Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
அருட்சபையில் வள்ளலார்-5

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

________________________________________________________________________

மாயையின் பிடியில் இருக்கும் மனித நிலையில் நாம் தேடும் எல்லா சாதனங்களும் மாயை வயப்பட்டதே! மாயை வயப்பட்ட சாதனங்களால் சிவத்தை அடைய முடியாது. மாயை வயப்பட்ட சாதனங்கள் மேலும் மாயயை ஏற்படுத்தும். அதனால் தான் தற்கால குருமார்கள் மாயையின் வசம் சிக்கிச்சீரழிகிறார்கள்.

____________________________________________________________________________________________________

அருட்சபையில் வள்ளலார்-5

எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி - அகவல்-

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் எட்டும் இரண்டும் என்றால் என்ன இதன் முற்பகுதிகளில் பார்த்தோம். யோகிகள் அனைவரும் உச்சநிலையாகக்கொண்ட எட்டும் இரண்டும் என்பது அருள் நெறியின் முதல் படியே என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தமக்கு தெரிவித்ததாக அகவல் வரிகள் மூலம் விளக்குகிறார் வள்ளல் பெருமானார், மேலும் தான் பெற்ற நிலைகள், அனுபவங்கள் அனைத்தும் அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மூலமே பெற்றதாக பல திருவருட்பா பாடல்கள் மூலமும் விளக்குகிறார். அவற்றினை இங்கு காண்போம்.

எட்டும் இரண்டும் இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே
எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே
துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே
தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே
எனக்கும் உனக்கும்

- 5011- திருவருட்பா

எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
எட்டும் படிசெய்தீர் வாரீர்
எட்டுரு வாயினீர் வாரீர் வாரீர். -4419- திருவருட்பா


நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை என்னளவில் எட்டி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே
-3946 –திருவருட்பா
பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே
- 3781 திருவருட்பா

எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே
- 4111 திருவருட்பா

எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி
படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- அகவல்
எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
-அகவல்

எனவே அருள்நெறியில்-சுத்த சன்மார்க்க வாழ்வில் ஈடுபடுபவர்கள் எட்டும் இரண்டும் பற்றியும், யோக சாதனையில் ஈடுபட்டு பல வித சித்திகளை அடைய வேண்டும் என்று நினைப்பதை விட எல்லாம் வல்ல இறைவனை அனைத்து உயிர்களிடம் காணும் அருளறிவு பெற வேண்டும் என்பதில் மிகுந்த அழுத்தம் வேண்டும். இவ்வித சாதனையில் ஈடுபடும் சாதகர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தெரிவிக்க வேண்டுவதை அனைத்தும் தெரிவித்து ஏறா நிலை ஏற்றி வைப்பார். சாதனங்களை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயிற்சியில் ஈடுபடும் பொழுது சிவயோகம் கிட்டாது, இறை தரிசனமும் கிட்டாது.

இதனை வள்ளல் பெருமானார் :

கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவது அரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ்ஜோதி என் அரசே.
- திருவருட்பா அட்டகம்

சீர்காழி கண்ணுடைய வள்ளல் இதனை:

நடந்ததெல்லா நீயே நடப்பழிய நின்ற
விடஞ்சிவநீ யென்றிருக்க வெண்ணி- லடங்கின்
மயக்கி மலமழுத்து மாயையிது வாரா?
வயர்ப்பருளா லாஞ்சிவயோகம்.
- ஒழிவிலொடுக்கம்

நாம் ஒரு சாதனத்தைப் பற்றினால் அதுவும் மாயையே, அது, இது என்று காட்டினால் அதனால் சிவயோகம் கிட்டாது, பேதநிலை நீங்க வேண்டும். மேலும் எல்லாம் வல்ல பரம்பொருளை ஒரு சாதனம் மூலம் அடைய முடியாது, அவன் திருவருளினால் தான் அவன் தாள் பற்ற முடியும் என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க, சிவயோகத்தை சிவம் அல்லாது வேறு யாரால் உரைக்க இயலும், எனவே சிவத்தைப் பற்றி சிவம் தான் உரைக்க முடியும், தன்னை நாடி வரும் உயிர்களின் மலங்களை அவர் தான் போக்க முடியும். எனவே அருள்வடிவான இறையை அருளால் மட்டுமே அடைய முடியும் என்கிறார் வள்ளல் பெருமானார்.

அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே
அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே
அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே
அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே
அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே
- அகவல்

இதனை சீர்காழி கண்ணுடைய வள்ளல்:

தம்மையரு ளாலறிந்து தாமறிந்த தெல்லாம்போ
யிம்மைப் பெருவாழ்வை யெய்தினர்க்கு – முன்னே
நடந்தறிந்த போத நசிப்பே யிருக்கு
மிடம்புறங்கா டென்பதிலை

மற்றும்

அறியார் வழி கேட்டறிந்து நடக்க
வறிவா றறிவென்றறியார்- மறையாக்
குடையிருக்கத் தாமே குதித்துங் கடந்து
மடர்மழைக்கே வாரவர் போல்வார்.
எல்லாச் சமயங்களுந்துதிக்கு மில்லறத்தி
னில்லாம னீத்தாரென்ன நீத்தாலெந் புல்லறிவைத்
தீரத் தெளிந்து சிவத்தோடும் பற்றற்றா
ராகிற் பிறப்பறுக்கலாம்

- ஒழிவிலொடுக்கம்

என்று கூறுகிறார்.

திருவள்ளுவ பெருந்தகை இதனை:

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின். என்று உரைக்கிறார்.

எனவே அருளறிவு பெற்றால் தான் சிவயோகம் கிட்டும், மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும் என்றால் அது மிகையாகாது. அருள்- தயவு- கருணையே சிவம், கருணையின் உச்ச நிலை ஜீவகாருண்யம். ஜீவ காருண்யத்தின் உச்ச நிலையே வாலறிவு என்கிற புல்லறிவு ஆகும். ஜீவ காருண்ய -அருள்நெறியில் வாழும் ஆன்மாவின் பொன்னம்பலத்தை இறைவன் கோயிலாகக் கொண்டு நடனம்புரிவார், சிவயோகம் தந்தருள்வார் என்பதற்கு:

வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
மனங்கலந்து மதி கலந்து வயங்கா நின்ற
என்புகலந் தூன் கலந்து புலன்களோடும்
இந்திரிய மவை கலந்துள் இயங்குகின்ற
அன்புகலந் தறிவுகலந்துயிரைம் பூதம்
ஆன்மாவுங் கலந்து கலந் தண்ணித் தூறி
இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி
எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே.
அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
அறிஞர்மல ரயன் முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி யிறந்தும் செய்யும்
கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவுளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத்துள்ளே
ஊறுகின்ற தெள்ளமுத ஊறலாகிப்
பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.

-திருவருட்பா- மகாதேவ மாலை

இப்பாடலில் பெரும் பொருள் அடங்கியுள்ளது, இறைவனை அடைய பெருந்தவம், யோகம், வேதம் முதலிய செய்து சித்தர்கள், யோகிகள் காண விழைகிறார்கள், ஆனால் என் போன்ற அடியவர்கள் உள்ளத்தில் அவன் அமுதமாகி ஊறுகின்றான் என்ற பாடல் வரிகள் மிக ஆழமானக் கருத்துகளைப் போதிக்கின்றது.

மேலும், இதனையே ஆறாம் திருமுறையிலும்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விழைந்த தாலோ.
-திருவருட்பா ஆறாம் திருமுறை

அருளறிவு பெற்றவர்களால் மட்டுமே சிவத்தை அடைகின்ற வழியைக் கூற இயலும். எனவே ஜீவகாருண்ய நெறியை உலகுக்கு போதித்த ஞானகுரு வள்ளல் பெருமானையும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அனு தினமும் துதித்து, மும்மலங்களை நீக்க பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். மாயை பிடியில் இருக்கும் மனித நிலையில் எல்லா சாதனங்களும் மாயை வயப்பட்டதே! மாயை வயப்பட்ட சாதனங்களால் சிவத்தை அடைய முடியாது. மாயை வயப்பட்ட சாதனங்கள் மேலும் மாயயை ஏற்படுத்தும். அதனால் தான் தற்கால குருமார்கள் மாயையின் வசம் சிக்கி சீரழிகிறார்கள்.

திருவருளால் மட்டுமே சிவயோகம் என்ற சாதனத்தை அளிக்க இயலும். சிவயோகத்தை பெற்ற குருமார்களால் மட்டுமே தன்னை நாடி வரும் ஆன்மாவின் மலங்களையும் நீக்க முடியும். எனவே எல்லா வல்ல ஞான குரு வள்ளல் பெருமானார் பாதம் வணங்கி, எல்லா உயிரிடத்தும் இறைவனைக் காணும் அருளறிவைப் பெற்று, மண்ணுலகில் மட்டுமல்லாது எல்லா அண்டத்திலும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ உலகியியல்- தவ வாழ்க்கையை மேற் கொண்டால் சிவயோகம் என்கிற அருட்சபை கதவு மிக எளிதாக திறக்கும். அருளமுதம் சுரக்கும், மரணமில்லாப் பெருவாழ்வும் 1/2+ 1/2 நிலையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இருக்கின்ற வள்ளல் பெருமானாரின் திருவுளத்தால் தந்தருளப்படும்.

அருட்சபை நடம்புரி அருட்பெருஞ்ஜோதி
தெருட்பெருஞ் சீர்சொலத் திகழ்வ சித்தியே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

முற்றும்.

தகவல் உதவி:

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை


***********