ஒளியாம் அருளொளியாம் பரந்த வெளியில் எங்கும் எல்லாவற்றிலும் கலந்து, எல்லாப்பொருளிலும், எல்லா உயிர்களிலும், அனைத்து அண்ட சராசரங்கள் அனைத்திலும், அவ்வவ்வற்றை இயக்கியும், அவற்றுள் தன்னை இருக்கவும் செய்து, தான் அவற்றுள் அடங்காது எல்லாவற்றையும் தன் அருளாணையின் படி இயக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சக்தியே அருட்பெருஞ்ஜோதி. ****************
மெய்யுணர்தல்- II
வள்ளல் பெருமானார் அருளொளியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சாயலே, அனைத்து தெய்வங்களும் என்பதை தன்னுடைய சிறு வயதிலேயே உணர்ந்திருந்தார், எனவே அவர் பாடியப் பாடல்களைச் சமயம் சார்ந்தது என்றும், சமயம் சாராதது என்றும் பாராமல், அவர் பாடிய பாடல்களில் உள்ள மெய்ந்நெறியை தங்களுடைய மனதில் கொண்டு ஒவ்வொருவரும் சத்விசாரத்தில் ஈடுபட வேண்டும். ஒன்றான இறையை மட்டுமே வள்ளல் பெருமானார் பாடியிருக்கிறார், இதனை அவரே கூறியிருக்கிறார்.
மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன் தன்னையே மதித்து உன் சாயையாய்ப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவ! வேறு எண்ணியது உண்டோ? தூய பொன்பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிச்சிறிதும் இங்கு ஆற்றேன் நாயகா! எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள்புரிவது உன்கடனே!ஆகவே வள்ளல் பெருமானார் நமக்கு தந்த அருள்நெறியை உணர்ந்து, அருளியியல் வாழ்வைத் தொடங்க வேண்டுமே தவிர, திருவருட்பாவை பிரித்து அதனைக் குறை கூறுவது நமக்கு எவ்விதப் பயனையும் தராது. மெய்ந்நெறியை மனதில் நன்றாக பதித்து, எல்லாம் வல்ல அருட்ஜோதியே அருளொளியாகி பரந்த வெளியில் எங்கும் எல்லாவற்றிலும் கலந்து, எல்லாப்பொருளிலும், எல்லா உயிர்களிலும், அனைத்து அண்ட சராசரங்கள் அனைத்திலும், அவ்வவ்வற்றை இயக்கியும், அவற்றுள் தன்னை இருக்கவும் செய்து, தான் அவற்றுள் அடங்காது எல்லாவற்றையும் தன் அருளாணையின் படி இயக்கி வருகிறார். எனவே அவர் எல்லா பொருட்கள், உயிர்கள் மட்டுமின்றி அனைத்து ஆத்மாக்களிடமும் இருக்கிறார். ஆனால் அவர்கள் செய்கிற வினைகள் மட்டும் உள்ளத்தின் பக்குவத்திற்கு ஏற்பவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அவ்வுயிர்கள் உணர முடியும். எனவே காணும் காட்சிகளிலும், பொருட்களிலும் அவர் இல்லாமல் இல்லை, இதனை வள்ளல் பெருமானார் “ சிவமே பொருள் என்றறிவால் அறிந்தேன்” என்கிறார்.
ஆகவே எங்கும் பிரகாசமாக இருக்கும் அருட்பெருஞ்ஜோதி யாகிய ஞானஒளியை நாம் நம் அனுபவத்தில் கண்டுணர வேண்டும். ஞானஒளியைக் கண்டுணர சாகாக்கல்வியின் அவசியம் நமக்கு ஏற்படுகிறது. எந்த ஒரு கல்வி முறை ஆத்மாவைப்பற்றியும், அதனின் பிறப்பிடத்தைப்பற்றியும் சரியாக எடுத்துக் கூறவில்லையோ அது சாகாக்கல்வியாகாது, அது வெறும் சந்தைக்கல்வியேயாகும்.
சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர் பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீதான் அதுஇது என்னாமல் ஆடேடி பந்து அருட்பெருஞ்ஜோதி கண்டாடேடி பந்துஇதன் உண்மையை எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானார் அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு
உள்ளுண்ட உண்மையெலாம் நான் அறிவேன் என்னைஉடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயைக்கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார்...என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டறிவார்உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குவதற்கும் அறிவார்...
ஐயர் எனக்குள்ளிருந்திங் கறிவித்த வரத்தையார் அறிவார் நான் அறிவேன் அவர் அறிவார் அல்லால்பொய் உலகர் அறிவாரோ புல்லறிவால்...
என்று கூறும் பாடல்கள் ”பொய் உலகர் புல்லறிவால் கூறும் கருநெறியை விடுத்து, அருளறிவால் சாகாக் கல்வியை கற்க வேண்டும்” என்பதையே உணர்த்துகிறது.
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கை என மதித்ததனைப் பெறவேமெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின்...இவ்வாறு உலகத்தவர்கள் யாவரையும் சன்மார்க்க சாகாக்கல்வி பயிலுமாறு அழைக்கிறார்.
சாகாக்கல்வியின் தொடக்கம் இந்திரிய, கரண, ஜீவ மற்றும் ஆன்ம ஒழுக்கத்தை பின்பற்றும் பொழுது தொடங்குகிறது.
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தேஎண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்!எனவே மெய்ந்நெறியில் வாழ வேண்டுமானால் இந்திரிய ஒழுக்கம் என்கிற பஞ்சேந்திரங்களாகிய கண், நாக்கு, மூக்கு, செவி, மெய் என்ற ஐந்தும் பரோபகாரம் என்கிற கருணை வாழ்விற்காக மட்டுமே செயல் புரிந்திட வேண்டும். சுருங்கக் கூறினால் புலன் இச்சை இல்லாதிருத்தல்.
கரண ஒழுக்கம் என்பது மனம் சம்பந்தப்பட்ட புத்தி, சித்தம், அகங்காரம் இல்லாமல் சதா சர்வ காலமும் இறை சிந்தனையுடன் வாழ்வது.
ஜீவ ஒழுக்கம் கருணை மிகுந்த ஜீவகாருண்ய நெறியாகும். எனவே ஜீவர்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற நிலையில் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் ஜீவ தயவோடு வாழ்வது.
ஆன்ம ஒழுக்கம் என்பது எவ்வுயிரையும் தன்னுயிராகப் பாவித்தல், இறைவன் எல்லா உயிர்களிலும் அழிவற்ற ஆன்ம நிலையில் இருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்து அதன் படி உலகியியல் வாழ்கையையும், அருளியியல் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த நான்கு ஒழுக்கங்களும் சாகாக்கல்வியின் முதுநிலை படிப்பிற்கு மிகவும் இன்றியமைதாதது.
இதனை வள்ளல் பெருமானார்:
நானேதவம் புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்தானே வந்தென்னைத் தடுத்தாண்டான் - ஊனேபுகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில்புகுந்தான் கருணை புரிந்து.ஒன்றே சிவன் என்றுணர்ந்தேன் உணர்ந்தாங்குநின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் - நன்றே மெய்ஞ்சித்தியெலாம் பெற்றேன் திருஅம்பலத்தாடிபத்தி எலாம் பெற்ற பலன். என்று பலப் பாடல்கள் மூலம் எடுத்துரைக்கிறார். எனவே உலகியியலில் நமது தவ வாழ்க்கை என்பது முதலில் இந்த நான்கு ஒழுக்கங்களையும் கடைப்பிடிப்பதில் தொடங்குகிறது.
திருமந்திரமும் இதனை:
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிருள்ளுற்றாற் காதலும் வேண்டாம் மெய்க்காய மிடங்கண்டாற் சாதலும் வேண்டாம் சமாதிகை கூடினாற் போதலும் வேண்டாம் புலன் வழிப் போகார்க்கேபொருள்: ஐம்புலன்களும் சிதற விடாமல் சேர்ந்து, ஒரு நிலைப் படுத்துவோனுக்கு மந்திரங்களை ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை, உயிருக்கு உயிராய் அம்மந்திரங்கள் உன்னுள்ளே அடங்கிவிடும். எனவே அவற்றை ஓத வேண்டிய அவசியமில்லை. புலனடக்கம் பெற்ற பின் காயமாகிய இவ்வுடம்பைப் பற்றி அவனுக்கு நாட்டமில்லாத காரணத்தால் பாசக் கயிறுகள் அறுந்து, பாசப்பிணியகல அவன் விடுதலை பெறுகிறான்.
நம்முடைய சுத்த சன்மார்க்கத்தில் ஐம்புல அடக்கமே சமாதி நிலை என்று சொல்லப்படுகிறது. ஐம்புலன்களும் இறைச் சிந்தனையில் இருக்கும் பொழுது இறப்பு என்பது இல்லாமல் போகிறது. ஆன்மா இறைவனுடன் கலந்து ஒன்றாகிறது.
ஆகவே மெய்ந்நெறியில் வாழ்ந்தால் இறைவன் நம்மை கைவிடமாட்டான்.
தொடரும்..,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிதகவல் உதவி:
1.எல்லாம் வல்ல ஞானகுரு சிதம்பரம் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் 2. திருவாரூர் மடப்புரம் குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்