அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
சிவவேடமாகிய திருநீறு, உருத்திராட்சம், காவி தரிப்பதில் பயன் ஒன்றுமே இல்லை. எனவே இத்தகைய பொய் வேடத்தைக் களைந்துவிட்டுச் சாதாரண மனிதராய் இருத்தலே நலம். உள்ளத்துக்கு வேடத்தைக் கொடுக்க வேண்டுமாயின் இறையை நாடுங்கள். முழு மூலப்பொருளாகிய அவன் இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வேண்டியவை நல்குவான். -திருமூலர்
இறை நிலை- IX
எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமான் உதவியால் ஒருவன் எவ்வாறு குருவை அடையாளம் கண்டுக்கொள்ளமுடியும் என்பதைப் பார்த்தோம். அன்பு-கருணை-தயவு இருக்குமிடத்தைத் தேடி பரம்பொருளே வருவார் என்பதையும் திருமந்திரம் மற்றும் திருவருட்பா பாடல்கள் நன்றாக விளக்கியதையும் பார்த்தோம்.
எனவே அன்பு-கருணை-தயவு இல்லாமல் ஒருவன் எவ்விதமான புற பூஜைகளில் பங்கு கொண்டாலும், அல்லது அவ்விதமான புற பூஜைகளை தானே செய்தாலும் , ஆன்ம லாபம் கிட்டாது என்பதையும் திருமந்திரம் மற்றும் திருவருட்பா பாடல்கள் நமக்கு நன்றாக உணர்த்தியது.
மேலும் இப்பகுதியில் ஒருவன் இல்லறத்தில் இருந்துக் கொண்டே இறைநிலையை அறியலாம் என்பதையும் அன்பு-கருணை –தயவு மூலம் இறைநிலை அறிந்து இறைநிலையாவதையும் பார்ப்போம்.
திருமந்திரத்தில்:
உரையற்று ணர்வற்றுயிர் பரமற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந்தோமே
விளக்கம்:
புற்று வளர்ந்து நடு வமர்ந்து, ஒற்றைக் காலதனில் ஓமென நின்று உலகு மறந்து, கண்மூடி, மூச்சு வெளிப்படும் தன்மையறியாது மந்திரங்கள் கற்று, அதனை ஓதி, உயிர் கூட்டை விட்டுப் பிரியும் தன்மையைடைந்து, அதன் காரணமாக வரங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறும் முனிவர்கள் கடினமான முறையைக் கைக்கொள்வதன் காரணமாக இறைவனை அடைகிறார்கள். ஆனால் அத்தகைய வழிமுறைகள் அவசியமானவை அன்று.
துன்பங்கள் தருவதாகவும் அவை அமைகின்றன. எனவேதான் துறவியர்க்கு இரண்டாம் இடம் அளிக்கப்படுகிறது வீடு பேறு காலத்தில். அதுவன்றி உற்றார், பெற்றோர், உறவினர், மக்கள் போன்றோருடன் இருந்து கொண்டு நல் வாழ்வை நடத்திக் கொண்டே வீடு பேற்றை அடையலாம். வேண்டுவது ஒன்றே. நாம் பிறருக்காக வாழ்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். சுத்த சிந்தனையோடு இறைவனை வழிபட வேண்டும். இச்சிந்தனைகளை அளிக்க குருவானவனை வாழ்த்தி வணங்குதல், முக்கியமாய் அவன் வாய்மொழி கேட்டல், இன்றியமையாததாகும்.
எனவே மேற்கூறிய பாடல் இல்லறத்தானும் திருவருளைப் பெறலாம் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
மேலும் ஒருவன் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வேறு எதனையும் நினைக்காமல் இருந்தால் அவனுக்கு எல்லாவித சக்திகளையும் இறைவன் அளிப்பார்.
இதனை திருமூலர்:
ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்
ஞானமுள்ளார் வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞான முளவேட நண்ணிநிற் பாரே.
விளக்கம்:
மனத்தளவில் இறைவனை நினைந்து, எல்லோரும் இன்புறிருக்க வேண்டும்; இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைந்து, அதற்காக இறைவனை வழிப்பட்டுக்கொண்டிருக்கும் ஞானிகள் யாதொன்றும் பேசவோ, செய்யாமலோ இருந்தாலும் கிடைத்தற்கரிய வீடு பேறானது சிவபெருமானின் திருவருளால் அவர்களை வலிய வந்தடையும். வேண்டாம் என்று கூறிடினும் அத் தவ வீடு அவர்களை விட்டுச் செல்லாது. ஒன்றுமே இல்லாத பாமரன் ஒருவன் தான் ஒரு ஞானமோ அன்றி ஆன்மீகத் தத்துவமோ அறியாதபோது, பரம்பொருளான சிவபெருமானை ஞானம் தர வேண்டி நிற்பானேயாகில் கண்டிப்பாக நிச்சயமாகச் சிவபெருமான் அவனுக்கு நல்ல ஞானத்தையும் ஆன்மீக நெறியின் தத்துவத்தையும் விருப்பத்தோடு அளித்து மகிழ்வான்.
ஆனால் மேற் சொன்ன உள்ளத்தில் ஒன்றும் உதட்டிலொன்றும் பேசக்கூடிய வேடம் பூண்டவன் ஞானத்தையும் ஆன்மீக நெறியையும் சிவபெருமானிடம் வேண்டி நின்றாலும் அழுது தொழுதாலும், கதறினாலும் ஒருக்காலும் அவனுக்கு அவற்றைக் கொடுக்கமாட்டான்.
எனவே பொய் வேடம் பூண்டோரே! உடன் உங்கள் செய்கைகளை மாற்றி, உண்மையான அன்பையும் பக்தியையும் மனதில் நிறுத்துங்கள் என்று திருமூலர் எச்சரிக்கின்றார்.
மேலும் சிவ வேடம் திருநீறும், ருத்திராட்சமும் தேவையில்லை என்கிறார் திருமூலர்.
ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண்டென் செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெருமான் தன்னை
தேடும் இன்பப் பொருள் செய்றெய்தலாமே
விளக்கம்:
பல்வேறு எண்ணங்களில் அலைபாய்கின்ற மனமானது குதிரையை ஒத்திருக்கும் தன்மை கொண்டது. இப்படி மனதை அடக்காமல் அதன் வழிக்கும் ஓட விட்டால் துன்பங்களே பெரும்பாலும் வந்து சேரும். ஓடுகின்ற அம்மனதை அலைப் பாய விட்டு பிறர் போற்று வதற்காக மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகச் சிவவேடமாகிய திருநீறு, உருத்திராட்சம், காவி தரிப்பதில் பயன் ஒன்றுமே இல்லை. எனவே இத்தகைய பொய் வேடத்தைக் களைந்துவிட்டுச் சாதாரண மனிதராய் இருத்தலே நலம்.
( ஸ்ரீ வள்ளல் பெருமானார் நிலை என்னவென்று இப்பொழுது தெரிகிறது அல்லவா !)
உள்ளத்துக்கு வேடத்தைக் கொடுக்க வேண்டுமாயின் சிவனை நாடுங்கள். முழு மூலப்பொருளாகிய அவன் இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வேண்டியவை நல்குவான்.
அடுத்த பகுதியில் திருவருட்பா பாடலுடன் இறைநிலை மேலும் தொடரும்..,
குறிப்பு:
சன்மார்க்க உண்மையை திருமந்திரம் வாயிலாக உணரலாம் என்று எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமானார் கூறுவதால் திருமந்திரம் இங்கு ஈண்டு ஒப்புநோக்குதற்காக அவர் உதவியால் குறிக்கப் பட்டுள்ளது.
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு- வள்ளல் பெருமானார்.
2. திருவாரூர் மடப்புரம் குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்
*********************
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி