அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இறை நிலை- IX( தொடர்ச்சி)
ஞானஒளி
இறைநிலை இப்பகுதியில் ஒருவன் தன்னை எவ்வாறு பக்குவப் படுத்திக்கொண்டு ஞான ஒளியைக் காணலாம் என்பதை எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானார் தனிப்பெருங்கருணை யினால் இப்பொழுது பார்ப்போம்.
ஞான ஒளியைக் காண ஒருவன் புற வழியில் சிவ வேடத்தைத் தரிப்பதை விட அகத்தில் எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான நன் முயற்சியில் ஈடுபடும்போது இறைவனே குருவாக வந்து அவனுக்கு ஞான ஒளியை உணரச்செய்வார்.
திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.
ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்
ஞானமுள்ளார் வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞான முளவேட நண்ணிநிற் பாரே.
மேலும்,
தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின் அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே
-திருமந்திரம் 8ம்தந்திரம்: 2331
விளக்கம்:
திருவருளால் ஒருவன் தன் உண்மை நிலையினை அறிந்து , பிற உயிர்களின் மேல் அன்பு பூண்டு வாடிய பயிரை கண்ட போது வாடுகிற நெஞ்சத்தை உடையவர்களுக்கு ஆணவம், கன்மம், மற்றும் மாயையாகிய மலங்குணம் அற்று பிறப்பறும் .மேலும் அவர்களுக்கு எல்லாம் வல்ல பரம்பொருள் சன்மார்க்க பேரொளியை– திருவடி யுணர்வை உணரச்செய்வார்.
தாயுமானவர் பரஞ்சோதியை தம்முடைய பாடலில் கீழ் வருமாறு பாடுகிறார்:
கொடுக்கின் றோர்கள்பால் குறைவையா தியானெனுங் குதர்க்கம்
விடுக்கின்றோர்கள் பால் பிரிகிலா துள்ளன்பு விடாதே
அடுக்கின்றோர்களுக் கிரங்கிடுந் தண்டமிழ் அலங்கல்
தொடுக்கின்றோர்களை சோதியாதது பரஞ் சோதி .
விளக்கம்:
யானெனுங்குதர்க்கம்- செருக்கற்று மெய்யுணர்ந்து திருவருள் நினைவால் உள்ள அடியவர்களுக்கும், உள்ளன்பு விடாது, திருவடியை புகலாக- அடைக்கலமாக நினைப்பவர்களை எந்தவித சோதனையும் செய்யாது தன்னை வெளிப்படுத்துபவர்- சோதனை செய்யாதவர் பரம்பொருளாகிய பரஞ்சோதி.
மேலும்,
எண்ணிறைந்த மேன்மைபடைத் தெவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்க்
கண்ணிறைந்த சோதியை நாங் காணவா நல்லறிவே!
சித்தான நாமென் சடத்தைநா மென்ன என்றுஞ்
சத்தான உண்மைதனைச் சாரவா நல்லறிவே
மேலும்,
தன்னை யொருவர்க் கறிவரிதாய்த்
தானே தானாய் எங்குநிறைந்
துன்னற்கரிய பரவெளியாய்
உலவா அமுதாய் ஒளிவிளக்காய்
என்னுட் கலந்தாய் யானறியா
திருந்தாய் இறைவா இனியேனும்
நின்னைப்பெருமா றெனக்கருளாம்
நிலையைக்கொடுக்க நினையாயோ
விளக்கம்:
யாராலும் அறிவதற்கரியதாய் , எங்கும் நிறைந்த பரவெளியாய் , மங்காது ஒளிவிட்டு த்திகழ்ந்துக் கொண்டிருக்கும் சுடர் வெளியாய் , அடியேன் உள்ளத்திலும் கலந்திருக்கும் பெருமானே, அதனை யான் அறிந்துக்கொள்ளாதவாறு மறைந்திருக்கும் முதல்வனே, இனியாவது உன்னை அறிந்துக்கொள்ள நின் திருவருளை நின் எளியேனுக்கு அருள்வாயாக ! என்று கூறுகிறார்.
அருள் ஒளி- ஞான ஒளி- அருட்சோதி தோன்றும் நிலையை வள்ளலார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே!
திருவருட்பா 5ம் திருமுறை
விளக்கம்:
இருவினை ஒப்பாகி என்பது தன்னுடைய நலம் போல் பிறரது நலத்தையும்-தீமையையும் உணருதல். மலபரிபாகம் என்பது மலவிருள் ஆணவம், கன்மம், மற்றும் மாயை நீங்குதல். இத்தகைய அவத்தைகள் நீங்கும் போது தான் ஞானஒளி குருவடிவாய் தோன்றி சிவ ஞானத்தை தந்தருளும் என்பது இப்பாடலின் பொருள்.
திருவருட்பா- அகவல் வரிகளிலும் மிக அற்புதமாக ஞான ஒளியைப் பற்றி கூறுகிறார்.
ஔவியம் ஆதியோர் ஆறும் தவிர்த்த பேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்சோதி
மலப்பிணி தவிர்த்து அருள்வலம் தருகின்றதோர்
நலத்தகை அதுவென நாட்டிய மருந்தே
முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரைமேல் எழுந்த செஞ்சுடரே
மருளெலாம் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
அருளமுதருத்திய அருட்பெருஞ்சோதி
மேலும் சில சித்தர்கள் பாடல்கள்:
கடலில் ஒளித்திருந்த கணலெழுந்து வந்தாற்போல்
உடலிற் ஒளித்த சிவம் ஒளிசெய்வதெக்காலம்.
பத்ரகிரியார்- 168
தன்னையறிந் தொழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னையறியாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொடு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவாரென்று ஆடாய் பாம்பே
பாம்பாட்டி சித்தர்-95
கை விளக்குக்கொண்டு கடலில் வீழ்குவார் போல
மெய்விளக்குன்னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே
இடைக்காட்டு சித்தர்-74
ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்
அகண்ட பரி பூரணத்தைக் காண வேணும்
இராம தேவர் பூஜா விதி-1
ஓடியோடி யோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களுங்கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே!
சிவ வாக்கியர்
எனவே திருமூலர், மௌனகுரு, தாயுமானவர் என்று வாழையடி வாழையாக வந்த சித்தர்கள் அனைவரும் அருள்ஒளியை-ஞானஒளியை தன்னுள்ளே எவ்வாறு உணரலாம் என்று தெளிவாக கூறியுள்ளனர். ஆணவம், கன்மம் மற்றும் மாயை நீங்கினால் அருள் ஒளியை-ஞான ஒளியை -சிவஒளியை கண்டு தரிசிக்கலாம்.
எனவே ஆணவம் , கன்மம் மற்றும் மாயையை நீக்கி எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார் பாதம் பணிந்து அவரருளால் ஞான ஒளியை தரிசிக்க முயற்சி செய்வோமாக.
ஞான ஒளியை தரிசித்தால் சிவஞானம் கிடைக்கப்பெறலாம்.
அடுத்தப்பகுதியில் சிவஞானத்தைப் பார்ப்போம்.
இறை நிலை தொடரும்...,,
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு- வள்ளல் பெருமானார்.
குறிப்பு:
இங்கு குறிப்பிட்ட பாடல்கள் மற்றும் கருத்துகள் ஒரு பெரிய கால் பந்தில் ஒரு சிறு புள்ளியேயாகும். எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு –வள்ளல் பெருமானார் பாதம் பற்றி , சத்தியமாக நம்புங்கள், அவரவர் தக்க முயற்சிக்கு ஏற்ப அருள் மழையே அவரருளால் கிடைக்கப்பெறலாம்..
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
****************