அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்சபையில் வள்ளலார்-4 எட்டும் இரண்டும் பகுதி-2
அன்புடையீர்!
உயிர்கள் மாயையின் பிடியில் சிக்கி- இறையை காண முடியாமல் வருந்தி, பிறவி பெருங்கடலை நீந்த முடியாமல் இருக்கும் பொழுது, உயிர்களின் மலங்களை நீக்கும் பொருட்டு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே யுகங்கள் தோறும் குருவாக வடிவெடுத்துவந்து உயிர்களை நன்னெறியில் நடத்திச் செல்வார். குரு நிலையில் இருப்பதால் சீடனுக்கு முன் மாதிரியாகவும்/ உதாரணமாகவும் இருக்கும் பொருட்டு அவர் எப்போதும் சிவயோகத்தில் இருப்பார்.
அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையுஞ்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித் திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று
மகிழ்ந்திருதற் கென்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன்....
தன்னை நாடி வரும் உயிர்களின் பாசம் முதலாம் மலங்களை நீக்கி, அவர்களை உயர்நிலையை அடையச் செய்து, அவர்களுடைய பிறவிப் பிணியை நீக்கியருளவே குரு எப்போதும் சிவயோகத்தில் இருக்கிறார். எனவே அத்தகைய குருவை அடையாளம் கண்டு, அவரிடம் முற்றும் சரணடைந்தால், அவர் பிறவியாம் பெருங்கடலை எத்தகைய துன்பமும் இல்லாது கடக்கச் செய்வார். பிறவிப் பெருங்கடலை கடந்தவர்கள் மட்டுமே இறைவனடியைச் சேர முடியும். பிறவிப் பெருங்கடலை கடக்கவே எட்டும் இரண்டும் துணை புரிகிறது.
இதனை இதன் முற்பகுதியில் திருக்குறள் வாயிலாகப் பார்த்தோம்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.
எனவே எல்லாம் வல்ல சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் தனிப்பெருங்கருணையி -னால் இங்கு மீண்டும் சில சித்தர்கள் பாடல்கள் மூலமும், திருவருட்பா பாடல்கள் வாயிலாகவும், பிறவிப் பெருங்கடலை கடக்க எவ்வாறு எட்டும் இரண்டும் துணை புரிகிறது என்பதைக் காண்போம்.
எட்டும் இரண்டும் பற்றி கூறும் சித்தர்கள் பாடல்கள்:
எட்டுயோக மானதும் இயங்குகின்ற நாதமும் எட்டுவக்கரத்துளே உகாரமும் மகாரமும் விட்டலர்ந்த மந்திரம் வீணாத்தண்டினூடு போய் அட்டவர்க்கரத்துளே அமர்ந்ததே சிவாயமே. -சித்தர் சிவ வாக்கியர் உச்சிக்கிடை நடுவே ஓங்குங் குருபதத்தை நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம். -பத்திரகிரியார் நாலு தெருவினிலே நாலு கம்பம் நடுத்தெருவினிலேயோர் பொன்னுக் கம்பம் போலும் விளங்குபொன்னுக் கம்பத்தினுக்கே பூமாலை சூடியே நின்றாடாய் பாம்பே.-பாம்பாட்டி சித்தர்
ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்- பாம்பாட்டி சித்தர் கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ்வார் போல மெய்விளக்குன்னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே- இடைக்காட்டுச் சித்தர்
எட்டிரண்டறிந்தோர்க் கிடரில்லை குயிலே- மனம் ஏகாமனிற்கிற்கதி யெய்துங்குயிலே நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளு குயிலே- ஆதி நாயகனை நினைவில் வைத்தோது குயிலே. - இடைக்காட்டுச் சித்தர்அகாரமித்தனையும் அகப்பேய் அங்கென்றெழுந்தடி உகாரங் கூடியடி உருவாகி வந்ததடி அகப்பேய் - அகப்பேய் சித்தர் தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை யேதுக்கடி- குதம்பாய் பின்னாசை யேதுக்கடி உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் மச்சுக்கு மேலேறி வானுதிரத் தானெடுத்துக் கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே வச்ச மறந்தல்லோ என் கண்ணம்மா....
- அழுகணி சித்தர்
ஓமென்ற அட்சரந் தானுமுண்டதற்குள் ஊமையெழுத்து மிருக்குதடி நாமிந் தெழுத்தை யறிந்து கொண்டோம் வினை நாடிப் பாரடி வாலைப்பெண்ணே. ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும் ஓமென்றெழுத்தே யுயிராச்சு ஆமிந் தெழுத்தை யறிந்து கொண்டு விளை யாடிக் கும்மி யடியுங்கடி- கொங்கண சித்தர்
எட்டிரண்டு மொன்றுமது வாலையென்பார் இதுதானே பரிதிமதி சுழுமுனை யென்பார் ஒட்டிமுறிந் தெழுந்தது முக்கோணமென்பார்...- கருவூரார் பூஜா விதி
எண்ணிறைந்த அட்சரத்தினியல்பு காணார் எட்டிரண்டு மறியாமல் ஏக மென்பார்- நிஜானந்த போதம்
நிறைய சித்தர்கள் பாடல்கள் இங்கு உள்ளன, இவை அனைத்தும் கூறும் உட்கருத்து அல்லது பொருளை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் -கருணை யினால் பார்ப்போம்.
எட்டும் இரண்டும் விளக்க உரை:
அகாரம் உகாரம் மகாரம்- இம்மூன்றும் சேர்ந்தால் பிரணவமாகிய ஓம் காரம் ஆகும். இறை, உயிர், தளை அதாவது பதி, பசு, பாசம் இவற்றைச் சீடன் நன்கு அறிந்து கொள்ளுமாறு பயிற்றுவது அவனைத் தடுத்தாண்டுக் கொண்ட குருவின் கடமையாகும். எட்டாகிய ‘அ’ என்பது உடலைக் குறித்தால் ( மனித உடம்பு எண் சாண் அளவு என்பதும் ஈண்டு ஒப்புநோக்குதற்கு உரியது), இரண்டாகிய ‘உ’ என்பது இறையைக் குறிக்கும்.
அகாரம் உயிரே உகாரம் பரமே என்று திருமந்திரம் கூறுகிறது. எனவே தன்னை உணர்ந்து தலைவனை அறிவதற்கு குரு பாலமாக அமைகிறார். தன்னையறிவது என்பது சூக்கும சரீரத்தை அறிவது, தலைவனை அறிவதென்பது இறையை அறிந்துக்கொள்வது.
சூக்கும சரீரம் என்பது தன்மாத்திரைகள் என்கிற ‘ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பனவாம்’. இதனுடன் அந்த கரணங்களில் மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் சேர்ந்து எட்டாகிறது. எட்டாகிய சூக்கும சரீரமும் இரண்டாகிய ஆன்மாவும், சேரும் போது பத்தாகிய பதி- சிவ தரிசனம் கிடைக்கப்பெறுகிறது.
எனவே குருவருளால் காமம், குரோதம், லோபம், மோகம், மத, மாத்சர்யம், அகங்காரம், மற்றும் மமகாரத்தை நீக்கும் பொழுது சும்மாயிருக்கும் சுகம் ஏற்பட்டு, நுண்ணுடலாகிய ஆன்மாவின் முழு ஒளியைக் கண்டு, அவ்வான்ம ஒளியில் பரமான்ம- அருட்பெருஞ்ஜோதியும் ஒன்றாய் இருப்பதை உணர்வர். அவர்களே இரண்டற்ற ஒன்றை உணர்ந்தோர் ஆவார்கள்.
இதுவே அ+உ= ய என்பதாகும். பிறவிப் பெருங்கடலை நீக்கி இறைவனடி சேர்வதாகும். சுத்த சன்மார்க்கமோ இறைவனடி சேர்வது மட்டுமல்லாமல், இறைவனின் உடல், பொருள், ஆவியை மாற்றிக்கொள்வதாகும்.
இதனை அடுத்தப் பகுதியில் மேலும் பல திருவருட்பா பாடலுடன் விளக்கம் காண்போம்.
தொடரும்...,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி:
எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்
************