Karunai Sabai-Salai Trust.
முன்னோர் சாகாக்கல்வியும் வள்ளலார் சாகாக்கல்வியும். பற்றி விவரிக்கிறார் திண்டுக்கல் சுவாமி. (உள்ளது உள்ளபடி – ஏபிஜெ அருள்)
முன்பு உயர் நிலையுறுவோர் உடலைத் துறந்து ஒழிந்து விட்டார்கள். தில்லை வெளியினிற் கலந்து திரும்பி வராது போய் விட்டார்கள். இப்பொழுதோ அந்நிலை சேர்ந்து இந்நிலவுலகில் நிலவற்கான வரம் பெற்று விட்டுள்ளான் மனிதன். இவ்வானுபவம் பெற்ற முதல்வர் நம் வள்ளலார் எனக் கான்கின்றோம்.
இவர் இங்கு ‘தம்பமிசை எனை ஏற்றி, அழியாத்தலத்தில் வைத்த அரசே எனப்பாடுகின்றார். இவ்வுயர் நிலை அருள் அமுத வண்ணமாக எக்காலும் அழிவு இன்றித் திகழ்ந்து கொண்டிருத்தலின், அவன் உற்று வாழ்வு பெற்றுத் திகழுகின்ற நம் வள்ளலும் அருட் பிரகாச இன்ப வடிவு கொண்டு விளங்குகின்றவர் ஆகி விட்டார் என்பது உண்மையாகும்.
இவ்வுண்மையை வாழ்விலே பெற்றுக் கொண்டுதான், ‘’சாகாத வித்தைக்கு இலக்கணமும் இலக்கியமும் ஆக இருந்த பரமே’, என்று போற்றுகின்றார். சாகாக்கல்வி சாகாவித்தை அல்லது தகர வித்தை என்பது இறவாமையை யுணர்த்தும் கலையாகும். இக்கலை நம் நாட்டில் தான் ஆன்றோரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இவர்களே நித்தியக் கடவுள் ஆன்மத் தத்துவ உண்மையை அறிந்து கொண்டவர்கள்.
இவர்களும் கூட இதுவரை கருதிவந்த சாகாக்கல்வி, நித்திய ஆன்மசித்தி பெற்று, அது தானாகி நின்று, விதேகிகளாய், அதாவது புறவுடல் நீக்கப் பெற்றவர்களாய்ப் போய்விடுவதே அக்கல்வியின் முடிவாகக் கொண்டிருந்தார்கள், அது சரியல்ல என இப்பொழுது நம் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தைக் கொண்டு புறத்தேகத்தையும் கூட அருட்ஜோதி வடிவாக மாற்றிக் கொண்டு வாழமுடியும் என்பதை மெய்ப்படுத்தி விட்டார்.
அதனால் இந்த சுத்த தேகத்தோடு இறவாது வாழ்வதே சாகாக்கல்வியின் முடிவு எனக் கண்டு கொள்ளுகின்றோம்.
......... சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்றது.
என்றாலும் அருள் உண்மை விளங்காத தாலே இம் மூன்றும் இணைந்தே முழுமை பெற்றுத் திகழும் இயல்பு ஏற்கப்படவில்லை.
பாசம் விட வேண்டும் என்றும், பசு நிலை கெடவேண்டுமென்றும் அப்பொழுதுதான் பதி நிலை கூடும் என்றும் கொண்டு கூறி வாழ்வற்றுப் போக நேர்ந்த தாகும்.
ஆனால் இப்பொழுது திருவருளாலே நம் அருட்பெருஞ்ஜோதி பதி வெளிப்பட்டு சுத்த சன்மார்க்கிக்குப் பூர்ணத் திருவருளை வழங்கி, பதி, பசு, பாசத்தையே ஞான தேகம், பிரவண தேகம், சுத்த தேகம் என்றும் திரிதேக சித்தி வடிவாக்கி அது கொண்டு பேரின்போடு விளங்கச் செய்து விடுகின்றார். இன்றைய சாகாக் கல்வியின் பயன் இதுவாகும்.

நன்றி ; சத்திய ஞான கோட்டம், திண்டுக்கல் BY ஏபிஜெ அருள்.
dindigul swamy 2.jpg

dindigul swamy 2.jpg

4 Comments
sivadurai sivamayam
நீண்டக்கால எனது சந்தேகத்திற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. மிகத்தெளிவாக சுவாமி விளக்கம் கொடுத்துள்ளார்கள். நமது சமயச்சான்றோர்களின் வெளிப்பாட்டுக்களை தொடர்ந்து அதையும் கடந்து பூரண முழுமையை இராமலிங்க சுவாமிகள் கண்டது இன்று நமக்கு கிடைத்துள்ளது. திண்டுக்கல் சுவாமிகளால் தெளிவுற்றேன். இதுவே ஆண்டவரின் கருணை.
Thursday, May 12, 2016 at 16:07 pm by sivadurai sivamayam
Damodaran Raman
அன்பர்களே,வள்ளலார் உரைப்பகுதியில்(தெய்வ திலைய வெளியீடு பக்கம் 385)சுத்த சன்மார்க்கத்தின் உண்மை தெரிய வேண்டுமாகில் திருமூலர் திருமந்திரத்தை ஊன்றிக் கவனிக்கில் விளங்கும் என்பதை முற்றிலும் புறக்கணித்து விட்டுக் கூறுவன உண்மை யாகா.திருமந்திரம்,சித்தர் நூல்களைக் கொஞ்சமாவது படித்திருந்தால் புற உடல் என்று இவர்களால் குறிப்பிடப் படும் தூல உடலை விட்டு விடுவதுதான் தகர வித்தை என்று கூற மாட்டார்கள். தூல உடலிலிருந்து உயிரைப் பிரிப்பவன் எமன் எனப்படும் காலன்.திருமந்திரம் கூறுவது வருமாறு.

மூல நாடிமுக் கட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.-622

மேலை அணாவில் விரைந்திரு காலிடில்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே.-805

இந்த இரண்டு பாடல்களும் சுழுமுனை நாடியின் மேல் வாசலான புருவ நடுவைத் திறக்கும் வழி வகையைக் கூறுகின்றன.வள்ளலார் உரைப்பகுதியில் இந்தப் புருவநடுவைத்தான் நெற்றிக்கண் என்றார்.காலன் வார்த்தை கனாவில் கூட இல்லையாகும்போது தூல உடலை விட்டு உயிர் எப்படிப் பிரியும்? பிரியாது. அவர்களின் தூல உடம்பே சூக்கும உடம்பாகும். இதனையும் திருமந்திரம் தெளிவு படுத்துகிறது.

அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரில்குமுழியைக் காணில்
எழுகின்ற தீயில்கர்ப் பூரத்தை ஒக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.-2587

எனவே உடலை விட்டு விடுவது சாகாக்கலையாகாது என்பது தெளிவு.சாகாக்கலவியைத் தெரிவிக்கும் சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல் என்னும் இம்மூன்றையும் வள்ளலாருக்கு முன்பே குறிப்பிட்டவர்கள் சித்தர் பெருமக்களே ஆவார்கள்.சாகாக்கல்வியை வள்ளலாருக்கு முன்பே போதித்தவர்களும் சித்தர்களே.

சைவ சித்தாந்தத்தைக் கற்காததால் சைவம் விளக்கும் முத்தியைக் கொஞ்சமும் அறியாமல் இவர்களுக்குத் தோன்றியதை எழுதி யிருப்பது முற்றிலும் தவறானது.சைவம் கூறும் முத்தி என்பது வள்ளலார் விவரித்த நிலை முன்னுறு சாதனமாகும்.

பதி,பசு,பாசம் என்பன ஒருபோதும் ஞான, பிரணவ, சுத்த தேக மாகா. பதிநிலை பசுநிலை பாசநிலையெலாம் மதியுறத் தெரித்துள் வயங்கு சற்குருவே(1045-1046)என்பதை உணராமல் கூறிய கூற்றாகும்.வள்ளலார் உரைப்பகுதியில் உள்ளபடிச் சுத்த சன்மார்க்கத்தின் உண்மை தெரிய வேண்டுமாகில் திருமூலர் திருமந்திரத்தை ஊன்றிக் கவனிக்கில் விளங்கும் என்பது சத்தியம்.சத்தியம். சத்தியம். திருமந்திரம்,சித்தர் நூல்களின் உதவி இல்லாமல் சுத்த சன்மார்க்கம் வெளிப்படுத்தும் சாகாக்கல்வியை யாராலும் வெளிப்படுத்த முடியாதென்பது திண்ணம்.
திருமந்திரத்தை முற்றிலும் புறக்கணிக்கும் எபிஜெ அருள் மற்றும் அவரின் அபிமானிகள் ஒன்று சேர்ந்து முடிந்தால் சுத்த சன்மார்க்கம் வெளிப்படுத்தும் சாகாக்கல்வியை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். ஆவன செய்யட்டும்.யாரும் தடுக்க மாட்டார்கள்.
Thursday, May 12, 2016 at 17:32 pm by Damodaran Raman
narayani julu
உண்மை,
வள்ளற்பெருமானால் பரிபூரணமாக கண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 12-4-1871 ல் பெருமான் அறிவித்தது: எல்லா மூர்த்திகளும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.” ஆக, என்ன அருமையாக தயவு சுவாமிகள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். பெருமான் மற்றும் தயவு சுவாமி விளக்கம் அளித்தும் எதற்காக இப்படி....?ஒன்றும் புரியவில்லை?. வள்ளலற் பெருமான் நெறி ஒரு ”புது, தனி, உண்மைப் பொது நெறியாகும்” என்பதை விளக்கப்பட்டு விட்டது. எல்லோரும் குரோதம் தவிர்த்து முயன்று பெருமான் வழியில் சுத்த சன்மார்க்கப் பயன் பெறுவோம். அருமையான விசாரம். ஏபிஜெ அருள் அம்மா அவர்களுக்கு நன்றிகள் பல. (தயவு சுவாமிகள் புத்தகங்களை தபாலில் எங்ஙனம் பெறுவது.? உரியவர்களின் செல் நம்பர் வேண்டும்.)
Friday, May 13, 2016 at 08:30 am by narayani julu
Logith sharma
People whoever following Suddha Sanmarga has to know the Vallalar and his path as said by Vallalar. We all know Vallalar has enquired about the "True God" and he attained immortality - So everyone following Vallalar path has to do the inquiry[enquiry] and find the "True God"

Please refer below link for the "true god" as said by Vallalar

http://www.thiruarutpa.org/thirumurai/v/T298/tm/upatheesa_unmai

http://vallalarspace.com/Vallalargroups/Articles/2863

http://www.vallalarspace.org/KarunaiSabai/c/V000020479B
Friday, May 13, 2016 at 13:22 pm by Logith sharma