அருட்சபையில் வள்ளலார்-3
எட்டும் இரண்டும்
எட்டும் இரண்டும் ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மற்றும் அருளாளர்கள் எட்டும் இரண்டும் கூடுவதற்காக நெடுங்காலம் பயிற்சியில் ஈடுபட்டு முடிவில் வெற்றிக்கொண்டிருக்கிறார்கள். யோக சாதனையில் எட்டும் இரண்டும் முடிவு நிலையாகக் கருதப்படுகிறது. சுத்த சன்மார்க்கத்தில் இவற்றின் நிலை என்ன? என்பதை ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் பாதம் வணங்கி ஒரு ஆய்வை இங்கு எடுத்துக்கொள்வோம்.
எட்டும் இரண்டும் சேர்ந்தால் பத்து. இதனை தமிழில் ”ய” என்று கூறலாம். யோக சாதனையில் எட்டும் இரண்டும் கூடுமிடம் புருவ மத்தி. இதன் கடவுள் சதாசிவன். சைவத்தில் பஞ்சாட்சர மந்திரத்தின் நமச்சிவாய” என்ற எழுத்தின் கடைசி எழுத்து ய. தமிழில் எட்டு என்ற எழுத்து அ, இரண்டு என்ற எழுத்து உ ஆகும். இவற்றோடு மகரம் சேர்ந்து அ+உ+ம்= ஓம் என்று ஆகிறது. இந்த ஓங்காரமே பிரபஞ்ச சக்தியாகி உலக இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.
திருமூலர் திருமந்திரத்தில்:
எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கெனப்பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமேநான்கு அந்த கரணங்கள், இரு மூன்று ( ஆறு) ஆதாரங்கள் கடந்த நிலை எட்டும் இரண்டும் , இது சித்தாந்த சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.
மெய்கண்ட சாத்திரம் என்கிற சிவஞான போதம் இதனை:
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள்- சிட்டன்சிவாயநம் வென்னூந் திருவெழுத்தஞ்சாலேஅவாயமற நின்றாடுவான்
பொருள்:
எட்டும் இரண்டும் உருவான யகாரமாகிய லிங்கத்தில் பரமசிவன், சிவாயநம என்னும் திருவெழுத்தஞ்சாலே அவாயம் அற நின்று ஆடுவான். ஆன்மாக்களின் பிறவியறுப்பான் என்று கூறுகிறது
மேலும் :
அகாரம் உகாரம் அகங்காரம் புத்திமகாரம் மனம் சித்தம் விந்து-பகாது இவற்றைநாதம் உளவடிவாம் நாடில் பிரணவமாம்போதம் கடற்றிரையே போன்று.
எண்நிலவ ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம்நண்ணிய விந்துவொடு நாதத்து- கண்ணில்பகர் அயன்மாலொடு பரமன் அதிதெய்வம்அகர உகரம் மகரத்தாம்.
பொருள்:
சிவஞான போதத்தில் அந்த கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், மற்றும் அகங்காரம் ஒன்றுப்பட்டு நாத வடிவில் இருக்கும் இறையை ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞா சக்கரத்தில் நாடுவது எட்டும் இரண்டும் ஆகிய பிரணவமாம். அகரமும் உகரமும் மகரமுமான இடத்தின் அதி தெய்வம் சோதி சொரூபனான சதாசிவம். என்பதே இவ்விரு பாடல்களின் பொருள்.
ஸ்ரீ அருணகிரி நாத சுவாமிகளும் இதனை திருப்புகழில்:
கட்டி முண்டகர பாலி யங்கிதனை முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக்கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமற்
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத ...... முறமேவித் துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில் வச்சி ரங்களென மேனி தங்கமுற சுத்த கம்புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ எட்டி ரண்டுமறி யாத என்செவியி லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு ...... முருகோனே எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் ...... விடுவோனே செட்டி யென்றுசிவ காமி தன்பதியில் கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே செட்டி யென்றுவன மேவி யின்பரச சத்தி யின்செயலி னாளை யன்புருக தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே.
இங்கு:
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் ... எட்டும் இரண்டும் பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில்
எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என ... இவையே சிவக் குறியாகிய இலிங்கம் என்று
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே ... அந்த அகார உகார மகார இலக்கணங்களைத் தெளிவாக உபதேசித்த குருவான முருகோனே என்ற அருணகிரிநாதரின் பாடல் ஈண்டு ஒப்பு நோக்குதற்குரியது.
எட்டும் இரண்டும் பற்றி திருவள்ளுவ நாயனார் ஞானவெட்டியானில்:
எட்டிரண்டும் பத்து விளிய தொருதீட்சை அஷ்டமா சித்தி விளையாடு- மிஷ்டமுடன் ஐயஞ்சு மாற அவனி முதல்வான மெய்யிதுபார் ஜெகவசிய மேல்.பொருள்:
யோக தீட்சை மூலம் எட்டும் இரண்டும் என்பதை அறிந்து பின்பு அதனைக் கூடினால் அஷ்டமா சித்திகள் முதல், ஜெகத்தையே வசியப்படுத்தும் சித்தி கிடைக்கும்..
எனவே மனித தேகத்தில் மட்டுமே சிவயோக செய்யக்கூடும் என்றும் எட்டும் இரண்டும் கூடும் நிலை சிவயோகம் என்றும் பல சாஸ்திரங்கள் கூறுகிறது. இப்பொழுது மீண்டும் இதற்கான ஆதாரத்தை திருமந்திரம் மூலம் பார்ப்போம்.
திருமந்திரம் இதனை:
"எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின் எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்." பொருள்:உடலையும் உயிரையும் சேர்க்கும் முறையை அறிவினால் அறிந்தால் உடலும் உயிரும் லிங்கம் (சிவம்) ஆகும் என்பது இறவாநிலை ஆகும். உயிர் உடலை பிரியாவிட்டால் இறப்பு வராது. இறப்பு வரவில்லை என்றால் பிறப்பு வராது. (அ+உ=ய) இதுவே ஆன்மாவாகிய இலிங்கமாகும்.
திருவாசகத்தில் :
கட்ட றுத்தெனை யாண்டு கண்ணார நீ றிட்ட அன்பரொ டியாவருங்காணவே பட்டி மண்டப மேற்றினை யேற்றினை எட்டினோடிரண்டும் மறியேனையே.பொருள்:
அறிவற்று எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்து பட்டிமண்டபத்தில் ஏற்றியது தன்னைத் தான் அறிந்துக் கொள்வது என்பதாம். அ, உ அறியா அறிவிலிடைமகனே என்று சான்றோர்கள் கூறுவதும் இங்கு ஈண்டு நினைத்தற்குரியது.
அதனால் தான் திருவள்ளுவர் இதனை:
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.என்றும்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.என்றும்
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லாதவர்க்குஎன்றும் கூறுகிறார்.
ஆகவே மனித நிலையில் இருந்து தெய்வ நிலையை அடைவதற்கும், பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கும் எட்டும் இரண்டும் பெரிதும் துணை புரிகிறது என்பதை யோகிகள், சித்தர்கள், அருளாளர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் ஒத்த கருத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
திருமந்திரம் இதனை:
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே. என்று உடலும் வளர்கிறது; உடலுள் உள்ள உயிரும் வளர்கிறது. உயிரை வளர்க்கும் உத்தமனும் வாழ்கின்றான் என்கிறார்.ஔவைக்குறளும் :
"உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண். பொருள்:சரீரத்தை அடைந்ததினாலுண்டாகிய எல்லாம் பிரயோஜனங்களும் புருவ மத்தியில் உள்ள சிவத்தைக் காண்பதற்கே யாகும்.
இவ்வாறு சித்தர்கள், யோகிகள், ஞானிகள், அருளாளர்கள் கண்ட முடிவு நிலை சுத்த சன்மார்க்கத்தின் முதல் படி என்று ஞானகுரு வள்ளல் பெருமானார் கூறுகிறார். அனைத்து யோக மார்க்கமும் முடிவு நிலையாக- உச்ச நிலையாகக் கொண்ட நிலை வள்ளல் பெருமானாருக்கு முதல் நிலையாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
எட்டிரண் டென்பன வியலுமுற் படியென அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி - அகவல்-தொடரும்..,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிதகவல் உதவி:
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை