Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
பர ஞானம்-III

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

பரஞானம்-III

ஒரு குழந்தைக்கு எந்த அளவிற்கு உணவு தேவை என்பது ஒரு தாயாருக்கு மட்டுமே தெரியும். அது போல் முழுமையான சுத்த சன்மார்க்க வாழ்வில் ஈடுபடும் நம்மவர்களுக்கு அவர்களுடைய பக்குவத்திற்கும் ஞானப்பசிக்கும் ஏற்பவே ஞானஅமிர்தத்தை ஸ்ரீ வள்ளல் பெருமானார் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சத்திய வழியான சன்மார்க்கத்தில் ஈடுபடும் நம்முடையீர் எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானாரிடம் முழுமையான சரணாகதி அடைந்து தங்களுடைய சுதந்திரங்களை அவரிடம் ஒப்படைத்து எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் அவருடைய அருளியியல் நெறியில் இருந்து விலகாமல், (உலகியியலில் பிற உயிரினங்களுக்கும் , மனிதர்களுக்கும் எவ்விதமான துன்பத்தையும், மன உளச்சலையும் கொடுக்காமல்) தயவு வாழ்க்கையில் வாழ்ந்து பிற உயிர்களுக்கும் , சக மனிதர்களுக்கும் தொண்டு செய்து வாழும் போது அவன் நித்திய இன்பமுடையவனாகிறான் - உத்தமனாகிறான். மன்= நித்திய, நிலையான, இதன்= இன்பமுடையவன்.

இதனை திருமந்திரமும்:

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற

ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற

காண்டகை யானொடுங் கன்னி யுணரினும்

மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.

மக்கள் காலத்தை நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் என்று கணக்கிடுகிறார்கள் அல்லவா? சந்திரனுக்கும் நாள்களுக்கும் தொடர்பு உண்டு. வளர்பிறை பதினைந்து நாள்கள்; தேய் பிறை பதினைந்து நாள்கள். இரண்டும் சேர்ந்து ஒரு திங்கள் ( மாதம்) திங்களாகிய சந்திரனும் சூரியனும் சிவத்தின் இரு கண்கள். எனவே காலத்தை அளப்பவன் பரம்பொருள். காலத்தைக் கடந்து நிற்பவனும் அவனே. அவனை பிரியாதவள் அருள் சக்தி- மனோன்மணி.

என்னை ஆண்டருளும் சிவத்தை இடையறாது ஒருமனப்பட்டு எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று வேண்டியவனாய் நிறைந்த நெஞ்சில் வைத்து வழிப்பட்டு வந்தேன், அதனால் சஞ்சிதம் என்று சொல்லப்படும் முன்பிறவி வினைகளும் பிரார்த்தம் என்று கூறப்படும் இப்பிறவி வினைகளும் அழிந்தன. ஆகாமியம் என்ற பிற்பிறவி வினைகள் இல்லாதொழிந்தன என்கிறார் திருமூலர்.

எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தன்னுடைய பூரண அருளை வழங்கவே இவ்வுலகில் நம்மை ஈண்டு வரவழைத்து, மன் இதன் மனித நிலையை அளித்துள்ளார். இப்பிறப்பின் நோக்கம் : எல்லா உயிர்களையும் இன்புற செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையை பெறுவது மற்றும் அவருடைய திருவடியை நாடுவது. அதற்காக வள்ளல் பெருமானார் கீழ்வருமாறு அனைவரையும் அழைக்கிறார்.

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

எல்லாம் செய் வல்ல சித்தி இறையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்மினிங்கே சமரசசன் மார்க்கம்

அடைந்திடுமின் அகவடிவிங்கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிரொளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேற் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையிலாம் தவிர்ந்தே

-திருவருட்பா; ஞான சரியை

ஆகவே அகத்தில் அன்புறு கொண்டு எல்லா உயிர்களையும் பேதமற்று ஆன்ம நேய ஒருமையுடன் பார்க்கும் போது அகத்தில் ஜோதி மிளிருகிறது. அந்த ஜோதி பொன்புடை நன்கு ஒளிர் ஒளியாக இருக்கிறது. வன்புடையாருக்கு இவ்வித அனுபவம் ஏற்படுவதில்லை. பெறற்கரிதாம் என்று வள்ளல் பெருமானார் கூறுகிறார்.

அன்பினால் நெகிந்து நெகிழ்ந்து உருகும் போது,கருணை வடிவான பரம்பொருள் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எல்லா தீமைகளையும் களைந்து ஞான அமுதத்தை வழங்குவார்-(ஞான பூரணம்). அருட்பெருஞ்சோதி அனுபவத்தையும் தந்தருள்வார்.

தொடரும்..,

ஒரு குழந்தைக்கு எந்த அளவிற்கு உணவு தேவை என்பது ஒரு தாயாருக்கு மட்டுமே தெரியும். அது போல் முழுமையாக சுத்த சன்மார்க்க வாழ்வில் ஈடுபடும் நம்மவர்களுக்கு அவர்களுடைய பக்குவத்திற்கும் ஞானப்பசிக்கும் ஏற்ப ஞானஅமிர்தத்தை ஸ்ரீ வள்ளல் பெருமானார் வழங்கிக் கொண்டிருக்கிறார். எனவே சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபடும் நம்முடையீர் கருணை அன்பை சாதனமாக பயன்படுத்தி அருட்ஜோதியை, எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானாரின் தனிப்பெருங்கருணையினால் கண்டு தரிசித்து அவர் பாதம் பற்றுவோமாக!

**************

தகவல் உதவி:

1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்.

2. திருவாரூர் மடப்புரம் ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி