைவரும் திறந்து கொள்ளலாம். சுத்த சன்மார்க்க நெறியில், நமக்கு சற்குரு இறைவனே ஆகும்.
விருத்தாசலத்தில் குமாரதேவர் என்பவர் வாழ்ந்தார். சுத்த சாதகம் என்னும் நூலினை அவர் இயற்றியுள்ளார். அந்த ஸ்தலத்தில், அந்த நூல் கிடைக்கின்றது. அவர் ஒரு அம்பாள் உபாசகர். அம்பாளிடம் கேட்ட போது, 3 தேகங்களைக் குறித்து அவருக்கு செய்தி கிடைக்கிறது. ஆனால், அவரால் கூட, அந்த முத்தேக சித்தி நிலையினை அடைய முடியவில்லை.
நமக்கு நன் முயற்சிதான் வேண்டும். அதிகாலையில் எழ வேண்டும். உறங்குவது போலும் சாக்காடு எனவும், மரணமிலாப் பெருவாழ்வு குறித்தும், பன்னெடுங்காலத்திலேயே, திருக்குறளில், தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொல்லி உள்ளார். நாம் உறங்கும் போது, ஆன்மாவுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அப்போது மூடம் உண்டாகிறது.
எனவே, திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்க நெறியில், அனைத்து அன்பர்களும் பிறழாது தமது வாழ்க்கையினன நடத்தி வர வேண்டும்.
இத்துடன் அவரது சொற்பொழிவு நிறைவு பெற்றது.
அவரது சொற்பொழிவுக்குப் பின், “தயவு” விஜயராமன் கீழ்க்கண்டவாறு பேசினார்.
“தயவு” விஜயராமன், திருப்பரங்குன்றம்.
வள்ளலார் வகுத்த நெறியினைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள், அதிகாலையில் துயில் எழ வேண்டும். முதலில் சிரமமாகத் தோன்றும், இந்த துயில் எழல், பின்னர், அதிகாலையில் தாமாகவே எழும் ஒரு நிலையினை திருவருளினால் கூட்டி வைக்கும்.
புருவ மத்தியின் கண் நமது கவனத்தைச் செலுத்தி, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைத்து வழிபாடு செய்தல் வேண்டும். இதுவரை ஆன்ம அறிவு அடையும் வரை மட்டும்தான் ஞானிகள் சென்றனர். ஆனால், வள்ளல் பெருமான் - அருள் அறிவினை அடைந்து, அதை மனித குலம் எவ்வாறு பெறுவது என்பதையும் சொல்லிச் சென்றுள்ளார். இந்த நிலை, இதற்கு முன் எந்த ஞானியும் அடையாத நிலையாகும்.
இந் நிலையினை சாதகம் செய்து அடைய வேண்டுமாயின், திரு அருட்பாக்களையும், உபதேசப் பகுதிகளையும் உரை நடைப் பகுதிகளையும் ஆழ்ந்து பயில வேண்டும். இதற்கு உணவுப் பழக்கமும் அவசியம். சுத்த சத்துவ ஆகாரங்களையே குறிப்பிட்ட அளவின்படி ஏற்கப் பழகுதல் வேண்டும். அருந்தல் பொருந்தலாதி விஷயங்களை பெருமான் சொல்லிய அளவில் கடைப்பிடிக்க வேண்டும்.
திரு அருட்பாவில் “உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ” என்று பெருமான் பாடிச் சென்றதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அகத்தில் இறையுணர்வுடன் உலகியல் காரியப்பாடுகளைச் செய்து வரவேண்டும். அருள் வெளிதான் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ளது. எனவே அதனை அடைவது குறித்து சிந்தனை செய்து, செயல் ஆக்க வேண்டும்.
மூலிகைகளில், பெருமான் சொன்னபடி, கரிசலாங்கண்ணி, காலையில் அருந்த வேண்டும். பரம்பொருளிடம் மாறாத நம்பிக்கை வைக்க வேண்டும். எல்லாமே திருவருளின் ஆற்றலால் தான் நம்மைச் சுற்றி நடைபெறுகிறது என்பதை நம்ப வேண்டும். அதற்கு அன்னியமே கிடையாது.
சமய மதவாதிகள், கடவுள் புறத்திலிருப்பதாகச் சொல்லிச் சென்றார்கள். அதனை மனித குலம் இதுவரை நம்பி வந்திருக்கிறது. வள்ளல் பெருமான், கடவுள் நம் உள்ளேயே இருப்பதை எடுத்துரைத்தார்.
சுத்த சன்மார்க்க நடைமுறையினைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள், நம்மைச் சுற்றி நடைபெறும் செயல்கள் அனைத்தும் அருட் செயல்களே என்பதை உணர வேண்டும். நாம் கருவியாக இருந்து செயல்படுகின்றோம் என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
துன்பங்கள் வந்தவுடன் அவற்றைக் கண்டு துவண்டு விடக் கூடாது. அவையனைத்தும் நம்மை மேலேற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட தடைக் கற்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் பன்னெடுங்காலமாக, எதையுமே, தேக நிலையிலிருந்து செய்து பழக்கப்பட்டு விட்டோம். ஆன்ம நிலையில் இருந்து பழக வேண்டும்.
மனத்தை எக்காரணத்தைக் கொண்டும் அகமிருந்து வாழும் நிலையிலிருந்து கீழிறங்க விடக்கூடாது. திரு அருட்பா ஒரு டானிக் போன்றதாகும். சத் விசாரம் செய்வதும், பரோபகாரச் செயல்கள் செய்வதும், தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். மனம் ஒரு சிறந்த கருவி. அதனைக் கட்டுப்படுத்தி, சிற்சபையின் கண் நிறுத்திப் பழக வேண்டும்.
இத்துடன் அவரது சொற்பொழிவு நிறைவு பெற்றது.
ஜோதி வழிபாடு செய்து ஜோதிப் பாடல் பாடி, விண்ணப்பம் படித்தவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இறுதியில் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.
கூட்டத்தில் ஆண்களும், பெண்களுமாக 25 நபர்கள் கலந்து கொண்டனர். அது முடிவுற்றதும், அன்னதானம் வழங்கும் பணி நிறைவேற்றப்பட்டது.