Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
இறைவன், கடவுள், பரம்பொருள் - சரியானப் பெயரா?

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

கண்ணுக்குத் தெரியவில்லை; தொட்டும் உணர முடியவில்லை; அறிவுக்கும் புலப்பட வில்லை; வளரும் விஞ்ஞானத்தாலும் அறிந்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட முடியவில்லை.

இறைவன், கடவுள், பரம்பொருள் -சரியானப் பெயரா?

ஒன்றே குலம், ஒருவனே தேவன்- திருமூலர் வாக்கு, அந்த ஒரு தேவனை, ஒப்பில்லாப் பதியை எல்லாம் வல்ல இறைவன் என்கிறோம். இறைவன் ஆணா அல்லது பெண்ணா? இறைவன் என்ற ஒரு சொல்லை பயன்படுத்தலாமா? கடைசி எழுத்து ’ன்’ ஆண்பாலைக் குறிக்கிறது. அப்படியாயின் மனிதன், ஆண்மகன், இறைவன் எல்லாமே ஒன்றுதான்.

அப்படி ஆக முடியுமா? முடியாது. ஏன் என்றால் ஒன்று, ஆண்கள் எல்லோரும் இறைவனுக்குச் சமமாகி விடுவார்கள்; அல்லது இறைவன் ஆண்மகனுக்குச் சமமாகிவிடுவான். ஆக, மனிதனை மட்டுமல்ல அண்ட சராசரத்தைப் படைத்த ஒன்றை ஆண்மகனாக-ஒரு சாதாரண மனிதனாக- குறிப்பிடுவது முற்றிலும் தவறேயாகும். பின் எப்படி இறைவனைக் குறிப்பிடுவது? இப்படிப் பார்க்கப் போனால் இறைவன் என்ற சொல்லே தவறானச் சொல் என்றல்லவா ஆகிவிடுகிறது. சரி; ஏதோ ஒரு பெரிய விஷயம் நமக்கு மேல் இருக்கிறது. அவ்விஷயம் உயிர் இனத்தையும், உலகை மட்டுமல்ல அண்ட சராசரத்தையே நிர்வகிக்கிறது என்று சொல்வோமே யானால் அதுவும் தவறாகிவிடுகிறது. ஏனென்றால் ’நிர்வகிக்கிறது’ என்ற சொல்லில் உள்ள கடைசி எழுத்தான ’து’ இறைவனை ஒரு பொருளாக மாற்றிவிடுகிறது. அப்போது ஐந்தறிவு விலங்கினங்களுக்கும் உயிரற்ற பொருள்களுக்கும் இணையாக அவ்விஷயம் வந்துவிடும். எனவே அப்பெரிய விஷயத்தை அது, இது என்றச் சொல்லால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

பின் எப்படித்தான் அழைப்பது?

கண்ணுக்குத் தெரியவில்லை; தொட்டும் உணர முடியவில்லை; அறிவுக்கும் புலப்பட வில்லை; வளரும் விஞ்ஞானத்தாலும் அறிந்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ஒன்றுமே இல்லை என்றுச் சொல்லிவிட முடியவில்லை.

சரி; இயற்கை என்று சொல்வோமா? சொல்ல முடியாது. ஏனென்றால் ஆள் அரவம் அற்ற இடத்தில் தோன்றுகின்ற ஓரணு உயிர் முதல், விதை ஏதும் போடாமல் தானாக முளைக்கின்ற செடி, கொடிகள் வரை , யார் சொல்லையும் கேட்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் பூமி, சந்திரன், சூரியன், இரவில் ஒளியைப் பொழியும் நட்சத்திரக் கூட்டங்கள் எல்லாமும் சேர்ந்து இயற்கை ஆகிவிடும்.

ஆனால் இவற்றையெல்லாம் படைத்ததும், இவற்றிற்கு மேலே உள்ளதுமான ஒன்றை எப்படி இயற்கை என்று சொல்ல முடியும்? ஆகவே இயற்கை என்று சொல்வதும் தவறாகும்.

ஆக மொத்தத்தில் இறைவன் என்ற சொல் தவறு; அது; இது; என்று சொல்வதும் தவறு; இயற்கை என்று சொல்வதும் தவறு.

அப்படியாயின் எப்படிச் சொல்வது சரியாகும்? பரம்பொருள் என்று சொல்கிறோம். ஆக இறைவன் ஒரு பொருளாகி விடுகிறான். மேசை, நாற்காலி போல, எனவே அதுவும் தவறு. என்ன எடுப்பதெல்லாம் தப்பாக வருகிறதே!

சரி; கடவுள் என்கிறார்களே. உள்ளத்தைக் கடந்தவன் கடவுள். அதாவது உள் + கட = கடவுள். முற்றும் துறந்த முனிவன் கூட உள்ளத்தைக் கடந்து இருக்கின்றான். அப்படியானால் அவனும் கடவுளும் ஒன்றா? ஒன்றாகிவிட முடியுமா? அப்படியாயின் கடவுளை வேறுபடுத்தி எப்படிக் காண்பது? எனவே கடவுள் என்ற சொல்லும் தவறு.

ரொம்பவும் யோசித்து தெய்வம் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார் திருவள்ளுவர். அன்னையும் பிதாவும் முன்னறித் தெய்வம் என்கிறார் தமிழ் மூதாட்டி. தெய்வம் தொழாள் என்றார் வள்ளுவர். சரி; தெய்வம் என்று ஏன் உபயோகப்படுத்தினர்? அது தமிழ் சொல்லா? வட சொல்லா? என்ன அர்த்தம்? அதே வள்ளுவன் இறைவனடி சேராதார் என்றும் சொல்கிறார். எனவே எது சரி.

தெய்வம் என்பதன் உண்மைப் பொருள் என்ன? இலக்கண நடையில் பிரித்துப் பார்த்தால் என்ன பொருள் கிடைக்கின்றது. அதைப்பகுக்கவே முடியாது. எனவே தெய்வமும் பொருள் இல்லாத ஒரு சொல்லாகி அல்லவா போய்விடுகிறது.

எந்த ஒரு வார்த்தையும் பிரிக்க முடிந்து, பொருள் தெரிந்து உள் அர்த்தம் கொண்டாலேயே அது பொருள் பொதிந்த சொல்லாகும். ஈண்டு, பிரிக்கவும் முடியவில்லை, பிரித்தாலும் சரியான பொருள் கிடைக்கவில்லை.

ஆண்டவன்’ இது சரியா? மனிதர்களை ஆண்ட அரசனும் ஆண்டவன் தான். நிலங்களை வெற்றிக் கொண்ட அரசனும் ஆண்டவன் தான். ஆக ஆண்டவன் என்ற சொல்லும் தவறு.

ஈஸ்வரன் என்பது வடசொல். ஈபவன்; ஒன்றை இன்னொருவனுக்குக் கொடுப்பவன்; அதிலும் கடை எழுத்து ’ன்’

எனவே சுட்டிக்காட்ட முடியாத, சொல்லுக்கு அப்பாற்பட்ட , குறிக்க முடியாத, ஒப்பு உவமை இல்லாத, ஒன்றே பலவாகி, அப்பலவே ஒன்றாகி நிற்கின்ற , ஊன உடலால் உணர முடியாத , அறிவுக்கு எட்டாத , கண்ணில் புலப்படாத, ஞானத்துக்கு மட்டுமே எட்டக்கூடிய இறை எளியோனாகி, சாதாரண மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மனிதனாகி, அவனாகி, அதுவாகி, அவராகித் தன் அருளைப் பரப்பிவிட்டு, மனிதர்களிடத்தே தன்னை அறிந்துக் கொள்ளும் நிலைக்காக மனிதனாகி, ஒவ்வொருவருடைய மனத்திலும், உள்ளத்திலும், எண்ணத்திலும், செயலிலும், வினையிலும், சொல்லிலும், பொருளிலும், உயர்திணையிலும், அஃறிணையிலும் குடிக்கொண்டு, ஜீவாத்மாவை ஏற்படுத்திவிட்டு, எல்லா உயிரிடத்தும் இருக்கின்றான்; உன்னிலும் இருக்கின்றான், என்னிலும் இருக்கின்றான் என்ற ஒன்றை உண்டாக்கிவிட்டு, மீண்டும் பேரானந்த ஒளியில் பரமாத்வாகக் கலந்துவிடுவதால் இறைவன், பரம்பொருள், கடவுள், ஆண்டவன், ஈபவன், இயற்கை, மூலப்பொருள், பரமானந்த ஒளி, பற்றற்றவன், எளியோன், இரங்குபவன் என்றெல்லாம் சொல்லப்பெற்று, இல்லத்துக்குத் தலைவனாக கோவிலில் அமர்ந்ததால் பதி என்னும் பெயர் பெற்று, பதி ஆனதால் ஆண் மகனாகி, உயிரினங்கள் வணங்க ஒரு வழி ஏற்படுத்திவிட்டுச் சென்றதால் இப்பெயர்களால் அப்பேரானந்தப் பெயரும் பெற்றது. அஃறிணையாகவும் தன்னை ஆக்கிக்கொண்டது. அருட்பேரொளியாகவும், அருட்பெருஞ்ஜோதியாகவும் நிற்கின்றது. பரமாத்மா ஆனது. ஜீவனின் முடிவைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு அளவிட முடியாமல் இருக்கின்றது.

நல்லது. முடிவுரைக்கு வருவோம், இறை அல்லது சிவம் என்பதே சரியான சொல்லாம். அருளை உலகத்துக்கு இறைக்க வந்ததனால் இறைவன் என்றும் அருளே தம் குணமாக கொண்டதினால் அருட்பெருஞ்ஜோதி என்றும் கூறப்படுகிறதாம்.

தகவல் உதவி:

1. எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணை

2. திருவாரூர் மடப்புரம் தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்

3. திரு. கி.நாகராஜன், நாகப்பட்டினம்( தெட்சிணாமூர்த்தி சுவாமிகளின் சீடர்)