அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இறை நிலை- VI
வள்ளலாருக்கு இறைவன் கொடுத்த வாக்கு
எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தமக்கு எல்லா வித சக்திகளையும் அளித்ததாக ஸ்ரீ வள்ளல் பெருமானே தமது பாடல்கள் மூலம் தெரிவிக்கிறார்.
எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்து எனக்குனை
அல்லாதிலையெனும் அருட்பெருஞ்சோதி
-அகவல்: 298
இவ்வாறு தனக்கு அனைத்து சித்து-சக்திகளையும் பெற்றாலும் தன்னால் எப்படி இந்த பரந்த உலகத்தில் உண்மையை உரைக்க முடியும்? என்று கவலை அடைந்த நிலையில் அவருக்கு அருட்சோதியை அளித்து உனை கைவிடோம் என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் உறுதி அளித்தார். அதனை அவரே சொல்கிறார்.
துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித்தது நினைச்
சூழ்ந்தருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்கநிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம தானதுலகில்
வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
வாழ்வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம்களித்திட நினைத்தனை உன்றன்
மனநினைப் பின் படிக்கே
அன்பநீ பெறுகஉல வாதுநீடுழிவிளை
யாடுக அருட்சோதியாம்
ஆட்சிதந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணைநம் ஆணை என்றே
இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
திசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ்செய் வல்லசித்தாமணி மன்றினில்
இலங்கு நடராஜ பதியே
எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எதற்காக கொடுத்தார் –திருவாக்களித்தார் என்பதையும் அவரே தெரிவிக்கிறார்.
பேருற்ற வுலகிலுறு சமயமத நெறியெலாம்
பேய்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென வுணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற்றங்கு மிங்கும்
போருற்றிறந்து வீண் போயினா ரின்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்தி யெல்லாம்
ஏறுற்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ
யென்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிகவென் றிட்டனம் மனத்தில் வே
றெண்ணற்க வென்ற குருவே
நீறுற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும் ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரையோங்க
நீதி நடராஜ பதியே.
விளக்கம்:
இவ்வுலகில் மக்கள் ஜாதி, மதம், இனம் முதலிய பேயால் பிடிப்பட்டு இருக்கின்றனர். நீ என் பிள்ளை ஆதலாலே விரைந்து சென்று மக்களுடைய குழப்பத்தைப் போக்க வேண்டும். மதத்தின் பெயராலே மக்கள் வேற்றுமை காண முற்படுகின்றனர். மதங்கள் பொய் என்று உரை என்று ஆதி பரம்பொருள் –ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் உரைக்கிறார்.
மேலும் சமயங்கள் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் பகைமை உணர்வுடன் பார்ப்பதையும், எவ்வுயிரையும் தம்முயிர் போல் பார்க்கும் குணம் இல்லாததையும் பார்த்து தினமும் கண்ணீர் வடித்திருக்கிறார். சுத்த சன்மார்க்க வேண்டுகோளாக கீழ் வருமாறு பாடுகிறார்.
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தை நின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
இதற்கு பதில் அளிப்பது போல் உள்ளது இந்த பாடல்
அஞ்சலை நீ ஒரு சிறிதும்என் மகனே
அருட்பெருஞ்சோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே
விஞ்சுற மெய்பொருள் மேனிலை தனிலே
விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே
சாதாரண மக்களும் உண்மை இறைநிலையை அறிய வேண்டும் என்பது பரம்பொருளின் தலையாய பணியாக இருந்தது, இருக்கிறது. உண்மை இறைநிலை அறிய இறைவன் பெயரால் சாதி, மத , மொழி, சண்டை வருவதையும் அவற்றையெல்லாம் போக்க வேண்டும் என்று அவற்றை நீக்கும் வழியாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்து அதனை வழி நடத்த ஸ்ரீ வள்ளல் பெருமானுக்கு அனைத்து வித சக்திகளையும் அளித்தார் என்பது இதன் மூலம் மிக தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு அனைத்து சக்திகளையும் பெற்ற வள்ளலார், தான் பெற்றது போல் எல்லா மக்களும் பெறலாம் என்பதையும் உறுதியாக கூறுகிறார். இறைவனிடத்தும் அவ்வாறே வேண்டுகிறார் “என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே” .
இந்நிலைதான் –இந்த தயவுதான் ஏறாத நிலைமேல் வள்ளல் பெருமானை ஏற்றி வைத்தது. இந்த தயவு எல்லாவித சித்தியையும் பெற்று பரம்பொருளோடு கலந்து தானே பரம்பொருளும் ஆனார்.
இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே
என்னுள் அமர்ந்தான் என்ரு ஊதூது சங்கே
சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே
நவநோக்களித்தான் என்று ஊதூது சங்கே
நான் அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே
இவ்வாறு அருட்சோதியான வள்ளல் பெருமானார் அவரே அனைத்து பணிகளும் இன்றைய நாள் வரைக்கும் நடத்தி வருகிறார். தகுந்த மனிதர்களை பக்குவபடுத்தி அவர்களுக்குள் தன்னை புகுத்திக்கொண்டு நிறைய பணிகளையும் செய்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் மற்றும் திருவாரூர் மடப்புரம் ஸ்ரீ குரு தெட்சிணா மூர்த்தி சுவாமிகளின் உதவியால் திருமந்திர பாடல்கள் ஒப்புமைக்காக எடுத்துக் கொள்ளப் பட்டு எவ்வாறு ஞான உபதேசம் பெற இயலும் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தொடரும்..,
******************
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு –வள்ளல் பெருமானார்.
**************************
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு
நமது புராணங்களில், ஞான நூல்களில், சித்தர் இலக்கியங்களில், அற நூல்களில், நான் யார் என்ற கேள்விக்கு விளக்கங்கள் பலவாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அதில் நமது ஆன்மாவே நான் என்றும், நமது ஜீவனே நாம் என்றும், வுடலோடு கூடிய ஜீவனே நான் என்றும் பலவாறாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நமது வள்ளல் பெருமானார் மற்றும் சித்தர்களும் ஜீவனும் சிவமும் ஒன்றாக கலப்பதற்கு முன்பு விளங்கும் நிலையினை அதாவது நாம் வுலகில் வுடல் வுணர்வு, மன வுணர்வு, அறியும் வுணர்வு ஆகிய வுனர்வுடன் கூடிய வுனர்வையே நான் என்று கூறுகிறார்கள்.
வுனர்வுறு வுணர்வும் வுனர்வெலாம் கடந்த அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி
என்று நமது வள்ளல் பெருமான் கூறியிருப்பதிலிருந்து நான் என்பது வுனர்வாகவே இருக்கிறது
அந்த நான் என்கின்றன வுணர்வு கடந்து ஜீவனும் ஆன்மாவும் கலக்கும் ஜீவ ஐக்கியமே சிவா நிலை அடைதலாம். ஆக நான் என்பது வெறும் வுணர்வு மட்டுமே. ஆதியில் சிவம் இயக்கமற்று நிலை கொண்டு இருந்த போது சக்தி என்னும் இயக்கம் சலனமாக தோன்றியது. சலனத்தின் விளைவாக ஒன்று என்ற நிலை மாறி இரண்டு என்கின்ற நிலையின் காரணமாக ஆன்மா ஜீவன் என்கின்ற இரு நிலை தோன்றியது. ஜீவன் நான் என்கின்ற வுணர்வு பெற்றபோது இந்த வுலகம் தோன்றியது. அதன் பின் ஜீவன் செயலாற்ற தொடங்கியதும் வினை தோன்றியது. அது நல் வினை என்றும் தீ வினை என்றும் இரண்டாக பிறப்பிற்கு மூலமாய் அமைந்தது. ஆக நாம் நான் என்கின்ற வுணர்வை விடுத்து ஒருமை நிலையை அதாவது சிவ நிலையை அடைவதின் மூலமாய் பிறப்பிலிருந்து விடுபடலாம்.
ஆக நான் என்பது வுணர்வு மட்டுமே என்பதை நாம் அறியலாம்.
--
Arutperum Jothi ! Arutperum Jothi !
Thaniperum Karunai ! Arutperum Jothi !
Ella Vuyirgalum Inbutru Vazhga !
Yours
V.T. Arumugha Arasu
நன்றி , நான் என்கிற உணர்வு நீங்குவது மிக எளிதான காரியமல்ல, பக்குவிகள் கூட நெறி தவறுகிறார்கள், இதற்கான விளக்கம் அடுத்தத்தடுத்த பகுதிகளில் தெளிவாக எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு- வள்ளல் பெருமான் உதவியால் அளிக்கப்படும்.
நன்றி
அருள் ஜோதி குழு