Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
இன்று இவரைப் பற்றி..சீர்காழி. திரு. R. சம்பந்தம் ஐயா அவர்கள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இன்று இவரைப் பற்றி..சீர்காழி. திரு. R. சம்பந்தம் ஐயா அவர்கள்
"திருவடி நிழல்" என்ற கட்டுரையின் முடிவுரையில் சர்வ வல்லமை படைத்த இறைவனை அனுதினமும் துதித்து எல்லா உயிர்களிலும் இறையை- “ஞானத்திருவடியை” காணுங்கள் என்றும் சிந்தனையிலும், செயலிலும், எண்ணத்தினாலும் அகப்பற்றைத் தவிர்த்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மனதில் கொண்டு, உலகியியலில் நிலையாமையை எண்ணி, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையை விசாரம் செய்துக்கொண்டு இருங்கள் என்றும் இது போல் பணி செய்து வரும் ஒரு சுத்த சன்மார்க்கி உங்கள் அருகாமையில் உங்களுக்காக காத்திருப்பதை உணருவீர்கள் என்றும் வாசகம் இடம் பெற்றிருந்தது.
மேலும் சுத்த சன்மார்க்க வாழ்வில் மிகவும் எளிமையாகவும், உயிர் இரக்கமே இறை வழிபாடாகக் கொண்டு 'பணி' செய்தால் வள்ள பெருமானாரின் அருள் மிக எளிதாகக் கிட்டும் என்பதும் அக்கட்டிரையின் முடிவான நோக்கமாக இருந்தது. திருவருளால் அக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என்பதும் என்னுடைய நம்பிக்கை, எனவே தகவல் உதவி: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை என்று எழுதி அக்கட்டுரையை வள்ளலார் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து மூன்று தடவை படித்துப் பார்த்தேன். அப்பொழுது மனதிற்குள் ஒரு சிறிய நெருடல். புகழ், கௌரவம், பணம், செல்வாக்கு மற்றும் பதவி ஆசை இல்லாமல் சுத்த சன்மார்க்கத்தின் உச்ச நிலையான “நிராசை” நிலையில் யாராவது இக்காலத்தில் இருப்பார்களா? அறக்கட்டளை வைத்துக்கொண்டு மிகவும் எளிமையான வாழ்வு யாராவது வாழ்வார்களா? புகழுக்கு ஆசைப்படாமல் யாராவது சுத்த சன்மார்க்கப் பணி செய்வார்களா? என்று ஒரு சந்தேகத்துடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொழுது அக்கட்டுரையை படித்துப் பார்த்தேன்.
மறுநாள், காரைக்காலை சேர்ந்த அன்பர் ஒருவர் தொலைப்பேசி மூலம் தொடர்புக்கொண்டு நீங்கள் ஒரு முறை சீர்காழி சென்றால் திரு.சம்பந்தம் ஐயாவை பார்த்துக் கொண்டு வாருங்கள் என்றார். எனவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் சுத்த சன்மார்க்க வாழ்வில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சீர்காழி. திரு. R.சம்பந்தம் ஐயா (வயது- 76) அவர்களை மறுநாள் 17.7.2011 தேதியில் சந்தித்தேன். சம்பந்தம் ஐயா அவர்கள் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப்பெற்றவர். இவர் சுமார் 40 வருடங்களாக சுத்த சன்மார்க்க வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இளம் வயதிலேயே வள்ளல் பெருமானின் அருள்நெறியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அவர் கூறிய நான்கு வித ஒழுக்க நெறிகளுக்கு ஏற்ப திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மக்களிடம் வலியுறுத்த எண்ணி கடந்த 1974-ம் வருடம் சீர்காழியில் வள்ளலார் மன்றத்தைத் தொடங்கி, தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறார். மேலும் வள்ளலார் மன்றத்திற்காக புதியக்கட்டிடத்தையும் கடந்த 15.9.91-ம் வருடம் (சுமார் 8 இலட்சம் அளவில்) திறப்பு விழா செய்திருக்கிறார். தன்னுடைய சொந்த முயற்சியால் கட்டியிருக்கும் இக்கட்டிடத்தில் தியான மண்டபம் மற்றும் அன்னதான கூடமும் அடங்கியுள்ளது.
“உயிர் இரக்கமே உண்மையான இறை வழிபாடு” என்ற வள்ளல் பெருமானின் வாக்கிற்கிணங்க தினமும் சுமார் 30 அன்பர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு அளித்து வருகிறார். மேலும் கடந்த 10 வருடங்களாக 110 பள்ளிகளில் 1100 ஏழை மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு இலவச சீருடை மற்றும், பதிவேடுகள் (6000 nos ) வழங்கியிருக்கிறார். வாரந்தோறும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பேரிச்சம் பழம் வழங்கி வருகிறார். மேலும் 14 பள்ளிகளில் 400 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணியும் வழங்கியுள்ளார்.
இத்தனை செயல்களுக்கும் எந்த ஒரு ஆடம்பரமான நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. எந்த ஒரு பத்திரிக்கையிலும் மற்ற ஊடகங்களில் இச்செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் ஐயா அவர்கள் நினைத்திருக்கிறார்கள். தனக்கென வாழாது பிறருக்கென வாழும் ஒரு உத்தம மனிதராக வாழ்ந்து வரும் ஐயா அவர்கள் தனக்கென்று 2 சட்டைகள் மற்றும் 2 வேஷ்டிகள் மட்டுமே வைத்துள்ளார். இன்றைக்கு அறக்கட்டளைகள் வைத்துக் கொண்டு கோடி, கோடியாக சம்பாதித்து ஆடம்பரமான கார், பங்களா, மற்றும் சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து வரும் கார்ப்பரேட் குருமார்கள் மத்தியில் இப்படியும் ஒரு சுத்த சன்மார்க்கி வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வள்ளலார் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாத பூச நன்னாளில் அகவல் பாராயணம் தொடர்ந்து நடைபெறுகிறது. இம்மன்றத்தில் அகவல் பாராயணத்தை சுமார் 40 நிமிடங்களில் ஐயாவும் இவரது தொண்டர்களும் படிக்கிறார்கள் என்பதும் சிறப்பு. (அந்த அளவிற்கு அகவல் வரிகள் அவர்களின் மனதில் பதிந்துள்ளது) இம்மன்றத்தின் கிளையாக அருள்ஜோதி அறக்கட்டளை செயல்படுகிறது. இதன் செயலாளராக பேராசிரியர்.திரு. வை.நமச்சிவாயம் ஐயா அவர்கள் செயல்படுகிறார்கள்.
அருள்ஜோதி அறக்கட்டளை மற்றும் வள்ளலார் மன்றத்தில் கீழ்காணும் அன்பர்கள் மிகவும் பக்தியுடனும், சிரத்தையுடனும் பணிச்செய்து வருகிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளும் போற்றுதலுக்குரியது.
  1. திரு. சீனிவாசன்.
  2. திரு. வெங்கடகிருஷ்ணன்
  3. திரு. விவேகானந்தன்
  4. திரு.சேகர்
  5. திரு.ராஜ்குமார்
  6. திரு.முருகன்
  7. திரு.வடிவேல்
  8. திரு.பாலாஜி
  9. திரு. தீன தயாளன்
10. திரு.கோபு
மேலும் இந்த சங்கத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது சர்வ வல்லமை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் –ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து இதுபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சங்கங்களைத் தானே நடத்தி வருகிறார் என்பது சத்தியமே என்பதையும் யூகிக்க முடிந்தது. மேலும் திருவருளின் திருவடி நிழலைத் தவிர வேறு எந்த ஒரு விருப்பமும் இல்லாமல் இருக்கும் ஒரு உத்தம மகானையும் காண முடிந்தது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
moorthy poongundran
உண்மையான சன்மார்க்கியைப் பற்றிய தங்கள் கட்டுரை அருமை நண்பரே மனதை தொடுவதாக இருந்தது
புதுவை ஆசிரியர் பொன்.மூர்த்தி எ பூங்குன்றன்
Saturday, July 30, 2011 at 23:35 pm by moorthy poongundran