அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
மதங்கள்- ஆய்வு
மதங்கள் மக்களிடையே ஒற்றுமையையும் நேசவுணர்வையும் சகோதரத்துவதையும், சமத்துவத்தையும் வளர்க்கத்தான் தோற்றுவிக்கப் பட்டன. ஆனால் இப்பொழுது மதத்தின் அடிப்படையில் மக்கள் ஜாதிகளாக பிரிக்கப்படுகின்றனர். மதத்தின் பெயரால் பேதங்களும், வேற்றுமைகளும் முளைத்துக்கொண்டிருக்கின்றன.
மதங்களை நாம் ஆராய்ந்தால் வெவ்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் பல்வேறு சமுதாயங்களில் மகான்களும், நபிமார்களும், இறைதூதர்களும் தோன்றியுருப்பதை கண்டு கொள்ள முடியும்.
இதைத்தான் வள்ளலார் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபினர் என்கிறார்.எப்பொழுதெல்லாம் மக்கள் அஞ்ஞானம் கொண்டு இருக்கிறார்களோ அப்பொழுது அவர்களுக்கு வழிகாட்டியாக இறைவனால் நெற்றிக்கண் திறக்கப்பட்டவர்களே சித்தர்கள்-மகான்கள்.
சித்தர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்கு கணக்கில் அடங்கா. சாதி, இன வேற்றுமைக்கு எதிராகவும், இறைவன் பெயரால் வேற்றுமையை உருவாக்கி மக்களிடையே ஒற்றுமையை நீக்கும் சதிகார கும்பலிடையே , கடவுள் ஒருவரே என்று முழக்கம் இட்டவர்கள் சித்தர்கள்-நபிமார்கள்-இறைதூதர்கள்.
இறைவன் ஒருவனே என்று எல்லா மதங்களும் கூறுகையில் இன்றும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒரு சில மத குருமார்கள் தங்களுடைய தெய்வம் இது அது வென்றும் , இம்மதத்திற்கு வந்தால் எல்லாம் கிடைக்கும் என்றும், பிரிவினையை தூண்டிக்கொண்டுத் தான் இருக்கிறார்கள். மேலும் இப்படி பரிகாரம் செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்றும் மனிதனை நல்வழி படுத்துவதை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் சொல்கிறார்கள்.
கடவுள் ஒருவர் என்பதற்கான ஆதாரம்:
பகவான் கிருஷ்ணன்( இறை தூதராக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்) கடவுள் ஒருவரே என்பதை
ஈசுவரா சர்வ பூதானாம்
ஹிறுத்தே செர்ஜ்ஜூன் திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி
யந்திரு ரூடானி மாய யா
தமேவ சரணம்: கச்ச
சர்வ பாவேன பாரதா
தத் பிலஸாதால் பராம்
சாந்திம் ஸ்தானம்
பிறாய்யஸீ சாசுவதம்
( அத். 18:61,62)
எல்லா படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயங்க வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால் அந்த ஏக இறைவனிடம் மட்டுமே சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும், சமாதானமும் கிடைக்கும்.
பகவத் கீதையின் பிரிதோரிடத்தில் கீழ்வருமாறு இருக்கிறது:-
யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி பூதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
( அத்.9:25)
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும், முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும், பூதங்களை வணங்குபவர்கள் பூதங்களிடத்திலும் போவார்கள், ஏக இறைவனை வணங்குபவர்களே என்னிடம் வருவார்கள்.
திருக்குர்ஆனிலே;
”வலகத் ப அஸ்னா பீ குல்லி உம்மத்தின்
ரஸீலன் அனிஃபுதுல்லாஹ்”
ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்ற போதனையுடன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறைத்தூதரை நாம் அனுப்பியுள்ளோம்.
(திருக்குர் ஆன் 16: 36)
பைபிளின் பழைய ஏற்பாட்டில்;
”ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்று
அறிந்திருக்கிறோம்.......பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு.”
( 1 கொரி 8:4-6)
· அவன் ஆதிதேவன், பிறவாதவன்.., கீதை 10:12
· புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
( ரிக் வேதம் 8:1)
· யாஇக் இத் முஸ்திஇ- வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே- ரிக் வேதம் ( 6:45:16)
· பரமாத்மா எல்லா பொருட்களுக்கும் காரண கர்த்தராக இருக்கிறார். அதர்வண வேதம் 7:19:1
· ஏகம் பரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தேகிஜன்: இறைவன் ஒருவனே வேறு எவரும் இல்லை இல்லவே இல்லை.
பிரம்ம சாஸ்திரம்
· ஒன்றே குலம், ஒருவனே தேவன் -திருமூலர்
· ஆதிபகவன் முதற்றே உலகு- திருவள்ளுவர்
· ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமிதனிலிருக்க வேணும்- கும்பை முனி- அகஸ்தியர்
· கடவுள் ஒருவரே, அவரே அருட்பெருஞ்சோதி
- ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள்
· தெய்வம் பல பல சொல்லிப்-பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஒர் பொருளானது தெய்வம்
யாரும் பணிந்திடும் தெய்வம்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில்
பற் பல சண்டைகள் வேண்டாம் - மகாகவி பாரதியார்
(நிறைய திருவருட்பா மற்றும் சித்தர் பாடல்கள் உள்ளன, விரிவஞ்சி இங்கு குறிப்பிடவில்லை)
இவற்றிலிருந்து ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டுமென்றுதான் உலகில் தோன்றிய மகான்களும், இறைத்தூதர்களும் போதித்திருந்தார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அன்று மக்களிடையே அஞ்ஞானத்தை போக்க கதைகளாலும், புராணங்களாலும் நல்வழி காட்ட நினைத்தனர்-சில ஞானிகள். ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு அவர்களைப் பின்பற்றிய சமுதாயங்கள் காலஞ்செல்லச் செல்ல வழிதவறிப் போய்விட்டன. மேலும் வியாபார நோக்கில் சென்ற அன்னியர்கள் அவர்களுக்காக போதனை செய்யப் பட்ட கருத்துகளை அவர்கள் செல்லும் இடங்களில் போதனை செய்ய ஒரே இறைவன் என்ற கருத்து மறைய ஆரம்பித்தது.
ஒருவர் தன்னுடைய கடவுளே பெரியவர் என்றும் மற்றவர் தன்னுடைய கடவுள் பெரியவர் என்றும் வாதம் செய்ய அந்தந்த சமுதாயங்களிலே பிரிவினைகளும், பேதங்களும் தோன்றிவிட்டன.
மீண்டும் நினைவில் கொள்க, ஒரே இறைவன் என்ற நோக்கில் அந்தந்த சமூகத்தில் வந்த மகான்களின் கருத்து அடிப்பட்டு கால பேதத்தால் மதம், இனம், கலாச்சாரம், ஆசாரம் என்று வளர தொடங்கின.
இதுவே யுகயுகமாக நடந்து பலதரப்பட்ட சமயங்களும்-கொள்கைகளும் பலதரப்பட்ட தெய்வ வழிபாடுகளும் தோன்றக் காரணமாயிருந்தன.
ஏக இறைவனை-ஒரே இறைவனை வணங்க சொன்ன வழிகாட்டிகளின் கொள்கைகளிள் காலபோக்கில் தீவிர மதவாதிகளால் இடைசொருகல் சேர்க்கப் பட்டன. விளைவு மக்களிடையே பேதங்களும் வேற்றுமைகளும் தோன்றின.
எங்கு அதர்மம் தலைதூக்குமோ அங்கு அவதரிப்பேன், என்றார் பகவான் கிருஷ்ணன்.
ஓர் எச்சரிப்பாளர் தோன்றாத எந்தச் சமுதாயமும் இல்லை –குர் ஆன் 35:24
எனவே மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க அக்கால கட்டத்தில் இறைவனால் வருவிக்க வுற்றவர் தான் சிதம்பரம் ஸ்ரீ ராமலிங்கசுவாமிகள் –வள்ளலார். (5.10.1823 to 30.1.1874)
சமுதாயத்தை சீர்படுத்திய அவருடைய கொள்கைகள் சீர்திருத்தங்களாக மாறின. கண்மூடி பழக்கம் மண் மூடி போக வேண்டும் என சாடிய வள்ளலார் அதற்காக மிகவும் பாடுபட்டார். வள்ளலார் ஆற்றிய பணிகள் அனைவருக்கும் தெரியும் என்பதால் இங்கு குறிப்பிட வில்லை, மேலும் புதிதாக படிப்பவர்கள் வள்ளலார் இணைய தளத்தில் (www.vallalar.org)அவருடைய படைப்புகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
யாருமே காணமுடியாத இறைவனை ஜீவகாருண்யம் மூலம் எளிதாக காணலாம் என்றார்.
இறைவனை யாருமே காணமுடியாது என்பதற்கு ஆதாரம்
· அந்த ஆதி பகவனின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களில்லை. அசுரர்களும் உணர்ந்தவர்கள் அல்லர்.
(பகவத் கீதை: 10:12, 10:14)
வள்ளலார் ஏக இறையை (ஒருவரே என்பதற்கு) கண்டதற்கு ஆதாரம்
பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே!
வள்ளலார் இறையாற்றல் பெற்றதற்கான ஆதாரம்
சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்
சாதியினாலும் சமயத்தாலும் இறையை காண முடியாது.
ஆதாரம்:
ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே!
வள்ளலார் ஏன் சைவம் வைணவத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று கூறினார் என்பது இப்பொழுது புரிகிறதல்லவா. எதற்காக ஒரு மார்க்கம்-மதம் தோற்றுவிக்கப் பட்டதோ அது அதற்கான வழியை தவற விட்டதுதான் காரணம்.
மேலும் மதம் என்று வரும் போது ஆன்ம நேய ஒருமைப் பாடு வருவதில்லை, மாறாக சுயநலமும், தந்திரமும், சூழ்ச்சியும் தங்களுடைய மதத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பிரிவினையும் தான் வருகிறது.
எனவே எவ்வுயிரையும் தன்னுயிராக காணும் எண்ணம் –பக்குவம் வராது. அதனால் அடைய போகும் இலட்சியம் பாதிக்கும். ஆகவே இப்பக்குவ காலத்தில் நேரத்தை வீணாக்காமல் இறைவனைப் பற்றிய விசாரத்தில் இருப்பது நல்லது. விசாரம் அதிகமாக அதிகமாக கருணையும் பிற உயிர்களிடத்து அன்பும் அதிகமாகும். இதுவே இறையை காண உதவும்.
மதங்களை உருவாக்கி மனித தன்மையை இழக்க செய்தது மத வியாபாரிகளே; அவர்களும் இறைவனை கண்டதில்லை அவர்கள் வழியில் செல்கிறவர்களும் காண போவதில்லை. எனவே வள்ளலார் வழியென்று நாம் சொல்லுவமேயானால் எந்த மதத்திற்கும் மறைமுக ஆதரவு தராமல் எல்லாம் மனித இனம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஆன்ம நேய ஒருமைப்பாட்டுக்கு வர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே நாம் உண்மையான பக்குவிகள்- சன்மார்க்கிகள் ஆவோம். இல்லையெனில் நாம் பெயரளவில் மட்டுமே சன்மார்க்கிகள். இதுவும் ஒரு போலி தோற்றமே.
தகவல் உதவி
1. எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை.
2. வள்ளலார் உபதேசங்கள்- தெய்வ நிலைய வெளியீடு, வடலூர்
3. பகவத் கீதை
4. ரிக் வேதம்
5. பாரதியார் பாடல்கள்
6. திருவருட்பா பாடல்கள் - www.vallalar.org
7. திரு. அ. வஜ்ஹூதின் (திரு குர் ஆன் மற்றும் பைபிள் கொடுத்து முக்கிய பகுதிகளை மேற்கோள் காட்டி உதவி செய்தார்)
8. விஞ்ஞான ஒளியில் குர் ஆன் –பைபிள்- மாரிஸ் புகேல்
9. பெரிய ஞான கோவை –சித்தர் பாடல்கள்
All people are must erasing the Feelings of Religions.Samaya unarvukalai Magal
mindliruthu ariyapadatha vari etha siddhar sonnalum 'God is one" anpathai accept pana madargal.This above the Messages are accepted only Suddha sanmarga people.
With Vallalar Loving,
AruljothiSujatha