அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பர ஞானம்- IX
மௌனமும்- அருட்ஜோதியும்
தனுகரணாதிகள் தாம் கடந்து அறியுமோர்
அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி
உனுமுணர் உணர்வாய் உணர்வெலாங்கடந்த
அனுபவாதீத அருட்பெருஞ்ஜோதி
- அகவல்
மனிதன் ஏன் பிறந்தோம்? என்பதை எண்ணிப் பார்க்காமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எந்தக் குறிக்கோளும் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்வதால்தான், பிறவி எடுத்தப் பயனை அறியாமல், மீண்டும் மீண்டும் பிறவியாகிய பெருந் துன்பத்தில் சிக்கி அழிகின்றான். ஐம்புலன்களையும் கட்டுபாடின்றி உலக இச்சைகளில் செல்லுவதால் அவனுடைய பிராண சக்தி வீணே கழிந்துவிடுகின்றது.
தேவையற்ற எண்ணங்களை எண்ணுவதாலும், அர்த்தமற்றச் சொற்களைப் பேசுவதாலும், பிறர் மனம் புண்படும் படி வார்த்தைகளைக் கொட்டுவதாலும், செய்கையாலும் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டு இன்பம் கொள்வதாலும், ஒருவனுடைய பிராண சக்தி பாழாகிறது.
ஐம்புலன்களில் ஒன்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலே மனிதனுடைய பிராண சக்தி சேமிக்கப்படுவதுடன் மென்மேலும் சேரவும் செய்கிறது. உதாரணமாக நாக்குப் புரளுவதால் உண்டாகும் பேச்சைக் குறைத்தாலே அவனது ஆன்ம சக்தியானது பெருகும்.
ஆன்ம சக்தியை கூட்ட பேச்சையும், உணவையும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அவசியமாகிறது. அதனால் தான் வள்ளல் பெருமானார் உணவு கட்டுப்பாட்டைப் பற்றி மிகவும் அதிகமாக தன்னுடைய உரைநடைப் பகுதியில் கூறியுள்ளார். சுருக்கமாக கூறினால்; மௌனத்தைக் கடைபிடித்தால் மதியில் தெளிவுப் பிறக்கும். மதியில் தெளிவு உண்டானால் ஒருவனுக்கு ஒளியைக் காணும் பேறு ஏற்படுகிறது.
இதனை வள்ளல் பெருமானார்:
தனுகரணாதிகள் தாம் கடந்து அறியுமோர்
அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி
உனுமுணர் உணர்வாய் உணர்வெலாங்கடந்த
அனுபவாதீத அருட்பெருஞ்ஜோதி
என்று குறிப்பிடுகிறார். இந்திரியங்களும், கரணங்களும் சதா சர்வ காலமும் செயல்பட்டுக்கொண்டே இருந்தால் ஒருவனுக்கு இறை அனுபவம்- அக அனுபவம் ஏற்படுவதில்லையாம். இந்நிலைகளை கடந்து சுத்த அறிவு மட்டும் செயல்படுகின்றபோது அறியக் கூடிய ஓர் அனுபவம் அருட்பெருஞ்ஜோதி என்கிறார்.
இதனை வேறொருஇடத்தில்
விட்டகன்று கருமமல போதம் யாவும் விடுத்து
ஒழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
சுட்டகன்று நிற்க அவர் தம்மை முற்றும்
சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத் தேவே.
-திருவருட்பா
திருமந்திரமும்:
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப்பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திறவாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையுமாமே.
-திருமந்திரம்.
ஆகவே மௌனமே இறைக்கு உகந்த மொழி- மௌனத்தால் இறையுடன் விசாரம் செய்யும் விசாரமே சத்விசாரம். சத்விசாரம் என்ற பெயரில் பிற நிலைகளையும், பிற மதத்தினரையும், பிற மார்க்கங்களையும் குறைக் காணுவது விசாரமாகாது.
கரணங்கள், இந்திரியங்கள் கடந்து தான் அருட்பெருஞ்ஜோதி உணர்வை அடைய முடியும். அந்நிலையில் மட்டுமே சிவஒளியுடன் தன்னுடைய சீவ ஒளியும் ஒன்றிருப்பதைக் கண்டு இன்புறமுடியும் என்று கூறிய வள்ளல் பெருமானை ஞானகுருவாக ஏற்று நாமும் அவ்வுணர்வைக் காண முயற்சிச் செய்வோமாக!
தொடரும்..,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்
2. திருவாரூர் மடப்புரம் தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்