Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
மெய்யுணர்தல்-5
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மெய்யுணர்தல்-5

***

தன்னுடையத் திருவடிகளைச் சீடனின் சிரசின் மேல் சூட்டி அவனை தந்நெறியில் அழைத்துச் சென்று அவனுக்குச் திருவருளின் திருவடி இன்பத்தைப் பெற்றுய்யுமாறுச் செய்யும் மெய்யான குருவே சற்குரு ஆவார். அவர் ஒருவனைத் தடுத்தாட்கொண்டு அவனுக்கு இகத்தில் நல்ல வாழ்க்கையும், பரத்தில் திருவடிக் கமலங்களில் என்றும் இன்புற்றிருக்கும் பேற்றினையும் அருள்வார்.

*******

ஜீவகாருண்ய நெறி ஒரு மனிதனின் ஆன்மீக வாழ்க்கையை ஞானத்தில் சரியையில் தொடங்கி ஞானத்தில் ஞானம் கிட்டும் வரை அழைத்துச் செல்கிறது. ஜீவகாருண்ய நெறி மனிதனை புலனறிவிலிருந்து அருளறிவு நிலைக்கு அழைத்துச்செல்கிறது. அதனால் தான் ஜீவகாருண்யநெறியில் இருப்பவர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் கோள்களாலும், பிற காரண காரணிகளாலும் ஏற்படாது என்று வள்ளல் பெருமானார் கூறுகிறார். ஜீவகாருண்யம் என்றால் ஏதாவது ஒரு நன்னாளில் பசி தவிர்த்தல் புரிவது மட்டுமல்ல, எவ்வுயிரையும் தம்முயிர் போல் பாவித்து சதாசர்வ காலமும் தயை வாழ்வில் ஈடுபடுவது மட்டுமே உண்மையான ஜீவகாருண்யமாகும்.

இன்றைய காலத்தில் ஜீவகாருண்ய நெறியில் வாழ்வது சாத்தியமா? ஜீவகாருண்ய நெறியில் வாழ்ந்தால் எவ்வாறு தியானம், யோகம் போன்ற பயிற்சியில் கிடைக்கும் அனுபவம் கிட்டும்? என்று பல அன்பர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஏனெனில் ஜீவகாருண்யம் என்றால் பசி தவிர்த்தல் மட்டுமே என்று நினைத்து வருகிறார்கள். ஆனால் ஜீவகாருண்ய நெறி என்ற அருள்நெறி மிக அற்புதமான ஞானநெறியாகும். இந்த ஞானநெறியில் உண்மையாகவே இருக்கும் அன்பர்களுக்கு பலவித அனுபவங்கள் கிட்டுகிறது, ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போல் இதனை விளம்பரப் படுத்துவதில்லை.

எனவே முதலில் ஜீவகாருண்ய நெறி எவ்வாறு மனிதனை இறைநிலை அறிந்து இறைநிலை அடைவதற்கு துணைபுரிகிறது என்பதைப் பார்ப்போம்.

1. ஜீவகாருண்ய நெறி அறிவுநிலைகளை உயர்த்துகிறது.

2. ஜீவகாருண்ய நெறி யோகநெறிகளையும் பயிற்றுவிக்கிறது.

3. ஜீவகாருண்ய நெறி மரணமில்லாப் பெருவாழ்வையும் அளிக்கிறது.

முதலில் ஜீவகாருண்ய நெறி அறிவுநிலைகளை எவ்வாறு உயர்த்துகிறது என்பதைக் காண்போம்.

1. ஜீவகாருண்ய நெறியும் அறிவு நிலைகளும்.

ஜீவகாருண்ய நெறியில் வாழும் மனிதன் தன்னுயிர் போல் பிற உயிர்களையும் காணுகிறான். பிறகு தனக்கும் இறைக்கும் உள்ள தொடர்பை மெய்யறிவால் உணர்ந்து, தன்னையறிந்து அருளறிவால் இறையை அனைத்து உயிர்களிலும் காண்கிறான். எனவே மனிதனுடைய அறிவு நிலையானது படிப்படியாக உயர்ந்து இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம் மற்றும் ஆன்ம ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறது. இறைநிலையினை அறிந்துக் கொள்கிறது.

உயிருள் யாம் எம்முள் உயிர் இவையுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச்சிவமே

எனவே மனிதன் உலகியியல் இச்சைகளைக் கடந்து-களைந்து அருளியியல் இச்சையாக எல்லா உயிர்களின் உயிர்நலத்தை வேண்டுகிறான், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று பிரார்த்தனையையும் மேற்கொள்கிறான். இந்த அருளறிவு திருவடி ஞானத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இதனை பெருமானார்,

அருளறிவு ஒன்றே அறிவுமற்றெல்லாம்
மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே

என்றும்

அருளறியார் தமை அறியார் எம்மையும்
பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே

என்றும்

அருள்நிலை பெற்றனை அருள்வடிவு உற்றனை
அருளரசு இயற்றுகென்று அருளிய சிவமே.

ஆகவே ஜீவகாருண்ய நெறியால் மட்டுமே ’அருளறிவு’ பெறலாம், அருள்நிலை அடையலாம், அருள் வடிவு பெறலாம், அருள் வடிவான இறைமயமாகலாம், அருளரசு இயற்றலாம். இதனை வள்ளல் பெருமானார் உலக மக்களுக்கு எடுத்துரைத்தும், செய்தும் காண்பித்தார்.

2. ஜீவகாருண்ய நெறி யோகத்தையும் பயிற்றுவிக்கிறது.

வள்ளல் பெருமானார் என்றால் நினைவுக்கு வருவது பசி தவிர்த்தல், ஆகவே சிலர் வள்ளல் பெருமானார் பசி தவிர்த்தலை மட்டுமே வலியுறுத்துகிறார், இதன் மூலம் நாம் ஞானநிலையை பெற முடியாது. அட்டாங்க யோகத்தால் மட்டுமே யோக அனுபவத்தைப் பெற முடியும் என்றும், தியானம், யோகம் இல்லாமல் இறைநிலையை உணர முடியாது என்றும் கூறிவருகின்றனர். இது முற்றிலும் தவறான வாதமாகும். ஜீவகாருண்ய நெறியில் உண்மையாக வாழும் ஒரு சன்மார்க்கியின் வாழ்க்கை யோகியின் வாழ்க்கையை விட சிறப்பானது. அவர் ஜீவகாருண்ய நெறியின் மூலம் ஞானயோகத்தைச் செய்து வருகிறார் என்பதே உண்மை. உதாரணத்திற்கு அட்டாங்க யோகத்தால் கிடைக்கும் பயனையும், ஜீவகாருண்ய நெறியில் வாழும் ஒரு சன்மார்க்கியின் தயவு வாழ்க்கையையும் ஒப்பிடுவோம். முதலில் அட்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதியாகும். இதனை ஜீவகாருண்ய நெறியில் ஒப்பிடும் பொழுது ஒருவன் எவ்வாறு ஞானயோகத்தை அடைகிறான் என்று பார்ப்போம். ஒருவன் ஜீவகாருண்ய நெறியில் வாழும் பொழுது பிற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்ற அகந்தூய்மையும், (எவ்வுயிரையும் தம்முயிர்ப்போல் பார்க்கும் குணம்) கொள்கிறான், மேலும் புலால் உண்ணாமல் வாழ்கிறான், இதன் மூலம் இயமத்திலும், நியமத்திலும் கிடைக்கும் அனுபவம் உண்டாகிறது. ஒருவன் சதா சர்வ காலமும் நற்செய்கைகளில் ஈடுபட்டால் அவனுக்கு ஆசனம் கூட தேவையில்லாமல் போகிறது. அடுத்தது, பிராணயாமம்; தயை வாழ்க்கையால் ஒருவன் வாழ்ந்தால் அவனுக்கும் இயற்கையாகவே சுவாசம் வலது நாசி வழியாக செல்லும், புறத்தில் நாட்டம் உண்டாகாது எனவே பிராணயாமம் மூலம் கிட்டும் அனுபவம் இங்கு உண்டாகிறது. அடுத்து பிரத்யாகாரம் மற்றும் தாரணை, ஒருவன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று உலகியியல் வாழ்க்கையில் வாழும் பொழுது தன்னலம் இல்லாமல் போகிறது, எனவே இயற்கையாகவே மனம் இறையை எல்லா உயிர்களிலும் காண்கிறது, உள்நோக்கி பயணமாகிறது, இதுவே பிரத்யாகாரம் மற்றும் தாரணையாகும். அடுத்து தியானம் மற்றும் சமாதி, இங்கு ஜீவகாருண்ய நெறியானது ஈசுவர பக்தி என்ற பிற உயிர்களின் நலம் ஒன்றே குறிக்கோளாகக் கொள்கிறது.

உயிருள் யாம் எம்முள் உயிர் இவையுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச்சிவமே

ஆகவே பிரத்யேகத் தியானப்பயிற்சி தேவையில்லாமல் போகிறது. சதா சர்வ காலமும் இறையும் பிற உயிர்களும் ஒன்றே என்ற நினைவுடன் இருப்பதால், அந்நினைவே தியானமாகிறது, பிற உயிர்களின் துன்பத்தைப் போக்கி அவைகள் அனுபவிக்கும் இன்பமானது பேரின்பத்தைப் போன்று இருப்பதால் சமாதியும் இதில் அடங்குகிறது.

3. ஜீவகாருண்ய நெறி மரணமில்லாப் பெருவாழ்வையும் அளிக்கிறது

அறிவுநிலைகள் எல்லாம் கடந்து, ஞானயோகத்தில் கிட்டும் நிராசை நிலை ஏற்படும் பொழுது ஒருவனது ஆத்மா தனிப்பெருங்கருணையினால் புருவமத்தியில் ஆன்ம சபையில் ஞானஒளியைத் தரிசிக்கிறது. இந்நிலையை மற்ற சித்தர்களும் கூறியிருக்கின்றனர், ஆனால் வழியைக் கூறவில்லை. வள்ளல் பெருமானார் மட்டுமே அருள்நெறியின் மூலம் உண்மையை விளக்கினார்.

மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

-திருமந்திரம்

வெளி வேடங்கள் இறையை திருப்திப் படுத்தாது. உடலுக்குப் புனையும் வேடத்தை விடுத்து, உள்ளத்துக்கு அழகு செய்வதே மனிதனை உய்விக்கச் செய்யும் நல்ல வழியாகும். அன்பு, இரக்கம், கருணை முதலான நற்குணங்கள் தாம் உள்ளத்துக்கு பூட்டும் அணிகலன்கள். வாய்மை, இன்சொல் பேசுதல் மனதுக்கு அணிவிக்கும் உயர்ந்த ஆபரணங்களாகும்.

இவ்வாறு மனத்தை அழகுப்படுத்தி, சினத்தை அறவே ஒழித்தால் அங்கே ஒளி ஒளிரத் தொடங்கும். அவ்வொளியின் மீது பொறி புலன்களை வைத்து தியானம் செய்து அவ்வொளியை அணையாத் தீபமாக பாவித்தால், அச்சோதியானது யோகியின் இலட்சியத்தை அடையப் பேருதவி புரியும்.

இதனை வள்ளலார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்..

இருவினை ஒப்பாகி என்பது தன்னுடைய நலம் போல் பிறரது நலத்தையும்-தீமையையும் உணருதல். மலபரிபாகம் என்பது மலவிருள் ஆணவம், கன்மம், மற்றும் மாயை நீங்குதல். இத்தகைய அவத்தைகள் நீங்கும் போது தான் ஞானஒளி குருவடிவாய் தோன்றி சிவ ஞானத்தைத் தந்தருளும் என்பது இப்பாடலின் பொருள்.

திருவருட்பா- அகவல் வரிகளிலும் மிக அற்புதமாக ஞான ஒளியைப் பற்றி கூறுகிறார்.

ஔவியம் ஆதியோர் ஆறும் தவிர்த்த பேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்சோதி
மலப்பிணி தவிர்த்து அருள்வலம் தருகின்றதோர்
நலத்தகை அதுவென நாட்டிய மருந்தே
முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரைமேல் எழுந்த செஞ்சுடரே
மருளெலாம் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
அருளமுதருத்திய அருட்பெருஞ்சோதி

மேலும் சில சித்தர்கள் பாடல்கள்:

கடலில் ஒளித்திருந்த கணலெழுந்து வந்தாற்போல்
உடலிற் ஒளித்த சிவம் ஒளிசெய்வதெக்காலம்.

பத்ரகிரியார்- 168

தன்னையறிந் தொழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னையறியாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொடு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவாரென்று ஆடாய் பாம்பே

பாம்பாட்டி சித்தர்-95

கை விளக்குக்கொண்டு கடலில் வீழ்குவார் போல
மெய்விளக்குன்னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே

இடைக்காட்டு சித்தர்-74

ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்
அகண்ட பரி பூரணத்தைக் காண வேணும்

இராம தேவர் பூஜா விதி-1

ஓடியோடி யோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களுங்கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே!

சிவ வாக்கியர்

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி!

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!

வாலைச்சித்தர்

ஆகவே ஆன்மசபையைக் கண்டு ஞானஒளியைத் தரிசித்தால் ஒருவனது ஆத்மா காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், அகங்காரம்/ மமங்கார நிலைகளையெல்லாம் கடக்கிறது. ஞானஒளியைக் கண்டு திளைப்பதால் மருளெலாம் நீங்குகிறது. அங்கே அருள்நிலை மட்டுமே இருப்பதால் அருளமுதம் உடலெல்லாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பி சுத்த சன்மார்க்க சுக நிலையில் மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டுகிறது. இந்நிலையைத் தான் வள்ளல் பெருமானார்:

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்று கூறுகிறார்.

ஆகவே மெய்நெறியாகிய ஜீவகாருண்ய நெறியில் நின்று, மெய்ப்பொருளை எல்லா உயிர்களிலும் கண்டுணர்ந்து இறைநிலையாகிய சிற்றம்பலத்தை அடைவோமாக!

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்!

முற்றிற்று

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

குறிப்பு:

வள்ளல் பெருமானார் உரைத்த ஜீவகாருண்யநெறியில் உண்மையாக வாழ்ந்தால் இறை ஒருவனைத் தடுத்தாட்கொள்வார், இறைவனை நாம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்று நாடிச்செல்லத் தேவையில்லை. ஆனால் உண்மையான ஜீவகாருண்ய நெறியில் வள்ளல் பெருமானைப்போல் நாம் வாழ்வதில்லை அல்லது உலகியியல்-மாயை ஒருவனை வாழ விடுவதில்லை என்பதே உண்மை. ஜீவகாருண்ய நெறி பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும், இதனை உலகியியல் கடைப்பிடிப்பது எளிதான காரியமன்று. இறை நம்பிக்கையும், எல்லா உயிர்களிலும் இறையைக் காணும் பக்குவமும் ஒருவன் பெற வேண்டும். அவ்வாறு ஒருவன் பெற்றால் அவனுக்கு வெயில், காற்று, மழைப்போன்ற காரணிகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று வள்ளலார் கூறுகிறார். உதாரணத்திற்கு இமயமலையில் வாழும் ஸ்ரீ பாபாஜி போன்ற மகான்கள் பனிமலையின் அருகே தவம் செய்துக்கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு இயற்கையின் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் ஒரு யோகியின் சுயசரிதையில் ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர் கூறுகிறார். எனவே அவ்வித யோகியின் அனுபவம் ஜீவகாருண்ய நெறியில் வாழும் அன்பர்களுக்கு கிட்டும் என்றால் அது மிகையாகாது.

********