அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இறைவழிபாடு
எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார் இறை வழிபாடு என்பதைப்பற்றி கல்லூரியில் பேச ஒரு வாய்ப்பு அளித்தார். காரைக்காலில் உள்ள தனியார் கல்லூரியில் NSS சிறப்பு முகாமில் இறைவழிபாடு பற்றி பேச வேண்டும் என்ற அழைப்பு விடுத்தனர், எப்படி பேசுவது, எதனை பேசுவது என்று புரியாமல் தவித்தப்போது அவரே பல சம்பவங்களை ஞாபகத்திற்கு உணர்த்தினார். மேலும் சில கருத்துகளுக்கு அவரருளால் அசரிரீ போல் சில பதில்களும் வந்தது. அவற்றை வைத்து அவ்விழாவில் பேசியது இங்கு ஒரு சிறப்புக் கட்டுரையாக வெளிவருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடம் இறை நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அனைத்து பிரபல கோயில்களிலும் லட்ச கணக்கில் மக்கள் வழிபாடு செய்கின்றனர். பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி , பிரதோஷம் என்று ஒவ்வொரு முக்கிய நாட்களிலும் அனைத்து பிரபல கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்துக்கள் மட்டும் இல்லாது பிற இனத்தில் கூட புனித பயணம் மேற்கொள்கிறார்கள்.
இதற்கு தகுந்தாற் போல் நம்பிக்கைகளும், சடங்குகளும் மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது. உதாரணத்திற்கு கோயில் நந்தி காதில் பேசுவதும், கை தட்டுதல் மூலம் வழிபாடு செய்வதும், தங்களுடைய தலையை சுற்றி தேங்காய் உடைப்பது, உயிர் பலி கொடுப்பது, பெரிய வேலால் அலகு குத்துவது, தீ மிதிப்பது என்று நாளுக்கு நாள் சம்பிரதாயம் பெருகி வருகிறது.
இறை வழிபாட்டை , சடங்குகள், சம்பிரதாயங்களாக பார்க்கும் முறையே இப்பொழுது எங்கும் அதிகரித்து வருகிறது. இதனை பார்க்கும் பொழுது பல்வேறு கேள்விகளும் எழும்பும். அனைவருக்கும் பொதுவான பரம்பொருள் இதையெல்லாம் பார்த்துதான் வரம் கொடுப்பாரா? பரம்பொருளுக்கு வசதி படைத்தவர், ஏழை என்ற பாகுபாடு தெரியுமா? படித்தவர், படிக்காதவர்.., பரிகாரம் செய்தவர் , பரிகாரம் செய்யாதவர்.., என்று பிரித்து பார்ப்பாரா? கேதாரிநாத், பத்ரி நாத் ,காசி, கங்கை மற்றும் இமயமலை, புனிதப் பயணம் என்று வெளிநாடு சென்றுதான் இறையை பார்க்க முடியுமா? பாமரன் அவ்வளவு செலவு செய்து அங்கேயெல்லாம் செல்ல முடியாதே? அப்படியானால் பாமரனாக பிறந்தது பாவமா? என்று பல்வேறு கேள்விகள் ஒவ்வொரு மனதிலும்.
இன்றைய நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கோயில்களில் காணப்படுவது உண்மையே, ஆனாலும் அவர்களிடம் அன்பு-கருணை-தயவு காணப்படுவதில்லை. தாய்-தந்தையை வெறுக்கும் பிள்ளைகள், சகோதர, சகோதரிகளுக்கு உதவி செய்யாமல் இருக்கும் தனிக்குடித்தனம், பிறருக்கு துன்பம் வரும் போது உதவி செய்யாத குணம், என்று அனைத்து மக்களிடம் சுயநலமே அதிகமாக காணப்படுகிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று யாரும் இறைவனிடன் வரம் கேட்பதில்லை. ஒவ்வொருவரும் அவர்களின் சுயநலத்திற்காக மட்டுமே கோயில்களை வலம் வருகிறார்கள். அபிஷேகம் செய்கிறார்கள்.
கருணை-தயவு இல்லாமல் செய்யப்படும் வழிபாடு உண்மையான வழிபாடு கிடையாது. அதுவும் ஒருவித சடங்கே ஆகும். இறைவன் இவற்றையெல்லாம் விரும்ப மாட்டார். உண்மையான அன்பைத் தான் இறைவன் விரும்புகிறார். அனைத்து மதமும் அன்பே பரம்பொருளாக கருதுகிறது.
· உண்மையான அன்பு என்பது பிரதிப் பலனை எதிர்ப்பார்க்காமல் அனைத்து உயிர்களிடம் நேசம் கொள்வது. சுயநலம் என்பதே இருக்கப்படாது.
· உண்மையான வழிபாடு என்பது எவ்வுயிரையும் தம்முயிர் போல் பார்க்கும் எண்ணமேயாகும். இந்த எண்ணம் அதிகமாக அதிகமாக கருணை அதிகமாகும், கருணை-தயவு அதிகமாக விதி சக்கரமும் நம்மைவிட்டு நீங்கும்.
· உண்மையான இறை நம்பிக்கை என்பது எது தெரியுமா? தன்னைப்பற்றி எக் கணத்தும் கவலைக் கொள்ளாது, அடுத்த வேளை சாப்பாட்டிற்கும் வகை அறியாது, பரம்பொருளையே முழுமையாக நம்பியிருக்கும் நிலை. அவதூதராக இருக்கும் நிலை. வங்கி சேமிப்பு வைத்துக்கொண்டு இறைவனை நம்பும் நிலையில்லை. எனவே எத்தனை குருமார்கள் இவ்வாறு இருக்கின்றனர் என்று நினைத்து பாருங்கள். உண்மை உங்களுக்கு பட்டப்பகல் வெளிச்சமாக தெரிய வரும்.
இன்றைக்கு எல்லாவற்றிலும் வியாபார கருத்துகள் வந்துவிட்டன. உண்மை அன்பை காணமுடிவதில்லை. கருணை-தயவு என்று பேசுபவர்கள் அறக்கட்டளை நடத்தி லட்ச கணக்கில் பணத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். துறவறம் என்று வந்தவர்களுக்கும் பண ஆசை விடுவதில்லை. போலி துறவறம் எங்கும் பரவி வருகிறது. மதம் என்ற பெயரால் பிரிவினை அதிகமாகிறது. எங்கும் சாதி, மத , இன சண்டை. மத நம்பிக்கை ஒற்றுமையை வளர்க்கத் தவறிவிட்டது. மதத்தை விட்டு வெளியே வந்தால் மட்டுமே உண்மை அன்பும் வெளிப்படும். அனைவரையும் சகோதர, சகோதரிகளாக நினைக்கும் மனப்பாங்கும் உங்களிடம் கூடும்.
இறைவழிப்பாட்டிற்கு மதமும் ஒரு தடைக்கற்களேயாகும். புற வழிபாடு நீங்கி அகவழிபாடு-அன்பு மூலம் இறையை காணுவது உண்மை வழிபாடு. அதுவே சுத்த சன்மார்க்கம், இங்கு ஏழை, பணக்காரன், படித்தவர், படிக்காதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம் என்ற பாகுபாடு கிடையாது. சன்மார்க்கமும் ஒருவித மத மார்க்கம் இல்லை.
திருமூலர், ஈசா நபி,(Jesus) நபிகள் நாயகம் என்று வாழையடி வாழையாக வந்தவர்களின் மார்க்கங்கள் மருவி மதங்களாக உருவெடுத்துள்ளன.
வள்ளலார் கொண்ட சுத்த சன்மார்க்கம் ஒரு மத மார்க்கம் இல்லை, சாதி, மத , இன வேறுபாடு இல்லாத மார்க்கம், (secularism) மக்களின் புற வழிபாட்டையும் சாதி, மத வேற்றுமையையும் நீக்கி ஆன்ம நேய ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.
ஆன்ம நேய ஒருமைப்பாடு இல்லாமல் இறையை நாடுவது குருட்டு பயணம், மனிதனுக்கு மட்டுமே அன்பு-கருணை-தயவு அதிகமாக உள்ளது. பகுத்தறிவும் நம்மிடமே உள்ளது. பகுத்தறிவால் மட்டுமே இறையை நாட முடியும். பகுத்தறிவு என்பது உண்மை நிலையை பகுத்து + அறிவது மட்டும் இல்லை, பிற உயிர்கள் துன்பப்படும் நிலையையும் உணர்த்துவது. ஒரு சிங்கம் பிற உயிரை கொன்றால் அதற்கு அந்த உயிர் படும் துன்பம் தெரியாது, ஆனால் மனிதனுக்கு தெரியும்.
எனவே கருணை- தயவு வாழ்க்கையை கடைப்பிடியுங்கள், நீங்கள் எம்மதமாக இருப்பினும் அன்புக் காட்ட முன்வாருங்கள். விசுவாசமாக இருங்கள். இன்றைக்கு அன்ன தானத்தை விட அன்பு தானம் அதிகம் தேவை.
அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று ஈசா நபி ( ஏசுபிரான்) சொல்கிறார், நீதி செலுத்துங்கள், இரக்கம் காண்பியுங்கள் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்.
அனைத்து மார்க்கங்களும் ஒரே இறைவனை நாடித் தான் செல்கின்றன, நாம் தான் அறியாமையால் இருக்கிறோம். இவர் பெரியவர், அவர் பெரியவர் என்று அறியாமையால் ஒரு கிணற்று தவளையாக இருக்கிறோம்.
வழிப்பாட்டையும் மாற்றி சடங்கு போல் செய்கிறோம். எனவே அனைத்து உயிர்களின் பால் அன்பு செலுத்துங்கள். இதுவே உண்மை வழிபாடு. Compassion is the true Penance.
எல்லா உயிர்களையிம் நம்முயிர் போல் எண்ணுங்கள். இந்நிலையில் இருப்பவர்களை தேடி இறைவனே வருவான், இவர்கள் இறைவனைத் தேடி கோயில்களுக்கு செல்ல தேவையில்லை. இவர்கள் உடம்பே கோயிலாகும்.
எனவே புற வழிபாட்டிற்கு முக்கியம் தராமல் அக வழிபாட்டால் நினைந்து நினைந்து- பிற உயிர்களை, உணர்ந்து , உணர்ந்து –நெகிழ்ந்து, நெகிழ்ந்து உண்மை அன்பால் இறையை நாடுங்கள், அவன் உங்கள் அருகாமையில் இருப்பதை உணருவீர்கள், இது சத்தியம்.
*******************
குறிப்பு:
100 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இறைவழிபாடு என்ற தலைப்பில் பேசியதின் செய்தி சுருக்கம் இது. இவ்வுரை எந்த மதத்தின் தாக்கமும் இல்லாமல் (secularism) அன்பு-கருணை-தயவு வாழ்க்கையை மையமாகக்கொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல்பெருமான் உதவியால் வழங்கப்பட்டது.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
*****************