Vallalar Thirusabai Trust -Sathapadi
ஜீவகாருண்யமே கடவுள் கருணையை அடையும் மார்க்கம்

‘யான் என்கின்ற ஆவணப்பேயும், என தென்கின்ற இராட்சத்ப பேயும், மாயை யென்கின்ற வஞ்சகப் பேயும், பெண்ணாசை யென்கின்ற பெரும்பேயும், மண்ணாசை யென்கின்ற பொல்லாப் பேயும், பொன்னாசை யென்கின்ற கொடும் பேயும், குரோத மென்கின்ற கொள்ளிவாய்ப் பேயும், உலோப மென்கின்ற உதவாப் பேயும், மோக மென்கின்ற மூடப்பேயும், மத மென்கின்ற வலக்காரப் பேயும், மாச்சரிய மென்கின்ற மலட்டுப் பேயும்”.

என் மனப் பேயோடு கூடி இரவும் பகலும் ஆட்ட ஆடி, ஆடியிளைக்கின்ற அடியேனைக் காத்தருளத் திருவுள்ளம் இரங்கிற்று. எப்படி இறையருள் எனக்கு கிடைத்தது என்ற கதை இதோ.

நான் அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தேன். வள்ளலார் நெறியை தெரிந்து கொள்ளும் நிலையிலும் நான் இல்லை. 1986ல் வீடு வாங்கும் விஷயமாக நண்பர் ஆறுமுகம் அவர்களை பார்க்க வேண்டிய நிலை. அவர் மாத பூசத்தில் வடலூர் உலகமையம் அருகில் காத்து இருப்பதாக சொன்னார். நானும் எனது கணவரும் சென்றோம். ஜோதி தரிசனம் பார்த்தேன். ஜோதி தரிசனம் முடிந்து நான் வீட்டிற்கு வந்த பின்னர் மனதிற்குள் நிறைய மாற்றங்கள். மீன்கடை சென்று பிணம் படுத்து இருப்பதாக எண்ணி திரும்பினேன். அது முதல் சைவ உணவு. அடிக்கடி வடலூர் வந்து செல்வேன். அகவல் படித்தல், திருவருட்பா படித்தல், கேட்டல், சிந்தித்தல், ஜீவகாருண்யம் செய்தல் இவைகளை திருவருள் துணையால் செய்து கொண்டு இருந்தேன். இடையில் சொல்லொண்ணா துன்பங்கள் 1994ல் எனது கணவர் இறந்தார். சன்மார்க்க முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. நான் தாலி எடுக்காமல் சுமங்கலியாக இருத்தலால், குடும்ப பென்ஷன் தடை ஏற்பட்டது. நமது சகோதரர் அருட்சுடர்ட ஆசிரியர் திரு.குரு பக்கிரிசுவாமி அவர்கள் வள்ளலார் கொள்கைகளுக்கு கொடுத்த சான்று பண்ருட்டி தாலுக்கா ஆபீஸில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தாசில்தார் பென்ஷன் பெற அங்கீகாரம் கொடுத்தார்.

2002-ல் சாத்தாப்பாடி என்ற ஊரில் 150 சென்ட் இடம் வாங்கி நர்சரி பள்ளி தொடங்க முடிவு செய்துக் கட்டிட வேலை ஆரம்பிப்பதற்கு முன் வள்ளலாரை முன்னிலைப் படுத்தும் முகமாக சிறிய அளவில் சபை கட்டி அதற்கு கும்பாபிஷேகம் 2002 வைகாசி 11ல் சிறப்பாக நடக்க இறைவன் கருணை உவந்தளித்தார். ஆனால் நர்சரி பள்ளி விளக்கம் அடையவில்லை. 2003 ஜீன் மாதம் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு எனது சிறுநீரகங்கள் பாதிப்பு அடைந்துள்ளதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள். எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையில் சற்றும் உடன்பாடு இல்லை. தற்கொலை செய்துக் கொள்ள முடிவு செய்தேன். வள்ளல்பெருமான் அருளிய உரைநடையைப் படித்தேன். அசரீரிய வாக்காக எனக்கு கிடைத்தச் செய்தி, ‘ஜீவ காருண்யம் உள்ள சம்சாரிகளுக்கு உடம்பில் உள்ள கரணக் கருவிகளை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! இது சத்தியம்! சத்தியம் ! என்ற வள்ளலாரின் அருள் உரை”.

அதன் பிறகு வீடு திரும்பிய நான் நேராக அருட்சுடருக்கு ஒரு விண்ணப்பம் கொடுத்து விட்டு, மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் பெருமான் திருக்காப்பீட்டு கொண்ட திருஅறை முன்பாக அமர்ந்து எனக்கு கிடைத்த அசரீரிய வாக்கை விண்ணப்பமாக எழுதி போட்டு விட்டு நான் பணிபுரியும் பள்ளிக்கு மருத்துவ விடுப்பு கொடுத்து விட்டு, சாத்தாப்பாடியில் எழுந்தருளியுள்ள, வள்ளலார் சபையிலேயே தங்கி விட்டேன். ஒன்றரை மாதங்கள் கழித்து இதயத்தின் இயக்கம் சரியாக இல்லாததால் திரும்பவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்றவுடன் நுரையீரல் பிரச்சனை ஆரம்பித்தது. சாப்பிட முடியாது, படுக்க முடியாது. எனக்கு எந்தவிதமான மருத்துவ சிகிச்சை அளிப்பது என்று மருத்துவர்களுக்கே குழப்பம். நான் இரவு பகலாக உணவு, உறக்கம் இன்றி உடம்பு உபாதைகள் - இவற்றுடன் என் கர்மாவை எண்ணியும் இறைவன் திருவருளின் பெருமையை எண்ணியும் கண்ணீர் விட்டு என் உயிர் அடக்கம் கொள்ள வேண்டிக் கேட்டுக் கொண்டு இருந்தேன். அங்கேயே இருந்து என் உயிர் அடக்கம் கொண்டு பிண அறையில் போடுவதை விரும்பமால் வீடு திரும்பினேன். என்னை வீட்டில் வைத்துக் கொள்ள முடியாத நிலையில், என் உடம்பின் நிலை இருந்ததால் சிதம்பரத்தில் அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவரிடமும் எனது மருமகன் என்னை காட்டினார். அவர் அங்கு விரிவுரையாளராக உள்ளார். டாக்டர் அனைவரும் அப்பல்லோ சென்று விடுங்கள் அங்கேயே முடியாவிட்டால் ஒரு வசதியும் இல்லாத இங்கு உங்களை வைத்திருக்க முடியாது என்றார்கள். ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அப்பலோ செல்லுங்கள் என்றார்கள். உறவினர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைக்கின்றார்கள். சரி மருதூர் வழியே காரை செலுத்துங்கள். என் இறைவன் வள்ளல்பெருமானை தரிசித்து விட்டு வருகின்றேன் என்றேன். மருதூரில் ஐயா அவதார திருமாளிகை முன்பு கார் நிறுத்தப்பட்டது. என்னால் தனியாக இறங்க முடியாது தாங்கி பிடிக்க வேண்டிய நிலை. ஆயினும் நானே ஓர் உத்வேகத்தில் இறங்கி, பெருமான் திருவுருவம் நான்கு புறமும் பார்ப்பது போல் அமைந்து இருக்கும் காட்சியை கண்டு கதறினேன். ‘என் உயிர் அடக்கம் கொள்ள கூடாதா? என் கர்மாவை நான் அனுபவித்தது போததா சாமி” என்று கதறிவிட்டு உள்ளே ஓர் அடி எடுத்து வைத்தேன். உட்புறம் ஒரு வாசகம் அருள் வாக்கு போன்று என் கண்ணில்பட்டது.

"வாராத வல்வினைநோய் வந்தாலும் வன்மையோடு
சேராத பாவமெல்லாம் சேர்ந்தாலும் தீராதென்று
யார் சொன்னார் என்னாளும் அருட்பிரகாச பெருமான்
பெயர் சொன்னாலே போமே பிணி” என்ற பாட்டு தான்".


மறுவிநாடியே நான் பிழைத்து விட்டேன். வள்ளல் பெருமானின் கருணை கிடைத்து விட்டது என்று தெளிவடைந்து, சி.சாத்தப்பாடி சபைக்கு வந்து பெருமானை வழிப்பட்டு அப்பலோ மருத்துவமனை சென்று ஓரளவு சாப்பிட, சுவாசிக்க நடக்க கூடிய அளவுக்கு சுகம் பெற்று திரும்பினேன். சில தினங்கள் கழித்து உடம்பில் உள்ள தோல் உரிய ஆரம்பித்தது உடம்பெல்லாம்; புண்ணாகி விட்டது. டாக்டர் என்னை தொட அருவருப்பு பட்டார். என் வீட்டில் எனக்கு ஆதரவாக வீட்டு வேலை செய்ய வேலைக்கார அம்மா மட்டும் வந்து போவார்கள். காலையிலேயே செய்து கொடுத்து விட்டு போவார்கள். நான் மெல்லமாக சமைத்து கொண்டு பள்ளிக்கு சென்று விடுவேன். கூட வேலை செய்பவர்கள் என்னை விருப்ப ஓய்வு கொடுத்துவிடு. இந்த நிலையில் எதற்கு சிரமப்படுகிறாய் என்றார்கள். உனக்கு வருகின்ற பணமே போதும் எதற்கு கஷ்டப் படுகிறாய் என்றார்கள். ஆனால் நான் நம்பிய வள்ளல்பெருமான் என்னை வாழ வைப்பார் நான் மீண்டும் பழைய தேகத்துடன் வாழ்ந்து காட்டுவேன் என்னுள் இறைவன் காரியப்பட ஆரம்பித்து விட்டார் என்று உறுதியாக இருந்தேன். இந்நிலையில் என் உடம்பில் உள்ள தோல் முழுவதும் உரிந்து புண்ணாகி மிக மிக மோசமான நிலை ஏற்பட்டு விட்டது. காலையில் 7 மணி முதல் மாலை 3.30 மணி வரை படுக்கையை விட்டு எழ முடியவில்லை. பசி, தாகம் என்னால் எழுந்திரிக்க முடியவில்லை. மனமும், மூளை மட்டும் வேலை செய்கின்றது. உடம்பு செயல்பட மறுக்கின்றது. அருட்பெருஞ் ஜோதி மகாமந்திரம் சொல்லிக் கொண்டே என் உயிரடக்கம் கொள்ள வள்ளல் பெருமானை வேண்டி அழுகின்றேன்.

மாலை 3.30 மணி இருக்கும் இப்போது ஞானசபைப் பூசகராக இருக்கும் திருவாளர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் அப்போது தர்மச்சாலை பூசகராக இருந்தார். அவர்கள் யாரும் இல்லையா என்று கூறிக் கொண்டே உள்ளே எட்டி பார்க்கின்றார்கள். அந்த குரலை கேட்டவுடன் சாமி என் உடம்பை பாருங்கள் என்ற எழுந்து அமர்ந்தேன். வந்தவர் என்னை ஒன்றும் கேட்கவில்லை. கருங்குழியில் சாமி தண்ணீரால் விளக்கெரித்த வீட்டிற்கு போகலாம் வா என்றார். ஆட்டோ ஏற்பாடு செய்து என்னை அழைத்து கருங்குழி சென்றார்கள். அப்போது அங்கு நந்தி சரவணன் இருந்தார்கள். பெருமான் ஏற்றிய தீபத்திற்கு முன் என்னை அமர செய்தார்கள். மூலிகை காப்பி கொடுத்தார்கள். கிருஷ்ணமூர்த்தி ஐயா என்னை பற்றி அவரிடம் சொன்னார்கள். ஜீவகாருண்யம் இதை மாற்றி அமைக்கும் என்றார். இதே போன்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அரை மணி நேரம் கழித்து மேட்டுக்குப்பம் சென்று பெருமானை வழிப்பட்டு வீடு திரும்பினேன். மருத்துவமனை செல்ல மீண்டும் எனக்கு அனுமதி கொடுத்தார்கள். 40 நாட்கள் இருந்து விட்டு புண் ஆற்றி நெய்வேலி திரும்பினேன். வந்தது முதல் மாதா மாதம் பூசத்திற்கு சி.சாத்தப்படி சபையில் அன்னதானம் செய்து வருகின்றேன். மெல்ல மெல்ல என் உடம்புதோல் நிறம் பழைய நிலைக்கு திரும்பியது. உடம்பு ஆரோக்கியமாக திரும்பியது. மருதூர் நினைவாக 31.5.2006ல் சி. சாத்தப்பாடியில் வள்ளலார் பளிங்கு மணிமண்டபம் அமைத்து தவத்திரு. ஊரன் அடிகள் அவர்கள் தலைமையில் திறப்பு விழா மிக மிக சிறப்பாக நடக்க எமது கருணைக்கடல் வள்ளல்பெருமான் வழிவகை அமைத்தார்.
2002ல் வள்ளலார் சபை கட்டிய அதே வழிவகை அமைத்தார். 2002ல் வள்ளலார் சபை கட்டிய அதே இடத்தின் அருகே பளிங்கு மணிமண்டபம் அமையப் பெற்றது. நனகொடை பெறாமல் என் தேகம் இறைவன் கொடுத்த நன்கொடையாக கொண்டு என் உத்தியோகத்தில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தொடர்ந்து இதுநாள் வரை ஜீவகாருண்யம் மாதா மாதம் செய்து வருகின்றேன். வள்ளல் பெருமான் கருணையே வடிவானவர். உண்மையான அன்பு கொண்டு வள்ளல் நெறியை கடைப்பிடித்தால் எல்லா நலன்களும் உண்டாகும். எல்லோரும் வள்ளல்பெருமானின் சத்திய வாக்கினை பின்பற்றுங்கள். திருவருட்பா பாடல்களை உள்ளம் உருகி படியுங்கள். இராமலிங்கர் பெயரைச் சொல்லி கொண்டே நாம் மரணம் தவிர்த்து வாழலாம். திருவருள் கருணைக்கு வந்தனம் வந்தனம்.

குறிப்பு: இன்று வரையும், எனது சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த குழாய்
அடைப்பு நீங்கவில்லை. இதயம் ஒரு பகுதி சுருங்கி விரிந்து வேலை
செய்யாது. ஆனால் நான் மிக மிக ஆரோக்கியமாக வாழ வள்ளல்
பெருமானின் கருணை என்னுள் காரியப்படுகிறது என உணர்கிறேன்.
ஒவ்வொரு மாத பூசத்துக்கும் 1000 பேருக்கு அன்னதானம் செய்து
வருகின்றேன். இவை அனைத்தும் இறைவனுடைய திருக்குறிப்பு.

‘அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறைப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறைப்பா முரசு
மரணந் தவிர்ந்தேன் என்று அறைப்பா முரசு” - திருவருட்பா


இதன்மூலம் வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகவே ஆகிவிட்டார். எனவே வள்ளல் பெருமானே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற நான் உறுதியாக பற்றுகின்றேன். இதுதான் இறைவனின் கருணையை பெற நமக்கு எளிய மார்க்கம்.
என் மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய சன்மார்க்க நண்பர்களும் என்னுடனே இருந்து அனைத்து பணிகளிலும் பங்கு பெற்று சிறப்பாக அமைய ஆலோசனை தந்து உதவி புரிந்திட திருவருள் கூட்டுவித்தது. இன்றுவரை என் இறைபணிக்கு திருவருள் துணைநின்று தடையின்றி நடக்கின்றது.

முடிவுரை:

எனக்கு ஏற்பட்ட அனைத்து நன்மைகளையும் திருவருள் துணை கொண்டு அறிய முற்பட்டதால், புரிந்துக் கொண்ட உண்மை.

  1. இந்தப் பணியை நான் செய்ய திருவருள் நோக்கம் கொண்டு இத்தனை
    நோய்களையும், கொடுத்து இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
  2. இத்தனை நோய்களும் வள்ளல் பெருமானாரின் நெறி நின்றதால் மரணமற்று ஆரோக்கியமாக இறைபணிச் செய்து கொண்டு இருக்கின்றேன். என்ன அதிசயம் என்றால் என் சிறுநீரகம் பிரச்சனை,இதயம் ஒரு பாதி பிரச்சனை இருந்தும் எப்படி நான் ஆரோக்கியமாக வாழ முடியும்? வாழவே முடியாது. என்னுள் வள்ளல்பெருமானின் கருணை காரியப்படுகிறது. எனவே தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எனவே, தான் என் சம்பளத்தில் இறைப்பணி திருவருளால் செய்து கொண்டு இருக்கிறேன்.


சி.சாத்தப்பாடியில் எழுந்தருளியுள்ள வள்ளலார் திருச்சபைக்கு சுற்றுப்புற மக்கள் பலரும் வந்து வழிபட்டு - நன்மை அடைகிறார்கள். அனுபவித்தவர்கள் சாட்சி சொல்கின்றார்கள். இது உண்iயான நிகழ்வு.

திருச்சிற்றம்பலம்
திருமதி. சந்திரகுமாரி சுப்ரமணியன்,B.Sc., M.A., M.A., M.Ed.
பட்டதாரி ஆசிரியர், நெய்வேலி என்.எல்.சி. உயர்நிலைப் பள்ளி

KUMARESAN KRISHNAMURTHY
நன்றி அம்மா,
வள்ளலார் வழியில் நடக்கும் அன்பர்களை அவருடைய தனிப்பெருங்கருணை எவ்வாறு வழி நடத்துகிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
நிறைய அன்பர்கள் நாத அனுபவங்களை தன்னுள் காண வேண்டும் என்று யோக சாதனையில் ஈடுபடுகிறார்கள், ஆனால் உயிர் இரக்கம் கொண்டவர்களுடன் வள்ளல் பெருமானே இருக்கிறார், நாத அனுபவத்தை விட இது மேலானது. அவர்களுக்கு எந்த ஒரு யோக சாதனையும் தேவையில்லை என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
நிறைய அன்பர்கள் சன்மார்க்கத்தை குறை கூறுகிறார்கள், அவர்களுக்கு உண்மை தெரியாது, ஏனெனில் அவர்கள் சாதனத்தை மட்டுமே நம்புகிறார்கள், மரணமில்லா பெருவாழ்வில் இருக்கும் வள்ளல் பெருமானை அவர்களால் கண்டுக்கொள்ள முடிவதில்லை.
எல்லா வல்ல ஞானகுரு வள்ளல் பெருமானார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் இருக்கும் அன்பர்களின் உள்ளத்தில் கோயில் கொண்டு அமர்ந்திருக்கிறார், அன்பு செய்வாரை அவர் அறிவார்.
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thursday, September 30, 2010 at 06:00 am by KUMARESAN KRISHNAMURTHY