அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி பரஞானம்- முடிவுரை
தியானம்- தவம்- சமாதி
தியானம்- தவம்- சமாதி
நன்னா லுங்கடந்தே ஒளிர் ஞானச பாபதியே பொன்னாரு ஞ்சபையாய் அருட்பூரண புண்ணியனே என்னால் ஆவதொன்றும் உனக்கில்லையெனினுமெந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்குண்மை உரைத்தருளே -திருவருட்பா வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன்போக மேவல் உருவாய சத்தி பரத்தியான முன்னுங் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. -திருமந்திரம்
நன்னாலும் கடந்தொளிர் ஞான சபாதியே என்று தில்லையில் திருநடம் புரியும் இறையை விளிக்கிறார் சமரச சன்மார்க்க வழிகாட்டியான வள்ளலார். அந்தப் பதினாறு தத்துவங்கள் எவை என்பதை இங்கு காண்போம்.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண், ஆகிய பூதங்கள் ஐந்து.
ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம், ஆகிய தன்மாத்திரைகள் ஐந்து
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கரணங்கள் நான்கு
உயிரைப் படைத்தவனை அறியாவண்ணம் மறைக்கும் மாயை ஒன்று
புருடனாகிய உயிர் ஒன்று
இந்த பதினாறு மெய்களையும் கடந்து நிற்பவன் இறை. அவன் அவற்றுடன் கலந்து நிற்கும் உண்மையை அறிய, உணரச் செய்வதே தியானம். அவனை உள்ளத்தில் நிறுத்தி இடைவிடாது நினைத்திருப்பதே தியானம்.
மாயையை வீழ்த்தும் ஆற்றல் புத்தியாகிய பகுத்தறிவுக்கே உண்டு. அந்த அறிவைப் புலன்வழிப் போகவிடாது அருளே உருவாகிய இறையை நினைத்திருத்தல் உருவத் தியானம் ஆகும். அறிவே உருவான சிவத்தை நினைத்திருத்தல் அருவத் தியானம் எனப்படும்.
ஆனாலும் எல்லா உயிர்களிடத்தும் இறைவன் இருக்கிறார் என்று எவ்வுயிரையும் தம்முயிர்ப் போன்று நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பே நிறைந்திருப்பவர்கள் யோகத்தால் உணரக்கூடிய பதினாறு தத்துவங்களையும் கடந்திருக்கிறார்கள் என்பது வள்ளல் பெருமானாரின் வாக்கு. தியானம், யோகம் முதலியவைகளால் கிடைக்கும் ’நிராசை’ இவர்களுக்கு ஏற்பட்டு அகப்பற்று நீக்கி புறப்பற்றுக்கொண்டு எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று சதா சர்வ காலமும் சிந்தையில் நினைத்திருப்பவர்கள் சன்மார்க்க சான்றோர். இவர்களுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே குருவாக அமர்ந்து சகல ஞானத்தையும் வழங்குகிறார்.
சாருலக வாதனையைத் தவிர்த்தவர் உள் அகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவே நேருறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் நித்தியவான் பொருளையெலா நிலைகளும் தானாகி ஏருறவே விளங்குகின்ற இயற்கையுண்மை தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்களித்த பதியை ஓருறவென்றடைந்துலகீர் போற்றி மகிந்திடுமின் உள்ளமெல்லாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
சன்மார்க்க சான்றோர்கள் அகப்பற்றை நீக்கி எக்காலத்திலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தன் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதாலும், எல்லா செயல்களும் அவரருளால் நடந்துக்கொண்டிருக்கிறது என்ற தற்சுதந்திரமின்மையாலும் அவர்களுக்கு ஞான சமாதி நிலை ஏற்படுகிறது.
இதனை திருமூலர்:
தவம்வேண்டும் ஞானம் தலைப்பட வேண்டில் தவம் வேண்டா ஞான சமாதிகை கூடில் தவம் வேண்டா மச்சகமார்க்கத் தோர்க்கு தவம்வேண்டா மாற்றந் தனையறியாரே.
இந்த பாடலுக்கான பொருளை சுமார் 250 வருடத்திற்கு முன் வாழ்ந்த சித்தர் திருவாரூர் மடப்புரம் தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் தன்னுடைய சூட்சும தேகத்தின் மூலம் இப்பாடலுக்கான விளக்கத்தைக் கீழ்வருமாறு தருகிறார்.
ஒருவனுக்கு அஞ்ஞானம் நீங்கி ஞானம் தலைப்பட வேண்டுமானால் அவன் தவ வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இறைவனைத் துதித்து, அவன் புகழைப் பாடித் தவத்தைச் செவ்வனே செய்யும் மாந்தர் எதிர்காலத்தில் நிகழக்கூடிய நிகழ்ச்சியைப் பற்றியும், இம்மை, மறுமையின் உண்மைப் பற்றியும், நல்லவை அல்லவைப் பற்றியும் இறைவன் திருவடிப் பற்றியும் அதைத் தொழுதலால் வரும் பயன்களைப் பற்றியும் அறிந்திருப்பர். இத்தகைய அறிவைப் பெற தவம் அவசியமாகிறது.
இத்தகைய சிறப்பைத் தருகின்ற தவம் ஒரு சிலருக்குத் தேவையில்லை. அவர்கள் யாரெனின் ஞான சமாதியை அடைந்த சித்தர்களே ஆவர். அவர்களுக்கு ஏன் தவம் தேவையில்லையெனில் அவர்கள் இறைவனைப் பற்றி முழுமையும் அறிந்து அவனடி சேரும் பக்குவம் பெற்றிருப்பர். எனவே அத்தன்மையைக் கொடுக்கக்கூடிய தவம் அவர்களுக்கு தேவையில்லை.
சன்மார்க்க நெறியில் சிறந்த பெரியோர்கள் இறைவனின் நாமத்தையே உச்சரித்து, அந்நாமத்தை பிறருக்கும் உபதேசிப்பதன் காரணமாகப் புண்ணியம் பெறுபவர்கள் ஆகின்றார்கள்.
தவம் ஒருவருக்குத் தான் இறைவனின் திருவடியைப் பற்றிக்கொடுக்கும். ஆனால் சன்மார்க்கப் போதனைகளோ பலருக்கும் இறைவனின் திருவடிகளை உணர வைக்கும். இக்காரணங்களால் சன்மார்க்க நெறியில் வாழும் பெரியோர்கள் தவம் இல்லாமலே இறைவனைச் சேரும் பேறு பெறுகிறார்கள். எனவே தவம் அவர்களுக்கு தேவையில்லை.
ஆனால் இன்று ஒரு சிலர் சன்மார்க்கத்தில் இருப்பவர்களையும் குறை கூறி வாழ்கின்றனர். தியானம், யோகம் மட்டுமே அனைத்து வித யோகங்களையும், நிலைகளையும் கடக்கும் என்று கூறிவருகின்றனர். ஆனால் நமக்கு தெரிந்தது என்ன? தெரியாதது என்ன? என்பதையும் , நாம் செல்ல வேண்டிய பாதை என்ன? என்பதையும் தெரிந்தவர் ஞானகுரு வள்ளல் பெருமானே ஆவார். ஆகவே யாரையும் குறைத்து மதிப்பிட்டு நான் என்ற மாயை பிடியில் சிக்கிக்கொள்ளாதீர்.
தற்சுதந்திரமின்மையால் ஞானகுரு வள்ளல் பெருமானைத் தொடர்புக்கொள்ள முயற்சி செய்யுங்கள். “நான் என்ற பேதத்தை நீக்கி” அவரிடமே தினமும் சத்விசாரம் செய்து வந்தால் ஒருவர் செய்ய வேண்டியப் பணியை அவரே குருவாக இருந்து போதிப்பார். சகஜ நிலையில் ஞான சமாதியை அடையத் துணைபுரிவார், இது யோக சமாதியை விடச் சிறந்தது. இதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
-முற்றும்-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி:
1.எல்லாம் வல்ல ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்
2. திருவாரூர் மடப்புரம் தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்
Write a comment