Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
இறை நிலை- VIII

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

இறை நிலை- VIII

ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு இறைநிலையை உணர குரு அவசியம் தேவை. ஒருவன் நல்ல குருவை கண்டுக்கொண்டால் மட்டுமே உண்மை இறைநிலையை உணர முடியும். இறைநிலை ஏழாம் பகுதியில் குருவின் அவசியத்தைப் பற்றியும், குருவானவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை பற்றியும் திருமூலர் திருமந்திரம் வாயிலாகப் பார்த்தோம்.

இப்பகுதியில் குருவை எவ்வாறு அறிந்துக்கொள்வது என்பதைப் பற்றி திருமந்திரம் மற்றும் திருவருட்பா மூலம் பார்ப்போம்.

திருமூலர் தனது திருமந்திரத்தில் அன்பு செய்வாரை சிவன் அறிவன் என்று மிக அற்புதமாக சொல்கிறார்.

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்

உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்

கொழுந்தன்பு செய்தருள் கூரவல்லார்க்கு

மகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.

திருமந்திரம் 111

விளக்கம்:

இறைவன் மனிதனின் அறிவையோ , அழகையோ, ஆற்றலையோ பார்ப்பதில்லை. மனிதன் செய்யும் நல்லது அல்லது தீய செயல்களை மட்டும் பார்த்து, நல்லவை செய்தவனுக்கு அன்புடன் அருளும் வழங்கி அவனுக்கு எல்லா நன்மைகளும் கிட்டச் செய்வான். தீயன செய்தவன் இறைவனின் அன்பையோ அருளையோ பெறாமல் , உலகில் பல துன்பங்களுக்கு ஆளாவன்.

“இறைவன் படைத்துள்ள உயிர்களில் வேற்றுமை பாராது, எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி நல்லது செய்பவனுக்கு அன்பும் அருளும் வடிவான சிவன் தன்னைக் காணும் அரும் பேற்றினை நல்கி இறுதியில் தன் பாதாரவிந்தத்தில் சேர்த்துக்கொள்வான்”.

வேற்றுமை காணா இறைவனை வள்ளலார் கீழ் வருமாறு பாடுகிறார் :

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என் அரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே.

அன்பு கருணை- தயவுக்கொண்டோரை இறைவன் அறிவார் என்பதை தாயுமானவர் கீழ் வருமாறு பாடுகிறார்:

எவ் உயிரும் தம் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள்

செவ்வறிவை நாடிமிகச் சிந்தை வைப்பது எந்நாளோ.

அன்பர் பணி செய்ய எனை ஆள் ஆக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே.

திருமந்திரமும் :

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவதாரும் அறிகிலார்

அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

விளக்கம்:

அன்பே அவனுடைய வடிவம். வேறு விதமாகச் சொல்லப் போனால் அன்பு சிவமாய் வடிவாய் வடிவெடுத்துள்ளது. எனவே அன்பும் சிவனும் ஒன்றே. இதை அறியாதவர்கள் அவன் கொடுத்த அறிவைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாத மூடர்கள் ஆவர். அன்பும் சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்ந்தவர்கள், அவன் படைப்பில் உயர்வு தாழ்வு கருதாமல் எல்லாவற்றையும் அன்பு பாராட்டி நேசிப்பர். அப்படி அனைத்தையும் சிவனின் வடிவமாகக் காண்பவர்கள் சிவனில் வேறுபட்டவரோ? இல்லை. அவர்களும் சிவனும் ஒன்றே.

அதனால் தான் ஸ்ரீ வள்ளல் பெருமானார் உண்மை அன்பால் கருணையால்-தயவால் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் நினைத்து அன்புக்கொண்டு வாழ்ந்தால் பரம்பொருளே குருவாகி எல்லாவித மாயைகளையும் களைந்து உண்மையை உணரச் செய்வார்.

இதனை வள்ளல்பெருமானார் மிக அழகாக சொல்கிறார்:

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிர்

தம் உயிர் போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்

இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தை மிக விழைந்த தாலோ.

மேலும் இறைவனே உண்மை குருவாக இருக்க முடியும் என்பதை வேறொரு இடத்திலும் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்.

நின்நிலையை என் அருளால்

நீ உணர்ந்து நின்று அடங்கில்

இந்நிலையே அந்நிலையை

எய்துதி காண்! முன்னிலையில்

இற் குருவில் நாட்டாதே

என்று உரைத்தான் ஏரகம் வாழ்

சற்குருவே என் சாமிநாதன்.

எனவே அன்பு-கருணை-தயவு இருக்குமிடத்தில் பரம்பொருள் இருப்பார் என்பதும் அன்புடையோரை சிவன் அறிவன் என்பதும் பட்ட பகல் வெளிச்சமாக தெரிய வருகிறது.

மேலும் பரம்பொருள் ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளல்பெருமான் மூலமாக இவ்வுண்மையை அனைவரும் அறியும் பொருட்டு சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்தார்.

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்தி யெல்லாம்

ஏறுற்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ

யென்பிள்ளை யாதலாலே

இவ்வேலை புரிகவென் றிட்டனம் மனத்தில் வே

றெண்ணற்க வென்ற குருவே

பரம்பொருள் வள்ளலாரை தன்னுடைய மகனாகக் கொண்டு அனைத்து வித சக்திகளையும் அளித்தார் என்பதையும் இந்த பாடல் உணர்த்துகிறது.

மேலும் ஒரு பாடலில்

துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே

சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே

விஞ்சுற மெய்பொருள் மேனிலை தனிலே

விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்

தனக்கு இட்ட பணியை ஸ்ரீ வள்ளல் பெருமான் இவ்வாறு கூறுவதால் நாம் அனைவரும் ஸ்ரீ வள்ளல் பெருமானையே அகத்தேயும் புறத்தேயும் குருவாக ஏற்று , பேச்சிலும் ,மூச்சிலும் செயலிலும் அவரையே நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அன்பு-கருணை தயவு வாழ்க்கையை உலகியியலில் மேற்கொண்டால் அவர் வருவார், மாயைத் திரைகளை நீக்குவார். இது சத்தியம்.

தொடரும்..

தகவல் உதவி:

1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு- வள்ளல் பெருமானார்.

*********************

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

***********


P Sujatha
கருணைமிகு குமரேசன் அய்யா,
அன்பு,கருணை,தயவு கொண்டோரை கடவுள் அறிவான் என்பதை "திருவருட்பா,திருமந்திர" பாடல்கள் மூலம் இந்த கட்டுரையில் வெளி படுத்தியது அருமை.இறைவன் இருக்கும் இடத்தை அனைவரும் அறிய சுத்த சன்மார்கத்தை வள்ளலார் மூலம் இறைவன் வெளி படுத்தினார் என்ற செய்தியை இந்த கட்டுரை பகுதியில் வெளி படுத்தியதுக்கு நன்றி.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி சுஜாதா.
Thursday, August 27, 2009 at 05:23 am by P Sujatha