Maha Mandhirapeedam
மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-12

மெய் ஞானத்தை அடையும் வழி


பகுதி-12


மகாமந்திரமும் தாரகமந்திரமும்

வேதமும் ஆகம விரிவுகளனைத்தும்
ஓத நின்றுலவா தோங்கு மந்திரமே
உடற்பிணி யனைத்தையும் உயிர் பிணி யனைத்தையு
மடர்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே - (அகவல் 1319 - 1322)

ஊக்கமுள்ள மனிதன் கடவுளை உணர்வது எளிது என்பதை தெரிந்து முயற்சியுடன்
சத்விசாரம் செய்தால் தன்னையும் அறிந்து இறைவனையும் அறியலாம். அதற்கு
உறுதுணையாக இருப்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு அருளிய
அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமாகும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்பது மகாமந்திரம் ஆகும்

அங்கிங்கு என்று வரையறுத்து கூறமுடியாத வகையில் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற
நிறைந்திருக்கும் ஆண்டவரின் அருள் சக்தியை ஆன்மாக்களுக்கு அளிக்கும் சாதனமாகவும்,
எந்த மொழியிலும் எந்த வகையிலும் ஒப்பு நோக்க இயலாத வகையில் ஆண்டவரை கூப்பிடும்
பெயராகவும் உள்ள வார்த்தையே அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அருட்பெருஞ்ஜோதி என்ற வார்த்தையை பெயராக கொள்ளும்போது பிரபஞ்சம் முழுதும்
உஷ்ண சக்தி மூலமாகத்தான் அனைத்தும் இயங்குகின்றன என்பதைக் கொண்டு காரணப்
பெயராக இந்த வார்த்தை அமைகின்றது.

இந்த உஷ்ண சக்தியானது அருள் சக்தியாக மாறி அருள் அலைகள் வடிவில்
ஆன்மாக்களை அடையச் செய்ய மனிதர்களால் மந்திரங்கள் சாதனமாக பயன்படுத்தபடுகின்றன.

மந்திரங்கள் ஒலி அலைகளால் உருவாக்கப்படுபவை. அந்த அலைகளில் அதிகப்படியான
உயிர் ஒலிகள் உள்ள மந்திரங்கள் சாதனமாக பயன்படுத்தப்படுகின்றன. எந்த அளவு பல்வேறு
உயிர் ஒலிகள் அதிகப்படியாக அமைந்துள்ளதோ அந்த அளவிற்கு மந்திரங்கள் சிறப்பாக
செயல்படும்.

மந்திர அடிப்படையில் பார்த்தால் அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரே வார்த்தையில் ஐந்து
வகையான ஆறு உயிர் ஒலிகள் அடங்கியுள்ளன. பதி மூன்று எழுத்துக்களாக விரிகின்றது.



இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதினாலும்




மொத்தம் பதினைந்து எழுத்துக்களாக விரிந்து அதில் ஆறு உயிர் எழுத்துக்கள் இடம்
பெற்று ஐந்து வகையான உயிர் ஒலிகள் உள்ள எழுத்துக்களும் இடம் பெற்று விடுகின்றன.
ஆங்கிலத்தில் மொத்தம் ஐந்து வகையான உயிர் ஒலி எழுத்துக்கள் (vowels) உள்ளன.
அவையனைத்தும் இதில் அடங்கியுள்ளது.

இது போல் எந்த மொழியில் எழுதினாலும் ஒலிகள் மாறாது அந்தந்த மொழியிலுள்ள
ஐந்து வகையான உயிர் ஒலிகள் இடம் பெறும். அதிகப்படியான உயிர் ஒலிகள் இடம்பெறும்
போது அனைத்து வகையான அருள் சக்திகளும் வெளிப்பாடாக இந்த வார்த்தை மந்திரமாக
பயன்படுகிறது.

சன்மார்க்க உலகத்தை மிகவும் சிரம் தாழ்த்தி ஒன்றை வேண்டி கொள்கின்றேன். இந்த
வார்த்தையை ஆங்கிலம் தெரிந்தவர்களுக்காக மொழி பெயர்த்து பயன்படுத்துகிறார்கள்.

தயவு செய்து அருட்பெருஞ்ஜோதி என்ற வார்த்தையை அப்படியே பயன்படுத்தவும்
இத்தனை சிறப்பான உயிர் ஒலிகள் அடங்கிய வார்த்தையாக எந்த மொழியிலும் காரணப்
பெயராக மொழி பெயர்க்க இயலாது. ஆங்கிலத்தில் எத்தனையோ பிற மொழி வார்த்தைகள்
அப்படியே பயன்படுத்தபடுகின்றன.

அது போல் ஈடு இணையற்ற இந்த வார்த்தையையும் உலக மக்கள் பயன்படுத்தட்டும்
அப்போதுதான் நாம் பெற்ற இன்பம், அருளியல், பயன்பாடு, அனைத்தும் உலக மக்கள்
அனைவரும் அவரவர் ஈடுபாட்டுக்கு தக்கவாறு முழுமையாக அடைய முடியும். இந்த
வார்த்தையின் மந்திர ஒலிகள் மொழி பெயர்ப்பு வார்த்தைகளில் வராது என அறிக மேலும்
தமிழில் இந்த வார்த்தையில் இடம் பெறாத ஐ என்ற உயிர் ஒலியானது இரண்டாவது
வாக்கியமான தனிப்பெருங்கருணை என்பதில் இடம் பெறுகின்றது விவரம் வருமாறு.



ஆக இந்த மந்திரத்தின் இரண்டு வாக்கியத்திலும் சேர்த்து ஆறு வகையான
பதிமூன்று உயிர் ஒலிகள் அடங்கியுள்ளன

இத்தனை வகையான உயிர் ஒலிகள் உயிர்மெய் பிரித்து எழுதினாலும் கூட இருபத்தி
எட்டு எழுத்துக்களில் இத்தனை வகையான உயிர் ஒலி அலைகள் அடங்கிய மந்திரங்கள்
வேறு எதுவும் இல்லை என அறுதியிட்டு கூறலாம். சந்தேகமிருப்பின் அவரவர் தெரிந்த
மந்திரங்களை இதே போன்ற பாணியில் பிரித்து பார்த்து உண்மை உணர்ந்து கொள்ள
வேண்டியது.

மேலும் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் தனிப்பட்ட முறையில் எந்த சமயத்திற்கோ
மதத்திற்கோ அல்லது வேறு எதேனும் ஒரு சமய தேவர்களுக்கோ உரியதல்ல இதை எந்த
சமயத்தவர் ஆனாலும் எந்த நாடு, மொழி,மதம்,,கலாச்சாரம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு
வெளியே வந்து ஜீவ காருண்ய ஒழுக்கத்தை பின்பற்றி நடந்து பயன்படுத்தினால் அனைவரும்
மிக உயர்ந்த பலன்கள் பெறலாம்.

இந்த மகாமந்திரத்திற்கு எல்லா சமய தேவர்களும் கட்டுப்படுவார்கள். எல்லா சமய
மத மார்க்கங்களிலும் அந்தந்த தேவதைகளுக்காக ஒவ்வொரு மந்திரம் உருவாக்கி
பயன்படுத்தி வருகிறார்கள். கால மாற்றத்தால் சில மனிதர்களின் செயல் பாட்டில் அவரவர்
மந்திரங்களுக்கே கூட தேவதைகள் கட்டுபடுவதுமில்லை. அருளியல் வெளிப்பாடு
ஆவதுமில்லை. ஆனால் மாகாமந்திரம் பயன்படுத்தினால் எல்லா தேவதைகளும் வெளிப்பாடு
ஆகும் தன்மை எற்படுகின்றது.

இந்த மந்திரத்தை அமைதியாக மிகவும் வேகமோ மிகவும் தாமதமோ இன்றி
நிதானமாக உச்சரித்தால் எட்டு நொடி பொழுது ஆகும். இந்த மந்திரத்தை இவ்வாறு தொடர்ந்து
உச்சரித்தால் தன்னையறியாமல் இராஜயோகத்தை பயிற்று விக்கிறது. பலனோ இராஜயோகம்
செய்வதால் ஏற்படும் பலனை விட பல மடங்கு அதிகமாகிறது.

பொதுவாக யோக நிலை கைகொண்டால் 13 ஆண்டு ஆகும் சித்தி சக்தியை அடைய
என்று கூறப்படுகிறது. ஞான நிலையில் மகாமந்திரத்தை ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் ஒரு
ஜாமம் எனும் மூன்று மணிநேரம் உச்சரித்தாலேயே அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப அரை
நாழிகை (12 நிமிடம்) முதல் ஒரு ஜாம (3 மணி நேரம் ) நேரத்திற்குள்ளாக ஆண்டவரின்
தரிசனம் கிடைக்கும் என ஆண்டவர் தம்மிடம் கூறியதாக வள்ளல் பெருமான் நம்மிடம்
உறுதியளிக்கிறார்.

மகாமந்திரம் உச்சரித்து கண் மூடி அமர்ந்து எந்த நோக்கமின்றி செய்யும் தியானமே
மேலானதாகும்.

இவ்வாறாக நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி தியானிக்கையில் முதலில்
இருளான கருப்புதிரையானது தோன்றும். கருப்புதிரையில் நீலநிற பூக்கள் போன்ற வட்ட
உருவங்கள் கதிர்களுடன் தோன்றி நம்மை நோக்கி வருவது போன்ற தோற்றத்துடன் வந்து
முழுத்திரையையும் நீலமாக வியாபித்து மறையும் .இவ்வாறாக அடுக்கடுக்காக வந்துகொண்டே
இருக்கும். சிறிது நேரத்தில் கருப்பானது முற்றிலும் விலகி முழுமையாக நீலநிறம் வியாபித்து
அதிலிருந்து பச்சைநிறபூக்கள் தோன்றும்.பிறகு பச்சை முழுமையாக வியாபித்து சிவப்பு நிறம்
தோன்றும்., பிறகு சிவப்பு முழுமையாக வியாபித்து மஞ்சள் தோன்றும்.பிறகு மஞ்சள்
வியாபித்து வெண்ணிற பூக்கள் தோன்றும். சிறிது நேரத்தில் வெண்ணிறமும் மறைந்து
அளவற்ற வண்ணங்களில் நட்சத்திர கூட்டம் போன்ற சிறு சிறு வண்ணப் வண்ணப் பூக்கள்
பொறிகளாக தோன்றும். அதுவும் மறைந்து ஏழு மாயா திரைகளும் விலகிய நிலையில்
அளவிட முடியாத பிரகாசமுள்ள பொன்னிறமான ஜோதி தோன்றி மறையும். அதுவே
ஆண்டவனின் தரிசனமாகும். மனிதனின் சுயதரிசனமும் அதுவேயாகும்.

(தொடரும்)



அடுத்த தொகுப்பு அடுத்த வாரம்

Email : mahamandhirapeedam@yahoo.com
mahamandhirapeedam@gmail.com
jyothimaindhan@gmail.com
Cell: 9942062598,
04172-275071.




P Sujatha
KarunaiMughu Mahamanthirapeedam Friends,
Really Good&Beautiful Presentations of Mahamanthiram&TharagaManthiram. Keep it up.
I have Appreciate your Sanmarga Activities.
With Vallalar Loving,
AruljothiSujatha.
Sunday, January 25, 2009 at 19:56 pm by P Sujatha