அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பர ஞானம்- II
சாதிகள், மதங்கள், சமயங்கள் கடந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டு சுத்த சிவ சன்மார்க்கத்தில் இருந்துக்கொண்டு எல்லா வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொழும் நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாகவே இம்மார்க்கத்தின் பால் வந்துள்ளோம். எனவே நம்முடைய சங்கல்பம், பற்றுறுதி, தன்னம்பிக்கை ஆகிய இம்மூன்றும் மெய்மையை உணர்த்தும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கொள்ள தேவையில்லை.
எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினாலும், ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார் வழிகாட்டுதலினாலும், சுத்த சன்மார்க்கத்தை சார்ந்த நம்முடையவர்கள் பல பிறவிகளை கடந்து, உணர்ந்து பெறும் ஞானநிலைக்கு இப்பொழுது வந்துள்ளோம். சாதிகள், மதங்கள், சமயங்கள் கடந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டு சத்திய மார்க்கமான சன்மார்க்கத்தில் இருந்துக்கொண்டு எல்லா வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொழும் நாம் பிறவி பயனை தீர்க்கவே இம்மார்க்கத்தின்பால் வந்துள்ளோம். எனவே நம்முடைய சங்கல்பம், பற்றுறுதி, தன்னம்பிக்கை ஆகிய இம்மூன்றும் மெய்மையை உணர்த்தும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கொள்ள தேவையில்லை.
மெய்ப்பொருளை அடைய வேண்டும் , மெய்ப்பொருளை காண வேண்டும் என்ற எண்ணம் நமக்குள்ளே விழிப்படைந்து விட்டது. இந்த எண்ணமே சன்மார்க்கத்தை தேர்ந்தெடுத்து, “அன்பெனுள் அணுவுள் அமைந்த பேரொளி– அருட்ஜோதியே என்பதை உணர்ந்துவிட்டோம். இனி நமது மனதில் இறுதி இலட்சியத்தைப் பற்றிய தெளிவான, சரியான கருத்து இருப்பது மிகவும் அவசியம்.
சரியான வழிகாட்டுதல் இன்றி நம்மாள் எதனையும் உணர முடியாது. மேலும் உருவங்கள், சின்னங்கள், சடங்குகள் , வைராக்கியம் –பிடிவாதமான பற்றுதல் போன்ற ஸ்தூல வகை வழிபாடுகளால் அருட்ஜோதியை காண முடியாது. ஏனெனில் அது உண்மையான பற்றுறுதியை உருவாக்குவதில்லை.
சிலர் ஏதோ ஒரு உந்துதலினாலும், சம்பிரதாய மார்க்கத்தாலும் தாங்கள் பின்பற்றும் வழியையே கண்மூடித்தனமாய் நம்புகின்றனர். எனவே இவர்களுடைய நம்பிக்கைகள் புற சின்னங்களில் மட்டுமே உள்ளது. இவர்களுடைய கண்ணோட்டமும் குறுகிய வழியில் செல்கிறது. ஆகையால் அவர்கள் சமயங்கள் கடந்த நிலைக்கு வர முடிவதில்லை.
மேலும் ஸ்தூலமுறை வழிபாடுகளால் மனதில் பளுவும், ஒரு கடினத்தன்மையும் உருவாகுகின்றன. இவை ஆன்மீக முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் தடையாக இருக்கின்றன. எனவே ஆன்மீக நிலைகளை அடைய ஒரு தகுதியுள்ள குருவின் துணை அவசியமாகிறது. தெய்வீகத் தூண்டுதல் அவர் வழியாகத் தான் வருகிறது. ஆகையால் குருவானவர் மிக உயர்ந்த திறன் படைத்தவராகவும், அனுபவ ரீதியில் உயர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
அவ்வாறு மனித நிலைக்கு மேம்பட்ட நிலையில் இருப்பவர் மட்டுமே உண்மையான குருவாக இருக்க முடியும். அத்தகைய குருவானவர் நம் பாதையில் உள்ள கஷ்டங்களையும், இடர்களையும் நீக்குவார், மெய்மையை உணரச்செய்வார் என்ற அபார நம்பிக்கையும் மிகவும் அவசியம். மேலும் இத்தகைய உத்தம நிலையை அடைந்த வள்ளல் பெருமானாருக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் “ சன்மார்க்க சபை ஒன்று நிறுவி நீ பெற்றிருக்கும் அனுபவத்தை உலகுக்கு தெரிவித்து விடு” என்று கட்டளை இடுகிறார். அதனை எவ்வளவு அழகாக சொல்கிறார் பாருங்கள்.
சத்திய வார்த்தை
ஐயன் அருள் வருகின்ற தருணம் இது கண்டீர்!
ஐயமில்லை ஐயமில்லை ஐயனடி ஆணை
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் , சிற்சபையில்
விளங்குகின்ற சித்தன் எல்லாம் வல்ல ஒரு விமலன்
துய்யன், அருட்பெருஞ்சோதி துரிய நட நாதன்
சுக அமுதன் என்னுடைய துரை அமர்ந்து இங்கு இருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே!
தனித்தலைமைப் பெரும்பதி என் தந்தை வருகின்ற
தருணம் இது, சத்தியங்காண் சகத் தலத்தீர், கேண்மீன்
இனித்த நறுங்கனி போன்றே என் உள்ளம் தித்திக்க
இன் அமுதம் அளித்து என்னை ஏழுலகும் போற்ற
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி
மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே
கனித்த சிவானந்தம் எனும் பெரும்போகம் தனிலே
களித்திட வைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே!
சத்தியவான் வார்த்தை இதுதான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் அத்தினங்கள் எல்லாம் இன்பம் உறு தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை உறும், நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருஅருட்செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே!
எனவே குரு சென்று வெற்றியடைந்த மார்க்கத்தில் நாம் செல்ல விரும்பினால் அவருடைய போதனைகளும், சத்திய மார்க்கமும் நமக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. தன்னலத்தை நாடும் ஒரு போலி குருவிற்கு அடி பணிவதால் நாம் ஆன்மீக பாதையில் வெற்றியடைய முடியாது. கல்விஅறிவு, பேச்சுத்திறன், முதலியவைகளால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கு முன் எப்பொழுது ஒரு ஆட்டு மந்தையைப்போல் கூட்டத்தை கூட்டும் போலி குருமார்களினால் ஒரு போதும் நாம் ஆன்மீக வாழ்வில் சிறக்க முடியாது.
நாம் தேர்ந்தெடுக்கும் குருவானவர் இறைத்தன்மை கொண்டவராகவும், பந்த பாசங்கள் அற்றவராகவும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவராகவும், தற்பெருமை உணர்வுகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். அத்தகைய குரு இலக்கணத்தை உடையவர்கள் மட்டுமே தங்களுடைய சீடர்களையும் மெய்மையை உணரச்செய்வார்கள்.
எனவே குருவானவர் அழியக் கூடியதையும், அழிவற்றதையும் இணைக்கும் ஜீவனுள்ள ஒரு பிணைப்பாக இருந்து அழிவற்ற பரம்பொருளோடு தன்னுடைய சீடனையும் இணைப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனவே அத்தகைய குருவிடம் நாம் ஒரு இணைப்பை ஒரு முறை ஏற்படுத்திக் கொண்டு விட்டால் எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் அதைத் தகர்க்க முடியாது. இப்பாதையின் இறுதிக்கட்டத்தை அடையும் வரை இத்தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது யாதெனின் குருவின் மேல் எல்லையற்ற நம்பிக்கைக்கொண்டு இப்பிறவியில் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அவரிடம் நம்முடைய அனைத்து சுதந்திரங்களையும் ஒப்படைத்து, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ செய்வதாம், இந்நிலையை நாம் அடையும் நேரத்தை –அல்லது காலத்தை எதிர்நோக்கியே பொறுமையுடன் நமது ஞான குருவும் காத்திருக்கிறாராம். இந்நிலைக்கு வந்ததும் அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடத்து நம்மை அழைத்து செல்வார் இது சத்தியம்.
தொடரும்..,
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
மனித நிலைக்கு மேற்பட்ட ஒருவர் தான் குருவாக இருக்க முடியும் என்றால் நிச்சயம் அருட்பெருஞ்சோதி ஆண்டவராக தான் இருக்க முடியும்.
அந்த ஆண்டவர் யார்? , அவர் எங்கு இருப்பார்? ,அவர் தன்மை,வடிவம் என்ன?இப்படி அறிந்து கடவுள் விளக்கம் பெற வேண்டும்.இந்த விளக்கத்தை எப்படி பெறுவது? கடவுள் தன்மை கொண்ட உயர்ந்த மனிதர் மூலமாக தான் பெற முடியும்.அப்படி பட்ட மனிதர் நம் ஜோதி இராமலிங்க வள்ளலார்.கடவுள் அப்படி பட்ட மனிதர் மூலம் குருவாக செயல்படுவார்.அவர்களால் கடவுள் விளக்கம் பெறும் வழி அன்பு வழியில் நமக்கு உணர்த்த படும்.அதனை அறிவதற்கும் நமக்கு தயவு இருக்க வேண்டும்.உண்மையான குருவாக இருக்கும் அப்படி பட்டவர்கள் தன்னை குரு என சொல்ல மாட்டார்கள்.மக்கள் இடையில் நல்ல குடிமகனாக வாழ்ந்து ஆனால் பிற மக்களை காட்டிலும் சிறந்து விளங்குவார்கள்.ஆண்டவனை அன்பு,கருணை,அருள் பண்பாக,தயவு வடிவமாக காணுவார்கள்.பிற மக்களின் ஆத்ம உயர்வுக்கும் வழிகாட்டியாக அமைவார்கள்.எல்லா ஜீவர்களிடமும் கருணையாக நடந்து கொள்ளுவார்கள்.உயிர் இரக்கம் அவர்களின் உயிர் மூச்சாக இருக்கும்.கடவுள் தன்மைக்கு உரிய அனைத்து பண்புகளும் இருக்கும்.அந்த கடவுள் தன்மை பண்புகள் நிச்சயமாக மனித தேகத்தில் தான் வெளிப்படும்.உண்மை தயவால்அனைத்தும் நலமாகி கடவுள் ஒளி நல்ல மனிதரில் வெளிப்படும்.ஆன்ம விளக்கமும்,கடவுள் விளக்கமும் ஒன்று தான்.அது நிச்சயமாக மனித தேகத்தில் வெளிப்படும்.இந்த விளக்கத்தை உயிர் விளக்கத்தால் பெறலாம்.உயிர் விளக்கம் உயிர் இரக்கத்தால் கிடைக்கும்.எனவே தான் உயிர் இரக்கத்தை வள்ளலார் வலியுறுத்துவார்.அவரின் சன்மார்க்கம் சொல் வடிவ சன்மார்க்கம் என்பதை விட செயல் வடிவ சன்மார்க்கம் எனலாம்.செயல்படுபவர்கள் தான் உண்மை குரு ஆவார்.வள்ளல் ராமலிங்கர் போல பல வழிகாட்டிகள் வர வேண்டும்.வள்ளலாரும்,அருள்ஜோதி ஆண்டவரும் நம் உள் இருந்து வழி காட்ட கருணை கொள்ளுவோம்.
With vallalar Loving,AruljothiSujatha.